ஃபிடல் கஸ்ட்ரோவும் கியூபாவும் – பகுதி 2
சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரும் இரும்புக்கரம் கொண்டு கொம்யூனிச ஆட்சி நடாத்தியவர், மனித உரிமை மீறல்கள் நிறைந்த நாடு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து மக்களை வறுமைக்குள் தள்ளியவர், மில்லியன் கணக்கான மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர வைத்தவர் போன்ற ‘கறுப்பு வெள்ளை’ வகைக் குற்றச்சாட்டுகளை மேற்குலக நாடுகளும் ஊடகங்களும் திரும்பத்திரும்ப கஸ்ட்ரோ மீது சுமத்தி வந்துள்ளன.
1980களின் நடுப்பகுதியில் நிகழ்ந்த சர்வதேச பூகோள அரசியல் மாற்றங்களும், பனிப்போரின் முடிவும் கியூபாவின் பொருளாதார வலுவைத் தக்கவைக்க உதவிய சோவியத்தின் உடைவும் கியூபாவை வெகுவாகப் பாதித்தன. ஆனபோதும் படிப்படியான பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் கஸ்ட்ரோ கியூபப் புரட்சியைத் தக்கவைத்துக் கொண்டார் என்பதும் அவரது தலைமைத்துவ ஆளுமையின் அங்கமாகும். சோவியத் ஒன்றியத்தின் உடைவின் விளைவாக, கியூபப் பொருளாதாரத்தைத் தாங்கி நின்ற முக்கிய உதவிகள் நின்று போன தறுவாயில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த கியூபா- அதிலிருந்து மீள சுற்றுலாப்பயணத்திற்கான கதவுகளைத் திறந்தது.
கியூபா தொடர்பாக அnமிரிக்கா கடைப்பிடித்த வெளியுறவு அரசியல் படுதோல்வியடைந்தது. 55 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ஏகாதிபத்திய அணுகுமுறைக்கு எதிராக, தனித்துவமான ஒரு நாடாக கியூபா தன்னை நிலைநிறுத்திவந்துள்ளது. 630 தடவவைகளுக்கு மேல் கஸ்ட்ரோவைக் கொலைசெய்வதற்கான முயற்சியில் இறங்கிய அமெரிக்காவின் சி.ஐ.ஏ, அத்தனை தடவையும் தோல்வி கண்டது. அவர் பற்றவைக்கும் சுருட்டில்கூட (கியூப சிகார், முகத்தை நிறைத்த தாடி கஸ்ட்ரோவினதும் சே குவேராவினதும் வசீகரமான அடையாளத் தோற்றத்தில் முதன்மையானவை) வெடி மருந்து நிரப்பி அவரைப் படுகொலை செய்வதற்கான முயற்சியை சி.ஐ.ஏ மேற்கொண்டும் தோற்றது. அவரைப் படுகொலை செய்ய மட்டுமல்ல, அவரது ஆட்சியைக் கவிழ்க்கவும் அமெரிக்கா பலமுறை முயற்சித்து வந்துள்ளது. அவற்றையெல்லாம் கியூபா முறியடித்திருக்கின்றது.
மத்திய அமெரிக்காவைப் கைப்பற்றி சோவியத் யூனியனின் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கான புரட்சிக்கு கஸ்ட்ரோ திட்டமிடுவதான குற்றச்சாட்டு, கியூபப் புரட்சி நிகழ்ந்த ஆரம்ப காலங்களில் அமெரிக்காவின் றீகன் நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்டது. கியூபா மீதான பொருளாதாரத் தடை அதனைத்; தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான தந்திரோபாயமாக அமெரிக்காவினால் கையாளப்பட்டு வந்துள்ளது.
பல ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் விடுதலை அமைப்புகளுக்கு கியூபா தொடர் ஆதரவினையும் படைத்துறை ஆளணி உதவிகளையும் வழங்கியது. அவற்றையும் அமெரிக்காவினால் தடுக்க முடியவில்லை. அங்கோலாவிலும் மொசாம்பிக்கிலும் மார்க்சிய கெரில்லாப் போராளிகளுக்கு ஆதரவாகவும் படைகள் அனுப்பப்பட்டன. எதியோப்பியா, கொங்கோ, பொலிவியா போன்ற நாடுகளுக்கும் படைகள் அனுப்பப்பட்டன. தவிர தென் அமெரிக்காவின் கிளர்ச்சி அமைப்புகளுக்கு ஆதரவாகவும் கஸ்ட்ரோவின் படைகள் அவ்வப்போது இறங்கின.
தேர்தல் ஜனநாயகம் இல்லை. ஒற்றைக் கட்சி ஆட்சி, எதிர்க்கட்சிகள் தலையெடுக்காமல் அடக்கப்பட்டன போன்ற விமர்சனங்கள் கஸ்ட்ரோ மீது உள்ளன. கருத்துச் சுதந்திரம், எதிர்ப்புப் பேரணிகளை முன்னெடுப்பதற்கும், சமூக நிறுவனங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கான வெளி உட்பட்ட ஜனநாயக மற்றும் கருத்துச்சுதந்திர வெளி தற்பொழும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலுள்ளன என்பதும் கியூபாவை நோக்கிய விமர்சனங்களாகும். கியூபாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வது வலுக்கட்டாயமாகத் தடுக்கப்பட்டதன் விளைவாக இரகசியமாக கடல்வழிப் பயணங்களை மேற்கொண்ட மக்கள் உயிராபத்துகளைச் சந்தித்ததாகவும் கஸ்ட்ரோ மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரும் இரும்புக்கரம் கொண்டு கொம்யூனிச ஆட்சி நடாத்தியவர், மனித உரிமை மீறல்கள் நிறைந்த நாடு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து மக்களை வறுமைக்குள் தள்ளியவர், மில்லியன் கணக்கான மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர வைத்தவர் போன்ற ‘கறுப்பு வெள்ளை’ வகைக் குற்றச்சாட்டுகளை மேற்குலக நாடுகளும் ஊடகங்களும் திரும்பத்திரும்ப கஸ்ட்ரோ மீது சுமத்தி வந்துள்ளன.
கஸ்ட்;ரோ மீதும் அவரது கியூபாவின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோதும் ஒப்பீட்டளவில் ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கங்களையும், ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புகளையும் கொண்டிருந்த பல தென் அமெரிக்க நாடுகளை விட கியூபாவில் மக்களுக்கான சமூகப் பாதுகாப்பும், அரசியல் ஸ்திரத்தன்மையும் ஏனைய அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. குறிப்பாக கல்வியிலும் மருத்துவத்துறையிலும் உலகம் வியக்கும் வகையிலான முன்னேற்றத்தையும் தரத்தினையும் கஸ்ட்ரோவின் கியூபா கொண்டிருக்கின்றது. ஏனைய பல்வேறு நாடுகளுக்கு பெருமளவு மருத்துவ உதவிகள் கியூப மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. மறுவளமாகச் சொல்வதானால் மோசமான ஜனநாயக ஆட்சியைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கும், வலதுசாரி சர்வாதிகாரிகளுக்கும், ஊழல் மலிந்த ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளுக்கும் மாற்றாக கியூபா தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
கஸ்ட்ரோவின் கியூபாவில் சோசலிச சிந்தனை வளர்த்தெடுக்கப்பட்டது. 6 தசாப்தங்களாக அமெரிக்காவிற்கெதிரான எதிர்ப்பரசியல் விட்டுக்கொடுப்பற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்துள்ளது. அமெரிக்கா என்பது, உலக ஒழுங்கினைத் தீர்மானிக்கும் சக்தியாக, தனது ஒற்றை அதிகாரத்திற்குள் உலக ஒழுங்கினை பேணும் முனைப்புடன் இயங்கும் நாடு என்ற வகையில், கஸ்ட்ரோவின் அமெரிக்க எதிர்ப்பரசியல் பனிப்போருக்குப் பிற்பட்ட காலத்தில்கூட முக்கியத்துவம் கொண்டிருந்தது.
ஒரு தேசமாக கஸ்ட்ரோ கியூபாவில் எத்தகைய மாற்றங்களை உருவாக்கினார். அம்மக்கள் மீதும், தன்னைச் சுற்றியிருந்த உலகத்தின் மீதும் எத்தகைய பெரிய தாக்கங்களை இந்த மனிதரால் ஏற்படுத்த முடிந்தது என்ற அடிப்படையில் வரலாறு அவர்மீதான தீர்ப்பினை எழுதும் என்று கஸ்ட்ரோவின் மறைவையடுத்து ஒபாமா கருத்துத் தெரிவித்திருந்தார். கியூபாவினுடனான இராஜதந்திர உறவினை மீளப்புதுப்பித்த பொறுப்புணர்வோடு வெளிப்படுத்தப்பட்டதாக ஒபாமாவின் இக்கூற்றினைப் பார்க்க முடிகிறது. அதேவேளை, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாப் பதவியேற்கவுள்ள பொரொனால்ட் ரம்ப், கஸ்ட்ரோ ஒரு மோசமான சர்வாதிகாரி என்று அவரது மறைவையொட்டிய அறிக்கையில் சித்தரித்துள்ளார். கியூபாவுடன், ஓபாமா ஏற்படுத்திய மீள் உறவினை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்வாரா அல்லது குரங்கின் கை பூமாலையாகி விடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
கடந்த 88 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரால் (பராக் ஒபாமா) கியூப மண்ணில் காலடி வைக்க முடிந்திருக்கிறது. இதற்கு முன் 1928இல் Calvin Coolidge இறுதியாக அங்கு சென்றவராவார். ஒபாமாவிற்கும் ரவுல் கஸ்ட்ரோவிற்குமிடையில் அதிகாரபூர்வ சந்திப்பு இந்த ஆண்டு மேமாதம் நடைபெற்றது. ஒபாமா ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து அமெரிக்க – கியூப இராஜதந்திர உறவில் மீள் புதுப்பித்தலுக்குரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன் விளைவே இரு ஒபாமாவின் கியூபப்பயணமும் இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பும்.
அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் வாழும் புலம்பெயர் கியூபர்களில் ஒரு சாரார் கஸ்ரோவின் மறைவினைக் கொண்டாடிய செய்திகளும் காணொளிப் படங்களும் வெளிவந்துள்ளன. இதற்கான பின்னணி இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியது. சொந்த மக்களால் வெறுக்கப்பட்ட தலைவர் என்ற சித்தரிப்பிற்கு இத்தகு காட்சிகள் உதவக்கூடியன. கியூபாவிலிருந்து தப்பிச்சென்ற அல்லது புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குச் சென்ற கியூபர்கள் மத்தியில் கஸ்ட்ரோ தொடர்பானதும் கியூபா தொடர்பானதுமான எவ்வகை மனநிலை இருந்து வந்தது, வளர்க்கப்பட்டது என்ற அடிப்படைகளிலும் – அது சார்ந்த உளவியலின் ஊடாகவும் இவ்விடயம் பார்க்கப்பட வேண்டும். தவிர இது புரட்சியாளர்கள் பலருக்கும் நேரக்கூடிய ஒன்றுதான். புரட்சியாளர்களின் வரலாறு இவ்வாறான காட்சிகளையும் நிகழ்வுகளையும் கடந்து, அததற்குரிய தீர்ப்பினை எழுதியிருக்கின்றது. கஸ்ட்ரோவின் இறுதி நிகழ்வில் ஹவானாவில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர் என்பது அவர் அம்மக்கள் மீது எப்பேர்ப்பட்ட செல்வாக்கினைச் செலுத்திய தலைவர் என்பதைச் சொல்கின்றது.
மக்கள் தொகை சார்ந்தும், நிலப்பரப்பு சார்ந்தும் சிறிய தேசமாக இருந்தபோதும் சர்வதேச அரசியலின் பேசுபொருளாக கியூபா எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது, அரசியல் அர்த்தத்தில் செல்வாக்குச் செலுத்தும் வலுக்கொண்டதாக இருந்து வந்துள்ளது.
கியூபாவின் அமெரிக்க எதிர்ப்பு, சோவியத் உடைவிற்குப் பின்னர் – எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியில் மூழ்கிவிடாதவாறு தேசத்தை நிலைநிறுத்தியமை, பொருளாதார சமூக உட்கட்டமைப்புகளில் கியூபாவிற்கான தனித்துவமானதும் கோட்பாட்டு ரீதியிலானதுமான வழிமுறைகளைக் உருவாக்கி நடைமுறைப்படுத்தியமை என்பனவற்றை கஸ்ட்ரோவின் சாதனையாகவும் ஆட்சிநிர்வாகத் திறமையாகவும் கொள்ளலாம். Batistaஇன் பிடியிலிரந்து புரட்சி மூலம் கைப்பற்றப்பட்ட கியூபா மாபியாக்களினால் ஆளப்பட்ட நாடாக இருந்தது. 500 ஆண்டுகள் வரையான கொலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த – 60 ஆண்டுகளுக்க மேலான அமெரிக்க எதிர்பினை வலுவாக முன்னெடுத்திருந்த கியூபாவை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பகுப்பாய்வு செய்பவர்களால் கஸ்ட்ரோ ஒரு சமூக மறுசீரமைப்பாளர் (Social reformer) என்பதை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியும்.
ரவுல் கஸ்ட்ரோவிடம் தலைமைத்துவப் பொறுப்பு கையளிக்கப்பட்ட காலத்திலிருந்து படிப்படியாக மேலும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கியூபாவுடனான உறவு புதுப்பித்தலை ஓபாமா விட்ட இடத்திலிருந்து புதிய ஜனாதிபதி ரொலால்ட் ரம்ப் தொடர்ந்தால் கியூபாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டமுடியுமென்ற எதிர்பார்ப்பு உள்ளது. சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்பினை முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய அணுகுமுறைக்கான சமிக்ஞைகள் தென்படுவதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மை கியூப மக்கள் மீது செல்வாக்குச் செலுத்திய தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். சகோதரர் ரவுல் கஸ்ட்ரோவிடம் ஆட்சியைக் கையளித்த பின்னரும் கியூப அரசியலில், ஆட்சியில் ஒரு தேசத்தின் தலைவராக பிடல் கஸ்ட்ரோவின் செல்வாக்கு இருந்து வந்திருக்கிறது. 2006 இல் நோய்வாய்ப்பட்டு பதவிவிலகும் வரை வாரத்தில் ஏழு நாட்களும் கடுமையாக உழைப்பைச் செலுத்தியவர் கஸ்ட்ரோ. தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்டவர். அரச ஊடகங்களில் கட்சியின் கொள்கை சார்ந்த விடயங்கள், அரசியல் கட்டுரைகள் போன்றன கஸ்ரோவினாலேயே அதிகம் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. 4 மணி நேரம் மட்டுமே உறக்கத்திற்குச் செலவிடுபவர். அதிகாலை 5 மணி அளவில்தான் கூடுதலாகத் உறங்கச் செல்பவர். 5 மணி நேரங்கள் தொடர்ச்சியாக உரை நிகழ்த்தக்கூடிய திறமையைக் கொண்டிருந்தவர் போன்ற தகவல்களை அவரது சுயசரிதை (My Life: A Spoken Autobiography – Book by Fidel Castro and Ignacio Ramonet) நூலில் அறியக்கிடைக்கிறது.
வரலாற்று வகிபாகத்தினைக் கொண்டிருந்த ஆளுமையான கஸ்ட்ரோவிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய வரலாற்றுப் பாடங்கள் நிறையவே உள்ளன.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக கியூபா வாக்களித்தமையை ஆதாரமாகக் கொண்டு ஈழத் தமிழ் தேசியவாதிகளெனத் தம்மைச் சொல்லிக் கொள்வோர் சிலர் பிடல் கஸ்ரோ மீது பல்வேறு வசைகளைப் பாடிவருகின்றனர். அப்படியான வசைக்கருத்துகள் சர்வதேச அரசியல் பார்வையின் வறுமை அல்லது வெற்றுணர்ச்சி வசப்பட்டவை என்பதைத் தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.
விடுதலைப் போராட்ட அமைப்புகளின் வரலாறு, பனிப்போர், கொம்யூனிசம்-முதலாளித்துவம், பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சமகால ஒற்றைமைய உலக ஒழுங்கு என உலக ஒழுங்குகளின் பல்வேறு பரிமாணங்களையும் மாற்றங்களையும் தனித்துவத்தோடு கடந்த வந்தவர். முதலாளித்துவ உலக ஒழுங்கிற்கு எதிரான புரட்சியாளராக இறுதிவரை நின்றுபிடித்தவர், நாம் வாழும் இந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர், ஓர்மம் மிக்க தலைமைத்துவ ஆளுமை, அமெரிக்காவின் தெருக்கோடியில் இருந்து கொண்டு அதற்குச் சவாலாக 6 தசாப்தங்கள் ஆட்சி நடாத்தியவர் என்ற அடிப்படைகளில் அவருடைய வகிபாகம் உலக அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
காக்கைச் சிறகினிலே, பொங்குதமிழ் இணையம் – ஜனவரி 2017