எகிப்த்: அதிகார மையத்தை ஆட்டங்காண வைத்த மக்கள் எழுச்சி!
உலக நாடுகளில் இராணுப் புரட்சி மூலமே பெரும்பாலான ஆட்சிக் கவிழ்ப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் மக்கள் புரட்சி மூலம் ஆட்சியதிகாரத்தை ஆட்டம் காணச் செய்ததற்கான சமகால எடுத்துக்காட்டாகவும் உந்துதலாகவும் துனிசியாவும் எகிப்த்தும் அமைந்துள்ளன.
2010ஆம் ஆண்டின் முடிவு, வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஊடாக அனைத்துலக அரசியல் இராஜதந்திர உள்வட்டாரத்தில் பரிமாறப்பட்ட பல்லாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அமெரிக்கா உட்பட்ட நாடுகளை அதிர்ச்சியடையச் செய்த ஆண்டாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. சர்வாதிகார ஆட்சியாளர்களை மக்கள் போராட்டத்தின் மூலம் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றும் ஆண்டாக 2011 வரலாற்றில். துனிசியா, எகிப்த் ஆகிய அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் ஏலவே பதிவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். லிபிய அரசதலைவர் முகம்மர் கடாபியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
துனிசிய மக்கள் போராட்டத்தின் உந்துதல்
துனிசியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தினால், அந்நாட்டின் அரச தலைவராக 23 ஆண்டு காலம் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்த ணுiநெ டீநn யுடi பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். ஜனவரி நடுப்பகுதியில் இது நடந்தேறியது. வேலையில்லாத பட்டதாரி ஒருவர் தன்னைத்தானே தீ மூட்டிக் கொண்ட நிகழ்வு, துனிசியாவில் மக்கள் பதிவாகியுள்ளது போராட்டத்திற்கான பொறியைப் பற்ற வைத்தது. தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மேலாக மக்கள் தெருக்களில் இறங்கிக் போராட்டம் நடத்தியதில் பதவி விலகிய அரச தலைவர், நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
துனிசியாவின் மக்கள் போராட்டத்தினால் உந்தப்பட்டு எகிப்த், ஜோர்டான், ஜெமென், சவுதி அரேபியா, ஈரான் போன்ற மத்திய கிழக்கின் அரபு நாடுகளிலும், சூடான், லிபியா போன்ற நாடுகளிலும் அந்நாடுகளின் ஆட்சியாளர்களைப் பதவி விலகுமாறும், ஜனநாயக மறுசீரமைப்பினைக் கோரியும் மக்கள் போராட்டங்களில் இறங்கினர். ஆனபோதும் எகிப்திலும் லிபியாவிலும் மட்டுமே போராட்டங்கள் தீவிரமடைந்தன. லிபியாவில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் கேணல் முகம்மர் கடாபியை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மக்கள் புரட்சியை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தினை ஏவிவிட்டுள்ளதோடு, வான்படைத் தாக்குதல்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது நடாத்தப்படுகின்றன. நாளாந்தம் பலநூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 6000 வரையானவர்கள் படுகொலைக்குள்ளாகியுளஇளதாக தகவல்கள் கூறுகின்றன.
மூன்று தசாப்தங்கள் ஆட்சியதிகாரத்தில் முபாராக்
ஜனவரி நடுப்பகுதியிலிருந்து பெப்ரவரி நடுப்பகுதி வரை ஒரு மாத காலம் தொடர்ச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் விளைவாக பெப்ரவரி 11ஆம் நாள் எகிப்த்தின் அரசதலைவர் கொஸ்னி முபாராக் பதிவி விலகியுள்ளார். மத்திய கிழக்கின் பலம்வாய்ந்த நாடு என்ற நிலையில் எகிப்த்தின் திடீர் அரசியல் மாற்றம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1981ஆம் ஆண்டு அன்றைய அரசதலைவராக இருந்த அன்வர் சதாத் இஸ்லாமியக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து முபாராக் அரச தலைவரானார். மூன்று தசாப்தங்கள் கோலோச்சிய இவர் தனது சொந்த மக்களாலேயே ஆட்சி பீடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளார். விமானப்படை தளபதியாக பதவிவகித்த இவர், 1975ஆம் ஆண்டிலிருந்து எகிப்த்தின் துணை அரச தலைவராகவும் 1981ஆம் ஆண்டிலிருந்து அரச தலைவராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 6 தடவைகள் இவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
படைத்துறை தலைமையில் இடைக்கால அரசாங்கம்
முபாராக் பதவி விலக வேண்டுமென்ற முதன்மைக் கோரிக்கையோடு தலைநகர் கைரோவில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக மறுப்பு, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனித உரிமை மீறல்கள் என்பனவே முபராக் ஆட்சி மீதான மக்களின் அதிருப்திக்கான அக புறக் காரணிகளாகும். இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே முபாராக் ஆட்சி மீது அதிகம் அதிருப்தி அடைந்திருந்தனர்.
முபராக் ஆட்சி பீடத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதை அடுத்து, படைத்துறை நாட்டின் இடைக்கால அரசாங்கத்தினைக் கையேற்றுள்ளது. விரைவில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியில் கருத்து வாக்கெடுப்பிற்கு விடப்படுமென படைத்துறைத் தலைமை அறிவித்துள்ளது.
ஓரிடத்தில் குவிமையப்படுத்தப்பட்ட அதிகாரம்
30 ஆண்டு கால ஆட்சியில் அரசியலமைப்பிலும் நடைமுறையிலும் அரசதலைவரின் அதிகாரம் பலமும் உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1981இலிருந்து அவசலகாலச் சட்டம் அமுலில் உள்ளது. அரசாங்கத்திற்கு எதிரானவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கையின்றி தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்படுவதற்கு சாதகமாக அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
பல கட்சிகள் தேர்தலில் பங்கேற்கின்ற நடைமுறை இருப்பினும், முபாராக் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சியே (National Demecratic party) பெரும்பான்மை பலத்துடன் தொடர்ச்சியாக ஆட்சியமைத்து வந்துள்ளது. ”இஸ்லாமிய சகோதரத்துவம்” (Muslim Brotherhood) பலமான எதிர்க்கட்சியாக விளங்கக்கூடிய நிலையில் உள்ளபோதும், மதவாதக் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றமையால் சுயேட்சை வேட்பாளர்களாகவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்கின்ற சூழல் நிலவியது.
2005ஆம் ஆண்டு வரை, முபராக் மட்டுமே அரச தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடைமுறையே நிலவியது. நாடாளுமன்றத்தின் மூலம் முபாராக் அரசதலைவராகத் தெரிவு செய்யப்பட்டு, (முபராக் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது) பின்னர் மக்கள் மத்தியில் கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு முபாராக்கின் வெற்றி ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குலகின் அழுத்தம் காரணமாக 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசதலைவர் தேர்தலில்; பல வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. தனது காலத்திற்குப் பின்னர், தனது மகனை (கமால் முபாராக்) அரச தலைவராக்கும் முபாராக்கின் வாரிசு அரசியல் திட்டத்தையும் மக்கள் சகித்துக் கொள்ளவில்லை. அதற்கான முன்னேற்பாடாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கமால் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ஸ்தம்பிதம்
கடந்த 30 ஆண்டுகளில் எகிப்தின் மக்கள் தொகை இரட்டிப்பாகியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் 40 மில்லியன்களாக இருந்த மக்கட் தொகை தற்போது 80 மில்லியன்கள் ஆகியுள்ளது. பொருளாதார சமநிலை பேணப்படாத புறநிலையில் சமூகம் பாரிய பாகுபாடுகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பற்றோர் தொகை 20 விழுக்காடாகவுள்ளது. அதிலும் பட்டதாரிகள் மத்தியில் வேலை வாய்ப்பற்றோர் தொகை 40 – 50 விழுக்காடு வரை உள்ளது. மத்திய கிழக்கின் மிகப்பெரிய கைரோ பல்கலைக் கழகத்தில் 200 000 மாணவர்கள் வரை கற்கின்றனர். 1985 வரையான காலப்பகுதிகளில் பல்கலைக் கழக பட்டதாரிகளுக்கு அரச நிர்வாகங்களில், வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. காலப் போக்கில் தனியார் மயமாக்கல் முக்கியப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டதன் விளைவாக அவ்வாறான வாய்ப்புகள் அற்றுப்போயின. அமெரிக்காவின் அழுத்தத்தினால் திறந்த பொருளாதாரக் கொள்கை, தனியார் மயமாக்கல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தன.
சாதாரண வேலைவாய்ப்பிற்குரிய துறையாக விவசாயத்துறை விளங்குகின்ற போதும், அதில் நவீனமயப்படுத்தல் இல்லாமை பெரும் குறைபாடெனக் கூறப்படுகின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பின்பற்றப்பட்ட விவசாய முறைமையினையே பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
எகிப்தைப் பொறுத்த வரையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வந்த ஆரம்ப காலகட்டத்தில், அதிகாரம் ஓரிடத்தில் குவிமையப்பட்டமை சிக்கலுக்குரியதாகத் தோன்றவில்லை. பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடைந்துவிட்ட நிiலியில், ஜனநாயகம், பரந்துபட்ட பொருளாதார சம உரிமைக் கோரிக்கைகள் எழுவது இயல்பானது என்பதைச் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்குலகின் ஜனநாயக இரட்டை வேடம்
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை, கருத்துரிமை என்ற நல்லாட்சி விழுமியங்களை முதன்மைப்படுத்துவதான தோற்றப்பாட்டை காட்டிவருகின்ற போதும், தமது நலன்சார் மூலோபாயங்களுக்காக சர்வாதிகார ஆட்சியாளர்களையும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற, போலி ஜனநாயகத்தைக் கொண்டுள்ள நாடுகளையும் ஆதரித்து வந்துள்ளன. தொடர்ச்சியாக ஆதரித்தும் வருகின்றன. நாடுகளின் வெளியுறவுக் கொள்கை என்பது நல்லாட்சி அடிப்படையிலோ அன்றி ஜனநாயகம், மனித உரிமை, விழுமியங்களின் அடிப்படையிலோ வகுக்கப்படுவதுமில்லை, பேணப்படுவதுமில்லை. அவை நலன்சார் மூலோபாயங்களின் அடிப்படையிலேயே வகுக்கப்படுகின்றன, பேணப்படுகின்றன, மாற்றமடைகின்றன.
இஸ்ரேலின் அச்சம்
எகிப்த்தில் நடந்தேறிய மாற்றத்தையிட்டு இஸ்ரேல் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளது. அரபு நாடுகளில் இஸ்ரேலுடன் நட்புறவு பேணுகின்ற ஒரேயொரு பெரிய நாடு என்பதோடு அதன் அயல் நாடுமாகும். 1967இல் நடந்தேறிய ”6 நாள்” போரில் எகிப்தின் சினாய் குடாவினை இஸ்ரேல் கைப்பற்றியது. 1979ஆம் ஆண்டு எகிப்திற்கும் இஸ்ரேலுக்குமிடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. சமாதான உடன்படிக்கைக்கு அமைய எகிப்தின் ஆக்கிரமிக்கப்பட்ட சினாய் பிரதேசத்திலிருந்து இஸ்ரேல் வெளியேறியது. உடன்படிக்கை எட்டப்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை முபராக் தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையைப் பேணி வந்ததோடு, இஸ்ரேலின் ஆதரவு சக்தியாகவும் இருந்து வந்துள்ளது.
இஸ்ரேலுடன் ஏற்படுத்தப்பட்ட மேற்சொன்ன உடன்படிக்கை காரணமாகவே அன்றைய அரசதலைவர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டார். அரபு நாடுகளிடமிருந்து எகிப்த் தனிமைப்படுத்தப்பட்டது. அரபு லீக்கிலிருந்து எகிப்த் நீக்கப்பட்டது. ஆனால் அந்நிலையை மாற்றி, அரபு நாடுகளுடனான உறவைப் புதுப்பித்ததோடு, மத்திய கிழக்கின் முதன்மை வகிபாகம் கொண்ட நாடாகவும் எகிப்தினை மாற்றிய பங்கு முபாராக்கைச் சாரும்.
முபாராக் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றப்பட்ட புறநிலையில், எதிர்காலத்தில் அமையப் போகின்ற அரசாங்கம் இஸ்ரேலுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடும் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது. எகிப்தைத் தொடர்ந்து அரபு நாடுகள் பலவற்றிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுமாயின் தனது பாதுகாப்பிற்கும் பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுமென்பது இஸ்ரேலின் அச்சத்திற்கான காரணியாகும். ஆவ்வாறு நிகழும் பட்சத்தில், பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான ஆதரவு மேலும் அதிகரிக்கும். இதனால் இஸ்ரேல் மீதான அழுத்தம் மென்மேலும் இறுக்கமடையும் என்பதும் இஸ்ரேலுக்கு நெருக்கடியாக அமையக்கூடியது.
எகிப்த் – அமெரிக்க நட்புறவு
அமெரிக்காவைப் பொறுத்த வரையில், நட்பு சக்தியாகிய எகிப்த்தில் நடந்தேறிய மக்கள் எழுச்சி, அதிர்ச்சி வைத்தியமாகவே அமைந்துள்ளது. அரசியல், பொருளாதார படைத்துறை ரீதியாக அமெரிக்காவுடன் நெருங்கிய உறவினை எகிப்த் பேணிவந்துள்ளது. எகிப்திற்கு ஆண்டுதோறும் பெருந்தொகை நிதியுதவியினை அமெரிக்கா வழங்கி வருகின்றது. எகிப்த்தின் படைத்துறைக்கு மட்டும் ஆண்டு தோறும் 1300 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் எழுச்சியின் ஆரம்பக் கட்டத்தில்; தெளிவான முடிவெடுக்க முடியாத தடுமாற்றத்துடன், மதில் மேல் பூனையாகவே அமெரிக்கா இருந்தது. இந்த விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக ஒபாமா நிர்வாகத்திற்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எழுச்சி தீவிரமடைந்த போது, பேச்சுவார்த்தை மூலம் ஒரு இடைக்கால ஒழுங்கிற்கு வருமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு நிகரான படைபலம் கொண்ட எகிப்தில் இராணுவ ஆட்சியோ அன்றி கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் ஆட்சியோ ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்குலக மட்டத்தில் உண்டு. ஜனநாயக நல்லாட்சி என்ற மக்கள் கோரிக்கைக்கு எதிர்மாறான நிலைக்கு இட்டுச் சென்றுவிடும் என்ற அச்சம் இதுவாகும்.
நலிவடைந்துவரும் அமெரிக்காவின் செல்வாக்கு
30 ஆண்டுகளாக ஜனநாயக குறைபாடுகள் தொடர்பாக அக்கறை காட்டாத அமெரிக்கா, எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது, தமது நலன்சார் அரசியலை முன்னெடுத்தது. இன்று மேற்குலகம் போற்றித் துதிக்கும் ஜனநாயகத்திற்காகவும் நல்லாட்சிக்காகவும் அந்நாட்டு மக்கள் எழுச்சி அடைந்த போது அதனை மறுதலிப்பதோ அன்றி பாராமுகம் காட்டுவதோ சாத்தியமற்றதாகி விட்டது. அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் நலன்சார் அரசியலுக்கும் கொள்கை சார் அரசியலுக்குமிடையில் ஒரு வகை சமநிலையைக் காட்டிக்கொள்ள விளைந்தாலும் பொருளாதார நலன்களே முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பது வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கின்ற உண்மையாகும்.
இப்புறநிலைகளில் கருத்திற் கொள்ளவேண்டிய மற்றுமோர் விடயம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு ஆகும். ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, பயங்கரவாதத்திற்கெதிரான போர், தீர்வின்றி இழுபறியாகியுள்ள பலஸ்தீனச் சிக்கல் ஆகியன மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கினை ஏலேவே பலவீனப்படுத்தியுள்ளது. எகிப்த், துனிசியா அமெரிக்காவுக்கு பாடமாக அமைந்துள்ளது. மத்திய கிழக்கு விவகாரங்களில் தனது அரசியல் செல்நெறியிலும் அணுகுமுறையிலும் தகுந்த மாற்றத்தை அமெரிக்கா ஏற்படுத்த வேண்டுமென்பதே எகிப்த் வழங்கியுள்ள பாடமாகும். ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா என சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா வழங்கிவரும் நிபந்தனையற்ற ஆதரவினை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குள் அது தள்ளப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
பீதியடைந்துள்ள சர்வாதிகார ஆட்சியாளர்கள்
உலக நாடுகளில் இராணுப் புரட்சி மூலமே பெரும்பாலான ஆட்சிக் கவிழ்ப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் மக்கள் புரட்சி மூலம் ஆட்சியதிகாரத்தை ஆட்டம் காணச் செய்ததற்கான சமகால எடுத்துக்காட்டாகவும் உந்துதலாகவும் துனிசியாவும் எகிப்த்தும் அமைந்துள்ளன.
எகிப்த் மக்கள் போராட்டத்தின் விளைவு, ஏனைய சில அரபு நாடுகள்- ஆபிரிக்காவினதும் ஆசியாவினதும் சில நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்த் தொடர்பான செய்திகள், ஒளிப்படங்களை அரச ஊடகங்களில் வெளியிட சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்தமை இங்கு நினைவூட்டத்தக்கது. தமது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான உந்துதலாக அவை அமைந்துவிடுமென்ற ராஜபக்ச சகோதரர்களின் அச்சத்தின் வெளிப்பாடே இது என்பதை யாரும் இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.
மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது இராணுவம் மக்களுக்கு ஆதரவாக நின்றதான கருத்து உலக ஊடகங்களில் வெளிப்பட்டன. அதேவேளை இராணுவத்தை ஏவிவட்டு, மக்கள் போராட்டத்தை அடக்குவதன் ஊடாக தனது பதவியைக் காத்துக் கொள்ள முபாராக் முனையவில்லை என்று கருதுவதற்கும் இடமுண்டு. ஆனபோதும் எகிப்த் படைத்துறையுடனான தமது நெருங்கிய செல்வாக்கினை பயன்படுத்திய அமெரிக்கா, படைத்துறைத் தலைமை மூலம் முபராக்கைப் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்ததான தகவலும் வெளிவந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு
எகிப்த் மக்கள் புரட்சி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கினையும் நலிவடையச் செய்துள்ளது. மஹமூட் அஹமதின்யாட் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் எதிர்காலத்தில் தூண்டப்படும் என நம்பப்படுகின்றது. எகிப்தின் மக்கள் கிளர்ச்சி வெளி சக்திகளின் தூண்டுதல் இன்றி உள்நாட்டு அரசியல் பொருளாதார புறநிலைகளிலிருந்து தோற்றம் பெற்றதாகும். ஆனால் ஈரானை நலிவடையச் செய்ய வேண்டிய மூலோபாயத் தேவை அமெரிக்காவிற்கு உண்டு என்ற வகையில் ஈரான் ஆட்சிபீடத்திற்கு எதிரான கிளர்ச்சி உள்ளிருந்து வெளிக்கிளம்பும் அதேவேளை வெளியிலிருந்தும் அதற்கான அழுத்தங்கள் எழுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஏலவே 2009ஆம் ஆண்டு ஈரானில் மக்கள் போராட்டங்கள் வெளிக்கிளம்பின. ஆனால் ஈரான் அதிகார பீடம் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ஈரான் தவிர மொறக்கோ, அல்ஜுரியா, ஜோர்டான், சவுதி அரேபியா, ஜெமென், சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இனிவரும் காலங்களில் மக்கள் கிளர்ச்சிகள் வலுப்பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எகிப்தின் எதிர்காலம்?
எகிப்தில் தொடர்ச்சியாக எவ்வாறான மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. அரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறை, சிவில் நிர்வாகத்துறை என ஏனைய அரச நிறுவனங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதில் தான் எகிப்தின் உண்மையான ஜனநாயக மறுசீரமைப்பு தங்கியுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக ஆட்சி எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது பொறுப்பேற்றிருக்கும் இராணுவத் தலைமை எந்தளவிற்கு அதிகாரங்களை ஜனநாயகப்படுத்தும் என்பது தொக்கி நிற்கின்ற கேள்வி!
எகிப்தின் மக்கள் போராட்டம் முபாராக்கை பதவியிலிருந்து தூக்கியது என்ற உடனடி மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றங்களையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. முழுமையான ஜனநாயகத்தை உடனடியாக உருவாக்குவதென்பது சாத்தியமற்றது. அது நீண்ட கால அடிப்படையிலேயே சாத்தியமாகும். ஆனபோதும் எகிப்தின் தேசிய அரசியலிலும், அதன் அனைத்துலக உறவு சார்ந்த அரசியலிலும் மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
வீரகேசரி, பொங்குதமிழ் – மார்ச் 2011