கிரீஸ் நாட்டின் பொருளாதாரத் தள்ளாட்டமும் அனைத்துலக நிதிநிறுவனங்களின் சுரண்டலும்!
கிரீஸ் நாட்டின் பொருளாதாரத் தள்ளாட்டம் அந்நாட்டின் பலவீனத்தால் இயல்பாக நிகழ்ந்ததல்ல. திட்டமிட்ட முறையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனைத்துலக நிதிநிறுவனங்களால் அதன் மீது திணிக்கப்பட்ட நெருக்கடி இது. அனைத்துலக மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பலம்மிக்க நாடுகள் தமது நிதிநிறுவனங்கள் மூலம் கிரீஸ் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளிடமும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமும் சுரண்டல் பொருளாதார அணுகுமுறையைக் கைக்கொள்கின்றன.
உலக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த நாடாகவும் உலகின் மிகப்பெரிய சுற்றுலாப்பயண நாடுகளில் ஒன்றாகவும் விளங்கிவந்த கிரிஸ் பெரும் பொருளாதாரச் சரிவுக்கு முகம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கிரிஸ் நாட்டுக்கு வழங்கி வந்த அவசரக்கடனை நிறுத்துவதென்ற முத்தரப்பு முடிவினையடுத்தே, கிரீசின் பொருளாதார நெருக்கடி விவகாரம் உலகச்செய்திகளில் பூதாகரமாக்கியது.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் புறநிலையில், கடன் வழங்கும் தரப்புகளுக்கும் கிரீஸ் நாட்டுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் இழுபறி தொடர்ந்தது. கிரீஸ் நாட்டுக்குரிய அனைத்துலக நிதியுதவிகள் நிறுத்தப்படும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்தன. கடனை மீளளிப்பதற்குரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான இணக்கத்தினை எட்டுவதற்குரிய பேச்சுவார்த்தைகள் 2015 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டன.
அனைத்துலக நாணய நிதியம் (International Money Fund – IMF), ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank – ESB), மற்றும் ஐரோப்பிய ஆணையம் (European Commission) ஆகியன கிரிஸ் நாட்டுக்குக் கடன் வழங்கும் தரப்புகள். இவற்றுக்குச் செலுத்த வேண்டிய பாரிய கடன்தொகையைக் கிரீஸ் பல ஆணடுகளாகச் செலுத்தத் தவறியமையே, அந்நாட்டுக்கான நிதியுதவிகள் தடைப்பட்டமைக்கான காரணி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஆகக்கூடிய கடனைக் கொண்டுள்ள நாடாக கிரீஸ் ஆகியுள்ளது.
அனைத்துலக பெருநிதிநிறுவனங்கள் கடன் அட்டைகளைப் பெருமெண்ணிக்கையில் மக்கள் மத்தியில் புழங்க விடுவதும், பொருள்நுகர்வினைத் தூண்டி அவர்களைக்; கடனாளிகளாக்குவதிலும் பெருவெற்றி கண்டிருக்கின்றன. இது கிரீஸ் போன்ற நாடுகளில் மட்டுமல்ல, உலகின் ஏனைய பெரும்பான்மையான நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் பொருளாதாரத் தன்னிறைவற்ற, வேலைவாய்ப்புப் பிரச்சினை அதிகமுள்ள, உலக நிதிநிறுவனங்களின் கடன்களில் தங்கியுள்ள நாடுகளைப் பெரிதும் பாதிக்கின்றது. கடனில் இயங்கிய கிரேக்க வங்கிகளும் குடிமக்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் பெருமளவு கடன்களை வழங்கி வந்துள்ளன.
கடன் வழங்கிய முத்தரப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, கடன் மீளளிப்பு உடன்படிக்கையில் கிரீஸ் கைச்சாத்திடாவிடில், ஐரோ வலையத்திற்குள்ளும், அதுசார்ந்த நடைமுறைகளிலிருந்தும் கிரேக்கத்தை வெளியேற்றப்படவேண்டிவருமென கடன்வழங்கும் முத்தரப்பு எச்சரித்து வந்தது.
கடன் வழங்கும் தரப்புகளுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் வகையிலான பொதுவாக்கெடுப்பு 2015 ஜூலை 5ம் நாள் கிரீஸ் மக்கள் மத்தியில் நடாத்தப்பட்டது. முத்தரப்பின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படத்தேவையில்லை என்பதற்கு பெரும்பான்மை மக்கள் (61 வீதம்) வாக்களித்தனர். இவ்வாறான பொதுவாக்கெடுப்பிற்கு அவசியமில்லை என்பது ஐரோப்பிய ஒன்றியத் தரப்பு வாதமாக இருந்தது. வாக்கெடுப்பில் “இல்லை” என வாக்களிக்குமாறு கிரேக்க அரசாங்கத் தரப்பு கோரியிருந்தது. ‘இல்லை’ என்ற பெரும்பான்மை மூலம் கிரீஸ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளனர்.
1981ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்ற கிரீஸ், 2002 இல், அதாவது 21 ஆண்டுகளுக்குப் பின்னரே “ஐரோ வலையத்திற்குள ; -Eurozone” இணைக்கப்பட்டது.
2004இல் தலைநகர் ஏதென்ஸ் இல், 9 பில்லியன் ஐரோ செலவில் ஒலிம்பிக் போட்டிகள் நடாத்தப்பட்டதையடுத்து, மொத்த தேசிய வருமானத்தில் 6,2 வீத பற்றாக்குறை ஏற்பட்டதாக வரவுசெலவுத்திட்டததில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நாட்டினுடைய கடன், தேசிய வருமானத்தின் 110 வீதமாக அதிகரித்திருந்தது. 2005இல் வரவுசெலவுத் தொகையில் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்;தின் கண்காணிப்பிற்கு உட்படுகின்றது. 2008இல் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியை அடுத்து ஐரோப்பிய நாடுகளும் அப்பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்த போது, கிரீஸ் அதன் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
இவ்வாறாக முன்னைய காலங்களில் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை பாரிய அளவில் ஏற்பட்டிருந்ததாகவும், அது பகிரங்கப்படுத்தப்படாது மறைக்கப்பட்டுமிருந்ததாகவும் 2009இல் கிரேக்க அரசாங்கம் அறிவித்தது. அதனையடுத்து அனைத்துலக கடன் சந்தையிலிருந்து கிரேக்கம் தள்ளிவைக்கப்படுகின்றது. 2010 இல் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பிற்குச் சென்ற கிரேக்கத்தில் தொடர்ச்சியாகப் பாரிய நெருக்கடிகள் அதிகரித்துவந்துள்ளன.
முத்தரப்புக் கடன் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டுவந்த கடன்தொகை இதுவரை 264 பில்லியன்கள் யூரோவாகப் பல்கிப் பெருகியுள்ளது. அத்தோடு கடன் வழங்கும் தரப்புகளின் அழுத்தத்தின் பேரில் நாட்டின் பொதுநிர்வாக, மக்கள் நலத் திட்டங்களிலும் பாரிய வெட்டுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 2010 -2014 காலப்பகுதியில் நாட்டின் வேலையில்லாதோர் தொகை 25 வீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்தது. அதிலும் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மத்தியில் 50 வீதம் வரையானவர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாக உள்ளனர் என்பது அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியின் ஆபத்தை எடுத்துக்கூறுகின்றது. உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவும் சேர்ந்து கொள்ள சராசரி கிரேக்கர் ஒருவரின் ஊதியம் 18 வீதத்தினால் குறைவடைந்ததோடு, பொருட்களின் விலையேற்றம் தொடர்ச்சியாக உச்சமடைந்து வந்துள்ளது. மக்களின் நுகர்வுவலு 40 வீதத்தால் குறைவடைந்ததாக தரவுகள் கூறுகின்றன. நாட்டின் தேசிய உற்பத்தி 25 வீதத்தால் வீழ்ந்திருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடாத்தி, கடன்களைத் தள்ளுபடி செய்வதென்ற வாக்குறுதியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட, இடதுசாரிக்கூட்டணியான ‘சிரிசா’ (Syriza) 2015ஆம் ஆண்டு ஜனவரி தேர்தலில் வென்று ஆட்சியமைத்துக்கொண்டது. கட்சியின் தலைவர் Alexis Tsipras பிரதமராகப் பதவியேற்றார்.
முத்தரப்பிடமிருந்தும் கடனுதவியைப் பெறுவதற்கான நிபந்தனையாக பொது மக்களுக்கான அரசாங்கத்தின் நலத்திட்டங்களில் கணிசமான குறைப்புகளைச் செய்யவேண்டி கிரீஸ் நிர்ப்பந்திக்கப்பட்டது. இவ்வகை வெட்டுகளால் நாட்டின் பொருளாதாரம் சரிவைக்கண்டது. 300 000 வரையான சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
நாட்டின் வரி அறவீடு அமைப்பியல் சார்ந்து பலவீனமானதாகவுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே பொருளாதாரத்தை நலிவடையச் செய்த காரணிகளில் முக்கியமானதாக இதனைச் சுட்டிக்காட்டும் கடன் வழங்கும் தரப்புகள் வரி அறவீட்டு அமைப்பினை (நடைமுறையினை) இறுக்குமாறு கோரி வந்துள்ளது.
நாட்டின் வரிஅறவீட்டு நடைமுறையில் நிலவும் போதாமைகளின் விளைவாக நடந்தேறும் வரி ஊழல், மற்றும் பெருநிறுவனங்களால் வரி ஏய்ப்பு நிலைமைகளால் ஆண்டொன்றுக்கு 10 முதல் 20 பில்லியன் யூரோ பெறுமதியான நிதியினை இழக்கின்றதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேவேளை கறுப்புப்பணப் புழக்கமும் நாட்டின் மொத்த வருமானப்பெறுமதியின் 20 -30 வீதமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
ஓய்வூதிய நடைமுறைக்குப் பெருமளவு நிதி செலவிடப்படுவதால் அதில் இறுக்கத்தைக் கொண்டுவருமாறு முத்தரப்பு கோரியுள்ளது. உதாரணமாக தந்தையின் மறைவிற்குப் பின்னர், அவரின் ஓய்வூதியத்தொகையைத் திருமணமாகாத பெண்பிள்ளைகள் அல்லது மணமுறிவு பெற்ற பெண்கள் பிள்ளைகளுக்கு மாற்றிவிடுகின்ற நடைமுறையால் ஆண்டொன்றுக்கு 550 மில்லியன் யூரோக்கள் செலவிடப்படுகின்றன. ஓய்வூதிய நடைமுறைகளில் கடன்நிறுவனங்களின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் ஓய்வூதியம் பெறுவோரில் பெருமெண்ணிக்கையானோர் வறுமையில் வாடும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலான ஆரோக்கியமற்ற உறவு கிரீசின் தனியார் உற்பத்தித்துறையைப் பலவீனமானதாக்கியுள்ளதென பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உற்பத்தி சார்ந்த தொடர்பாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் பொதுத்துறையில் பெரிதும் தங்கியுள்ள நிலையில் தனியார் உற்பத்தித்துறை இருந்து வந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. “Transparency International ” தகவலின்படி பல்கேரியா, ரொமேனியா ஆகிய நாடுகளையொத்த நிலையில்; பெரும் ஊழல் நிறைந்த நாடாக கிரீஸ் கணிக்கப்படுகின்றது.
2018ஆம் ஆண்டுக்குள், நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில், 3,5 வீத இலாபத்தை அடைவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகள் முத்தரப்பினால் முன்வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகளிலும் வரி அதிகரிப்பு மூலம் இதனைச் சாத்தியப்படுத்தமுடியுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டினை கணிசமாகக் குறைத்தல் உட்பட்ட திட்டங்கள் மூலம் கடன் மீளளிப்புக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இத்தகு உடன்படிக்கை மூலம் கிரீஸ் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரமானதும், நேர்மறையான தொடர் தாக்கங்களை ஏற்படுத்தவல்லதுமான தீர்வினை ஏற்படுத்தமுடியாதென்ற வலுவான கருத்தும் நிலவுகின்றது. கடன்நிறுவனங்களினால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டம் மேலதிக கடன்பெறுதலுக்கான உடன்படிக்கையாக மட்டும் அமைவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரச் சரிவைச் சற்றுத்தள்ளிப் போடுவதென்ற அளவில், குறுகியகாலப் பயனையே தரவல்லது.
அதேவேளை கிரீஸ் நாடும் தனது பொருளாதாரத்தைச் ஸ்திப்படுத்தும் வகையில் தூரநோக்குடைய காத்திரமான பொருளாதார மறுசீரமைப்புகளை ஏற்படுத்தத்தவறின் அதன் பொருளாதாரச் சரிவினைத் தடுப்பது கடினமாகிவிடும்.
கடன் வழங்கும் முத்தரப்பு நிறுவனங்களின் புதிய கடன் வழங்கல் என்பதுகூட காலக்கெடு முடிவடைந்துவிட்ட பழைய கடன்களின் ஒரு பகுதியை மீளளிப்பது என்ற நோக்கிலானது என்பது கவனிக்கத்தக்கது. இதுவே 2010இலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. கிரீஸ் நாட்டின் பொருளாதாரத்தைக் கடனில் தங்குபொருளாதாரமாக்கியதில் இந்நிறுவனங்களின் பங்கு பாரியது.
கடன் தள்ளுபடியே இதற்கான நிரந்தரத்தீர்வாக அமைய முடியும்.
அனைத்துலக நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம் என்பனவற்றிற்கிடையில் ஒருமித்த கருத்து நிலவவில்லை என்பதும் இங்கு கவனிப்பிற்குரியது. ஐ.எம்.எப் அமெரிக்காவின் மேலாண்மைக்கு உட்பட்டது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் அதிகாரப்போட்டி, குறிப்பாக பொருளாதார நலன் சார்ந்த அதிகாரப்போட்டி நிலவுகின்றமை இரகசியமில்லை. கடன் தள்ளுபடி தொடர்பான திட்டம் ஏற்றுக்கொள்ள முடியாததென ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திமிக்க நாடான ஜேர்மனியின் ஆட்சித்தலைவர் அஞ்சலா மர்க்கல் திட்டவட்டவாகக் கூறியிருந்தார்.
மக்களையும் மக்களுக்கான அரசாங்கத்தின் நலத்திட்டங்களையும் பாதிக்கத்தக்க இறுக்கமான வெட்டுக்கள்ஃகுறைப்புகள் மற்றும் வரி அறவீடுகள் உள்ளிட்ட திட்டத்தினை ஏற்கச்செய்வதனூடு மக்களின் எதிர்ப்பினையும் அதிருப்தியினையும் ‘சிரிசா’ அரசாங்கம் மீது திருப்புவதன் மூலம் இடதுசாரிக் கூட்டு அரசாங்கத்தினைப் பதவிவிலகச் செய்யும் உள்ளார்ந்த நோக்கத்தினையும் கடன்வழங்கும் தரப்புகள் கொண்டிருக்கின்றன.
2011 – 2015 வரையான 4 ஆண்டுகளில் மட்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 2 பிரதமர்கள் (George Papandreou, Antonis Samaras) கடன் வழங்கும் முத்தரப்பினரின் இறுக்கமான உடன்படிக்கைகளுக்கு உடன்பட்ட காரணத்தினால் பதவிவிலக நேர்ந்தது. 2011இல் கிரிஸ் பிரதமர் George Papandreou, Antonis Samaras பதவியிலிருந்து விலக்கப்பட்டு, ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத்தலைவர் Lucas Papademos பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பதை எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.
அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சவாலாக விளங்குகின்ற, அதேவேளை பாரபட்சமற்ற வாய்ப்புகளையும் சலுகைகளையும் கோருகின்ற ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையான சமிக்ஞையை வழங்குவதையும் நோக்காகக்கொண்டே கிரீஸ் விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் கையாள்கின்றது என்ற பார்வையும் சில மட்டங்களில் உண்டு.
குறிப்பாக தென் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகள் இதில் அடக்கம்.
கிரீசின் முன்னைய இரண்டு பிரதமர்களும் மேற்கொண்ட உடன்படிக்கைகளை விடவும் சிறந்ததாகவும் அதேவேளை முத்தரப்பின் நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாத வகையிலும், கிரீஸ் தேசத்தின் பொருளாதார நலனுக்குச் சாதகமான உடன்படிக்கையை எட்டவேண்டிய சவால்மிக்க தேவை சிரிசா அரசாங்கத்திற்கும் அதன் பிரதமர் வுளipசயள இற்கும் உண்டு.
கிரீஸ் நாட்டின் பொருளாதாரத் தள்ளாட்டம் அந்நாட்டின் பலவீனத்தால் இயல்பாக நிகழ்ந்ததல்ல. அதாவது கிரீஸ் மட்டும் இதற்குப் பொறுப்பல்ல. திட்டமிட்ட முறையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனைத்துலக நிதிநிறுவனங்களால் அதன் மீது திணிக்கப்பட்ட நெருக்கடியென்று இதனைக் கூறமுடியும். இன்னொரு வகையில் சொல்வதானால், அனைத்துலக மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பலம்மிக்க நாடுகள் தமது நிதிநிறுவனங்கள் மூலம் கிரீஸ் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமும் சுரண்டல் பொருளாதார அணுகுமுறையைக் கைக்கொள்கின்றன என்பது வெளிப்படை.
கிரீஸ் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல், அயர்லாண்ட் போன்ற நாடுகள் மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தினாலும், அனைத்துலக நிதிநிறுவனங்களாலும் பல்வேறு நிலைப்பட்ட பாரபட்சங்களும் சுரண்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. பொருளாதார-அரசியல் தள்ளாட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம், அந்நாடுகளை நிரந்தரக் கடன்பெறும் நாடுகளாகவும், அந்நாடுகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றிய சக்திமிக்க நாடுகளினதும் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிதிநிறுவனங்களினதும் உள்நோக்கமாகும்.
லத்தீன் அமெரிக்க, ஆசிய மற்றம் ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும் இத்தகு கைங்கரியங்களைப் பல தசாப்தங்களாக இவ்வகை நிதிநிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன என்பது வெளிப்படையாகப் பேசப்படாத உண்மை.
பொங்குதமிழ், ஜூலை 2015