கிழக்கு உக்ரைன் போரும் மேற்குலக, ரஸ்ய அணுகுமுறையும்
கிழக்கு உக்ரைன் பிரதேசங்களுக்கு உள்ளக சுயாட்சியுடனான கூட்டாட்சி அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஸ்யா போருகிறது. இதனை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளது. ஆனால் அரசியலமைப்பு மறுசீரமைப்பினூடாக இப்பிரதேசங்களுக்கு “விசேட அந்தஸ்து” வழங்குவதற்கு உக்ரைன் இணங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
2014 மார்ச் மாதத்திலிருந்து ரஸ்யாவின் அண்டை நாடான உக்கிரைனின் கிழக்குப் பிராந்திய நகரங்களில் கடும்போர் இடம்பெற்று வந்துள்ளது. அதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள்; இடம்பெற்ற போர் நடவடிக்கைகளில் 5700 வரையான உயிர்கள் பலியாகியுள்ளன.
2014ம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்ரைனின் சுயாட்சிப் பிரதேசமாகவிருந்த கிருமியா குடா மீது ரஸ்யா படையெடுத்து, அதனைப் பலவந்தமாகத் தன்னோடு இணைத்துக் கொண்ட பின்னணியில் ரஸ்ய மொழிபேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு உக்ரைனில் ஆயுதக்கிளர்ச்சி வெடித்தது. உக்ரைன் நாட்டில் நிலவிவந்த தொடர் அரசியல் திடமின்மையினது விளைவாகவும் ரஸ்ய மற்றும் மேற்குலக நலன்களுக்கிடையிலான முரண்பாடுகளின் ஒரு அங்கமாகவுமே உக்ரைன் உள்நாட்டுப்போரைப் பார்க்க வேண்டியுள்ளது.
கிழக்கு உக்ரைனின் ரஸ்யப் பெரும்பான்மை பிராந்தியங்களைத் தனிநாடாக பிரித்தெடுப்பது அல்லது ரஸ்யாவுடன் இணைக்கவேண்டுமென்ற கோரிக்கை கிளர்ச்சியாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதக்கிளர்ச்சியில் ஈமுபட்டிருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ரஸ்யாவின் முழுஅளவிலான ஆதரவு உள்ளது. ஆயுத உதவிகளை ரஸ்யா வழங்கி வந்துள்ளது. அதுமட்டுமல்ல நேரடியாகத் தனது படைத்துறை ஆளணிகளை இறக்கிவிட்டு, உக்ரைன் படைகளுக்கெதிரான போரிலும் ரஸ்யா ஈடுப்பட்டது. உக்ரைனுக்கெதிரான போரில் தனது படைகள் ஈடுபட்டிருப்பதையும், ஆயுத வழங்கலையும் ரஸ்யா தொடர்ச்சியாக மறுத்துவந்த போதும் எவருமே அதனை நம்பத் தயாரில்லை. ஏனெனில் செய்மதி ஆதாரங்கள் இருப்பதாக நேட்டோ கூறியிருந்தது.
உக்ரைன் போரில் ரஸ்யாவின் நேரடி வகிபாகம், கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க மற்றும் மேற்குலக நலன்கள் என்ற புறக்காரணிகள் இந்தப்போரை அனைத்துலக கவனக்குவிப்பிற்கு உள்ளாக்கிய அம்சங்கள். போர்நிறுத்தம் மற்றும் சமாதானத் தீர்வு பற்றிய பேச்சுக்களும் இடம்பெற்றிருக்கின்றன. பேச்சுவார்த்தைகளில் ஜேர்மன், பிரான்ஸ், ரஸ்யா மற்றும் உக்ரைன் ஆகிய தரப்புகள் பங்கேற்றன. அமெரிக்கா நேரடியாக பேச்சுக்களில் ஈடுபடவில்லையென்றபோதும், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகியன அமெரிக்காவுடனும் இதுவிவகாரம் தொடர்பான பேச்சுக்களை நடாத்தின.
ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுக்களில் முனைப்புக் கொண்டிருந்ததோடு, ரஸ்யாவை வழிக்குக் கொண்டு வரும் நோக்கிலான வர்த்தகத் தடைகளை ரஸ்யாவிற்கு எதிராக அமுல்படுத்தியும் இருந்தது. மேலும் தடைகளை இறுக்கவுள்ளதாக எச்சரித்தது. உக்ரைன் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பாகத் தாம் பரிசீலித்துவருவதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது. எனவே அனைத்துலக சக்திகள் ஒருபுறம் சமாதானப் பேச்சுக்கள் எனவும் மறுபுறம் ஆயுத வழங்கல் எனவும் இரட்டை அணுகுமுறையுடன் இயங்குகின்றன. இது அவற்றின் உள்ளார்ந்த நோக்கத்தைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது.
பேச்சுவார்த்தைகளிலுள்ள சிக்கலுக்குரிய விடயமென்று நோக்குமிடத்து, கிழக்கு உக்ரைன் பிரதேசங்களுக்கு உள்ளக சுயாட்சியுடனான கூட்டாட்சி அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஸ்யா போருகிறது. இதனை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளது. ஆனால் அரசியலமைப்பு மறுசீரமைப்பினூடாக இப்பிரதேசங்களுக்கு “விசேட அந்தஸ்து” வழங்குவதற்கு உக்ரைன் இணங்க வாய்ப்புள்ளதான தகவல்கள் வெளிவந்தன.
ரஸ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கிழக்கு உக்ரைனின் பெருநகரங்கள் பலவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் செறிந்திருக்கும் இப்பகுதிகளை உக்ரைன் அரசாங்கப் படைகள் மீளக் கைப்பற்றுவதற்குத் தாக்குதல்களை நடாத்துமாயின் பெரும் உயிரழிவுகள் ஏற்படும்.
இப்பிரதேச மக்கள் மத்தியில் உக்ரைன் அரசாங்கத்திற்கும் மேற்கிற்கும் எதிரான மனநிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கான காரணிகளாகக்கூறக்கூடியதில் ஒன்று ரஸ்யாவினால் முன்னெடுக்கப்பட்டுவந்த எதிர்ப்பிரச்சாரம். மற்றையது பொது மக்கள் மீதான உக்ரைன் படைகளின் கனரக எறிகணைத் தாக்குதல்களும் அதனால் ஏற்பட்ட உயிரழிவுகளும்.
உக்ரைன் போரில் ரஸ்யாவின் நேரடித் தலையீட்டுக்கும் வகிபாகத்திற்குமான மூலமென்று நோக்குமிடத்து, உக்ரைன் மேற்கு நோக்கி நகர்வதைத் தடுப்பதும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ போன்ற மேற்கின் பொருளாதார மற்றும் படைத்துறைக் கட்டமைப்புகளுக்குள் உக்ரைன் உள்வாங்கப்படுவதைத் தடுப்பதுமாகும். உக்ரைன் நாட்டினை இத்தகையதொரு உள்நாட்டுச் சிக்கலுக்குள்ளும் முரண்பாட்டுச் சூழலுக்குள்ளும் வைத்துப் பேணுவதே தனது செல்வாக்கலிருந்து அது மீறிச்செல்வதைத் தடுப்பதற்குரிய ஒரு மார்க்கமாக ரஸ்யா பார்க்கின்றது.
உக்ரைன் மண்ணில் ரஸ்யாவின் இராணுவப்பிரசன்னம் உக்ரைன் அரசாங்கத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான முன்நிபந்தனைகளாக, ஐரோப்பியத் தரத்திற்குரியதாக பல்வேறு அரசியல் பொருளாதார மறுசீரமைப்புகள் உக்ரைனில் நிகழவேண்டும். ஏலவே பொருளாதார நெருக்கடியிலிருந்த நாடு, மோசமான போரினால் மேலும் சிதைவுகளுக்குள் சென்றுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றித்துடனான இணைவை மேலும் தள்ளிப்போடக்கூடியது. இந்த அடிப்படையில் பார்க்கப்போனால் பூதினின் நோக்கம் நிறைவேறியுள்ளது எனலாம்.
அந்நாட்டினை பெரும் அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதன் மூலம் தனக்கு ஆதரவான நாடாக மாற்றுவது, மேற்குடன் கூட்டுச்செயற்பாட்டுக்கு உவப்பில்லாத வகையில் கவர்ச்சியற்றதாக அதனை மாற்றுவதும் அதனூடாக மேற்கிற்கும் உக்ரைனுக்குமிடையிலான உறவினைத் துண்டிக்கலாம் அல்லது தள்ளிப்போடலாம் என ரஸ்யா நம்பக்கூடும். தற்போதைய சூழலில் போர் இடம்பெறும் ரஸ்ய மொழி பேசும் பெரும்பான்மை மக்களைக் கொண்ட கிழக்குப் பிராந்தியங்கள் மேற்குலகிற்கு எதிரான மனநிலையுடையதாக இருப்பினும் உக்ரைனின் ஏனைய பிராந்திய மக்களில் பெரும்பான்மையினர் மேற்குலகுடனான உறவு சார்ந்து ஆதரவு நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
போர் நீடித்தால் உக்கிரைன் பாரிய மனிதப் பேரழிவுகளுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் இட்டுச்செல்லப்படும். பேச்சுவார்;த்தைகள் மூலம் தீர்வு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் குறுகிய கால அடிப்படையில் தென்படவில்லை.
இது கிழக்கு ஐரோப்பாவிலுள்ள Transnistria, Abkhazia, South Ossetia போன்ற தேசங்களையொத்த நிலைமைக்கும் இட்டுச் செல்லக்கூடும். அதாவது சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத, அதேவேளை ரஸ்யாவினாலும் அதன் அதீத செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு சில நாடுகளினால் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட நாடாக கிழக்கு உக்ரைன் பிராந்தியம் அறிவிக்கப்படும் வாய்ப்பு இல்லாமலில்லை. கிருமியாவைப் பலவந்தமாக தன்னோடு இணைத்தது போல் இதனை இணைக்கும் வாய்ப்பு குறைவென்றே அவதானிகள் கருதுகின்றனர். கிருமியா விவகாரத்தைவிட கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் அனைத்துலகத் தலையீடும் அழுத்தமும் அதிகம். ரஸ்யா மீது வர்த்தகத் தடைகள் சிலவற்றை அமுல்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யா வழிக்குவராவிடில் அதனை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக அச்சுறுத்திவருகிறது. உக்கிரைனில் தமது செல்வாக்கினை பெருக்குவதிலும் அதனை மேற்கு நோக்கி நகர்த்துவதிலும் அமெரிக்காவிற்கும் மேற்கிற்கும் முனைப்புண்டு.
இங்கு கவனிப்பிற்குரிய மற்றுமொரு செய்தி என்னவெகில், உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினது அணுகுமுறை தோல்விடைந்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. உக்ரைனில் போர் மூள்வதற்கு முன்னரான காலப்பகுதிகளில் மேற்குலகம் பல தவறுகளை இழைத்துள்ளதாக அந்த அறிக்கை சாடியுள்ளது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவுடன் எத்தகைய அணுகுமுறைகளைக் கையாண்டன, அவை எவ்வவாறு உக்ரைன் விவகாரத்தை எல்லை மீறிப்போகச் செய்தன எனவும் விபரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள்; வெளியாகியிருந்தன.
ரஸ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக விளாதிமிர் பூதின் ஆட்சிக்காலம் தொடங்கிலய 2000இற்குப் பின்னர் பூதினால் கட்டியெழுப்பப்பட்டுவரும் புதிய ரஸ்யாவின் மாற்றங்களினால் எத்தகையை விளைவகளை ஐரோப்பா சந்திக்க நேரிடுமென்ற சரியான கணிப்பும் புரிதலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டத்தில் இருக்கவில்லையென அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிருமியாவைப் பலவந்தமாக இணைத்தமை, உக்ரைன் முழுஅளவிலான போருக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளமை பூதினின் ரஸ்யாவைக் கையாள்வதில் ஐரோப்பா தோல்வி கண்டுள்ளது என்பதையே காட்டுகின்றது.
ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டமையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுக்கவனமும் அதை நோக்கியிருந்தமையும் உக்ரைன் போர் முழுவீச்சில் கூர்மைபெற்றதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்ததாகவும்; கூறப்படுகின்றது. உக்ரைன் விவகாரம் கூட ஒருவகையில் மேற்கிற்கும் ரஸ்யாவிற்குமிடையிலான நலன்சார் அரசியல் போட்டியின் ஒரு வடிவமே. இருதரப்பு நலன்களுக்கிடையில் ஒரு கருவியாக, பகடைக்காயாகவும் உக்ரைன் கையாளப்படுகின்றது என்பதே உண்மையாகும்.
பொங்குதமிழ், மார்ச் 2015