’சமாதனத்திற்கான நோபல் விருது 2014’: சிறார் உரிமைக்கான அங்கீகாரம்!
இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கடந்த 2010இலிருந்து உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரபு நாடுகளில் ஏற்பட்ட வெகுசன எழுச்சி, ஆட்சி மாற்றங்கள், மத்திய கிழக்கில் இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையின் இழுபறி, சிரியாவின் உள்நாட்டுப்போர், ஈராக்கில் ’இஸ்லாமிய அரசு – IS’இற்கு எதிரான அமெரிக்காவின் போர், உக்ரைன் நெருக்கடி எனப் பல்வேறு பிராந்தியங்களிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இவற்றில் அமெரிக்காவின் நேரடிப்பங்கும் அணுகுமுறையும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளமை வெளிப்படையானது. எனவே ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்திற்கான நோபல்விருது நடைமுறையில் பொருத்தம்மிக்கதுதானா என்ற கேள்விளை எழுப்புவதோடு, அவருக்கு விருதுவழங்கப்பட்டமை தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கும் நியாயம் கற்பிக்கின்றது.
2014ஆம் ஆண்டுக்குரிய சமாதானத்திற்கான நோபல் விருது பாகிஸ்தானிய பின்னணியுடைய 17 வயதான மலாலா யூசப்சாய் என்ற இளம் பெண்ணிற்கும், இந்தியாவைச் சேர்ந்த 60 வயதான கைலாஸ் சத்யார்த்தி என்பவருக்கும் வழங்கப்பட்டது. 2014 டிசம்பர் 10ஆம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இந்த இருவருக்குமான விருது வழங்கும் விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒவ்வோராண்டும் இவ்விழாவில் பங்கேற்பது வழமை.
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் பகைமையுணர்வை பரஸ்பரம் வளர்த்துவந்துள்ள அயல்நாடுகள் என்ற வகையிலும் இந்த இருநாடுகளைச் சேர்ந்த இருவர் நோபல் விருதுக்குத் தெரிவாகியுள்ளமையும் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த இருவருக்கமான சமாதானத்திற்கான நோபல் விருது அரசியல் சர்ச்சையைத் தோற்றுவிக்காத தெரிவுகள் என்பது பரவலான கருத்து. பெரும்பாலான உலக நாடுகள், அனைத்துலக அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தத் தெரிவினை வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
மலாலா
முதலாமவர் பாகிஸ்தானின் பெண் சிறார்கள் மற்றும் இளம்பெண்களின் கல்விக்காக குரல்கொடுத்து செயற்பட்டுவருபவர் என்ற ரீதியில் அனைத்துலக அரங்கத்தில் நன்கு அறியப்பட்டவர். பெண் பிள்ளைகளின் கல்விக்கு எதிரான இறுக்கமான தடைகளை அமுல்படுத்திவரும் தலிபான்களின் அடிப்படைவாதத்தை எதிர்த்து தனது இளவயதிலிருந்து செயற்பட்டவர் என்ற காரணத்தினால் தலிபான்களால் 2012ஆம் ஆண்டு கொலை முயற்சிக்கு உட்பட்டவர் என்பதே இவரை உலகறியச் செய்த முக்கிய காரணியெனலாம். பேரூந்தில் பாடசாலை சென்று கொண்டிருக்கும் போது இவர்மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதில் தலையில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர்தப்பியவர். பின்னர் பிரித்தானியாவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தவர்.
சத்யார்த்தி
இரண்டாமவர் இந்தியாவின் மத்ய பிரதேசத்தைச் சேர்ந்தவர். மலாலா அளவிற்கு அனைத்துலக அளவில் ஊடகவெளிச்சம் பெற்றிருக்காதவர் என்றபோதும், குழந்தைகள் கொத்தடிமைத் தொழிலாளர்களாக ஆக்கப்படுவதற்கு எதிரான செயற்தளத்தில் இயங்கிவருபவர். மோசமான தொழிற் சூழல்களிலிருந்து சிறுவர்களை மீட்டெடுக்கும் போராட்ட களத்தில் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வந்தவர். சிறார்களின் கல்வியுரிமைக்கும் வாய்ப்புக்குமாகப் போராடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எனும் அடையாளத்தைக் கொண்டுள்ளார். ’கல்விக்கான உலகளாவிய பரப்புரை – Global Campaign for Education’ மையத்தினுடைய பொதுச்செயலாளராகவும் விளங்குகின்றார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் மனித உரிமைக்காக குரல்கொடுத்துச் செயற்படுபவர்கள் என்பது இவ்விருவருக்குமிடையிலான ஒற்றுமை. மலாலா குறுகிய காலத்தில் உலகம் தழுவிய அளவில் பரபரப்பாக அறியப்பட்டவர். அதற்கு இவருடைய இளவயது முதற்காரணம். மற்றையது மேற்குலக ஊடகப் பரப்புகளில் அடிக்கடி பேசுபொருளாகும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான குரலாக இவர் ஒலித்தவர். உயிராபத்திற்கு முகம்கொடுத்தும் தனது கொள்கைக்காக தொடர்ந்து பேசிவருவபர் என்கிற இவரது துணிச்சலும் ஏனைய காரணங்களாகக் கூறக்கூடியவை. தனது வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய ’நான் மலாலா’ என்ற இவரது சுயசரிதை நூல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது என்பதோடு கடந்த ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பும் மலாலாவிற்குக் கிட்டியிருந்தது.
ஒபாமாவுக்கான நோபல் விருதும் அரசியல் சர்ச்சைகளும்
நோபல் விருது என்பது அவ்வப்போது அரசியல் ரீதியான சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்துள்ளது. சமாதானத்திற்கான நோபல் விருது சார்ந்து இறுதியாண்டுகளின் தெரிவுகளை நோக்குமிடத்து 2009இல் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கும், 2010ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் Liu Xiaobo அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்ட போது பெருத்த சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன.
அமெரிக்க அரசுத்தலைவராக ஒபாமா ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில், சமாதானத்திற்கான நோபல் விருதினை அவருக்கு வழங்குவதற்குரிய அழுத்தமான காரணங்கள் ஏதுமிருக்கல்லை என்ற கடுமையான விமர்சனங்கள் அன்றைய நாட்களில் பல மட்டங்களிலும் முன்வைக்கப்பட்டன. அத்தோடு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் அணுகுமுறையும் உலகளாவிய ரீதியில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும் பார்க்க போர்களையும் பிளவுகளையுமே அதிகம் ஏற்படுத்தி வந்திருக்கின்றது என்ற புறநிலையிலும் மேற்படி விமர்சனங்கள் அழுத்தமாக முன்வைக்கப்படடன.
சீனாவைச் சீற்றமடையவைத்த நோபல் விருது
2010ஆம் ஆண்டுக்குரிய சமாதானத்திற்கான நோபல் விருதும் 2009ஆம் ஆண்டைப் போல சர்ச்சைக்குரியதாகியிருந்தது. சீனாவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் Liu Xiaobo 2010ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுக்குத் தெரிவானார். சீனச் சட்டத்தை மீறி அரசைக் கவிழ்ப்பிற்கு முயன்று வந்ததான குற்றச்சாட்டின் பேரிலும், அந்த அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கும்; ஜனநாயக மறுப்பிற்கும் எதிராக குரல்கொடுத்தும் எழுதியும் மக்களை அணிதிரட்ட முயன்ற குற்றத்தின் பேரிலும் சீன அரசினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சமாதானத்திற்கான நோபல் விருதிற்குத் தெரிவாகியிருந்தமையே இதனைச் சர்ச்சைக்குள்ளாக்கியிருந்தது. சீனாவின் கொம்யூனிச அதிகார மையத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர். அதற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். இவருடைய சிறையடைப்பை ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டித்திருந்தன.
இவருக்கு சமாதானத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டமை சீனாவை கடும் சீற்றத்திற்கு உட்படுத்தியிருந்தது. அனைத்துலக சமூகம் தன்னை நேரடியாக விமர்சிப்பதாகவே இவ்விருதினைச் சீனா வியாக்கியானப்படுத்தியது. இதற்குப் பின்னர் நோர்வேக்கும் சீனாவிற்குமிடையிலான இராஜதந்திர உறவில் சற்று விரிசல் ஏற்பட்டதோடு, இருநாடுகளுக்குமிடையில் திட்டதிடப்பட்டிருந்த சில பொருளாதார உடன்படிக்கைகள்கூட கைவிடப்பட்டதாக அந்நாட்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
நோபல் விருதுகளின் அறம்சார்ந்த பெறுமதி?
இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கடந்த 2010இலிருந்து உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரபு நாடுகளில் ஏற்பட்ட வெகுசன எழுச்சி, ஆட்சி மாற்றங்கள், மத்திய கிழக்கில் இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையின் இழுபறி, சிரியாவின் உள்நாட்டுப்போர், ஈராக்கில் ’இஸ்லாமிய அரசு – IS’இற்கு எதிரான அமெரிக்காவின் போர், உக்ரைன் நெருக்கடி எனப் பல்வேறு பிராந்தியங்களிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இவற்றில் அமெரிக்காவின் நேரடிப்பங்கும் அணுகுமுறையும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளமை வெளிப்படையானது. எனவே ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்திற்கான நோபல்விருது நடைமுறையில் பொருத்தம்மிக்கதுதானா என்ற கேள்விளை எழுப்புவதோடு, அவருக்கு விருதுவழங்கப்பட்டமை தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கும் நியாயம் கற்பிக்கின்றது.
அதேபோல 1994ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் விருது இஸ்ரேலின் அன்றைய தலைமை அமைச்சர் Yitzhak Rabin மற்றும் அன்றைய வெளியுறவு அமைச்சர் Shimon Peres ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான கோரிக்கையை எந்தவகையில் இவர்கள் ஏற்றுக்கொண்டு அங்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உளசுத்தியோடு செயற்பட்டார்கள் என்ற கேள்வியோடு, இவர்களுக்கு வழங்கப்பட்ட நோபல் விருதின் அறம் சார்ந்த பெறுமதி சார்ந்த கேள்விகளும் இயல்பாக எழுகின்றன. 1994ஆம் ஆண்டு இவர்கள் இருவரோடு பலஸ்தீன விடுதலை அமைப்பின் மறைந்த தலைவர் யசீர் அரபாத் அவர்களுக்கும் சமாதானத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டது.
2014இற்கான சமாதானத்திற்கான நோபல் விருது சார்ந்து ஒப்பீட்டளவில் அவ்வாறான சர்ச்சைகள் எழவில்லை. குழந்தைகளின் கல்வி, குறிப்பாக பெண்குழந்தைகளின் கல்வி சார்ந்த இவர்களின் பரப்புரை மற்றும் செயல்முன்னெடுப்புகள் அங்கீகரிக்கப்படுவதன் மூலம், உலகம் தழுவிய நிலையில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இளைய தலைமுறையினரின் கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும், அடிப்படைவாத்திற்கு எதிரானதும் சமாதானத்திற்கானதுமான உந்துதலை வழங்க முடியுமெனக் கருதுவதாக நோர்வேயின் நோபல் விருது தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
மலாலாவின் செயற்களம்
நோபல் விருது வரலாற்றில்; மிக இளவயதையுடைய ஒருவருக்கு (17) விருது வழங்கப்படுகின்றமை; முதன்முறையாக நிகழ்கின்றது. மதத்தின் பெயரால் காலச்சக்கரத்தைப் பின்னோக்கித் தள்ளுகின்ற அடிப்படைவாதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள புறச்சூழலில், இந்த விருதானது அடிப்படைவாதிகளுக்கு குறியீட்டு ரீதியிலான ஒரு அடியாக அமையுமென்ற பார்வை மேற்குலக மட்டத்தில் நிலவுகின்றது.
2009ஆம் ஆண்டிலிருந்து தனது இணைய வலைத்தளத்தில் (Blog) வாயிலாக பெண்குழுந்தைகள் பாடசாலைக்குச் செல்லவும் கல்வி பயிலவும் அனுமதிக்கப்படவேண்டுமென்ற கருத்துக்களை வலியுறுத்தியதன் மூலமே மலாலா தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேர்ந்தது.
தலிபான்களினால் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டவர், தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்ற போதும், தொடர்ச்சியாக தலிபான்களால்; எச்சரிக்கப்படுபவர் என்ற புறநிலையில், உயிராபத்திற்கு மத்தியிலும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை உறுதியாக வெளிப்படுத்திவருபவர் என்ற வகையிலும் மலாலாவிற்கான இவ்விருதிற்கு வலுவான குறியீட்டுத்தாக்கம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
சத்யார்த்தியின் செயற்களம்
1954இல் பிறந்த சத்யார்த்தி, 1980களில் ’தொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை முன்னணி-Bonded Labour Liberation Front’ எனும் அமைப்பினை நிறுவி, அதன் பொதுச்செயலாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார். இவர் 1989இல் சிறார் அடிமைத்தனத்திற்கு எதிரான தென்னாசியக் கூட்டமைப்பினையும் நிறுவியவர்.
கட்டாய வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தி மனிதாபிமானமற்ற முறையில் அவர்களின் இளமைப் பருவம் மோசமாக உறிஞ்சப்படுவதும், உடல்வதைகளுக்கும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துவரும் வன்கொடுமைகள். கைலாஸ் சத்யார்த்தி இவற்றுக்கு எதிராக நீண்டகாலமாக காத்திரமாகச் செயற்பட்டுவருபவர் என்ற அடிப்படையில் அவர் இந்த ஆண்டின் விருதுக்குத் தகுதியானவரென நோபல் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றுக்கெதிரான போராட்டக்களங்ளில் பல தடவைகள் சத்யார்த்தி உயிரச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்தவர். இவரது சக பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்டுமுள்ளனர். ’நவீன அடிமைத்தனத்திற்கு முடிவுகட்டுவதற்கு உழைக்கும் செயல் வீரன்’ என 2007இல் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இவர் தொடர்பான அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
நோபல் விருதுகளின் பின்னணி
சமாதானத்திற்கான நோபல் விருது, 114 ஆண்டு கால நீண்ட பாரம்பரியத்தினைக் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சமாதானம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம் மற்றும் மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளில் தலைசிறந்த சாதனையாளர்களுக்கு சுவீடனைச் சேர்ந்த இரசாயன- தொழில்நுட்ப அறிவியலாளர் Alfred Nobel (1833 – 1896) பெயரில் இவ்விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 1901ஆம் ஆண்டிலிருந்து தனியான தெரிவுக்குழு நோர்வேயில் அமைக்கப்பட்டு, சமாதானத்திற்கான நோபல் விருது நோர்வேயினாலும், சுவீடன் தலைநகர் ஸ்ரொக்கொல்மில் தெரிவுக்குழுவினைக் கொண்டுள்ள மையத்தினால் ஏனைய நான்கு விருதுகளும் ஆnது ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
உலகில் 246 மில்லியன்களாக சிறார் தொழிலாளர்
சிறார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஏதுவான அனைத்துலக சட்டங்கள் மேம்படுத்தப்படுவதற்கும் சத்யார்த்தி காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக நோபல்தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது. இன்றைய சூழலில் பெண்களின் கல்விக்கான முதன்மைக்குரல்களில் ஒன்றாக மலாலா உருவாகிவி;ட்டார் அல்லது மேற்குலக ஊடகங்கள் மற்றும் ஐ.நா போன்ற அமைப்புகள் ஊடாக அவர் அவ்வாறானதொரு நிலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளார் என்றும் கூறலாம்.
2000ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 246 மில்லியன்களாக இருந்த சிறார் தொழிலாளர் எண்ணிக்கை இன்றைய சூழலில் 168 மில்லியன்களாக குறைவடைறந்துள்ளது. அதாவது 14 ஆண்டுகளில் 78 மில்லியன்களால் சிறார் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே குழந்தைகள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிரானதும், அவர்களின் கல்வியுரிமைக்குமான இவர்களின் போராட்டத்திற்கு நோபல் விருது மூலம் வழங்கப்படும் அங்கீகாரம் இதுபோன்ற போராட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்குமென்றால் அது மிகையல்ல.
அமெரிக்காவின் ’Drone attack’ – பயங்கரவாத்தை ஊக்குவிக்கிறது
அமெரிக்கா பல ஆண்டுகளாக தலிபான் தீவிரவாதிகளை இலக்குவைத்து ’னுசழநெ யவவயஉம’ எனப்படும் தாக்குதல்களை பாகிஸ்தானின் மேற்குப் பிராந்தியங்களில் நடாத்தி வந்துள்ளது. படைத்துறை ஆளணிகளற்ற நவீன போர்க்கருவிகள் மூலம் நடாத்தப்படும் தாக்குதல்களே ’னுசழநெ யவவயஉம்’ எனப்படுகிறது. 2004ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் தரை வழியாக கனரக ஆயுதங்களை அனுப்பி இவ்வகைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வந்துள்ளது. இதில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் Drone தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்டவர்களில் 12 வீதத்தினர் மட்டுமே, இஸ்லாமிய ஆயுததாரிகள் என்றும் ஏனைய பெருமெண்ணிக்கையிலானோர் அப்பாவிப் பொதுமக்கள் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்திருக்கின்றது. லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தினைத் தளமாகக் கொண்டியங்கும் சுயாதீனமான செய்தி நிறுவனத்தின் ’விசாரணை ஊடகவியல் ஆய்வு மையம் – Research by the Bureau of Investigative Journalism’ இத்தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது. 2004இல் இருந்து 2014 வரையான பத்தாண்டு காலப்பகுதியில் மட்டும் 2379 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 295 பேர் மாத்திரமே ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எனவும் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உண்மை இவ்வாறிருக்க, பயங்கரவாதிளின் இருப்பிடங்களென உறுதிப்படுத்தப்பட்ட இலக்குகளையே தாம் தாக்குவதாகச் சொல்லும் அமெரிக்காவின் கூற்று முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்கும் முயற்சியாகும்.
2013ஆம் ஆண்டு மலாலா வெள்ளைமாளிகைக்கு அழைக்கப்பட்டு ஒபாமாவோடு உரையாடிய போது, Drone தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி வருகின்றமை தொடர்பாக ஒபாமாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். ஆனால் அமெரிக்க ஊதுகுழல் ஊடகங்கள் இது விவகாரம் வெளியில் வராது இருட்டடிப்புச் செய்திருந்தன. அமெரிக்கா தற்போது னுசழநெ போரினை நடாத்தி வருவதாக பரவலான கருத்து நிலவுகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா இதனைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக வட மேற்கு பாகிஸ்தானை அமைவிடமாகக் கொண்டுள்ள வட-வஷிறிஸ்தான் பிரதேசங்களில் 2004இலிருந்து இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக்குழுக்களுக்கு எதிராக இத்தாக்குதல்களை நடாத்தி வந்துள்ளது.
இங்கு விசனத்திற்குரிய தகவல் யாதெனில், சமாதானத்திற்கான நோபல் விருதினைப் பெற்ற ஒபாமாவின் ஆட்சிக் காலத்திலேயே னுசழநெ தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவை பொதுமக்கள் மத்தியில் பாரிய இழப்புகளை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களின் இழப்புகள் அவர்கள் மத்தியில் விரக்தியையும் சீற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. இது அவர்களை இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் இணைந்து போரிடத்தூண்டுகின்றது என்பதும் வெளியில் அதிகம் தெரியவராத தகவல்கள். எனவே அமெரிக்காவின் னுசழநெ தாக்குதல்கள் மேலும் பயங்கரவாதத்தை வளர்த்துவிடத்தான் துணைநிற்கின்றது என்பதே உண்மை. இதையே ஒபாமாவிடம் மலாலா எடுத்துக்கூறியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருதின் முக்கியத்துவம்
தனிமனிதர்களால், அவர்களின் ஆளுமை மிக்கதும் துணிச்சல் மிக்கதுமான செயல்முனைப்பு மூலம் சமூதாய மாற்றத்திற்கு வழிகோல முடியும் என்பது வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து வருகின்ற உண்மை. இந்த நோக்குநிலையில் இவ்விருவரும் தமது தனிப்பட்ட ஆளுமைத் திறன் மூலம் சமூக அநீதிகளைக் களைய முற்படுபவர்கள் என்ற வகையில் இவர்ளுக்கான சர்வதேச அங்கீகாரம் என்பது இவர்களின் குரலை வலுப்படுத்தக்கூடியது. இவர்களையொத்து செயல்முனைப்பாளர்களுக்கும் உந்துதல் அளிக்கக்கூடியது.
மலாலா மிக இளவயதில் அனைத்துலக ரீதியில் அறியப்பட்ட ஆளுமைமிக்க குரலாக உருவாகியிருக்கின்றார். இனிவரும் காலங்களில் தனித்துவமாகவும் சுயாதீனமாகவும் தனது குரலை தொடர்ச்சியாக ஒலிக்கக்கூடிய ஆளுமையுடன் மிளர்வாரா? அல்லது மேற்குலுகின் நலன்களுக்கு சாதகமாக பயன்படுபவராக மாற்றப்படுவாரா என்பதையும் இலகுவில் எதிர்வுகூற முடியாது. இனிவரும் காலங்ள் தான் அதனைத் தீர்மானிக்கும். எது எப்படியிருப்பினும் இந்த ஆண்டுக்கான சமாதான நோபல் விருது சிறார்கள் தொத்தடிமைத் தொழிலாளர்களாக்கப்படுவதற்கு எதிரானதும் அவர்களின் கல்வியுரிமையை வலியுறுத்துகின்ற அடிப்படைகளுக்கான விருது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
வீரகேசரி, பொங்குதமிழ், ஒக்ரோபர் 2014