சீனாவைச் சீற்றமடைய வைத்த சமாதான நோபல் விருது 2010
2010ஆம் ஆண்டு நோபல் தெரிவுக் குழு பொருளாதார வல்லரசு ஒன்றுக்கு சவால் விடும் துணிவை வெளிப்படுத்தியுள்ளது என்ற கருத்தும் நிலவுகின்றது. சீனாவுடன் வலுவான பொருளாதார உறவினைக் கொண்டிருக்கும் நோர்வே, நோபல் தெரிவுக் குழு சுயாதீனமான அமைப்பு என்று கூறி தப்பிக்கொள்ள முயலுகின்ற போதும், நோர்வே அரசாங்கத்தை நோக்கி சீனா காட்டமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் நோர்வே அரசாங்கத்துடனான தமது உறவு மோசமாகப் பாதிக்கப்படும் என சீன அரசாங்கம் கண்டித்துள்ளது.
2010ம் ஆண்டுக்குரிய சமாதானத்திற்கான நோபல் விருது 2009ஆம் ஆண்டைப் போல சர்ச்சைக்குரியதாகியுள்ளது. சீனாவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் Liu Xiaobo 2010ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுக்குத் தெரிவாகியுள்ளார். சீனச் சட்டத்தை மீறி அரசைக் கவிழ்ப்பிற்கு முயன்று வந்ததான குற்றச்சாட்டின் பேரில் சீன அரசினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள Liu Xiaobo சமாதானத்திற்கான நோபல் விருதிற்குத் தெரிவாகியுள்ளமையே இதனைச் சர்ச்சைக்குள்ளாக்குகின்றது.
நோர்வேயின் நோபல் தெரிவுக் குழுவின் இந்த அறிவிப்;பினை நோர்வே அரசாங்கம் மற்றும் மேற்குலக நாடுகளும் அதன் தலைவர்களும் வெகுவாகப் பாராட்டி வரவேற்றுள்ளதோடு, Liu Xiaobo விடுதலை செய்யப்படவேண்முமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் விருது, அனைத்துலக செல்வாக்கு மிக்கவரும் அதிகாரத்தின் உச்சத்திலிருப்பவருமான அமெரிக்க அரசதலைவர் பராக் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டது. இம்முறை எவ்வித அதிகாரங்களும் அற்ற, அடிப்படைச் சுதந்திரம் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை ஒப்பீட்டு நோக்கில் முரண்நிலை கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு ஒபாமாவிற்கு நோபல் விருது வழங்கப்பட்டமை பல்வேறு வகையிலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்க அரசதலைவராக ஒபாமா ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில், சமாதானத்திற்கான நோபல் விருதினை அவருக்கு வழங்குவதற்குரிய அழுத்தமான காரணங்கள் ஏதுமிருக்கல்லை என்ற கடுமையான விமர்சனங்கள் பல மட்டங்களிலும் முன்வைக்கப்பட்டன.
ஆட்சிப் பொறுப்பேற்று மிகக்குறுகிய காலமே கடந்துள்ளது என்ற அடிப்படையிலும், செயல் ரீதியாக காத்திரமான பெறுபேறுகளை அவர் காட்டவில்லை என்ற புறநிலையிலும் ஒபாமாவிற்கான நோபல் விருது ஆச்சரியத்திற்கும் சர்ச்சைக்குமுரியதாக பார்க்கப்பட்டது. குறிப்பாக மோசமான இரண்டு போர்களுக்குத் (ஈராக், ஆப்கானிஸ்தான்) தலைமை தாங்கும் நாட்டின் அரசதலைவருக்கு, சமாதானத்திற்கான விருதினை வழங்குவது நோபல் விருதின் நோக்கத்திற்கு நேர்முரணானது என்ற கருத்துக்களும் அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டன.
இந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் விருதுக்குத் தெரிவாகியுள்ள Liu Xiaobo 11 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு (2009) சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சீனாவில் அரசியல் மறுசீரமைப்பினை வலியுறுத்தியும் – கொம்யூனிச ஒற்றைக்கட்சி ஆட்சி முறைமையிலிருந்து விடுபட்டு, ஜனநாயக வழிமுறைக்குள் சீனா செல்ல வேண்டுமெனவும் – மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம் உரிய முறையில் மதிக்கப்படுவதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி கருத்துப் போராட்டங்களை நடாத்தி வந்தவர்.
அதற்காக ”சாசனம் – 08” (Charter – 08) எனும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு வரைபினையும் உருவாக்குவதில் முதன்மை வகித்தவர். இந்த அரசியல் மறுசீரமைப்பு சாசன வரைபு டிசம்பர் 2008இல் வெளியிடப்பட்டது. சீனாவின் கல்வியாளர்கள், நீதியாளர்கள் உட்பட 303 பேர் இதில் கைச்சாட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில், ஜனநாயக அரசியல் மறுசீரமைப்பு தொடர்பாக மக்களைத் தூண்டுகின்ற, விழிப்படைய வைக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தினாலேயே சீன ஆட்சியாளர்களால் இவர் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
54 அகவையுடைய Liu Xiaobo அடிப்படையில் எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். சீனாவில் ஜனநாயக மறுசீரமைப்பினை வலியுறுத்தி 1989ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் கிளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவர். இந்த மாணவர் கிளர்ச்சியினை தனது இராணுவ இயந்திரம் மூலம் கொடிய முறையில் சீன அரசு அடக்கியது. இதில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் காலகட்டத்திலிருந்து தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக மனித உரிமைக் களத்தில் இயங்கி வந்திருக்கின்றார்.
சீனாவின் கொம்யூனிச அதிகார மையத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர். அதற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். இவருடைய சிறையடைப்பை ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டித்திருந்தன.
சீனாவில் மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென்ற செயல் முனைப்பின் குறியீடாகவும், அதற்கான அவரின் துணிச்சலை அடையாளப்படுத்துகின்ற வகையிலும் இந்த விருதுக்கு Liu Xiaobo தெரிவானதாக நோர்வேயின் நோபல் தெரிவுக் குழு அறிவித்துள்ளது. ”சீனாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த விரும்பும் சக்திகளை ஊக்குவிக்க வேண்டும் – இந்த விருது மூலம் அதற்கான உந்துதலை நாம் வழங்கியுள்ளோம்” என நோபல் தெரிவுக் குழுவின் தலைவர் Thorbjørn Jagland ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
இந்த ஆண்டு நோபல் தெரிவுக் குழு பொருளாதார வல்லரசு ஒன்றுக்கு சவால் விடும் துணிவை வெளிப்படுத்தியுள்ளது என்ற கருத்தும் நிலவுகின்றது. சீனாவுடன் வலுவான பொருளாதார உறவினைக் கொண்டிருக்கும் நோர்வே, நோபல் தெரிவுக் குழு சுயாதீனமான அமைப்பு என்று கூறி தப்பிக்கொள்ள முயலுகின்ற போதும், நோர்வே அரசாங்கத்தை நோக்கி சீனா காட்டமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் நோர்வே அரசாங்கத்துடனான தமது உறவு மோசமாகப் பாதிக்கப்படும் என சீன அரசாங்கம் கண்டித்துள்ளது.
நோபல் விருதுக்கு Liu Xiaobo தெரிவு செய்யப்பட்டமை பற்றிய செய்திகள் சீன மக்களிடம் சென்றுவிடாமல் தடுப்பதில் சீன அரசாங்கம் பெரும் பிரத்தனம் கொண்டு செயற்படுகின்றது. இது விவகாரம் பற்றிய செய்திகள் சி.என்.என், பி.பி.சி போன்ற அனைத்துலக ஊடகங்கள் மூலம் சீனாவில் ஒளிபரப்பப்பட்ட போது அவற்றைத் தணிக்கை மூலம் மறைப்புச் செய்துள்ளது. இணையத்தளங்களில் இது விவகாரம் தொடர்பான செய்திகளையும் அகற்றியுள்ளது. Liu Xiaoboஇன் துணைவியாரைச் சந்திக்கச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் சீன காவல் துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். Liu Xiaobo இன் துணைவி Liu Xia வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சீனா தனது சந்தைப் பொருளாதார வளர்ச்சியின் ஊடாக 300 மில்லியன் வரையான சீன மக்களை வறுமையிலிருந்து தூக்கிவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. வறுமையிலிருந்து தூக்கிவிடப்பட்டுள்ள இந்த நடுத்தரவர்க்க சீனர்கள் மத்தியில் ஜனநாயக உரிமைகளிலும் பார்க்க சீனாவின் பொருளுற்பத்தித் தன்னிறைவும் பொருளாதார வளர்ச்சியுமே முக்கியமானதாக கணிக்கப்படுகின்றதென ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சீனாவின் மொத்த மக்கட் தொகை 1200 மில்லியன்கள். இவர்களில் பலநூறு மில்லியன் மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
1989இல் திபெத்தின் அரசியல் – ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு சமாதானத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டபோது இதை விட பல மடங்கு சீற்றத்தை சீனா வெளிப்படுத்தியது. சீனாவில் மாணவர் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்ட அதே ஆண்டு தலாய் லாமாவிற்கு நோபல் விருது வழங்கப்பட்டமை அரசியல் ரீதியில் சீனாவை அதிகம் சீற்றமூட்டும் விவகாரமாக நோக்கப்பட்டது.
நோர்வேயுடனான உறவு பாதிக்கப்படுமென்ற அச்சுறுத்தலை விடுத்திருந்த சீனா, நோர்வேயின் சீனாவிற்கான தூதுவரை அழைத்து கண்டித்துள்ளது. அத்தோடு இந்த வாரம் சீனப் பயணம் மேற்கொண்டிருந்த நோர்வேயின் கடலவளத்துறை அமைச்சர் Lisbeth Berg-Hansen அவர்களுடன் ஏலவே திட்;டமிடப்பட்டிருந்த அமைச்சர் மட்டத்திலான இரண்டு சந்திப்புகள் இடம்பெறவில்லை. இவை கண்டனத்தை வெளிப்படுத்தும் சீனாவின் பாணியிலான உடனடி விளைவுகள். அத்தோடு நோர்வேயுடன் சீனா மேற்கொள்ளவிருக்கும் இருதரப்பு பொருளாதார உடன்படிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் அல்லது பிற்போடப்படலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சீனா – நோர்வே இடையிலான பொருளாதார உறவு பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. இருதரப்பு பொருளாதார உறவென்று நோக்குமிடத்து, 2009ஆம் ஆண்டு நோர்வேயிலிருந்து சீனாவிற்கு 16,1 பில்லியன் குரோணர்கள் பெறுமதியான ஏற்றுமதி நிகழ்ந்துள்ளது. அதேவேளை சீனாவிலிருந்து 32,6 பில்லியன் குரோணர்கள் பெறுமதியான இறக்குமதியினை நோர்வே மேற்கொண்டுள்ளது.
மீன், செயற்கை மண், சிலவகை இயந்திரங்கள், நிக்கல் (Nickel) மற்றும் இயற்கை இரசாயண பொருட்கள் (Organic chemicals) போன்றவை நோர்வேயிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் பொருட்களாகும். ஆடைகள், மின்சார நுகர்வுப்பொருட்கள், தளபாடங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பன சீனாவிலிருந்து நோர்வே இறக்குமதி செய்யும் பொருட்களாகும்.
தவிர கப்பல் கட்டுமானம், சக்தி உருவாக்கற் தொழில்நுட்பம் மற்றும் சூழல் சார்ந்த தொழில்நுட்ப வளங்களை நோர்வே சீனாவிற்கு வழங்கி வருகின்றது. நோர்வேயின் 3வது பெரிய இறக்குமதி நாடாக சீனா இன்று விளங்குகின்றது. சுவீடன் மற்றும் ஜேர்மனுக்கு அடுத்தபடியாக சீனாவிலிருந்தே நோர்வே பெருமளவிலான இறக்குமதியை மேற்கொள்வதாக தரவுகள் கூறுகின்றன.
நோர்வே மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளும் சீனாவின் இறக்குமதியில் பெரிதும் தங்கியுள்ளன. குறிப்பாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவுவிலைப் பொருட்களால், உலகின் நுகர்வோர் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையில் பாரிய வளர்ச்சி கண்டுவரும் சீனா, அதனைத் தக்க வைக்கவும் வளர்க்கவும் உலகெங்கும் தனது கால்களை அகல விரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்து வளர்ப்பதற்கு ஏதுவாக அரசியல் செல்வாக்கினை நிலை நாட்டிக் கொள்வதிலும் அதீத முனைப்புக் கொண்டுள்ளது.
நோபல் தெரிவுக்கு குழு ஒரு சுயாதீனமான அமைப்பு என்று கூறப்பட்டாலும், நோபல் தெரிவுக்குழுவின் முடிவுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் அறவே தொடர்பில்லை என்ற வாதத்தை சீனா ஏற்கப்போவதில்லை. தெரிவுக்குழுவினையும் நோர்வே அரசாங்கத்தையும் சீனா வேறுபடுத்திப் பார்க்கப்போவதில்லை. அத்தோடு நோபல் தெரிவுக்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அங்கம் வகிப்பதோடு, அதன் தலைவரான Thorbjørn Jagland நோர்வேயின் முன்னாள் தலைமை அமைச்சரும் தொழிற்கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். இந்தப் பின்னணிகளும் நோபல் குழுவின் தெரிவுக்கும் நோர்வே அரசாங்கத்திற்குமிடையில் முடிச்சுப் போடுவதற்கு வாய்ப்பாகவுள்ள காரணிகளாகும்.
தலாய் லாமாவை தமது நாட்டுக்கு அழைத்துப் பேச்சுகளை நடாத்தியதற்காக டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இவ்வாறே கடந்த காலத்தில் சீனா நடந்து கொண்டது. ஆனால் தற்பொழுது உறவுகள் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன. எனவே தொலைநோக்கு அடிப்படையில் சீன – நோர்வே உறவுகள் பாதிக்கப்படப் போவதில்லை. மாறாக உடனடி விளைவுகளாக மேற்சொன்ன சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
சீனாவின் கொம்யூனிச ஒற்றைக் கட்சி ஆட்சி, ஜனநாயக மறுப்பு, மனித உரிமை – ஊடகச் சுதந்திர மறுப்பு என்பன மேற்குலகத்தால் தொடர்ந்தும் விமர்சிக்கப்பட்டும், அழுத்தத்திற்கு உள்ளாகியும் வருகின்ற விவகாரங்களாகும். இது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் மேற்குலகம் திட்டமிட்டு தலையிடுகின்ற நிகழ்வுகளாகவே சீனாவினால் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமாதானத்திற்கான நோபல் விருது Liu Xiaobo இற்கு வழங்கப்பட்டமை சீனாவிற்கு கடும் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ள விவகாரமாகும்.
பொருளாதார ரீதியில் செல்வாக்குச் செலுத்தும் பாரிய உலக சக்தியாக சீனா வளர்ந்து வருகின்ற யதார்த்தப் புறநிலையில், அதன் மீது மேற்குலகத்தால் வைக்கப்படுகின்ற விமர்சனங்களையும் அழுத்தங்களையும் தாண்டி, அதனுடன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் வலுவான பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்கின்றன. நல்லாட்சி- மனித உரிமை – கருத்துச் சுதந்திரம் என்பனவற்றிற்கு அப்பால் நாடுகளுக்கிடையிலான நல்லுறவின் அச்சாணியாக பொருளாதார நலனே விளங்குகின்றமையின் யதார்த்த வெளிப்பாடு இதுவாகும்.
தினக்குரல், பொங்குதமிழ், ஒக்.2010