கொசொவோ தனியரசுப் பிரகடனம்
பன்னாட்டு அரசியலின் சமகால நிகழ்வுகளில் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் தொடர்பான விவகாரம், அதீத முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா ஆகியவற்றின் நேரடித் தலையீட்டுடன் சேர்பியா-கொசோவோ தரப்புகளுக்கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டன. ஆனபோதும் தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. இன்றைய நிலையில் 2008 பெப்ரவரி மாத இறுதிக்குள் கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிகழும் என்ற செய்தி உறுதியாகியிருக்கின்றது.
கொசோவோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற கொசோவோவிற்கான தொடர்புக் குழுவில் (Contact group for Kosovo) அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மற்றும் ரஸ்யா ஆகிய சக்திகள் அங்கம் வகிக்கின்றன. எனவே கொசோவோ தனிநாடாகப் பிரிவதை அமெரிக்கா முழுமையாக ஊக்குவிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம்பொருந்திய பெரும்பான்மை நாடுகளும் ஆதரிக்கின்றன. பேச்சுவார்த்தை மூலம் சேர்பிய-கொசோவோ முரண்பாட்டுக்குத் தீர்வு காண முடியாது என்ற கருத்துருவாக்கமும் குவிமையப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஸ்பெயின் மற்றும் சைப்ரஸ் போன்ற ஒருசில நாடுகளே எதிர்க்கின்றன. இவ்விரண்டு நாடுகளிலும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நிலவுகின்றன. ஸ்பெயின் நாட்டின் வடசிழக்கு எல்லை மற்றும் பிரான்ஸின் தென்மேற்கு எல்லைப் பிரதேசங்களை அமைவிடமாகக் கொண்டுள்ள பாஸ்கி இன மக்களுக்குரிய தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாஸ்கியில் ஆயுதக் கிளர்ச்சி நடைபெற்று வருகின்றது. அங்கு தனிநாடு கோரும் பாஸ்கி விடுதலை அமைப்பிற்கு, கொசோவோ பிரகடனம் பெரும் அரசியல் வாய்ப்பாக அமைந்து விடுமென்ற அச்சத்தில் ஸ்பெயின் எதிர்க்கின்றது. ஆயினும் இவற்றின் எதிர்ப்புக்கள் எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. சேர்பியா மற்றும் ரஸ்யாவின் எதிர்ப்புக்கள்கூட கொசோவோ தனியரசாவதை எந்த வகையிலும் தடுக்கப்போவதில்லை என்பது வெள்ளிடை மலை.
ஏனெனில் இன்று நேற்றல்ல! 1999ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, கொசோவோவைத் தனியரசாகப் பிரிப்பதென்ற இலக்கு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. சேர்பியாவின் அன்றைய மிலோசவிச் அரசு, கொசோவோ மீது பாரிய இன அழிப்பு யுத்தத்தினை கட்டவிழ்த்து விட்டதைத் தொடர்ந்து, நேட்டோ படைகள் சேர்வியா மீதும் கொசோவோ மீதும் வான்வெளித் தாக்குதல்களை மேற்கொண்டு கொசோவோவிலிருந்து சேர்வியப் படைகளை வெளியேற்றின. அன்றிலிருந்து கொசோவோவில் நேட்டோ படைகள் நிலைகொண்டுள்ளன. ஐ.நாவின் ஆளுகையின் கீழ் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
மிலோசவிச் காலப்பகுதியிலேயே ”இன அழிப்பு” என்ற சொல்லாடல் பரவலாக அறியப்பட்டது. 1999 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரையான எட்டு ஆண்டுகளும் நேட்டோ படைகளின் பிரசன்னத்துடன், சேர்பிய அரசின் ஆளுகைக்கு உட்படாத, தனி நிர்வாக அலகாகவே கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தனிநாட்டுக்குரிய உட்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுருங்கக்;கூறின் சேர்பியாவிலிருந்து விடுதலை பெற்ற பிரதேசமாகவும், அதேவேளை பன்னாட்டு சமூகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இன்றைய கொசோவோ உள்ளது.
ஏகாதிபத்தியம் அல்லது உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பலம் பொருந்திய சக்திகள், பொருளாதார நலனை அடிநாதமாகக் கொண்ட தளத்தில் இயங்குகின்றன. அதிலும் குறிப்பாக இன முரண்பாகளுக்குள் சிக்குண்ட நாடுகளின் முரண்பாட்டுக் களைகை முன்னெடுப்புக்கள்;, வல்லரசுகளின் பொருளாதார நலன்சார் மூலோபாயங்களை முதன்மைப்படுத்தியே கையாளப்படுகின்றன. தமது நலன்களுக்கு ஏற்றவாறு போர்களை ஊக்குவிப்பதும், சமாதானத்தை ஊக்குவிப்பதும், தீர்வுத்திட்டங்களைத் திணிப்பதும், அரச பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும், விடுதலை அமைப்புக்கள் மீது பயங்கரவாத சாயம் பூசுவதும் என்று தத்தமது இராணுவ-பொருளாதார-அரசியல் நலன்களுக்கு ஏற்றவாறு மேற்சொன்னவற்றை மாறிமாறிக் கையாள்கின்றன.
கிழக்கு ஐரேப்பாவைப் பொறுத்தவரையுpல் சோவியத் ஒன்றியத்தின் உடைவு, அதனைத் தொடர்ந்து யூகோஸ்லாவியாவின் உடைவு என்பன அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் அரசியல்-இராணுவ-பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையில் நிகழ்ந்த உடைவுகளாகும். பொருளாதார ஆதிக்கத்திற்குரிய கருவியாக அரசியல் பிரயோகிக்கப்படுகின்றது எனலாம். எனவே கொசோவோ தனியரசாகப் பிரிந்து செல்வதற்கான பன்னாட்டு சமூகத்தின் ஆதரவென்பதும் பொருளாதார நலனின் பாற்பட்டது. கிழக்கு ஐரோப்பாவில் தளம் அமைத்தல் என்ற மூலோபாயத்தின் பாற்பட்டது. ஆனபோதும் அடக்குமுறைக்குள்ளான கொசோவோ மக்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படுகின்றது, அம்மக்களின் விடுதலை வேணவா நிறைவேறுகின்றது என்பது உரிமைக்காகப் போரடும் தேசிய இனங்களுக்கு நம்பிக்கை தருகின்ற நிகழ்வாகவே பார்க்கப்படவேண்டும்.
மிலோசவிச்சின் இன அழிப்பில் கொல்லப்பட்ட மக்களை விட நேட்டோ படைகளின் வான்வெளித் தாக்குதல் உட்பட்ட போர் நடவடிக்கைகளில் கொன்றழிக்கப்பட்ட மக்களின்; எண்ணிக்கை அதிகம் என்ற தகவல்களையும் அறியமுடிகின்றது. ஐ.நாவின் ஒப்புதல் பெறப்படாது, அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவின் பேரிலேயே 77 நாட்கள் தொடர்ச்சியாக நேட்டோ படைகள் தாக்குதல்களை நடாத்தின.
இன அழிப்பிலிருந்து கொசோவோ மக்களைக் காக்கின்ற பெரும் பொறுப்பின் அடிப்படையில் நேட்டோ படைகள் அனுப்பப்பட்டன என்பது வெளித்தெரியும் கருத்தாகும். நலன்சார் மூலோபாயமே உள்நோக்கத்தின் மூலமாகும்.
சேர்பியாவின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ரஸ்யா, கொசோவோ பிரிந்து செல்வதை எதிர்க்கின்றது. மேற்குலகிற்கெதிரான தனது அரசியல் ஆயுதமாகவே கொசோவோ விவகாரத்தினை ரஸ்யா கையாளுகின்றது. அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடனான தனது பொருளாதார அரசியலின் பேரம் பேசுதலுக்குரிய ஆயுதமாக கையாள்கின்றது எனலாம். ஐ.நா பாதுகாப்பு அவையில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக எச்சரித்துவருகின்றது.
இந்நிலையில் கொசோவோ பிரிந்து செல்வதை கடுமையாக எதிர்க்கும் சேர்பியா மற்றும் ரஸ்சியாவின் எதிர்ப்பினைத் தணிப்பதற்குரிய பின்னணியிலேயே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சொசோவோ தனியரசுப் பிரகடனத்தினைத் தள்ளிப் போட்டுள்ளன. குறிப்பாக பெப்ரவரி 3ம் நாள் சேர்பிய அரசுத்தலைவர் தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்கொடுப்புக்கள் நடைபெறவுள்ளன. தேர்தலுக்கு முன்னர் கொசோவோப் பிரகடனம் நடந்துவிட்டால், சேர்பிய கடும்போக்கு அரசியல் சக்திகள் தேர்தலில் வென்றுவிடும் என்ற அச்சம் அமெரிக்காவிற்கு உண்டு. ரஸ்யாவின் தூண்டுதலால் சேர்பிய கடும்போக்காளர்கள்; கொசோவோ மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடக்கூடும்; என்ற அச்சமும் ஒருபுறம் நிலவுகின்றது.
இதேவேளை தனிநாட்டுப் பிரகடனம் இழுத்தடிக்கப்படுவதால், கொசோNவுh மக்கள் பொறுமை இழந்து வருகின்றனர். திட்டவட்டமான நாளை அறிவிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இழுபறி நிலை மேலும் தொடருமானால் மக்கள் மத்தியிலிருந்து போராட்டங்கள் கிளர்ச்சிகள் வெளிக்கிளம்பும் நிலை ஏற்படலாம். ஏனெனில் கொசோவோ மக்கள் 1991ம் ஆண்டு காலப்பகுதியிலேயே தனிநாட்டுக்குரிய தமது ஆணையை வழங்கியுள்ளனர். கருத்து வாக்கெடுப்பு மூலம், தனிநாட்டுக்குரிய ஒருமித்த மக்களாதரவு பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்றுவரை தன்னாட்சிக்குரிய வேணவாவை விட்டுக்கொடுக்காது, தேசிய உணர்வுடன் உள்ளனர்.
கொசோவோ மீது மிலோசவிச்சின் ஆக்கிரமிப்பு கட்டவிழ்த்துவிடப்பட்ட சமகாலத்திலேயே, கொசோவோ மக்கள் சேர்பிய அரச நிர்வாகங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். தமக்கான நிர்வாகக் கட்டமைப்புக்களை நிறுவி தன்னாட்சி உரிமைக்கு வலுச்சேர்த்தனர். தனியான வரி அறவீடு, மருத்துவத்தறை, கல்லித்துறை போன்றவற்றை நிறுவினர். 1996 காலப்பகுதியில் நிகழ்ந்த இம்மாற்றங்களின் பின்னணியில் கொசோவோ விடுதரல அமைப்பு (முடுயு) இயங்கியது. ஆனபோதும் படைபல வளர்ச்சி காணாத கொசோவோ விடுதலை அமைப்பினால் மிலோசவிச்pன் பலம்மிக்க படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. மிலோசவிச் ஏவிவிட்ட போரினால் நூறாயிரம் வரையான அல்பேனியர்கள் கொல்லப்பட்டதோடு, 5 இலட்சம் வரையான மக்கள் உள்நாட்டிலும் 10 இலட்சம் வரையான மக்கள் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர். 90 களில் கொசோவோ மீது மட்டுமல்ல, ஸ்லோவேனியா, குறூவாட்சியா மற்றும் போஸ்னியா ஆகிய அன்றைய யூகோஸ்லாவியக் குடியரசுகள் மீதும் மிலோசவிச் படைகளினால் இன அழிப்பு-நிலப்பறிப்பு போர்கள் தொடுக்கப்பட்டன.
1989 ஆம் ஆண்டு மிலோசவிச் பதிவிக்கு வந்ததை அடுத்து, கொசோவோ மக்களின் அல்பேனிய மொழிக்கிருந்த தேசிய மொழிகளில் ஒன்றென்ற அங்கீகாரம் இல்லாமற் செய்யப்பட்டு மொழியுரிமை பறிக்கப்பட்டது. பாடசாலைகளில் அல்பேனிய மொழி தடைசெய்யப்பட்டதோடு, மாணவ சமூதாயத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடியதும் அடையாளத்தை மழுங்கடிக்கச் செய்யும் நோக்கிலும் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் திணிக்கப்பட்டன. மிலோசவிச்சினால் அரங்கேற்றப்பட்ட இவ் இடக்குமுறைகளை, 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் (Singhala only) மூலம் தமிழ் மக்களின் மொழியுரிமையைப் பறித்த சிங்கள-பௌத்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிடலாம்.
ஆக்கிரமிப்பு சக்திகள் இன அழிப்பின் முதற்கட்டமாக அடக்கப்படும் இனத்தின் ”கல்வி மீது கத்திவைத்தல்” என்ற மூலோபாயத்தைக் கையாள்வதென்பது உலக வரலாற்றில் புதிதல்ல. சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ் மாணவ சமூதாயத்தின் கல்வியைத் திட்டமிட்ட வழிகளில் சீரரழிக்கும் நடவடிக்கைகளைக் காலம் காலமாக கட்டவிழ்த்து விட்டு வந்திருக்கின்றனர். இன்றுவரை தமிழ் மாணவ சமூதாயத்திற்கெதிராக சிங்கள அரச பயங்கரவாதம் பாய்கின்றது, பல்கலைக் கழக மாணவர்கள், இளைஞர்கள் மீதான கடத்தல்களும் படுகொலைகளும் தொடர்கின்றன.
சேர்பியர்கள் கொசோவோவைத் தமது ஒட்டோடொக்ஸ் மதப் பாரம்பரியத்தின் புனித பூமியாக கருதுகின்றனர். இதனை, சிறிலங்கா முழுவதும் பௌத்த சிங்கள நாடென்ற மகாவம்ச மனநிலையோடும், பலஸ்தீன மக்களின் வாழ்விடங்களைப் பறித்து நிற்கும் இஸ்ரேல் யூத இனவாதத்தின் ”வாக்களிக்கப்பட்ட பூமி” என்ற சிந்தனைப் போக்குடனும் ஒப்பிட முடியும்.
கொவோவோ பிரிந்து செல்வதை எதிர்ப்பதற்கு ஆதாரமாக சேர்பியாவும் ரஸ்யாவும் ”தேசிய ஒருமைப்பாடு, இறைமை” போன்ற சொல்லாடல்களை கையிலெடுத்துள்ளன. அதாவது, இன்று கொசோவோ ஐ.நாவினால் நிர்வகிக்கப்பட்டாலும், சட்ட ரீதியாக சேர்பியாவி;ன் ஒரு மாநிலமாகவே உள்ளதென்ற நிலையில் இச்சொல்லாடல்களை அவை தூக்கி வைத்து வாதிடுகின்றன.
கொசோவோ மக்கள், ஒரு தனித் தேசிய இனம் என்ற அடிப்படையில் தமக்கான தனித்துவமான மொழி, தாயகப் பிரதேசம் என்பவற்றைக் கொண்டுள்ளனர். இவ்வாறான புறநிலையில் தேசிய இனங்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கின்ற, தம்மைத் தாமே ஆள்கின்ற உரித்துடையவர்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான தமது நியாயப்பாட்டினை முன்வைக்கின்றனர். தவிர சேர்பியாவின் கொடூர இன அழிப்பிற்கு உட்பட்டவர்கள் என்பதும் அவர்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கு மேலும் வலுவூட்டுகின்றது.
கொசோவோ விவகாரத்தில், சேர்பியாவின் எதிர்ப்பினைத் தணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியாவை இணைப்பதற்குரிய சமிக்ஞையை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய முதலீடுகளின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு, பொருளாதார அபிவிருத்திக்கும் வழிகோலப்படும். எனவே பொருளாதார அபிவிருத்தியைக் கருத்தில் கொள்ளவேண்டிய புறநிலையிலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தினாலும் கொசோவோ பிரிவதை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் சேர்வியாவிற்கு உண்டு.
சேர்பியா தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றுமோர் அணுகுமுறையை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது. போர்க்குற்றம் சுமத்தப்பட்ட சேர்பிய படைத்துறையின் முந்நாள் ஜெனரல்களான Radovan Karadzic மற்றும் Ratko Mladics ஆகியோரை ஹாக் (Haag) சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக சேர்பியாவை வலியுறுத்தி வந்தது. இன்றைய நிலையில் கொசோவோ விவகாரத்தில் சேர்பியாவிடம் விட்டுக்கொடுப்பினை எதிர்பார்த்து, மேற்படி குற்றவாளிகள் தொடர்பான அழுத்தத்தினை ஐரோப்பிய ஒன்றியம் தணித்துள்ளது. காலப்போக்கில் அந்நிபந்தனையைக் கைவிடுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தின் பின்னர், கொசோவோ நிர்வாகம் ஐநாவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் கைமாறவுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் ஏலவே தொடங்கப்பட்டுவிட்டன. 1800 வரையான காவல் – மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொசோவோவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஐரோப்பா புதியதொரு தேசத்தின் பிறப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அவ்வாறு நிகழும் போது, ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்து வலுப்பெறும் என்பதே கொசோவோ விவகாரம் சுட்டிநிற்கின்ற நிதர்சனமாகும்.
ஜனவரி 2008