’நிலமும் நாங்களும்’ – போருக்குப் பின்னான வடக்கின் நில விவகாரம்: ‘மாற்றம் அமைப்பின்’ ஆய்வறிக்கையை முன்வைத்து
நில அபகரிப்பினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் 40 000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. சாதிய ஒடுக்குமுறை தொடர்வதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலவுரிமையற்ற நிலையில் உள்ளனர். இன ரீதியிலான பிளவுகளையும் நிலப்பிரச்சினை அதிகப்படுத்துகின்றது. முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறவில்லை. பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர நம்பிக்கையீனம் அகலவில்லை.
போருக்குப் பின்னான சூழலில் தமிழர் தாயகத்தின் வடபகுதியில் எதிர்நோக்கப்படும் நிலம் (காணி) சார்ந்த சிக்கல்களைக் காத்திரமாகப் பதிவுசெய்துள்ள அறிக்கை ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. ’’மாற்றம் நிறுவன’த்தினரால் இந்த அறிக்கை கடந்த 2015 இறுதியில்; யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. இது சமூகத்தின் பல்வேறுபட்ட தரப்பினரிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.
அறிக்கை மீதான ஆக்கபூர்வமான கருத்துக்கள்-விமர்சனங்கள்
10.01.16 – ஒஸ்லோவில் இடம்பெற்ற ’அறிவோர் அரங்கு’ கலந்துரையாடலில் இந்த ஆய்வறிக்கை மீதான கருத்துப்பகிர்வு இடம்பெற்றது.
”போருக்குப் பின்னர் இலங்கையின் வடபுலத்தில் நிலவும் நிலம்(காணி) சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் அதைப்பற்றிய புரிதல்களும்” என்பது 72 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு. இது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கும், அழுத்தத்திற்கும் வழிகோலக்கூடியது என்ற வகையில் இந்த ஆவணம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டமையின் முக்கியத்துவம் பெறுகின்றது.
நில-விவகாரத்தின் எதிர்கால் கருதி, இந்த அறிக்கை பற்றிய பலரது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் ”மாற்றம் நிறுவனம்’; கோரிநின்ற அடிப்படையில் அறிவோர் அரங்கு இதனைப் பேசுபொருளாகக் கொண்டு இக்கருத்துப்பகிர்வுக்கான கூட்டத்தினை ஒழுங்குசெய்திருந்தது.
அறிவோர் அரங்கின் கலந்துரையாடலில், அறிக்கை பற்றியதொரு அறிமுகக் கருத்துரையை பேராசிரியர் ந.சண்முகரட்ணம் ஆற்றியிருந்தார். ‘மாற்றம் அமைப்’பின் பணிப்பாளர் திரு. நரசிங்கம் மற்றும் அதன் இணைப்பாளர் மலர்நேசன் ஆகியோர் Skype வழியாகத் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆய்வறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் அறிவோர் அரங்கில் பகிரப்பட்ட கருத்துகளிலிருந்து முக்கியமானவற்றின் தொகுப்பாக அமைகின்றது இந்தப் பதிவு.
போருக்குப் பின்னான சூழலில் நில விவகாரமும் அரசியல் தீர்வில் அதன் பங்கும்:
நில உரிமை, அதன் பயன்பாடு, நிலம் மீதான கட்டுப்பாடு, வளங்கள் மீதான கட்டுப்பாடு, சட்ட ரீதியான சிக்கல்கள், இராணுவ மயமாக்கல், காணி உரிமை மறுப்பு எவ்வாறு பெண்களைப் பாதிக்கின்றது, எவ்வாறு இனங்களுக்கிடையிலான உறவில் (தமிழ் – முஸ்லீம்) விரிசலை ஏற்படுத்துகிறது போன்ற நிலைமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
போர் முடிவடைந்து 6 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பாதுகாப்பு அச்சுறுத்தல், இராணுவமயமாக்கல், பெண்கள் மீதான வன்முறைகள், வேலைவாய்ப்பின்மை, குடிநீர்ப் பற்றாக்குறை, சுகாதார வசதியின்மை, கல்வி உட்பட்ட ஏனைய அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமை என மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் தொடர்கின்றன.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துப் ஆராயும் போது, நில விவகாரம் குறித்த சிக்கல்களுக்குத் திருப்திகரமான தீர்வு எட்டப்படுவது தவிர்க்கவியலாதது. நிலவிவகாரச் சிக்கல்களுக்கான தீர்வு நோக்கிய முனைப்புகள் மக்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள், பொறிமுறைகள், கட்டமைப்புகள் மூலம் பொருத்தமானதும் கூர்உணர்வு மிக்கதுமான வழிமுறைகளைக் கண்டடைவதன் ஊடாக செயல்வடிவம் பெறவேண்டுமென இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இராணுவ மயமாக்கல்
சிறிலங்காவின் 19 இராணுவப் பிரிவுகளில் (Military divisions) வடபகுதியில் மாத்திரம், 14 இராணுவப் பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. இவை நிரந்தரமாக இருக்கக்கூடிய உட்கட்டுமானங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி (வவுனியா, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்கள்) ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பாதுகாப்புப் படையின் மூன்று கட்டளைத் தலைமையகங்களின் கட்டுப்பாட்டின்; கீழ் இந்த 14 இராணுவத்தளங்களும் அமைந்துள்ளன. 2002 இல் வெளிவந்த தகவல்களின் படி, புதிய ஆட்சிபீடமும் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தினைக் குறைப்பதில்லை என அறிவித்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினருக்கான வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சீன அரசாங்கம், நிதியுதவி வழங்கியிருந்தது. அதற்காக 2012 இல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், இராணுவத்தினரின் குடும்பங்களைக் குடியமர்த்தும் வீடமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
வடக்கில் இராணுவத்தை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்தல் மூலம், சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுப்பதும், அதனூடு பௌத்த மயமாக்குதலும் என்ற மறைமுக அணுகுமுறை கைக்கொள்ளப்படுகின்றது.
தேசியப் பாதுகாப்பு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி இராணுவ மயப்படுத்தல் தொடரப்படுவதோடு, அதனை நியாயப்படுத்துகின்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இராணுவத்தின் குடும்பங்களைக் குடியிருத்துதல் என்பது சிங்களக் குடியேற்றத்தின் மறைமுகமானதொரு வடிவமாகும். இராணுப் பிரன்னத்தைத் தொடருதல் என்பது இன்னொரு வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு ‘இராணுவத் தீர்வு’ என்ற அணுகுமுறையின் தொடர்ச்சியாகக் கைக்கொள்ளப்படுகின்றது.
சிங்களக் குடியேற்றம்
விவசாய அபிவிருத்தித் திட்டங்களைக் காரணம் காட்டி கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அத்திவாரம் போடப்பட்டு, சனத்தொகைச் சமநிலையில் (demographic balance) பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி சிங்கள மயமாக்கலுக்கு வழிகோலப்பட்டது. போருக்குப் பின்னான சூழலில் தேசிய பாதுகாப்பு என்ற காரணம் காட்டப்பட்டு இராணுவ மயமாக்கலும், அதன் விளைவாக சிங்கள மயமாக்கல் நேரடியாகவும் (பௌத்த விகாரைகள் நிறுவுதல் மூலமும்) மறைமுகமாகவும் (இராணுவத்தின் குடும்பங்களைக் குடியேற்றுவதன் மூலமும்) முன்னெடுக்கப்படுகின்றது.
போருக்குப்பின்னர் 18 பௌத்த விகாரைகள் வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 67 000 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் (2014 இல் வட மாகாண சபை வெளியிட்ட தரவுகளின்படி,) இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட சூழல் நிலவுகின்றது. இவற்றில் தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன.
யாழ்ப்பாணத்தில் 10 919 ஏக்கர், முல்லைத்தீவில் 34 362 ஏக்கர், மன்னாரில் 22 247 ஏக்கர் இராணுவத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடும் நில வளங்கள் மீதான அதிகாரமும்
எந்தெந்த வகையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இராணுவம் முதலீடுகளை மேற்கொண்டு, விரிவுபடுத்தி வருகின்றது, ”Holiday Houses” எனப்படும் உல்லாச விடுதிகள், விவசாயம் மற்றும் கடற்தொழிலில் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற சூழல், தமிழ் மக்களின் தொழில் வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் எத்தகையை மோசமாகப் பாதிக்கின்றது என்ற தரவுகளும் அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நில அபகரிப்பினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் 40 000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. சாதிய ஒடுக்குமுறை தொடர்வதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலவுரிமையற்ற நிலையில் உள்ளனர். இன ரீதியிலான பிளவுகளையும் நிலப்பிரச்சினை அதிகப்படுத்துகின்றது. முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறவில்லை. பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர நம்பிக்கையீனம் அகலவில்லை.
நில விடுவிப்பு நோக்கிய செயற்பாட்டு அணுகுமுறையும் பரிந்துரைகளும்
அறிக்கையில் பரிந்துரைகளில் சில என்று நோக்குமிடத்து,
இராணுவ நீக்கத்தினை (Demilitarization) நடைமுறைப்படுத்த அவசியமான செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டினைத் தவிர்ப்பது மற்றும் சிவில் நிர்வாகம், சிவில் நிறுவனங்களைப் பலப்படுத்துதல், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு மற்றும் அதில் நிலவும் குறைபாடுகளுக்கு எதிரான அழுத்தம் கொடுக்கத் தகுந்த பொறிமுறையைக் கண்டறிதல், தமிழ் – முஸ்லீம் உறவுகளை மேம்படுத்தும் வழிமுறைகள், சாதிய ஒடுக்குதலால் நிலமற்றவர்களாகவுள்ள மக்களை நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக்குதல் போன்றவை பற்றிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
நிலம் சார்ந்த சிக்கல்களை நடைமுறை சார்ந்து மாகாண சபையினூடாக அணுகுவது பொருத்தமானதெனவும் கூறப்படுகின்றது. வட மாகாண சபை நில விவகாரம் தொடர்பாக நிலவக்கூடிய பிரச்சினைகளையும் அதன் பல்பரிமாண விளைவுகளையும் அடையாளம் காண்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அவற்றை மத்திய அரசிற்கு எடுத்துச் சென்று, நிலவிவகார அணுகுமுறையில் கட்டமைப்பு சார்ந்ததும், நிர்வாக முறைமை சார்ந்ததுமான மாற்றங்களுக்கும் செயற்பாட்டுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேற்கின் ஆசீர்வாதத்துடனான ஆட்சி மாற்றம், சர்வதேச சமூகத்தின் அழுத்தம், புதிய அரசாங்கம் தன்மீதான நம்பிக்கையை உள்நாட்டிலும் (தமிழர் மத்தியிலும்) சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும் நோக்கில் 1000 ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் புதிய நில அபகரிப்புகள் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன என்ற தகவலும் பகிரப்பட்டது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலம் சார்ந்த விவகாரத்தினை வழிநடத்தும் (நிலக் கபளிகரம்) சிறிலங்காவின் அணுகுமுறை ஒரு கட்டமைக்கப்பட்ட அரச கொள்கை சார்ந்ததாகவும், நில விடுவிப்பு என்பது மிட்டாய் கொடுக்கும் அணுகுமுறையாகவும் இருக்கின்றது.
நிலம்: அரசியல் உரிமை, இருப்பு சார் அடையாளம்
பொதுவாக நிலம் என்பதை ’குடியிருக்கின்ற இடம்’ என்பதாகக் குறிக்கிவிடமுடியாது. அது தமிழ் மக்களின் ’அரசியல்’, ’உரிமை’ மற்றும் ’இருப்பு’ சார்ந்தது. வெறுமனே காணி என்று சுருக்கிவிட முடியாது. அது மக்களின் வாழ்வாதாரம், வளங்கள் மீதான உரிமை, பண்பாட்டு வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது.
இராணுவத்தை எதிர்த்து எவரும் எதுவும் கேட்கமுடியாது என்ற புறநிலையில், வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்கலை நடைமுறைப்படுத்தும் இயந்திரமாக ’அரசினால்’ இராணுவம் பயன்படுத்தப்படுகின்றது.
வசாவிளான் போன்ற கிராமங்களிலிருந்து நீண்ட காலங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் வேறு இடங்களில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக குடியேறி வாழ்கின்ற நிலையில், விடுவிக்கப்பட்ட சொந்த இடங்களுக்கு மீளச்சென்று குடியேற முடியாத நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன. இவ்வாறான சூழல்களில் விடுவிக்கப்பட்ட சில இடங்களில் குடியேற ஆளில்லாத சூழலையும் காணலாம். அத்தோடு விடுவிக்கப்பட்ட நிலங்களில் பல பகுதி குடியிருக்க முடியாத பகுதிகளாகவும் உள்ளன.
நில விவகாரத்தைக் கையாள்வதற்கு அடிப்படையான அணுகுமுறைகளிலும் செயற்பாடுகளிலும் இதன் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது அவசியம். சமூகத்தின் பரந்துபட்டவர்களின் பங்கேற்புடனும் பரந்தளவிலான ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு ஏற்படுத்தப்படும் புரிதலின் ஊடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைகளில் நிலங்களை விடுவிப்பதற்கான போராட்டம் கூர்மையடைய வேண்டும்.
நிதிவழங்குனர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள், அனுசரணை ஊடாக, மாற்றுத்தீர்வுகளுக்குரிய பொறிமுறைகளையும் செயல்முனைப்புகளையும் மேற்கொள்ளலாம்.
தேசமாகச் சிந்தித்துச் செயற்படல்
நிலம் சார்ந்து நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு நோக்கிய செயற்பாடுகளில், ஒரு சமூகமாக-தேசமாகச் சிந்தித்து-விவாதித்து, வழிமுறைகளையும் பொறிமுறைகளையும் கண்டடைய வேண்டிய தேவையுள்ளது. புலம்பெயர்ந்த மக்களின், குறிப்பாகத் தாயகத்தில் காணிகளை வைத்திருப்பவர்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.
புலம்பெயர் காணி உரிமையாளர்கள் வணிக உறவாக அல்லாமல், தனிப்பட்ட சொத்துடமைப் பாதுகாப்பு என்ற ரீதியிலும் அல்லாமல் ’தேசமாகச் சிந்தித்து’ நிலமற்ற மக்களை நிலவுரிமையாளர்களாக்கும் வகையிலான பொறிமுறைகளைக் கண்டடைதல் வேண்டும். அதன் பொருட்டு மனம்; திறந்த கலந்துரையாடல்கள் மூலம் பொதுத்திட்டத்திற்குரிய இணக்கப்பாட்டினை ஆய்ந்தறிய வேண்டும்.
தமிழர் தாயகத்தின் வடக்கில் நிலம் சார்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான துல்லியமானதும் விரிவானதுமான தகவல்கள் திரட்டப்பட்டு காத்திரமான ஆய்வறிக்கையாக இந்த ஆவணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
நில விவகாரம் உணர்ச்சிவயப்பட்டதாக மட்டுமே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. இதனைத் தகுந்த தரவுகள், தகவல்கள், பரிந்துரைகளுடன் ஆவணமாக்கியமை இதனை அறிவுசார் தளத்தில் முன்னெடுக்க வழிவகுத்துள்ளது என்ற கருத்தும் கலந்துரையாடலில் வெளிப்பட்டது.
காக்கைச் சிறகினிலே, பொங்குதமிழ் இணையம் – ஜனவரி 2016