ஸ்கொட்லாண்ட் பொதுவாக்கெடுப்பு: சுயநிர்ணய உரிமைக்கும் ஜனநாயக வெளிக்குமான முன்னுதாரணம் – பகுதி 2
ஈழத்தமிழர்கள் மற்றும் குர்தீஸ் மக்களும் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான பொதுவாக்கெடுப்பினைக் கோரிநிற்கின்றனர். ஸ்கொட்லாண்டினை விடவும், ஏலவே தனிநாடுகளாக பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிந்து சென்ற கொசவோ மற்றும் மொன்ரநீக்றோ போன்ற ஏனைய நாடுகளின் தேசிய இன மக்களை விடவும் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு அதிகம் உரித்துடையவர்கள் என்ற பார்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவுகின்றது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்கள், முற்றுமுழுதான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழ்கின்ற மக்களினம் என்ற வகையிலும், பாரம்பரிய தாயகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்கள்; மத்தியில் இந்தக் கோரிக்கைக்கு வலுவான காரணங்கள் உண்டு.
ஸ்கொட்லாந்தின் பொதுவாக்கெடுப்பு விவகாரம் உலக நாடுகளாலும், உலகின் ஏனைய பகுதிகளில் தனிநாட்டுக்காக, விடுதலைக்காக, அரசியல் உரிமைகளுக்காகவும் போராடும் பல்வேறு அமைப்புகளால் கூர்மையாகக் கவனிக்கப்பட்டு வந்துள்ளது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, ஸ்பெயின் நாட்டில் Catalonia பிராந்தியத்தில் தனிநாட்டுக் கோரிக்கை வலுவான நிலையிலுள்ளது. அத்தோடு ஸ்பெயின் நாட்டின் வடக்கினையும் பிரான்ஸ் நாட்டின் மேற்கு எல்லைப் பிரதேசத்தின் நிலப்பரப்பையும் உள்ளடக்கிய (ஸ்பெயின் – பிரான்ஸ் இரண்டு நாடுகளின் எல்லைப்பிரதேசங்களை அமைவிடமாகக் கொண்டுள்ள Basque மொழி பேசும் தேசிய இன மக்கள்) பிராந்தியமான Basque Country யைத் தனிநாடாகக் கோரும் அமைப்பு, பிரான்சின் கொர்சீகா (Corsica), மற்றும் வடக்கு இத்தாலிய பிராந்தியம் ஆகியவற்றை தனிநாட்டு முனைப்புக் கொண்டவைகளின் வரிசையில் குறிப்பிடலாம்.
ஸ்கொட்லாண்ட் பிரிவினை நிகழ்ந்தால் இப்பிராந்தியங்களுக்கு அது சாதகமாகவும் உந்துதலாகவும் அமைந்துவிடுமென்ற அச்சம் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் மத்தியில் நிலவிவந்தது. தவிர பிரித்தானியாவின் வேல்ஸிலும் தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள் உள்ளன. அத்தோடு வட அயர்லாந்த் அயர்லாந்துடன் இணையும் முனைப்புக் கொண்டுள்ளது.
Catalonia பிராந்தியத்தின் பெரும்பான்மை மக்கள் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான விருப்பினைக் கொண்டுள்ளனர். தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து செல்வது தொடர்பான பொதுவாக்கெடுப்பினை நீண்டகாலமாகக் கோரியும் வந்துள்ளனர். தற்போது ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பின் உடனடி விளைவாக பொதுவாக்கெடுப்பு தொடர்பான தீர்மானம் Catalonia பிராந்திய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 9 பொதுவாக்கெடுப்பிற்கான தேதியாக அறிவிக்கப்பட்டுமுள்ளது. ஸ்பெயின் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினை மேற்கோள் காட்டி, பொதுவாக்கெடுப்புத் தீர்மானத்தினைக் கடுமையாக எதிர்த்துள்ளது ஸ்பெயின்.
Barcelonaவினைத் தலைநகராகக் கொண்டுள்ள Catalonia பிராந்தியமானது ஸ்பெயின் அரசின் கீழ் தனியான நிர்வாக அலகினைக் கொண்டுள்ளது.
ஊயவயடழnயை மக்கள் தம்மையொரு தனித்தேசிய இனமாக, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாகக் கருதுகின்றனர். அதனடிப்படையில் தமக்குப் பிரிந்துசெல்வதா அல்லது இணைந்து வாழ்வதா என்பதைத் தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையைக் கோருகின்றனர்.
இந்தப்புறநிலையில் ஸ்பெயின் நாட்டின் எதிர்ப்பினை மீறி, Catalonia பிராந்திய நிர்வாகம் 2014 நவம்பர் 9 இல் பொதுவாக்கெடுப்பினை நடாத்துமாயின், சுயாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டு, அப்பிராந்தியம் முற்றுமுழுதாக ஸ்பெயின் அரச நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படக்கூடிய ஆபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு. அவ்வாறு நிகழ்ந்தால் Catalonia மக்கள் மத்தியில் தனிநாட்டுக் கோரிக்கை மேலும் வலுவடையும் புறநிலையே தோன்றும். எனவே நீண்டகால அடிப்படையில் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது ஸ்பெயின் அரசிற்கு இலகுவான காரியமாக அமையப்போவதுமில்லை.
மைய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் குவிந்திருக்கின்றமை ஸ்கொட்லாந்திற்கு மட்டுமல்ல, வேல்ஸ் மற்றும் வட-அயர்லாந் மத்தியிலும் அதிருப்தி நிலவுகின்றது. எனவே அதிகார வலுவாக்கம் அல்லது பிரிந்து செல்வதென்ற ஸ்கொட்லாண்டின் நிலைப்பாடுகள் சார்ந்த தாக்கம் பிரித்தானியக்கூட்டமைப்பின் மற்றைய பிராந்திய அரசாங்கங்களையும் தொற்றிக் கொள்ளும். இது இயல்பான ஒன்றும் கூட.
வட அயர்லாந்து 1968 முதல் 1998 வரையான நான்கு தசாப்தங்கள் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த தேசம். 1998இல் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுயாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது.
வட அயர்லாந் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்த தேசம் என்ற வகையில் தற்போதைய ஸ்கொட்லாந்த் விகாரத்தில், அது பிரிந்து செல்வதற்கு வட அயர்லாந்தின் தார்மீக ஆதரவு உண்டென்பதில் ஒழிவுமறைவு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வட அயர்லாந் குடியரசுக் கட்சியான ’’Sinn Fein’ இது பற்றி நேரடியாக கருத்துத் தெரிவிக்கவில்லை. அதாவது ஸ்கொட்லாண்டின் எதிர்காலம் தொடர்பான முடிவினை ஸ்கொட்லாந்த் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதாக ராஜதந்திர அணுகுமுறைக்கமைய நடுநிலையுடன் கருத்து வெளியிட்டிருந்தது.
எனவே ஸ்கொட்லாந்தினை மட்டுமல்ல வட அயர்லாந் மற்றும் வேல்ஸ் ஆகியவற்றையும் படிப்படியாக இழக்க நேரிடும் என்ற அச்சம் பிரித்தானிய ஆளும் தரப்பிற்கும் எதிர்கட்சி உட்பட்ட ஏனைய தரப்புகளுக்கும் இருக்கின்றது என்பதும் வெளிப்படையாகும்.
ஸ்கொட்லாந்த் மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரயோகத்தைச் சாத்தியமாக்கிய ஸ்கொட்லாந்த் தேசியவாதக் கட்சியின் தொடர் அரசியல் செயற்பாடுகளின் விளைவு மற்றும் பிரித்தானியாவின் ஜனநாயக மரபின் நெகிழ்வுப் போக்கு என்பன ஐரோப்பாவில் மேலும் பல சிறிய நாடுகளுக்கு வழிகோலும் என ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. ஸ்பெயின் ஒரு படி மேலே போய், பொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கு அனுமதி அழித்தது தவறு என்றவகையில் பிரித்தானியா மீது அதிருப்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. தனது நாட்டில் இரண்டு பிராந்தியங்களில் தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெற்றுள்ள சூழலில் அப்பிராந்தியங்களுக்கு இது உந்துதலாகவும் தனக்கு நெருக்கடியாகவும் அமையும் எனபதே ஸ்பெயின் நாட்டின் சீற்றத்திற்கான அடிப்படை.
பொதுவாக்கெடுப்பில் பெண்களும், நடுத்தரவயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் ‘இல்லை’ எனவும், இளைய தலைமுறையினர் மற்றும் ஆண்களில் பெரும்பான்மையினரும் ‘ஆம்’ எனவும் வாக்களித்துள்ளதான தரவுகளும் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்கள் ஸ்கொட்லாண்டின் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன.
அந்தத் தேசத்தின் மூத்த தலைமுறையினர், இளைய தலைமுறையினர், மற்றும் ஆண்-பெண் போன்ற தரப்பினருக்கிடையில் எவ்வாறான அரசியல் புரிதல் நிலவுகின்றது – தனித்துச் செல்வதையும் இணைந்து வாழ்வதையும் எவ்வாறாக அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் – இது சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள், புரிதல்களில் எத்தகைய உளவியல் நிலவுகின்றது- இவர்களின் நிலைப்பாடுகளை எத்தகைய அக மற்றும் புறக் காரணிகள் தீர்மானிக்கின்றன என்பது பற்றிய தேடலையும் இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இணைந்து வாழ்வதற்கான பெரும்பான்மை எட்டப்பட்டதன் முக்கிய காரணியில், இணைந்திருப்பது சார்ந்து மக்கள் மத்தியில் நிலவும் பாதுகாப்பு உணர்வு முதன்மையானது. பாதுகாப்பு எனும் போது பொருளாதாரப் பாதுகாப்பே முதன்மையானதாக நோக்கக்கூடியது. கேள்விக்குறியான எதிர்காலத்திற்குள் காலடி எடுத்து வைப்பதை விட இருக்கின்ற பாதுகாப்புப் பொறிமுறைகளைத் தக்கவைப்பது மேலானதென்ற நிலைப்பாடு இணைந்து வாழ்வதற்கு ஆதரவான பெரும்பான்மையை உருவாக்கியுள்ளது எனலாம். தவிர ஊடகங்களின் கருத்துருவாக்கம் மற்றும் கருத்துக்கணிப்புகளின் வாயிலாக நிகழ்த்தப்படும் உளவியல் தூண்டுதல் என்பனவும் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய வகிபாகத்தினைக் கொண்டிருந்தன.
ஆனால் இதனை ஒரு அறுதியான முடிந்த முடிவாக பார்க்கவேண்டிய தேவை இல்லை எனலாம். 45 வீதத்தினர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தமை சாதாரண விடயமல்ல. அரசியல் வேணவாவினதும், கிட்டத்தட்ட மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் நேரெதிர் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர் என்பதினதும் வெளிப்பாடாகவே இம்முடிவு நோக்கப்படவேண்டியது. எனவே இந்த நிலை இன்னும் கூர்மையடையவும் வாய்ப்புண்டு. இன்னும் குறிப்பிட்ட சில தசாப்தங்களின்;; பின்னர் மீண்டும் பிரிந்து செல்வது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டிய புறநிலைகூடத் தோன்றலாம்.
பிரித்தானிய நடுவண் அரசு இனிவரும் காலங்களில் அதிகாரப்பரவலாக்கல் சார்ந்து எத்தகையை அணுகுமுறையைக் கையாள்கின்றது என்பதைப் பொறுத்தே இந்நிலைமையின் அடுத்தடுத்த பரிமாணங்களைக் கணிக்க முடியும்.
பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ஸ்கொட்லாண்ட், வட அயர்லாந் அல்லது வேல்ஸ் ஆகிய எவற்றிற்கும், தனித்துநின்று தீர்மானங்களை இயற்றி நிறைவேற்றுகின்ற பலம் இல்லை. மொத்த நாடாளுமன்ற இருக்கைகளில் 9 வீதத்தினையே ஸ்கொட்லாண்ட் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இது மக்கட்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவமாகும்.
அண்மைய வரலாற்றிலும் தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனிநாட்டினை அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்புகள் நிகழ்ந்தேறியிருக்கின்றன. பனிப்போருக்குப் பிற்பட்ட காலங்களிலும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் பிரிந்து சென்று தனிநாட்டினை அமைப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. கிழக்குத்தீமோர், தென்சூடான், கொசவோ, மொன்ரநீக்றோ ஆகியவை கடந்த பத்து ஆண்டுகளுக்குள்ளான எடுத்துக்காட்டுகள்.
இவற்றிற்கும் ஸ்கொட்லாண்டிற்குமிடையில் அடிப்படையில் பாரியதொரு வேறுபாடு உண்டு. மேற்சொன்ன நாடுகளைத் தனிநாடாக்குவதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளென்று நோக்குமிடத்து, அவற்றை மேற்குலகினதும், அவைசார்ந்த பிராந்திய நலன்களின் அடிப்படைகளிலும் நிகழ்ந்த விளைவுகளாக வகைப்படுத்தலாம். அனைத்துலக மற்றும் பிராந்திய சக்திகளின் நலன்சார் முடிவுகள் விடுதலைக்காகப் போராடிய மக்களுக்குச் சாதகமாக அமைந்தன. ஆனால் ஸ்கொட்லாந்த் விவகாரம் என்பது இவ்வகை வல்லரசுகளின் நலன்சார் அரசியல் என்பதைத் தாண்டி, பிரித்தானியாவின் ஜனநாயக மரபினதும் அதன் விழுவியங்களினதும் நேரடியான விளைவாக நோக்கத்தக்கது என்ற வகையில் கவனத்தை ஈர்க்கின்றது.
இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள சில ஐரோப்பிய பிராந்தியங்களோடு, ஈழத்தமிழர்கள் மற்றும் குர்தீஸ் மக்களும் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான பொதுவாக்கெடுப்பினைக் கோரிநிற்கின்றனர். ஸ்கொட்லாண்டினை விடவும், ஏலவே தனிநாடுகளாக பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிந்து சென்ற கொசவோ மற்றும் மொன்ரநீக்றோ போன்ற ஏனைய நாடுகளின் தேசிய இன மக்களை விடவும் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு அதிகம் உரித்துடையவர்கள் என்ற பார்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவுகின்றது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்கள், முற்றுமுழுதான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழ்கின்ற மக்களினம் என்ற வகையிலும், பாரம்பரிய தாயகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்கள்; மத்தியில் இந்தக் கோரிக்கைக்கு வலுவான காரணங்கள் உண்டு.
ஆனால் இலங்கைகத்தீவிலும், அதன் பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகள் மத்தியிலும் இதனைப் புரிந்து கொள்கின்ற யதார்த்தம் தற்போது நிலவவில்லை. நடைமுறை அர்த்தத்தில் அதற்குச் சாத்தியமான அரசியல் புறநிலையைத் தோற்றுவிக்கத்தக்க வகையில் ஈழத்தமிழர்களின் அரசியல் செல்நெறி செப்பனிடப்பட வேண்டுமென்பதையும் ஸ்கொட்லாண்ட் நிகழ்வு வலியுறுத்துகின்றது. இதற்கு தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புகளில் ஒருவகையான ஒருங்கிசைந்த போக்கு அவசியம் என்பதையும் ஸ்கொட்லாந்த் விவகாரம் உணர்த்தி நிற்கின்றது.
பிரித்தானியக் கூட்டமைப்பினைத் தொடர்ந்து பேணுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்கொட்லாந்திற்கு காத்திரமான மேலதிக அதிகாரங்களை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்கொட்லாண்டிற்கு மட்டுமல்ல, கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவப் பிராந்தியங்களுக்கும் இது பொருந்தும். இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தின் பெருநகரங்களை உள்ளடக்கிய ஏனைய பிரதேசங்களுக்கும் அதிகாரப்பரவலாக்கலை வழங்கக்கூடிய பிராந்திய சுயாட்சி (Regional Autonomy) முறைமைக்கு அமைய அரசியல் அமைப்பு, ஆட்சி நிர்வாக மறுசீரமைப்பு பற்றியும் பிரித்தானியா சிந்திக்க நேரிடும் என்றும் சில ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
45 வீதத்தினர் சுதந்திர ஸ்கொட்லாண்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையை பிரித்தானியா சாதாரணமாக நிராகரிக்க முடியாது. புறமொதுக்க முடியாது.
பொதுவாக்கெடுப்பில் சுதந்திரத் தனிநாட்டுக்கான நிலைப்பாடு பெரும்பான்மையைப் பெறவில்லை. வெற்றியடையவில்லை, தனிநாட்டுக் கோரிக்கைக்கு தோல்வி கிடைத்துள்ளது என்றும் கருதிவிட முடியாது. இது தனிநாட்டுக்கான அங்கீகாரத்தைக் கோரிநின்ற தேசியவாதக் கட்சியின் பேரம்பேசும் வலுவினையும் வலுப்படுத்தியுள்ளது. ஸ்கொட்லாண்ட் மக்களை மேலும் வலுவான அரசியல் மயப்படுத்தலுக்கு இந்த வாக்கெடுப்பும் அதனைச் சுற்றிய விவாதங்களும் இட்டுச்சென்றுள்ளன. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் தொடச்ச்சியாக பிரித்தானியாவினால் தான் கையாளப்படுமென்ற போதிலும் அதிகபட்ச அதிகாரம் (Devolution Max) தொடர்பான கோரிக்கை வலுப்பெற்றுள்ளது என்பது முக்கியமான விளைவாகவே கருதப்படுகின்றது. ஸ்கொட்லாண்ட் தேசியவாதக் கட்சியின் தொடர் அரசியல் முன்னெடுப்பும், பிரித்தானியாவின் ஜனநாயகப் பாரம்பரியமும் பொதுவாக்கெடுப்பினைச் சாத்தியமாக்கிய முக்கிய அம்சங்களெனக் கூறமுடியும்.
பொங்குதமிழ், ஒக்ரோபர் 2014