கோடைப்பூக்கள்

மலைமுகடுகளைக் கழுவி
வழியும் மழைநீரை
நீண்ட நேரம்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தாளகதியுடன் இறங்கும்
சாரலின் ஓசை
நின்றுவிடக்கூடாதென்று
மனம் வேண்டுகிறது
எங்கோ தூரத்திலிருந்து
பறவையின் குரல்
செவிகளில் விழுகிறது
பகலை நலன் விசாரித்து
நகர்கிறது காற்று
அவ்வப்போது முகம் காட்டி
மறைகிறது மாயவெயில்
மஞ்சள் சிவப்பு நீலம்
வெள்ளை ஊதா நிறங்களில்
விரிந்து சிரிக்கின்றன
கோடைப்பூக்கள்
நீள்இரவின் நிசப்தம் உடைத்து
நினைவுகள் விசும்புகின்றன
உறக்கம் கலைத்து
ஆக்கிரமித்த கனவுகள்
தீப்பிடித்தெரிகின்றன.
கவிதைக்கான அழல்கள்
இப்படியும்தானே
எழுகின்றன!

15/07/19

Leave A Reply