Ingenting – Nothing! நோர்வேஜிய நாடகத்தை முன்வைத்து – 1
வாழ்க்கையில் எதற்குமே பொருளில்லை¸ சத்தில்லை¸ சாரமில்லை?
முன்னைய பதிவொன்றில் கடந்த வாரம் பார்த்ததாக நான் குறிப்பிட்ட இன்னொரு நாடகம் இளைஞர்களுக்கானது. நோர்வேஜிய மொழியில் இதன் தலைப்பு ‘Ingenting’. இதன் பொருள் ‘எதுவுமேயில்லை’ (பொருளற்ற வெறுமை) .
இதன் பேசுபொருளும்¸ வடிவமும் இது எழுப்புகின்ற கேள்விகளும் பல்பரிமாணம் மிக்கவை. மேடை அமைப்பு¸ ஆற்றுகை, வடிவம்¸ பேசுபொருள்¸ நடிப்பு¸ காட்சியமைப்பு¸ இசை¸ ஒளி என இதன் கலைத்துவ அம்சங்கள் பற்றி நிறையவே பேச முடியும்.
இந்நாடகம் வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய வாதங்களை எழுப்புகிறது. கேள்விகளை முன்வைக்கிறது.
வாழ்க்கையில் எதற்குமே பொருளில்லை¸ சத்தில்லை¸ சாரமில்லை. அவ்வாறான அர்த்த உள்ளீடற்ற வாழ்க்கை மீது பாரபட்சமற்று கேள்விகளை எழுப்புகின்றது. அதைவிடுத்து சும்மாயிருப்பதே மேல் என்பதிலிருந்து வாழ்தலின் அர்த்தம் என்ன, அதன் உள்ளடக்கப்பெறுமதி என்ன¸ மனித வாழ்விற்கும் அதன் செயற்பாடுகளுக்கும், மனிதன் பற்றுக்கொண்டுள்ள பொருட்களுக்கும் மெய்யான அர்த்தமேதும் இருக்கின்றதா என்பதை நோக்கி உரையாடல் நிகழ்கின்றது.
தத்துவார்த்தமானதும் அபத்தமானதுமான வாதங்களை அடுக்கிச் செல்வதனூடு கதை நகர்கிறது. வாழ்க்கையின் அர்த்தத்தை நிரூபிக்கும் முயற்சி கொடூரமான முடிவுகளுக்கும் இட்டுச் செல்கின்றது.
இது அடிப்படையில் ஒரு டெனிஸ் நாவலைத் தழுவி ஆக்கப்பட்ட நாடகப் பிரதி.
ஒவ்வொருவரினது வாழ்விலும் பதின்ம வயதென்பது இன்றியமையாத முக்கிய தருணங்களாலானது. வாழ்க்கையின் விழுமியங்கள் பற்றிய கேள்விகளும் தேடலும் அதிகமாகவும் முதற்தடவையாகவும் பொறிதட்டும் காலங்கள் அவை. இவ்வகைக் கேள்விகள் இப்பருவ மனதைக் குடைந்துகொண்டிருக்கும். சுயம் பற்றிய¸ அடையாளம் பற்றிய கேள்விகளை மனதில் எழுப்பும்.
இத்தகையை புறநிலையில் இது இளைஞர்களை நோக்கிய நாடகம். இளைஞர்களான தம்பிள்ளைகளைப் புரிந்துகொள்ள¸ பெற்றோரும் பார்த்து உரையாட வழிகோலுகின்ற படைப்பாகும்.
ஐந்து நடிகர்கள் மட்டுமே ஆற்றுகை செய்கின்றனர். இது ஒரு மணி நேர நாடகம்.ஐந்து மாணவர்களும் ஒரு வகுப்பறையைப் பிரதிபலிக்கின்றனர். அதில் நான்கு பாத்திரங்கள் வெவ்வேறு பாத்திரங்களாக மாறி பல்லினக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு முழுமையான வகுப்பறையைப் பிரதிபலிக்கச் செய்கின்றனர்.
நான்கு பக்கமும் பார்வையாளர்கள் அமரக்கூடிய இருக்கைகள். நடுவில் ஆற்றுகைக்குரிய மேடை. குத்துச்சண்டை மேடையை ஒத்த வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களுக்குப் பின்னால் நான்கு புறமும் படிகள் அமைக்கப்பட்டு உயரத்தில் காவல் அரண்கள் போன்ற அமைப்பிலான மையங்கள்.
நடிகர்கள் நடுவிலுள்ள மேடையில் பிரதானமாக ஆற்றுகையை நிகழ்த்தியபோதும்¸ பார்வையாளர்களை ஊடறுத்தும் (இடையூறு இல்லாத வகையில்)¸ பின்புற அரங்கிலும்¸ காவல் அரண் போன்ற மையங்களிலுமென அந்த அரங்கு முழுவதையும் தேவைக்கேற்ப கையாண்டனர்.
நாடகத்தின் உட்பொருள் அனைத்திற்குமான தத்துவ விசாரணை என்பதாகவும் தத்துவத்திற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான முரண், அவற்றிற்கிடையிலான சமநிலை பற்றிய கேள்விகளாக வெளிப்படுகின்றது.
[முழுமையான பார்வை இதழொன்றில் வெளிவர இருக்கின்றது.]
– Photoes: Erika Hebbert/Oslo Nye Teater