‘96’ – காதலித்துப் பிரிந்தவர்கள்
‘96’ – காதலித்துப் பிரிந்தவர்கள் இரண்டு தசாப்தங்களுக்குப் பின் சந்திக்கும் தருணங்களின் மென்னுர்வுகளைச் சித்தரிக்கின்றது.
மனம் திறந்து உணர்வுகளையும் நினைவுகளையும் மிக நெருக்கமாகப் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஆனால் ‘உடல்’ மீது கட்டமைக்கப்பட்ட பிற்போக்கு விம்பத்தை நிறுவுவதிலும் புனிதப்படுத்துவதிலும் இயக்குனர் கொண்டிருக்கும் கவனம் நெருடுகிறது.
‘உடல்’ சார்ந்து ‘கலாச்சாரக் காவல்தனம்’ பல இடங்களில் வலிந்த திணிப்பாகத் தோன்றுகிறது. ராமும் ஜானுவும் உணர்ச்சிவசப்பட்டு உடல் ரீதியாக இணைந்து விடுவார்களோ என்று நண்பர்கள் பதட்டப்படுகின்றனர்.
தமது எல்லைகளையும், வாழ்க்கைச் சூழலின் யாதார்த்தங்கள் பற்றிய புரிதலையும் கொண்டவர்களின் முதிர்ந்த காதலைச் சித்தரிக்கும் போது இத்தகைய பதட்டமும் செயற்கைத்தன்மையும் துருத்திக்கொண்டு நிற்கின்றது.
அடுத்த நாள் நாடு திரும்பவுள்ள ஜானுவை அவளின் தங்குவிடுதிக்கு அழைத்துச் செல்லும் வழியில் தன் வீடு பக்கத்தில் தான் இருக்கிறது என்று தயங்கியபடி சொல்கிறான் ராம். விசுவாமித்ரரின் தவம் கலைத்த மேனகை மட்டுமல்ல, அவர்களுடன் ரம்பை ஊர்வசி என மூன்றுபேரும் ஒன்றாக உனக்கு முன் நடனமாடினாலும் அவர்களைப் பாதுகாப்பாக நீ பார்த்துக்கொள்வாய். ஆகவே உன் வீட்டுக்கு நான் வருவதில் சிக்கலில்லை என்பதான உரையாடல் இடம்பெறுகிறது. அந்தக் காட்சியினூடாக உடல்சார்ந்த ‘புனித விம்பத்தினை’ உறுதிப்படுத்திவிட்டுத்தான் ஜானு, ராமின் வீட்டுக்குச் செல்கிறாள்.
ராமின் உடல்மொழியிலிருந்து அவனது அணுகுமுறைகள், பழகும் முறை அனைத்தும் காதலை அதீத புனிதப்படுத்தும் பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறது.
இறுதியாக விமான நிலையத்தில் விடைபெறும் போதுகூட கைகளை இறுகப்பற்றியோ, கன்னத்தில் முத்தமிட்டோ, நெற்றியில் முத்தமிட்டோ, கட்டித்தழுவியோ விடைபெறுவதாக் காட்ட முடியாத இறுக்கம் பெரும் நெருடலாக இருக்கிறது.
அன்றாட வாழ்வின் இயல்பான தருணங்களில், ஆண்-பெண் உறவின் உணர்வு நெருக்கத்தில், உரையாடல்களில், பகிர்தல்களில் தொடுதல் நிறைந்திருக்கின்றது. தொடுதல் அத்தனை குற்றத்திற்குரியதா, புனிதக்கேடா என்ன.
அன்பை, ஆழ்மன நேசத்தை ,அதன் வருடலை, பிரிவின் விசும்பலை வாஞ்சையான தொடுதல்களைத் தவிர்த்துப் பகிர்வதும் வெளிப்படுத்துவதும் இயல்பல்லவே.
கட்டமைக்கப்பட்டிருக்கும் விம்பத்தைப் பேணுவது, தமிழ்ப் பார்வையாளனின் ‘கலாச்சாரப் பார்வையை’, அதன் உளவியலை கருத்திற்கொண்டிருக்கின்றமை தெரிகின்றது. மட்டுமல்லாது இத்தகையை விம்பங்களை உடைத்திருப்பின், படம் இந்தளவிற்குப் பேசப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கும் என்ற அச்சம்கூட இயக்குனருக்கு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தக் கட்டுக்களைத் தகர்த்திருந்தால் இந்தப்படம் ஒரு யதார்த்த சினிமாவிற்குரிய தன்மைகளுடையதாக இருந்திருக்கும்!