சிக்கலான பரிமாணங்களால் சூழப்பட்ட போர் – சிரியா – பகுதி 2
ஆட்சி மாற்றம் கோரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம், உள்நாட்டுப்போராகி, தேசியப்பிரச்சினையாகி, பிராந்திய விரிவாக்கம் பெற்று – அனைத்துலக விவகாரமாகியுள்ளது.
2011இலிருந்து தொடரும் சிரியாவின் உள்நாட்டுப் போர் அந்நாட்டினைப் சொல்லொணா மனிதப் பேரவலங்களுக்குள் தள்ளியுள்ளது. பாரிய உயிரழிவுகளுக்குள்ளும் இலகுவில் மீளமுடியாத போர் நெருக்கடிக்குள்ளும் தள்ளியுள்ளது.
சிரியாவின் மொத்த மக்கட்தொகை 21 மில்லியன்கள். இதில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் அவர்களது சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். 7 மில்லியன் வரையானவர்கள் உள்நாட்டிலும், 4 மில்லியன் வரையான மக்கள் அயல்நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். குறிப்பாக துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்த், ஈராக் ஆகிய நாடுகளில் 95 வீதமானவர்கள் தஞ்சம் கோரியுள்ளனர். அதேவேளை பல்லாயிரக்கணக்கானவர்கள் மத்தியதரைக் கடல் வழியாக உயிராபத்து மிக்க பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி பெருவாரியாக வெளியேறிய தகவல்களை ஐ.நா வெளியிட்டிருந்தது.
மத்திய கிழக்கின் பிராந்திய மற்றும் அனனத்துலக சக்திகளின் நலன்சார் மூலோபாயத்திற்குள் சிரியா சிக்குண்டுள்ளது. சிரிய அகதிகள் விவகாரம் ஐரோப்பாவிற்கும் பெரும தலையிடியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதனைக் கையாள்வதில் பெரிதும சிரமப்படுகின்றன.
2011 முதல் 2015 வரையான 4 ஆண்டுகளில் 220 000 வரையானவர்கள் பலியாகியுள்ளனர்.
நாட்டின் நிலப்பரப்பில் 20 – 30 வீதம் வரையான பகுதி மட்டும் Assad வசமுள்ளது. 1/3க்கும் 1/2க்கும் இடைப்பட்ட பிரதேசங்கள் ஐ.எஸ் வசமும், எஞ்சியுள்ள பிரதேசங்கள் வெவ்வேறு கிளர்ச்சிக்குழுக்களின் வசமும் உள்ளதாக கூறப்படுகின்றது.
சிரியா பற்றியெரிகின்ற இன்றைய நிலைக்கான புறக்காரணி யாதெனில், 2011இல் அரபு நாடுகளில் தோற்றம்பெற்ற “அரபு வசந்தம்” எனப்படும் வெகுசனப் போராட்டங்களின் தாக்கமும் அதன் தொடர்ச்சியுமாகும். ஆட்சி மாற்றம், ஜனநாயகத்ததை நிலைநாட்டுதல் என்ற கோரிக்கைகளோடு துனிசியாவில் தொடங்கி எகிப்த், ஜெமன், லிபியா, ஜோர்டான் போன்ற இன்னும் பல நாடுகளுக்குச் சற்றேறக்குறை சமகாலத்தில் பரவிய வெகுசனப் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே சிரியாவின் Assad ஆட்சிபீடத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், ஆயுதக்கிளர்ச்சியாகி, உள்நாட்டுப் போராக உக்கிரமடைந்து கடந்த பல ஆண்டுகளாக நீடித்தன.
ஆட்சி மாற்றம் கோரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம், உள்நாட்டுப்போராகி, தேசியப்பிரச்சினையாகி, பிராந்திய விரிவாக்கம் பெற்று – அனைத்துலக விவகாரமாகியுள்ளது.
மேற்குலக நாடுகள், குறிப்பாக அமெரிக்காவானது, லிபியாவின் முகம்மர் கடாபியை ஆட்சிபீடத்திலிருந்து அகற்ற கருத்தியல் ரீதியாகவும் நடைமுறையிலும் எவ்வாறான அணுகுமுறையினைக் கைக்கொண்டதோ, அதனையொத்த காய்நகர்த்தல்களை சிரியாவின் அரசதலைவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கும் முடுக்கிவிட்டிருந்தன.
Assad ஆட்சிபீடத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா தலைமையிலான அணி வழங்கி வருகின்றது. Assadஐ பதவிவிலகுமாறு பகிரங்கமாகவும் அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சிரியா விவகாரத்திற்கு தீர்வு கண்டுவிடுமென கிளர்ச்சிக் குழுக்கள் நம்பின. அவ்வாறு அக்குழுக்களை நம்பவைத்து, அவர்களைத் தூண்டிவிட்டுப் போரை உக்கிரமடையவைத்ததில் அமெரிக்காவின் பங்கு பெரியது.
சிரியா விவகாரம் பல்முனைப்பட்ட சிக்கல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பிராந்திய சக்திகளின் நலன் – அனைத்துலக சக்திகளின் நலன் – இஸ்ரேலின் அயல்நாடு என்ற ரீதியில் சிரியாவின் அமைவிடம் சார்ந்த பரிமாணம் – மத்தியகிழக்கு முழுவதிலும் பரவியுள்ள ஐ.எஸ் பயங்கரவாத வலைப்பின்னல் – பிளவுமுரண்பாடுகளைக் கொண்ட பல்வேறு போராட்டக்குழுக்கள் என சிரியா பலமுனைப்பட்ட சிக்கலான பரிமாணங்களால் சூழப்பட்டுள்ளது.
Assad பதவி விலக வேண்டுமென்ற நிபந்தனையோடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதென்பது, பேச்சுவார்த்தை முனைப்புகளை இலகுவில் தட்டிக்கழிப்பதற்கான வாய்ப்பினை Assadக்கு வழங்கியுள்ளது. சிரியா விவகாரத்தை அமெரிக்கா கையாண்ட விதம், அதன் சிக்கலான பரிமாணத்தை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. இது அமெரிக்க இராஜதந்திரத்தின் மிகப்பெரிய மூலோபாயத் தோல்வி எனக் கணிக்கப்படுகிறது. லிபியாவிலும் இத்தகையை பேரழிவுகளையே அமெரிக்க அணுகுமுறை தோற்றுவித்திருந்தது.
சர்வாதிகார ஆட்சியை நீக்கி, ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மீளுருவாக்கப் போகின்றோம் என்ற சூளுரையோடு ஈராக்; மீதான ஆக்கிரமிப்புப் போரில் இறிங்கிய அமெரிக்கா, இன்று பாரிய அரசியல், ஜனநாயக, ஆட்சியதிகார வெறுமைக்குள்ளும் தொடர் அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் முகம் கொடுக்கும் நாடாக ஈராக்கை ஆக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் அதே நிலைதான். ஈராக், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுத்த போர்கள் அங்கெல்லாம் அமெரிக்காவின் நிரந்தரப் பிரசன்னத்திற்கு மட்டுமே வழிகோலியள்ளது. லிபிய அரசதலைவர் கடாபியைக் கொன்று, அந்நாட்டுக் குடிமக்களையும் பெருமளவில் படுகொலைகளுக்குள்ளாக்கி, அந்நாட்டினை ஒரு அரசியல் கையறு நிலைக்குள் தள்ளியதே அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேசசக்திகளும் செய்த சாதனை.
சிரியாவின் போர் உக்கிரமடைந்து வந்த புறநிலையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அந்த இடைவெளிக்குள் அதிகம் பலமடைந்துள்ளது. கிளர்ச்சிக்குழுக்கள் பிளவுபட்டுள்ளன. இந்தப்பிளவானது பலமான நிலையில் நின்றவாறு Assad படைகளை எதிர்கொள்வதற்கான சூழலை இல்லாமற்செய்துள்ளது. பிராந்தியத்தில் ஈரான் மற்றும் லெபனானின் Hissbullah அமைப்பு Assad ஆட்சிபீடத்திற்கு ஆதரவாகவுள்ளன. அனைத்துலக ரீதியில் எடுத்துக்கொண்டால் ரஸ்யா முழுஅளவில் ஆயுத உதவிகளை வழங்குவதோடு, நேரடியாக படைத்துறை ஆளணிகளையும் சிரியாவில் இறக்கி விட்டுள்ளது. அரசியல் ரீதியாக Assadஇற்கு எதிரான அனைத்துலக முடிவுகளைக் கட்டுப்படுத்துவதில் வழமைபோல ரஸ்யாவினதும் சீனாவினதும் பங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆதவரளித்து ஆயுதங்கள் வழங்கும் கிளர்ச்சிக்குழுக்களில் இஸ்லாமியக் கடும்போக்குவாத அமைப்புகளும் அடங்குகின்றன. எனவே சிரியாவைத் தளமாகக் கொண்டு இஸ்லாமியப் பயங்கரவாதம் மேலும் விரிவாக்கம் கண்டுவருகின்றமைக்கான தூண்டுதலாகவும் மூலமாகவும் மேற்குலகம் இருந்து வருகின்றதென ரஸ்யா குற்றம்சாட்டி. வந்துள்ளது.
சிரிய – ரஸ்ய உறவென்பது பனிப்போர் தொடக்க காலத்தின் நீட்சியாகும். அனைத்துலக அரங்கில் சிரியாவிற்கான (Assad ஆட்சிபீடத்திற்கான) பாதுகாப்பு அரணாக ரஸ்யா தொழிற்படுகின்றது. பொதுமக்கள் மீது அரசபடைகள் இரசாயன உயிரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தியதையடுத்து, 2013இல் சிரியா மீது தாக்குதல் நடாத்துவதற்கு அமெரிக்கா தயாராகிய போது, ஐ.நா பாதுகாப்பு பேரவையில் தனது எதிர்ப்பின் மூலம் அதனைத் தடுத்தது ரஸ்யா. தற்பொழுது Assadஇற்கு ஆதரவான போரில் 2000இற்கும் மேற்பட்ட ரஸ்ய இராணுவத்தினர் சிரியாவில் நிலைகொண்டுள்ளனர். போர்விமானங்கள் உட்பட்ட படைக்கருவிகளையும் வழங்கியுள்ளது. ரஸ்யாவின் பிரசன்னம் சிரியாவில் அதிகரித்துள்ள புறநிலையில், அமெரிக்காவிற்கு அது பெரும் சவாலைத் தோற்றுவித்துள்ளது.
1971இல் பனிப்போரின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து (மத்தியதரைக் கடலில் லெபனானின் வடக்கு) சிரியாவின் 2வது பெரிய துறைமுகமான Tartous ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. மத்தியதரைக்கடலில் ரஸ்யாவிற்கான ஒரு காற்தடமாக இத்துறைமுகம் விளங்குகின்றது. எனவே மூலோபாய ரீதியில் இது ரஸ்யாவிற்கு முக்கியமானது.
ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் Assadஐ இணைத்துச் செல்லவேண்டுமென்பது ரஸ்யாவின் கோரிக்கையாக இருந்து வருகின்றது. Assadதரப்பினைப் பாதுகாக்கும் உள்நோக்கம் கொண்ட கோரிக்கை இதுவென்பதில் இரகசியமில்லை
சிரியாவைப் பொறுத்தமட்டில், பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகள் தத்தமது நலன்களுக்கு ஏற்ப இதனைக் கையாளுகன்றன. Assadஐப் பதவியிலிருந்து இறக்கி ஜனநாயகம், நல்லாட்சி என்ற பேரில் தனக்குச் சாதகமான ஆட்சியை நிறுவுவது அமெரிக்க இலக்கு. அதற்காகக் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுத மற்றும் அரசியல் ரீதியிலான முண்டுகொடுப்பினை அமெரிக்கா மேற்கொள்கின்றதில் ஆச்சரியமேதுமில்லை. ஏனைய அரபு நாடுகளிலும் லிபியாவிலும் அரபு வசந்தத்தை அடுத்து இவ்வகை அணுகுமுறையினையே அமெரிக்கா கைக்கொண்டது.
இங்கு சிக்கலுக்குரிய விடயம் என்னவென்றால், ஐ.எஸ் அமைப்பின் கைகள் ஓங்கியமை அமெரிக்க இலக்கினைச் பலமுனைச் சிக்கல்களுக்குள் தள்ளியுள்ளது. ஈராக்கிலும் சிரியாவிலும் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாதப் படைகளுக்கு எதிராக அமெரிக்கா வான்படைத் தாக்குதல்களை நடாத்திவந்தது. அதேவேளை குர்திஸ் பி.கே.கே போராளிகள் ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் இற்கு எதிரான கடும் சமர்களை முன்னெடுத்தனர். அமெரிக்கா குர்தீஸ் போராளிகளுக்கு இதற்காக ஆயுதங்களை வழங்கியது. அதேவேளை அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதையடுத்து, ஐ.எஸ் இற்கு எதிரான தாக்குதல் எனும் போர்வையில் பி.கே.கே போராளிகளின் நிலைகள் மீது சரமாரியான தாக்குதல்களைத் துருக்கி நடாத்தியது. அதேவேளை ஐ.எஸ் இற்கு எதிரான தாக்குதல்களை நடாத்திவரும் ஈரானுக்கு அமெரிக்கா ஆதரவில்லை. ஏனெனில் Assad ஆட்சிபீடத்தின் நேசநாடாக ஈரான் விளங்குகின்றது.
அல்கைடா பயங்கரவாத அமைப்பு எவ்வாறு அமெரிக்காவின் தயாரிப்பு என நம்பப்பட்டதோ, அதேபோன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் அடிப்படையில் அமெரிக்காவின் தயாரிப்பு என்று பரவலாக நம்பப்படுகின்றது. ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு, அல்கைடாவின் கைகள் ஒடிக்கப்பட்டதையடுத்து, அது பலவீனமாக்கப்பட்டுள்ளது. அதன் இடத்தை நிரப்பும் வகையில் உருவாக்கப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
மத்திய கிழக்கின் வலுச்சமநிலையின் மையப்புள்ளியாக சிரியா விளங்குகின்ற காரணத்தால் 2011இல் சிரியாவில் மக்கள் போராட்டம் வெடித்தபோது, வளைகுடா நாடுகளுடன் ரஸ்யா, ஈரான் ஆகியன உடனடியாகத் தலையிட்டன.
ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற அண்மைய பட்டறிவு காரணமாக சிரியாவிற்குள் நேரடி இராணுவத்தலையீடு சார்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய மேற்குலகத்தரப்புகள் ஆரம்பத்தில் கவனமாகவிருந்தன. எதிர்மறையான முன்னனுபவம் ஒருபுறமிருக்க, தமது படையினரின் உயிர்களைப் பறிகொடுக்கவும் இந்நாடுகள் தயாராகவில்லை என்பதும் அதற்கான காரணிகளில் ஒன்றாகும். இந்த நிலையில் நேரடியாகத் தமது படைகளை அமெரிக்கா இறக்கப்போவதில்லை. 2வது பதவிக்காலத்தின் இறுதித்தறுவாயில் வெல்லமுடியாத ஒரு போருக்குள் அமெரிக்காவைத் தள்ளித் தனது பிம்பத்தை உடைக்க ஒபாமா விரும்பியிருக்கவில்லை.
ஆட்சியதிகாரத்திலிருந்து Assad அகற்றப்படவேண்டுமென மேற்குலக நாடுகள் கோரிவருகின்றன. ஒரு பேச்சுக்கு அவர்கள் கோருவதுபோல் அப்புறப்படுத்திவிட்டதாக வைத்துக்கொண்டால், ஆட்சியதிகாரத்தைக் கையேற்பதற்குரிய செயற்திறன் கொண்ட ஒருமித்த எதிர்த்தரப்புக்குரிய இடமும் வெற்றிடமாகவே உள்ளது. கிளர்ச்சிக்குழுக்கள் பிளவுபட்டுத் தமக்குள் மோதும் சூழலும் நிலவுகின்றது. அப்படிப் பார்க்கின் Assad இற்கு எதிரான தரப்புகளில் ஐ.எஸ் மட்டுமே சிரியாவில் பலம் பொருந்தியதாக உள்ளது. ஐ.எஸ் இன் கைகள் ஓங்குவதைத் தடுப்பதற்கு Assadஉடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம் மேற்குலகிற்கு ஏற்பட்டுள்ளது. அதாவது Assad இன் பதவி விலகலைக் கோராத அல்லது போர்க்குற்றங்கள் சார்ந்த பொறுப்புக்கூறல் விசாரணைகள் கோரப்படமாட்டாது போன்ற உறுதிமொழிகளுடன் Assad தரப்புடன் மேற்குலகம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வாய்ப்புண்டு.
ரஸ்யாவும் ஈரானும் Assadக்கான ஆதரவை நீக்கும் பட்சத்தில் – குறிப்பாக படைத்துறை ரீதியில் செல்வாக்குச் செலுத்தும் ரஸ்யா நிபந்தனைகளை முன்வைத்தால் பேச்சுவார்த்தைக்கான சூழல் இலகுபடுத்தப்படுடெமன்ற பார்வை சில மட்டங்களில் நிலவிவந்தது. தற்போதைய சூழலில் மத்திய கிழக்கில், யுளளயன மற்றும் ஈரான் போன்ற வெகு சில தரப்புகளே ரஸ்யாவின் நேசசக்தி என்ற அளவில் யுளளயன மீதான பெரும் அழுத்தங்களை முன்வைக்க ரஸ்யா விரும்பாது என்பது ஒரு யதார்த்தம். அத்தோடு ரஸ்யாவும், ஈரானும் யுளளயன இற்கு முண்டுகொடுத்து, இராணுவ ஒத்துழைப்பினை அதிகரிப்பதால் போரில் Assad வெல்ல முடியுமென்பதும் சாத்தியமற்றதாகும். சற்றுக் கூடிய காலம் நின்றுபிடிப்பதற்கு வழிசமைக்குமேயன்றி போரை முற்றுமுழுதாக வெல்லவோ அல்லது பலம் ஓங்கவோ வழி கோலப்போவதில்லை. ஏனெனில் Assad படைகள் பலமுனைகளில் தாக்கப்படுகின்றன.
ஐ.எஸ் அமைப்பு பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளமையால், Assad ஐ அரங்கிலிருந்து முற்றிலுமாக நீக்குவதிலும் பார்க்க, ஐ.எஸ் பயங்கரவாதத்தைப் பலவீனப்படுத்தி ஒடுக்குவது முதன்மையானதாகக் கொண்டு, Assadஉடன் ஏதாவது பொது உடன்பாட்டுக்கு வருவதற்குரிய சாத்தியங்கள் இல்லாமலில்லை. அரசியலில் நிரந்தர எதிரிகளோ, நிரந்தர நண்பர்களோ கிடையாது என்பதற்கு அமைய இது நிகழலாம். அத்தோடு போர் எதிரி, அரசியல் எதிரியாக இருக்கத் தேவையில்லை என்ற நலன்சார் மூலோபாயமும் இதில் வெளிப்படலாம்.
பொங்குதமிழ் இணையம், செப்ரெம்பர்.2015