ஆர்மேனியர்கள் மீதான இனக்கருவறுப்பு (Genocide) – ஜேர்மன் தீர்மானத்தை முன்வைத்து – பகுதி 2
உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இனக்கருவறுப்பினை அரங்கேற்றியிருக்கின்றன.
துருக்கியக் குடியுரிமை வைத்திருக்கும் ஒன்றரை மில்லியன் மக்கள் ஜேர்மனியில் வசிக்கின்றார்கள். அதேவேளை கிட்டத்தட்ட அதேயளவு தொகையுள்ள துருக்கிய வேர்களைக் கொண்ட , ஜேர்மன் குடியுரிமை வைத்திருப்பவர்களும் ஜேர்மனியில் வாழ்கின்றனர். அர்மேனிய மக்கள் 1915 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டமை இனக்கருவறுப்பு (Genocide) என்ற ஜேர்மன் நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு எதிரான லொபி வேலைகளில் ஜேர்மனியிலுள்ள 500 வரையான துருக்கியப் பின்னணியுள்ள அமைப்புகள் இறங்கிய தகவல்களும் சமகாலத்தில் வெளியாகியுள்ளன.
வரலாற்று ரீதியான அர்மேனியா என்பது இன்றைய அர்மேனிய நிலப்பரப்பைவிடப் பெரியது. இன்றைய துருக்கியின் (வட -கிழக்குத் துருக்கியின்) பல பிரதேசங்கள், Aserbaidschan, ஈரான், ஜோர்ஜியாவின் பல பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது. இன்றைய துருக்கியின் வட – கிழக்கு ஆர்மேனியாவின் பாரம்பரிய பூமி. பிற சக்திகளின் தொடர்ச்சியான படையெடுப்புகளால் பாரம்பரியமான ஆர்மேனியப் பிரதேசங்கள் இழக்கப்பட்டன.
1991இல் சோவியத் உடைவிற்குப் பின்னர், தனிநாடாக உருவானது அர்மேனியா. ஏறக்குறைய 30 000 சதுர கி.மி பரப்பளவுள்ள சிறிய தேசம் தான் தற்போதைய அர்மேனியத் தனிநாடு. 90 வீதமான நிலப்பரப்பு மலைப் பிரதேசங்களைக் கொண்டுள்ளது. கிறிஸ்தவப் பின்னணியுடையவர்கள் பெரும்பான்மையினர். ஜோர்ஜியாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள அர்மேனியாவின் கிழக்கில் Aserbaidschan தெற்கில் ஈரானும் மேற்கில் துருக்கியும் அமைந்துள்ளன. உலகின் மூத்த கிறிஸ்தவ நாடாகவும் அர்மேனியா விளங்குகின்றது. அர்மேனிய டயஸ்போறா அமெரிக்கா, ரஸ்யா, பிரான்ஸ், சிரியா, லிபனான் எனப் பரந்துள்ளது. அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் அர்மேனிய மக்கள் மீதான இனக்கருவறுப்பினை அங்கீகரிக்கவில்லை.
இந்த நூற்றாண்டின் இனக்கருவறுப்பு என அடையாளப்படுத்தப்படுபவற்றில், Holocaust, Rwanda, அர்மேனியா ஆகியவை இடம்பெறுகின்றன. தென் சூடான் மக்கள் மீதான வட சூடானின் அட்டூழியங்கள், தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட இனக்கருவறுப்புகள், பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அட்டூழியங்கள் என்பன மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்ற அளவில் தான் உலக நாடுகள் மட்டத்தில் பேசுபொருளாக உள்ளன. தமது அரசியல் நலன் சார்ந்த காரணங்களுக்காக அவர்கள் இவற்றை இனக்கருவறுப்பு என அங்கீகரிக்க மறுக்கின்றன. இனக்கருவறுப்பிற்கு எதிரான ஐ.நா சாசனம் 1948இல் அமுலுக்கு வந்தது. எனவே 1915இல் நடந்தேறிய அர்மேனியர்களுக்க எதிரான நடவடிக்கைகளை அந்த வரையறைக்குள் நோக்கத் தேவையில்லை என்ற கருத்து துருக்கி மற்றும் வேறு சில நாடுகளால் முன்வைக்கப்படுவதுண்டு.
1880 காலப்பகுதியிலிருந்:து 1920 வரையிலும் சமூக அரசியல் உரிமைகளுக்கான தேசிய விடுதலைப் போராட்டமும் அர்மேனியர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஒட்டோமான் பேரரசின் கீழும், ரஸ்யாவின் பிடியிலுமிருந்த பிரதேசங்களை உள்ளடக்கிய அர்மேனிய தேசத்தை மீளுருவாக்கம் செய்வதற்கான இலக்குடன் ஆயுத ரீதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாம் பாரபட்சமாக நடாத்தப்பட்டதை எதிர்த்து சமூக மறுசீரமைப்புகளையும் அரசியல் உரிமைகளையும் கோரினர். நில அபகரிப்பு, கொலைகள், சொத்துகள் மீதான சூறையாடல் உள்ளிட்ட அட்டூழியங்கள், அத்து மீறல்களுக்கும் சமூக உரிமை மறுப்புக்கும் அர்மேனியர்கள் உட்படுத்தப்பட்டனர்.
(1877 – 1878) ரஸ்ய-துருக்கியப் போரில் ரஸ்யாவின் இராணுவ வெற்றியும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியினதும் (1873 – 1879) கூட்டுவிளைவு ஒட்டோமான் பேரரசினைப் பலமிழக்கச் செய்தது. இவையும் சுயநிர்ணய உரிமையையும், சமூகப்பாதுகாப்பையும் கோரிய அர்மேனிய மக்கள் மீதான வெறுப்புணர்வை அதிகரித்த காரணிகளாக முன்வைக்கப்படுகின்றன.
திட்டமிட்ட படுகொலைகள், நாடுகடத்தல்கள், பட்டிணிச்சாவு, இன ரீதியான வன்முறைகளைத் தூண்டி விட்டமை போன்ற வழிமுறைகளில் அர்மேனிய இனக்கருவறுப்பு முன்னெடுக்கப்பட்டது. ஒட்டோமான் பேரரசிற்குக் கீழ் இருந்த அர்மேனியப் பிரதேசங்கள், 1916 தறுவாயில் ரஸ்யப் படைகளிடம் வீழ்ந்தன.
அர்மேனியர்கள் திட்டமிட்ட முறையில் ஒட்டோமான் பேரரசின் இராணுவத்தினால் கூட்டுப்படுகொலைகளுக்கு உள்ளாகினர். சிரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். நாடு கடத்தப்படும் போது நீண்ட நெடும் பயண வழியில் பட்டிணியாலும் பலியாகிப் போனோரும் உண்டு. இன்றைய துருக்கியின் கிழக்குப் பிராந்தியமான அந்தோலியாவில் (Antolia) வாழ்ந்த அர்மேனிய மக்கள் பெருமெடுப்பில் படுகொலை செய்யப்பட்டனர். 25.மே.1915 நூறாயிரக் கணக்கான அர்மேனியர்கள் கிழக்கு Antoliaவிலிருந்து Mesopotaniaவிற்கு (இன்றைய சிரியா) நாடுகடத்தப்பட்டனர். நீண்ட பயணத்தினூடான நாடு கடத்தலின் போது ஏற்பட்ட பசி பட்டிணி, குளிர் காரணமாகப் பல்லாயிரக்கணக்கானோர் பலிகொள்ளப்பட்டனர்.
1ஆம் உலகப் போரில் துருக்கிய ஆள்புலங்களை இழந்து கொண்டிருந்த புறநிலையில், பல தேசிய இனங்கள் தனித்தனி தேசங்களாகப் பிரிந்து சென்றுவிடுமென்ற அச்சம்நிலவியது. எனவே மத, இன ரீதியான சிறுபான்மையினர் ஒட்டோமான் பேரரசின் பாதுகாப்பு, பொருளாதாரம், தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டனர். இவ்வாறான பிளவுகள் மேற்கினால் தூண்டப்பட்டது. பிரித்தானிய, பிரான்ஸ் படைகள் இக்காலபபகுதியில் ஒட்டோமான் பேரரசைக் கைப்பற்றும் நோக்குடன் போர் தொடுத்தன (19.பெப்.1915). இப்புறநிலையில் உள்ளக மற்றும் வெளியக எதிரிகளால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக அது உணரத் தலைப்பட்டது. ரஸ்யாவுடனான போரின் தோல்விக்கு அர்மேனியர்கள் காரணமென்று துருக்கிய கடும்போக்காளர்களின் கருத்தும் அர்மேனியர்கள் மீதான படுகொலைகளுக்கு வழிகோலியது.
அர்மேனியர்கள் மீதான படுகொலைகளை இனக்கருவறுப்பு என வரையறுப்பது தவறென்று வாதிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு பொதுவெளியில் கருத்துப் பதிவு செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை மூலம் தண்டிக்கும் வகையிலான சட்டமும் நடைமுறையில் உள்ளது. 2005ஆம் ஆண்டு Orhan Pamuk என்ற துருக்கிய எழுத்தாளர் அர்மேனியப் படுகொலை தொடர்பாக கருத்துரைத்ததன் விளைவாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் இலக்கியத்திற்கான நோபல் விருது பெற்றவர் என்ற புறநிலையில் சர்வதேச அவரது கைதுக்கு எதிரான சர்வதேச அழுத்தம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
அரசியல் நோக்கங்களுக்காக அர்மேனிய விவகாரம் தொடர்ச்சியாகத் தனக்கு எதிராகக் கையாளப்பட்டு வருகின்றது என்று துருக்கி கூறிவருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான இணைவுக்கான முட்டுக்கட்டையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் துருக்கி கருதுகின்றது.
துருக்கிக்கும் அர்மேனியாவுக்குமிடையிலான உறவு தற்போதும் சிக்கல்களால் ஆனதாகவும் உறைநிலையிலுமே உள்ளது. அர்மேனியாவுடனான தனது எல்லையைத் துருக்கி மூடியுள்ளது. Nagorno-Karabagh பிரதேசத்தின் மீதான உரிமை தொடர்பாக முரண்பாடு நீடித்து வருகிறது. Aserbajdsjanஇன் 15 வீதமான நிலப்பரப்பினை அர்மேனியா ஆக்கிரமித்துள்ளது. அர்மேனியாவிற்கு எல்லையைத் திறக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் ஆக்கிரமித்துள்ள Aserbajdsjan பிரதேசத்தை விட்டு வெளியேற மறுக்கின்றது.
1991இல் சோவியத் உடைவுடன் தனிநாடாகிய அர்மேனியா சுதந்திரத்திற்குப் பின்னர் – குறுகிய காலத்திலேயே Aserbajdsjanஉடனான போரையும் தீவிரப்படுத்திக் கொண்டது. Nagorno-Karabagh பிரதேசம் தொடர்பான முரண்பாடு அதுவாகும். சோவியத் உடைவிற்கு முன்னரே அர்மேனியாவிற்கும் Nagorno-KarabaghAserbajdsjanஇற்குமிடையில் பகைமை இருந்து வந்துள்ளதோடு வன்முறைகளும் இடம்பெற்று வந்துள்ளன. Nagorno-Karabagh கிறிஸ்தவ அர்மேனியர்களும் துருக்கிய முஸ்லீம்களும் வசித்துவந்த பிரதேசம். அங்கு வாழ்ந்த துருக்கிய முஸ்லீம்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து பலவந்தமாக வெளியேற்றியதோடு, படுகொலைகளையும் செய்தது அர்மேனியா.
இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளுதல் தொடர்பாகவும், எல்லைகளைத் திறந்துவிடுவது தொடர்பாகவும் 2009இல் இரு நாடுகளுக்கிடையிலும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனால் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இதில் Nagorno-Karabakh பிரதேசம் தொடர்பான விவகாரமும் இருநாட்டு உறவின் தொடர் விரோதப் போக்கிற்குரிய காரணிகளாகும். அடிப்படையில் Aserbajdsjanஇற்கும் அர்மேனியாவிற்குமிடையில் நூறாண்டுகளுக்கு மேலான பகைமுரண் நிலவி வருகின்றது. பல்வேறு காலகட்டங்களில் இரு தரப்பும் போரில் ஈடுபட்டுமிருக்கின்றன.
Aserbajdsjan துருக்கிய முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் அர்மேனியர்களினால் கொல்லப்பட்டுமுள்ளனர். இறுதியில் 1990இல் இருதரப்பிற்குமிடையில் போர் இடம்பெற்றது. அக்காலப்பகுதியிலிருந்து Aserbajdsjan நாட்டுக்குச் சொந்தமான Nagorno-Karabagh பிரதேசத்தினை அர்மேனியா ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது. இனக்கருவறுப்பிற்கு உட்பட்ட ஒரு மக்கள் கூட்டமாக தமது உரிமைக்கோரிக்கைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அர்மேனியர்கள் விதந்துரைக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம், இன்னொரு மக்களினத்தை படுகொலை செய்வதும், இன்னொரு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து வைத்திருப்பதும் கண்டிக்கப்பட வேண்டியது.
20ஆம் நூற்றாண்டின் முதலாவது இனக்கருவறுப்பு என அர்மேனியர்கள் மீதான ஒட்டோமான் பேரரசு காலத்து கொடூரங்கள் பற்றிய கருத்தினை கடந்த ஆண்டு (100வது ஆண்டு நிறைவில்) பாப்பரசர் பிரான்ஸ் தெரிவித்திருந்தமை வத்திகானுக்கும் துருக்கிக்குமிடையிலான இராஜதந்திர முறுகலுக்கு வழிகோலியிருந்தது. அர்மேனிய இனக்கருவறுப்பின் 100வது ஆண்டு நினைவினை துருக்கி – அர்மேனியாவிற்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளுக்கு அடிப்படையாகக் கொள்ளுமாறு கடந்த ஆண்டு ஐரோப்பியப் பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. பொருத்தமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாதததுமான தீர்மானமென துருக்கி அதனை நிராகரித்திருந்தது.
அர்மேனியர்களைப் பொறுத்தவரை இனக்கருவறுப்பு என நிறுவுவதற்குப் போதுமான ஆவணங்கள் உள்ளன. அதற்கான முழுமையான அங்கீகாரம் எட்டப்படாமையால் கூட்டுக்காயத்திற்கு உரிய நிவாரணியை அளிக்கப்படவில்லை என்பது அர்மேனியர்களின் வேணவா. வரலாற்று உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது, திரிபுபடுத்த அனுமதிக்கக் கூடாது என்பது ஒருபுறமும், நடந்ததை ஏற்று அதற்கு மன்னிப்புக் கோருதலும் பொறுப்புக் கூறலும் நீதி வழங்குதலும் அவசியம். இவ்வாறான கொடூரங்கள் மீண்டும் அந்த மக்களுக்கு நடக்காமலிருப்பதற்கான பாதுகாப்புப் பொறிமுறைக்கும் இதுவிவகாரத்தில் உலகளாவிய அங்கீகாரம் அவசியப்படுகின்றது.
பல நூறாண்டுகளாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட மக்களினம். தனித்துவமான மொழி, பண்பாடு, வரலாறு, அடையாளத்திற்கு உரித்துடைய மக்களாகத் தம்மை உணர்கின்றார்கள். தமது கோரிக்கையை உயிர்ப்புடன் காவித் திரிந்து பேண முடிந்தமைக்கு இந்தக் கூட்டுணர்வு மூலகாரணியாகவும் உந்துதலாகவும் உள்ளது. ஒவ்வொரு தலைமுறைகளிடமிருந்தும் அடுத்தடுத்த தலைமுறைக்கு வரலாறு கடத்தப்படுகிறது. அதாவது வரலாற்றை அறிந்த, வேரை அறிந்தவர்களாக அவர்களுடைய தலைமுறைகள் வளர்கின்றன என்ற செய்தியும் இதற்குள் உள்ளது என்பது கவனிக்கத் தகுந்தது.
பொங்குதமிழ் இணையம், காக்கைச் சிறகினிலே, தமிழர் தளம் – ஜூலை – ஓகஸ்ட் 2016