‘Panama Papers’: உலகளாவிய பொருளாதார மோசடிகள் அம்பலம்!
ஊழல், சொத்துக்குவிப்பு, கறுப்புபணம் போன்ற மோசடிகள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் அரசியல் தலைவர்கள் மத்தியிலேயே அதிகம் அறியப்பட்டிருந்த நிலையில், மேற்குலக அரசியல் தலைவர்கள் ஊழல் அற்றவர்கள் எனக் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் தகர்ந்துள்ளது
2016 ஏப்பல் ஆரம்பத்திலிருந்து ‘Panama Papers’ எனும் அடையாளப் பெயருடன் உலகளாவிய ரீதியில் வரி ஏய்ப்பு, நிதி மோசடிகள் தொடர்பான பாரிய இரகசிய ஆவணங்கள் கசியத் தொடங்கியிருந்தன. சர்வதேச ஊடகங்களில் நாளாந்தம் இந்த விவகாரம் சார்ந்த ஏராளமான தகவல்கள் வெளியிடப்பட்டன.
சமகால அரசியல் பொருளாதார விவகாரங்களில் பெரும் விவாதப் பொருளாக இது ஆகியிருந்தது. புலனாய்வு ஊடகவியலாளர்களினால் மோசடிகள் சார்ந்த 11,5 மில்லியன் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவின் Panama-பனாமாவைத் தளமாகக் கொண்டுள்ள Mossack Fonsec எனும் சட்ட நிறுவனத்திடமிருந்து (Law Firm) இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்புச் செய்வதற்கு இடமளிக்கும் வகையில் தொழில் முதலீடுகள் மற்றும் உற்பத்தி சார் நிறுவனங்களை உருவாக்குதிலும் நிர்வகிப்பதிலும் கைதேர்ந்தது எனப்படுகிறது.
(வட மற்றும் தென்னமரிக்காக் கண்டங்களுக்கு இடையில் ஒரு பாலம் போன்ற அமைவிடத்தினைக் கொண்டுள்ள பனாமா 1911 வரை கொலம்பியாவின் ஒரு பிராந்தியமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது)
Fonseca நிறுவனம் 500 பணியாளர்களைக் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 40 கிளை அலுவலகங்கள் உள்ளன. Mossack Fonseca, Ramon Fonseca சகோதரர்களால் 1977இல் உருவாக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் பட்டியலில் உலக நாடுகளைச் சேர்ந்த 12 முந்நாள், இந்நாள் தலைவர்கள் (நாடுகளின் தலைமைத்துவத்திலுள்ளவர்கள்), 100 அரசியல்வாதிகள், 200 வரையான பில்லியனர்கள் (billionaires) இடம்பெற்றிருக்கின்றதாக ஊடகத்தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒட்டுமொத்தத்தில் பணமுதளைகளின் பதுக்கலுக்குரிய மறைவிடமாக Panama இருந்துள்ளது.
2010 இல் ’Wikileaks – வீக்கிலீக்ஸ்’ இணையத்தளத்தின் ஊடாக இராஜதந்திர மட்டத்திலான உரையாடல்கள், இரகசிய அறிக்கைகள், ஆவணங்கள் பாரியளவில் அம்பலப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அரசியல் மட்டங்களில் பெரும் பரபரப்புகளும் சர்ச்சைகளும் தோற்றுவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் போர் உட்பட்ட பல்வேறு போர்களின் போது பரிமாறப்பட்ட இரகசியத் தகவல்கள், அமெரிக்காவினால் பல்வேறு மட்டங்களில் பரிமாறப்பட்ட தகவல், ஆவணங்களே அதிகமாக வீக்கிலீக்ஸ் மூலம் கசிந்தன.
இந்த Panama Papers கசிவுகள் வரலாற்றில் மிகப் பெரிய இரகசிய ஆவணக் கசிவு எனப்படுகிறது. விக்கிலீக்ஸ் கசிவுகளோடு ஒப்பிடுகையில் 1500 மடங்கு எனப்படுகிறது. கடந்த 40 ஆண்டு காலங்களுக்குரிய ஆவணங்கள் இதில் சிக்கியுள்ளன. நுணுக்கமான தொடர்பாடல் தொழில்நுட்பத்தால் (Hacking) ஊடுருவப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு கசியவிடப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் இத்தகைய அப்பலப்படுத்தல்கள் சாத்தியமாகியுள்ளன.
இந்தக் கசிவு மூலம் உலகின் பெரும் புள்ளிகள் பலரின் வரி ஏய்ப்பு, சொத்து மோசடி, பணப்பதுக்கல் உட்பட்ட பல்வேறு பொருளாதார மோசடிகள் அம்பலப்பட்டு வருகின்றன. நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், செல்வந்தர்கள், விளையாட்டுத்துறைப் பிரபலங்கள் என உலகின் சகல பாகங்களிலிருந்தும் பெரும்புள்ளிகளின் பொருளாதார மோசடிகள் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கின்றன.
தமது நாடுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஊக்குவித்து அதிகரிக்கும் நோக்குடன் சிறிய நாடுகள், குறைந்த வரி அறவீட்டு உத்தியைக் கடைப்பிடிப்பது ஒன்றும் புதிதல்ல. இவ்வாறான வாய்ப்பினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமது சொந்த நாட்டு வரி அறவீட்டுப் பொறிமுறைகளின் கண்களில் மண்ணைத் தூவி, இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் உட்பட்ட இன்னபிற பொருளாதார நடவடிக்கைகள் சார்ந்த இந்த ஆவணங்கள் மூலம் உண்மையான வருமானத்தை மறைத்தல், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் போன்ற பொருளாதார குற்றச்செயல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஒரு நாட்டின் தலைவராக இந்தக் கசிவின் நேரடி விளைவிற்கு விலை கொடுத்திருப்பவர் ஐஸ்லாண்ட் பிரதமர் Sigmundur David Gunnlaugsson. பிரித்தானியத் தீவுகளில் வரி செலுத்தப்படாத இரகசியச் சொத்துகள், தொழில் நிறுவனங்கள், பெருந்தொகை வங்கி இருப்பு இவர் பெயரிலும் துணைவியார் பெயரிலும் இருக்கின்றமை தெரியவந்துள்ளது. இதனால் கொந்தளித்த அந்நாட்டு மக்கள் இவரைப் பதவி விலகுமாறு கோரி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதையடுத்து Gunnlaugsson 07-04-16 பதவி விலகியுள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் (பதவிக்காலம்: 2010 – 2016) David Cameron இன் தந்தையார் வரிசெலுத்தாது பெருந்தொகை நிதியினை பனாமாவில் முதலீடு செய்திருந்தமை தெரியவந்துள்ளதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. ஐஸ்லாண்ட் மக்களைப் பின்தொடர்ந்து, பிரித்தானிய மக்களும் லண்டன் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான முனைப்பினைப் பிரதமர் கொண்டிருக்கின்ற சூழலில், வெளியேற்றத்திற்கு எதிரான தரப்பினர் இந்தக் கசிவினை பிரதமருக்கு எதிராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கும் நோக்கத்திற்கு ஆதரவாகவும் இயன்றவரை பயன்படுத்தும் முனைப்பினைக் கொண்டிருப்பார்கள் என்பது வெளிப்படை.
இந்தப் பட்டியலில் அர்ஜென்தினா ஜனாதிபதி Mauricio Macri சேர்ந்துள்ளார். அவரையும் பதவிவிலகக் கோரி மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். அத்தோடு உக்ரைன் ஜனாதிபதி Petro Porosjenko கன்னித்தீவுகளில்;. 2014 ஓகஸ்ட் காலப்பகுதியில் (உக்ரைனில் கடுமையான போர் இடம்பெற்ற போது) தொழில் முதலீடுகளில் ஈடுபட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதனை மறுத்து வந்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் பூதின் மீதும் பாரிய நிதிமோசடிக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரஸ்ய ஜனாதிபதியைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்க புலனாய்வுத்துறையினால் (ஊஐயு) விதைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இவையென பூதின் தரப்பில் இதற்கான உடனடி மறுப்பு வெளியிடப்படடது.
சீனாவின் முன்னாள் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரின் குடும்பங்கள் நிதிப்பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. Panama papers ஆவணத் தகவல்கள் சீன இணையத்தளங்களிலிருந்து நீக்குவதில் சீன அரசாங்கம் முனைப்புக்காட்டியது.
மேற்குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் தவிர, இந்த ஊழல் மோசடிகளில் பல்வேறு நாடுகளின் வங்கிகளுக்கு பெரும் பங்கிருக்கின்றமை ஆவணங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு (தனிநபர் மற்றும் நிறுவனங்கள்) உடந்தையாக வங்கிகள் இருந்து வந்துள்ளமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஒஸ்ரியாவின் பிரதான வங்கியொன்றின் தலைமையதிகாரி பதவி விலகியுள்ளார்.
நோர்வேயின் முதலாவது பெரிய வங்கியான DnB மற்றும் வேறு சில நிறுவனங்களுக்கும் Mossack Fonsecatpwவிற்கும் இடையிலான தொடர்புகளும் அம்பலப்பட்டுள்ளன. நோர்வேயிய வங்கி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை நோர்வே அரசியல் மட்டங்களில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. வரி ஏய்ப்பிற்கு ஏதுவாக வாடிக்கையாளர்களுக்கு (தனியார், நிறுவனங்கள்) உதவியுள்ளது என்பதே அதன் மீதான குற்றச்சாட்டு. இந்த வங்கியிடமிருந்து எழுத்து மூலமான விளக்கத்தினை அரசியல் கட்சிகளும் நிதித்துறை அமைச்சகமும் கோரியிருந்தன.
பிரித்தானிய நிதித்துறைத் திணைக்களம், Mossack Fonsecat சட்டத்துறை நிறுவனத்துடன் உள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்துமாறு ஏப்ரல் 15 வரை அந்நாட்டு வங்கிகளுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டது. எதிர்காலத்தில் வங்கிகள் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதொரு நிர்ப்பந்தத்திற்கும் பல்முனை அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளன. வரி ஏய்ப்பு உள்நோக்கத்துடன், நிறுவனங்களின் பதிவுகளையும் தலைமை அலுவலகங்களையும் வேறு நாடுகளுக்கு மாற்ற எத்தனிக்கின்ற அமெரிக்க நிறுவனங்கள் சார்ந்து இறுக்கமான சட்ட மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. அத்தோடு சர்வதேச வரி நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியமென அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா (பதவிக்காலம்: 2009 – 2017) Panama விவகாரத்தை அடுத்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவசர ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஜேர்மனியின் süddeutsche zeitung ஊடகத்திற்குக் 2015ஆம் ஆண்டுக்கு முன்னிருந்தே, உலகளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் வரி ஏய்ப்பு, வரி ஊழல் தொடர்பான பெருந்திரளான ஆவணங்கள் கிடைக்கத் தொடங்கியது. அதன் அடுத்தகட்டமே இந்த ஆவணக் கசிவுகள். சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் கூட்டமைப்பின் (International consortium of investigative journalists) ஊடாக உலகளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான ஊடக நிறுவனங்களுக்கு Panama-ஆவணங்களையும் தகவல்களையும் பரிமாறியுள்ளது இந்த ஜேர்மன் ஊடக நிறுவனம். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ளதாக ஆவணக் கசிவினை ஒருங்கிணைத்து வரும் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் கூட்டமைப்பு தெரிவித்தது.
உலகளவில் 214 000 வரையான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கணினியில் ஒவ்வொரு தனித்தனி Folderகளில் சேமிக்கப்பட்டிருந்துள்ளன. நிறுவனங்கள் பற்றிய ஆவணங்கள், அறிக்கைகள், பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள்; மற்றும் தொடர்புகள் போன்றவை உட்பட்ட ஏகப்பட்ட தகவல்கள் அவற்றில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் அறியமுடிகிறது.
பனாமாவில் தொடங்கப்படும் நிறுவனங்கள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத செயல்நோக்கம் கொண்டவையென்ற கருத்து நிலவுகின்றது. ஏதாவது ஒன்றையோ அல்லது பலவற்றையோ சட்ட வரையறைகளிலிருந்து மறைக்க வேண்டிய உள்நோக்கத்தோடு தொடங்கப்படும் நிறுவனங்களே அதிகமாக Panamaவை மையப்படுத்தி பதியப்படுகின்றன.
ஊழல், சொத்துக்குவிப்பு, கறுப்புபணம் போன்ற மோசடிகள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் அரசியல் தலைவர்கள் மத்தியிலேயே அதிகம் அறியப்பட்டிருந்த நிலையில், மேற்குலக அரசியல் தலைவர்கள் ஊழல் அற்றவர்கள் எனக் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் தகர்ந்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான அதன் மேற்குலக நட்பு சக்திகளுக்கு எதிரான நாடுகளின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மட்டும் மேற்குலக ஊடகங்களினால் அதிகமாகக் கவனக்குவிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றது என்ற விமர்சனம் சில ஊடகங்கள் மற்றும் கருத்தாளர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. குறிப்பாக மேற்கின் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார நலன்களுக்குச் சவாலாகவுள்ள ரஸ்யா, சீனா, சிரியா மற்றும் ரஸ்யச் சார்புடைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் மீதே ஊடகங்களின் அதீத கவனம் திரும்பியுள்ளமை அல்லது திருப்பப்பட்டுள்ளமை அந்த விமர்சனத்தை நியாயப்படுத்துகின்றது.
மேற்கின் சக்திமிக்க நாடுகளின் தலைவர்கள் இவ்வகைக் குற்றச்சாட்டுகளுக்குள் பெரியளவில் உள்ளிழுக்கப்படவில்லை. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இதில் விதிவிலக்கு. இந்தப் புறநிலையில் இந்தக்கசிவுகளுக்குப் பின்னால் மேற்குலக நலன் சார்ந்த அரசியல் இருப்பதாகவும் வாதிட இடமுண்டு. அடுத்தடுத்த அம்பலப்படுத்தல்களில் அமெரிக்காவும், இன்னபிற சக்திமிக்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் திருகுதாளங்களும் வெளிவர வாய்ப்புகள் இல்லாமலில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் மேலதிக தகவல்கள் வெளிப்படும் போதுதான் Panama papersஇன் பின்னணியிலுள்ள ‘அரசியலை’க் கணிப்பிட முடியும்.
இருந்த போதும் Panama Papers கசிவானது, மக்கள் மத்தியிலும் வங்கிகள், தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார, தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் சார்ந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது. வெளிப்படைத் தன்மையைக் கோருவதற்கும், அழுத்தங்களைப் பேணுவதற்கும் கருவியாகப் பயன்படக்கூடியது என்றளவில் அதன் பெறுமதியைத் தற்போதைய சூழலில் அளவிடமுடியும்.
காக்கைச் சிறகினிலே, பொங்குதமிழ் இணையம், ஏப்ரல் 2016