Brexit – இழுபறியும் எதிர்காலமும் பகுதி 1

2008 இல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2011 வாக்கிலிருந்து ஐரோப்பா மட்டத்திலும் நிதிநெருக்கடி தாக்கத்தினை ஏற்படுத்தத்தொடங்கியது. இதன் விளைவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரித்தானியாவின் முனைப்பிற்கு வலுவூட்டியது. 2013 இடம்பெற்ற தேர்தலில் கென்சர்வற்றிவ் கட்சி இதனை ஒரு வாக்குறுதியாகவும் முன்வைத்தது. ஒன்றியத்துடனான உறுப்புரிமை நிபந்தனைகள் தொடர்பாக மீள்பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுளு, 2017இற்கு முன்னர் Brexit பொதுவாக்கெடுப்பு தொடர்பாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பிரித்தானிய அரசியலின் சமகால நெருக்கடி
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் விலகல் (Brexit) தொடர்பான இழுபறிகள் பிரித்தானியாவின் சமகால அரசியலில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2016 இல் பொதுவாக்கெடுப்பின் மூலம் விலகலுக்கான மக்கள் ஆணை பெறப்பட்டது. விலகலுக்கு ஆதரவாக 52 வீதம் பேர் வாக்களித்தனர். இத்தீர்மானத்திற்கு அமைய 2019ஆம் ஆண்டு மார்ச் 29இல் அதிகாரபூர்வ விலகல் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனபோதும் விலகல் உடன்படிக்கைக்குரிய (Withdrawal agreement) பாராளுமன்றப் பெரும்பான்மை எட்டப்படாத புறநிலையில் இழுபறி தொடர்கின்றது.

விலகல் உடன்படிக்கை மீதான வாக்கெடுப்பு கீழவையில் மூன்று தடவைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டப் பேச்சுகளின் விளைவாக முதற்கட்டமாக 2019 ஒக்ரோபர் 31 வரையான காலநீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் காலக்கெடுவிற்குள் பிரித்தானியா விலகல் உடன்படிக்கைக்குரிய பெரும்பான்மையை கீழவையில் பெறவேண்டும். அப்படிப் பெறத்தவறின் உடன்படிக்கை இல்லாத (No Deal) வெளியேற்றம் நிகழ வாய்ப்புள்ளது. சாதக பாதக அளவுகள் வேறுபடினும், No Deal தவிர்ந்த மாற்றுத் தெரிவுகளும் நிர்ப்பந்தங்களும் பிரித்தானியாவிற்கு உள்ளன.

இறைமை பற்றிய அச்சம்
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் உறவு என்பது உறுப்புநாடாக இணைந்த (1973) காலகட்டங்களிலிருந்தே முரண்பாடுகளைக் கொண்டதாக இருந்துவந்துள்ளது. தற்போதுள்ள கொந்தளிப்பான சூழல் என்பது புதிதல்ல. 1955இல் இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடக்கவடிவமான ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு (European Economic Community) உருவாக்கப்பட்டபோதே அதனுடன் இணையாமல் வெளியில் நின்றது. 1950 காலப்பகுதியில் 10 வீதமான பிரித்தானியாவின் ஏற்றுமதி மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. அதுகூட 1951 இல் ‘நிலக்கரி மற்றும் இரும்புக் கூட்டமைப்பினை (European Coal and Steel Community – ECSC) உருவாக்கிய பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்;சம்பேர்க், நெதர்லாந்த், மேற்கு-ஜேர்மனி ஆகிய ஆறு நாடுகளுக்கு மட்டுமே சென்றது.

தமது இறைமை (Sovereignty) பற்றிய அச்சம் நாடுகளுக்கிடையிலான இத்தகையை கூட்டமைப்புகள், ஒன்றியங்களுக்கு வெளியில் பிரித்தானியாவை நிற்கவைத்தது. 1960இல் நோர்வே, சுவிஸ், ஐஸ்லாண்ட் போன்ற சிறிய ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை இணைத்து ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒன்றியத்தினை (European free trade association) உருவாக்கியது. காலப்போக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சியை நிதானமாக அவதானித்து 1973 வாக்கில் அதனுடன் பிரித்தானியா இணைந்தது.இந்த இணைவானது ஏனைய ஐரோப்பிய நாடுகளுடனான பிரித்தானியாவின் வணிக உறவு படிப்படியாக வளர வழிகோலியது. தற்போதைய சூழலில் பிரித்தானியாவின் 50 விழுக்காடு ஏற்றுமதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுகின்றது.

Brexit முனைப்பிற்கான மூலகாரணி
2008 இல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2011 வாக்கிலிருந்து ஐரோப்பா மட்டத்திலும் நிதிநெருக்கடி தாக்கத்தினை ஏற்படுத்தத்தொடங்கியது. இதன் விளைவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரித்தானியாவின் முனைப்பிற்கு வலுவூட்டியது. 2013 இடம்பெற்ற தேர்தலில் கென்சர்வற்றிவ் கட்சி இதனை ஒரு வாக்குறுதியாகவும் முன்வைத்தது. ஒன்றியத்துடனான உறுப்புரிமை நிபந்தனைகள் தொடர்பாக மீள்பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என்பதோடு, 2017இற்கு முன்னர் Brexit பொதுவாக்கெடுப்பு தொடர்பாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பெரும்பான்மையை நிரூபிப்பதில் தொடர்தோல்வி
விலகல் உடன்படிக்கை மீதான (3வது) இறுதி வாக்கெடுப்பில் 344 கீழவை உறுப்பினர்கள் எதிர்த்தும், 286 உறுப்பினர்கள் ஆதரித்தும் வாக்களித்துள்ளனர். விலகல் உடன்படிக்கைக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை, தொடர்ந்து பலதடவைகள் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தமை என்பன பிரதமர் தெரேசா மே பெரும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்திருக்கிறது. இந்த விலகல் விவகாரத்தை கையாள முடியாமை, கட்சிமட்டத்திலும் அரசாங்க மட்டத்திலும் அவர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பதவி விலகலுக்குரிய அழுத்தங்களும் எழுந்தன. கென்சர்வற்றிவ் கட்சி மட்டத்தில் பலரும் தெரசா மே பதவிவிலகவேண்டுமென வலியுறுத்தினர். அமைச்சர்களில் சிலரும் அவருடைய பதவிவிலகலைக் கோரியிருந்தனர்.

Brexit விவகாரத்திற்கு ஒரு தீர்வு எட்டப்படும்வரையில் அவர் பதவிவிலகவும் வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. இது அவருடைய தலைமைத்துவத்திற்கான சவாலாக அவரால் பார்க்கப்பட்டது. இந்த விவகாரத்தை ஒரு கௌவுரவப் பிரச்சினையாகக் கருதிய அவர், இதற்கு ஒரு தீர்வினை எட்டாது பதவிவிலகுவது தன் தலைமைத்துவத்திற்கு இழுக்காக அமையுமென்று அஞ்சினார்.

(இருந்தபோதும் இழுபறியும் உள்ளக மற்றும் புற அழுத்தங்களும் அவரைக் கட்சித்தலைமைப் பொறுப்பிலிருந்தும் தலைமை அமைச்சர் பதவியிலிருந்தும் 2019 ஜீன் ஆரம்பத்தில் விலக வைத்தது. புதிய கட்சித்தலைவராகவும் தலைமை அமைச்சராகவும் Boris Johnson பொறுப்பேற்றுள்ளார். புதிய பிரதமர் பொறுப்பேற்றுள்ள நிலையிலும் இழுபறி தொடர்கின்றது.)

ஜனநாயக ஸ்திரமின்மை – மக்கள் நம்பிக்கையிழப்பு
இந்தச் சிக்கல் உரிய முறையில் கையாளப்படாது திணறிக்கொண்டிக்கின்ற நிலையானது, பிரித்தானிய அரசியலில் ஒருவகையான ஜனநாயக ஸ்திரமின்மையைத் தோற்றுவித்துள்ளது. ஆளும்கட்சி மீது மக்கள் வெகுவாக நம்பிக்கையிழக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான தொழிற்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி விலகல் உடன்படிக்கைக்கு சாதகமான நிலையைத் தோற்றுவிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் தலைமை அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

‘Hansard Society’ என்பது பிரித்தானியாவின் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் ஆய்வு நிறுவனம். இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, Brexit பேச்சுவார்த்தைகளை பிரித்தானிய அரசாங்கம் கையாளும் விதத்தில் 73 வீதமான வாக்களாளர்கள் நம்பிக்கையிழந்திருக்கின்றனர். காத்திரமான மாற்றத்தினைக் கொண்டுவருவதற்குரிய துணிச்சல்மிகு அரசியல் தலைமைத்தின் தேவையினை 54 வீதத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தினைப் பொறுத்தமட்டில் விலகல் உடன்படிக்கை தொடர்பான மீள்பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை. ஏலவே இணக்கம் காணப்பட்ட விலகல் உடன்படிக்கைக்குரிய பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதற்குரிய காலநீடிப்பினை நிபந்தனைகளுடன் வழங்கியிருக்கின்றது என்பது மட்டும்தான் இப்போதைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் விட்டுக்கொடுப்பு. ஒன்றியத்தின் 27 உறுப்புநாடுகள் மத்தியில் Brexit தொடர்பான மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்ற போதும், அதன் பலமிக்க நாடுகளான ஜேர்மன், பிரான்ஸ் ஆகியன விலகல் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவேண்டுமென்பதில் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

Brexit இருள்தடத்தில் தேக்கம்
Brexit நிகழ்வென்பது ஒரு இருள்தடத்தில் தேக்கமடைந்துள்ளது. இந்த தேக்கத்திலிருந்து வெளியெடுத்து மீள்வதென்பது சவாலானது. மீள்வதோடு சவால்கள் முடியப்போவதில்லை. அதிகாரபூர்வ விலகலுக்குப் பின்னான நடைமுறைகள் சார்ந்த பெரும் சவால்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் அதன் தலைமைக்கும் காத்திருக்கின்றன. பொருளாதார, வணிக ரீதியிலான சவால்களே அதிகமெனினும். அத்தகைய சவால்கள் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய அளவிலான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி ஒன்றியம் (Custom Union EU) அல்லது அதன் பொருளாதார கூட்டமைப்பின் (European Economic Area) அங்கத்துவ நாடாக பிரித்தானிய எதிர்காலத்தில் இருப்பதென்பது விலகலுக்குப் பின் பிரித்தானியாவிற்கு உள்ள தெரிவுகள். இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உவப்பான தெரிவுகளளுமாகும். அதாவது நோர்வே, ஐஸ்லாண்ட், லீக்கின்ஸ்டைன் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக இல்லாதபோதும் அதன் பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ளன. அதையொத்த ஒரு தெரிவினை பிரித்தானியா மேற்கொள்ள வாய்ப்புண்டு.

பிரித்தானியாவிற்கு உள்ள தெரிவுகள்
1) உடன்படிக்கை இல்லாத (No Deal) விலகல்,
2) விலகல் உடன்படிக்கைக்கு ஆதரவான பெரும்பான்மையப் பெறுதல்
3) விலகலுக்குப் பின் ‘வரி ஒன்றியம்-ஊரு’ அல்லது அதன் ‘பொருளாதார கூட்டமைப்பின்-EEA’ அங்கமாக இருப்பது
4) விலகல் உடன்படிக்கையை ரத்துச்செய்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக நீடிப்பது.

இவற்றில் நான்காவது தெரிவை மேற்கொள்வதென்பது சுலபமானதல்ல. அது மக்கள் ஆணை தொடர்பானது. எனவே அதனை ரத்துச் செவ்வதென்பது மீண்டும் மக்களிடம் பொதுவாக்கெடுப்பினைக் கோரிநிற்கின்றது. அல்லது இது விடயத்தில் மீண்டுமொரு மக்கள் ஆணையைப் பெறுவதென்பது புதிய பாராளுமன்றத் தேர்தல் மூலமான மக்கள் ஆணை மூலமும் சாத்தியப்படும்.

தற்போதைய புறநிலையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமிருப்பதாகக் கருதப்படுகின்றது. 2016இல் விலகலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்தவர்களின் வீகிதாசாரத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால் வாக்களிப்பில் பங்கேற்காமல் வீடுகளில் இருந்தவர்களில் பெரும்பான்மையினர் இன்றைய சூழலில் வெளியேற்றத்திற்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்தாக அறியப்படுகின்றது. மார்ச் இறுதியில் ஒரு மில்லியன் வரையான Brexit எதிர்ப்பாளர்கள் லண்டன் வீதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். மீண்டுமொரு பொதுவாக்கெடுப்புக்கான அரசியல் புறச்சூழல் உருவாகினால்கடந்தமுறை வாக்களிக்காதவர்கள் இம்முறை வாக்களிக்க முன்வரும் பட்சத்தில் விலகலுக்கு எதிரான பெரும்பான்மை எட்டப்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க பாராளுமன்றத்திற்கான புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், கடந்த தேர்தல்போல தொழிற்கட்சியோ, கென்சர்வேற்றிவ் கட்சியோ தனிப்பெரும்பான்மையைப் பெறவாய்ப்பில்லை.

விலகல் உடன்படிக்கையும் சவால்களும்
2016இன் பொதுவாக்கெடுப்பினைத் தொடர்ந்து சுமூகமான விலகலுக்குரிய ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கான ஒரு இடைக்கால அல்லது இடைமாறு கால உடன்படிக்கை அது எனலாம். இந்த இடைக்காலத்திற்குள் படிப்படியாக நிரந்த பொருளாதார மற்றும் வணிக ஏற்பாடுகளில் பிரித்தானியா சுதந்திரமான மாற்றங்களை ஏற்படுத்துதல் என்பதே இதன் திட்ட வரைபு. இந்த விலகல் உடன்படிக்கை மீதான வாக்கெடுப்புகள் தான் பாராளுமன்றத்தில் தொடர் தோல்விகளைத் தழுவியதோடு விலகலை காலநீடிப்புக்குள்ளும் தள்ளியுள்ளது.

இந்த இடியப்பச்சிக்கல் நிலைக்குரிய மூலகாரணிகள் எவையெனச் சற்று நோக்குவது பொருத்தமாகும். முதன்மையான சிக்கலென்பது பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான எதிர்கால (விலகலுக்குப் பின்) எல்லை பற்றியது. தற்போதைய எல்லை, அயர்லாந்த் தீவினை ஊடறுத்துத் செல்கின்றது. ஒரு புறம் ஐரோப்பிய உறுப்பு நாடான அயர்லாந்த், மறுபுறம் உள்ளக சுயாட்சி அதிகார அலகுடன் பிரித்தானியாவின் ஒரு பகுதியாகவுள்ள வட-அயர்லாந்த். இதன் எல்லையூடாகவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தரைவழிப் போக்குவரத்து இடம்பெறுகிறது. பயணிகள், வாகனங்கள், பொருட்கள் ஏற்றிச்செல்லும் பார உந்துகள் இந்த எல்லைகளிலேயே சோதனையிடப்படுகின்றன. 500 கி.மி நீளமான எல்லை இது. எல்லை கடப்பு எவ்வாறு கையாளப்படப்போகின்றது என்பதே Brexit விவகாரத்தில் இழுபறிக்குரிய மூலகாரணிகளில் ஒன்று.

*தெரேசா மே பதவி விலகலும் Boris Johnson பதவியேற்பும் தொடர்பான தகவல் நூலுருவாக்கத்தின்போது இணைக்கப்பட்டுள்ளது.

தினக்குரல், காக்கைச் சிறகினிலே – மே 2019

Leave A Reply