ஆர்மேனியர்கள் மீதான இனக்கருவறுப்பு (Genocide) – ஜேர்மன் தீர்மானத்தை முன்வைத்து – பகுதி 1
இந்த நூற்றாண்டின் இனக்கருவறுப்பு என அடையாளப்படுத்தப்படுபவற்றில், Holocaust, Rwanda அர்மேனியா ஆகியவை இடம்பெறுகின்றன. தென் சூடான் மக்கள் மீதான வட சூடானின் அட்டூழியங்கள், தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட இனக்கருவறுப்புகள், பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அட்டூழியங்கள் என்பன மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்ற அளவில் தான் உலக நாடுகள் மட்டத்தில் பேசுபொருளாக உள்ளன. தமது அரசியல் நலன் சார்ந்த காரணங்களுக்காக அவர்கள் இவற்றை இனக்கருவறுப்பு என அங்கீகரிக்க மறுக்கின்றன.
ஒட்டோமான் பேரரசினால் (தற்போதைய துருக்கி) ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அர்மேனிய மக்கள் 1915 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டமை இனக்கருவறுப்பு (Genocide) என ஜேர்மன் நாடாளுமன்றத்தில் 2016 ஜூன்; 2ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அர்மேனியர்கள் மீது முதலாம் உலகப் போர் காலப்பகுதியில் நடந்தேறிய இந்த படுகொலைகள் 100 ஆண்டுகளைக் கடந்தும் மிகவும் நுண்ணுர்வு சார்ந்த (Sensitive) விவகாரமாக இருந்து வருகின்றது. புலம்பெயர் அர்மேனிய மக்களும் அர்மேனியா தேசத்தில் வாழும் மக்களும் இனக்கருவறுப்பின் 100வது ஆண்டு நிறைவினைக் 2015இல் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
உலகின் பல்வேறு நாடுகள் அர்மேனியர்களுக்கு நிகழ்ந்ததை இனக்கருவறுப்பு என அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன. அதேவேளை துருக்கி உட்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகள் ’இனக்கருவறுப்பு’ என அங்கீகரிக்காத சூழலில் ஜேர்மனியின் தீர்மானம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திமிக்க நாடு என்ற வகையில் ஜேர்மனியின் இந்தத் தீர்மானத்திற்கு அரசியல், குறியீட்டு முக்கியத்துவம் உள்ளது.
‘Genocide’ என்பதற்குத் தமிழில் இனஅழிப்பு என்ற சொல்லையே நான் உட்பட பலரும் பயன்படுத்தி வருகின்ற நிலையில். ஊடகரும் அரங்கியலாளருமான தாசிசியஸ் அவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் சுவிஸில் இடம் பெற்ற நாடகவிழா ஒன்றுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியினை இன்று படித்தபோது ‘இனக்கருவறுப்பு’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. இப்பதம் இனஅழிப்பு என்பதனைவிட அர்த்தச் செறிவுள்ளதாகப் படுகிறது. ;என கலாநிதி சர்வேந்திரா அண்மையில் தனது முகநூல் குறிப்பொன்றில் பகிர்ந்திருந்தார். அவர் குறிப்பிட்டது போன்று ‘இனக்கருவறுப்பு’ என்பதற்கு அர்த்தச்செறிவும் பொருத்தமும் அதிகம் இருப்பதால் அந்தப் பதத்தினையே நானும் இக்கட்டுரையில் பயன்படுத்துகின்றேன்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான முரண்பட்ட தரவுகள் பல்வேறு தரப்புகளால் முன்வைக்கப்படுகின்ற போதும், அர்மேனியர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டமையை துருக்கி உட்பட்ட பெரும்பான்மை நாடுகளும், வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அர்மேனியத் தரப்பு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை மில்லியன் என்கிறது. 300 000 முதல் 600 000 வரை என்கிறது துருக்கி. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட அர்மேனியர்கள் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆவணத் தரவுகளை முன்வைத்துள்ளது அனைத்துலக இனக்கருவறுப்பு ஆய்வாளர் மையம் (International Association Of Genecide Scholors – IAGS).
உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இனக்கருவறுப்பினை அரங்கேற்றியிருக்கின்றன.
முதலாம் உலகப்போரின் போது நடந்தேறிய இனப்படுகொலைகளின் பாதிப்தே இனக்கருவறுப்பிற்கு எதிரான அனைத்துலக சட்ட உருவாக்கத்திற்குரிய தூண்டுதலாக இருந்துள்ளது. போலந் நாட்டைச் சேர்ந்த சட்டவாளர் Raphael Lemkin என்பவரால் இனக்கருவறுப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற சட்ட அலோசனை 1943 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். அர்மேனியர்கள் மீதான இனக்கருவறுப்பு மற்றும் யூதர்கள் மீதான இனக்கருவறுப்பு (Holocaust) அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டியே Genocide எனும் சொல்லை அறிமுகப்படுத்தி அதற்கான வரவிலக்கணத்தை அவர் முன்வைத்தார்.
ஆனபோதும் 2 ஆம் உலகப் போரிற்கு பிற்பட்ட காலத்திலேயே ஐக்கிய நாடுகள் அவையில் இனக்கருவறுப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிட்லரின் நாசிப் படைகள், யூதர்களைத் தேடித் தேடி அழித்த கொடுமைகளின் பின்னரே அதற்கெதிரான எதிரான சாசனம் சட்ட அமுலாக்கம் கண்டது.
அர்மேனியர்களுக்கு எதிரான அட்டூழியங்களும் படுகொலைகளும் நடந்தேறியுள்ளது என்றளவில் ஒப்புக்கொண்டுள்ள துருக்கி, அதனை இனக்கருவறுப்பு என்று அங்கீகரிப்பதற்கு மறுக்கிறது. இக்காலப்பகுதியில் அர்மேனியர்களால் துருக்கிய முஸ்லீம்களும் பெருமெண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டனர் என்ற வாதத்தை முன்வைத்து இரண்டையும் சமன்செய்யப் பார்க்கின்றது. ரஸ்யப் படைகளுடன் இணைந்து துருக்கிய முஸ்லீங்கள் மீதான படுகொலைகளை அர்மேனியர்கள் நிகழ்த்தினர் என்பது துருக்கியின் சமப்படுத்தல் நியாயமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஏப்ரல் 24. 1915இல் அர்மேனிய சமூகத்தைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட முக்கிய அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கைசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட சம்பவம் தான் அர்மேனியர்கள் மீதான இனக்கருவறுப்பின் தொடக்கமாகக் கொள்ளப்படுகின்றது. ஏப்ரல் 24 இனையே இனக்கருவறுப்பு நினைவு நாளாக அர்மேனியர்கள் கடைப்பிடிக்கின்றனர். 1915 முதல் 1920 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில் ஒன்றறை மில்லியன் மக்கள் அழிக்கப்பட்டனர் என்பது அர்மேனியர்களினதும் வரலாற்றாசிரியர்களினதும் கணிப்பு.
அர்மேனியர்களின் புலப்பெயர்வுக்கு மூலகாரணி அவர்கள் மீதான இனக்கருவறுப்பு. இன்றைய சூழலில் அர்மேனியாவில் வாழ்கின்ற மொத்த மக்கட்தொகையை விட அர்மேனிய டயஸ்போறா பன்மடங்கு பெரியது. 3 மில்லியன் வரையான மக்கள் அர்மேனிய தேசத்தில் வாழ்கின்றனர். ஆனால் அமெரிக்கா, ரஸ்யா, பிரான்ஸ், சிரியா, லெபனான், பல ஐரோப்பிய மற்றும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்து கிளைபரப்பியுள்ள அர்மேனியப் பின்னணியுடைய டயஸ்போறாவின் தொகை ஏறக்குறைய 11 மில்லியன்கள் எனப்படுகிறது.
பிரான்ஸ், கனடா, அர்ஜென்டீனா, பெல்ஜியம், இத்தாலி, ரஸ்யா, சுவீடன், உட்பட்ட 30 வரையான நாடுகள் அர்மேனிய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனக்கருவறுப்பு என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அத்தோடு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும் ஒடுக்குமுறைத் தடுப்புக்கும் சிறுபான்மையினப் பாதுகாப்பிற்குமான ஐ.நாவின் துணை ஆணையமும் (European Parliament and The UN sub-commission on prevention of discrimination and protection of minorities) அதனை இனக்கருவறுப்பு என அதிகாரபூர்வதாக அங்கீகரித்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல், நோர்வே போன்றன அவ்வாறு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இனக்கருவறுப்பிற்கு எதிரான ஐ.நா சாசனம் கொண்டுவரப்பட்ட 1948இற்கு முற்பட்ட காலப்பகுதியில் அர்மேனியப் படுகொலைகள் நடந்தேறின. எனவே ஐ.நா சாசனத்தின் அடிப்படையில் இனக்கருவறுப்பு என அதனை அங்கீகரிக்க முடியாது என்ற தட்டிக்கழிப்பு வாதமும் சில நாடுகளால் முன்வைக்கப்படுகின்றமை வேடிக்கையானதாகும்.
ஜேர்மன் நாட்டின் தீர்மானத்தை ஒரு வரலாற்றுத் தவறு எனக் கண்டித்துள்ள துருக்கி, தனது உடனடி எதிர்ப்பினைக் காட்டும் வகையில் ஜேர்மனிக்கான துருக்கியத் தூதுவiர் திருப்பி அழைத்திருந்தது. இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார, வணிக மற்றும் இராணுவ உறவுகளைக் கடுமையாகப் பாதிக்குமெனத் துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan எச்சரித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு மற்றும் ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்படும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி துருக்கியை நகர்த்துகின்றதான குற்றச்சாட்டுகள் நுசனழபயn மீது உண்டு. அந்த அடிப்படையில் துருக்கிய ஜனாதிபதியுடன் ஜேர்மன் அரசதலைவர் அஞ்சலா மர்க்கல் நல்லுறவைக் கொண்டிருக்கின்றமை ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் விமர்சனங்கள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில் ஜேர்மன் நாட்டின் துருக்கிக்கு எதிரான தீர்மானம் அந்த விமர்சனங்களைத் தணியவைப்பதற்கு உதவக்கூடியன.
இது ஒரு புறமிருக்க சிரியப் போரின் விளைவாக அங்கிருந்து அகதிகளாக மக்கள் ஐரோப்பாவிற்குள் பெருமெடுப்பில் நுளைவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடனான உடன்படிக்கை ஒன்றினைத் துருக்கியுடன் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஜேர்மன் ஈடுபட்டிருக்கின்ற தறுவாயில் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெரும் இலாபமுண்டு. இதற்குக் கைமாறாக துருக்கிக்கு நிதியுதவி மற்றும் துருக்கியப் பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விசாவின்றி பயணங்களை மேற்கொள்வதற்கான கதவுகளைத் திறப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்திருப்பதாக ஒரு தகவல் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு துருக்கி தசாப்தங்களுக்கு மேலாக முனைந்து வருகின்றது. ஆனால் முஸ்லீம் நாடான துருக்கியை இணைப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் தயக்கம் காட்டிவருகின்றமை வெளிப்படை. ஐரோப்பிய ஒன்றிய இணைவுக்கான பல்வேறு நிபந்தனைகள் மற்றும் தரத்தினை துருக்கி நிறைவேற்றவில்லை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு. ஜேர்மனியின் தற்போதைய தீர்மானம் துருக்கியின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இணைவை மேலும் சிக்கலுக்கும் இழுபறிக்கும் உள்ளாக்கியுள்ளது.
அர்மேனிய மக்கள் மீதான இனக்கருவறுப்புப் படுகொலைகள் நடந்தேறி நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் உலகத்தால் இதனைச் சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியவில்லை. உலகளவில் இது விவகாரம் தொடர்பான விவாதாங்கள் அரசாங்க மட்டங்களிலும், வரலாற்று ஆய்வுத்துறை, ஊடகங்கள், இராஜதந்திர மட்டங்களில் சமகாலத்திலும் இடம்பெற்று வருகின்றது. இனக்கருவறுப்புப் போருக்கு முகம்கொடுத்த தமிழ் மக்களுக்கும் இதுவொரு காத்திரமான செய்தியைச் சொல்லி நிற்கின்றது. தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவாத அட்டூழியங்களுக்கான நீதி கோரல், அரசியல் தீர்வு நோக்கிய அழுத்தங்களுக்கான அணுமுறை சார்ந்து அர்மேனிய மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத் தகுந்த பாடங்கள் உள்ளன.
Holocaust என்பது யூதர்கள் மீதான ஜேர்மனிய நாசிகளின் இனக்கருவறுப்பின் அடையாளச் சொல்லாக இருக்கின்றது. துருக்கி அர்மேனியர்கள் மீது நடாத்திய படுகொலைகள் அர்மேனிய Holocaust என்றும் பலரால் விளிக்கப்படுகின்றது.
முதலாம் உலகப் போரில் (1914 – 1918) ஒரு அணியில் பிரான்ஸ், ரஸ்யா, பிரித்தானியாவும் (1917இலிருந்து அமெரிக்கா இணைவு) தரப்புகளாகவிருந்தன. ஏதிரணியில் ஜேர்மன், ஓஸ்ரியா, ஹங்கேரி ஆகியவற்றின் அணியில் ஒட்டோமான் பேரரசும் கூட்டிணைந்து போரிட்டன. அதாவது அர்மேனியர்கள் ரஸ்யா ஆதரவு நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர். ஜேர்மன் ஒட்டோமான் பேரரசிற்கு ஆதரவாக நின்றது. எனவே அர்மேனியர்கள் மீதான படுகொலைகளில் ஜேர்மன் நாட்டிற்கும் பங்கு உள்ளது. இந்தத் தீர்மானம் மூலம் அந்த வடுவைக் கழுவிக் கொள்வதாகக்கூட கருத முடியும்.
பொங்குதமிழ் இணையம், காக்கைச் சிறகினிலே, தமிழர் தளம் – ஜூலை 2016