குர்தீஸ் விடுதலை அமைப்பிற்கு எதிரான துருக்கியின் போர்: அமெரிக்காவின் இரட்டை முகம்!
அமெரிக்காவும் PKK மீதான துருக்கியின் தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இங்குதான் மீண்டும் அமெரிக்காவின் இரட்டை முகம் வெளிச்சத்திற்கு வருகின்றது. Pமுமு அமைப்பிற்கு ஆயுத உதவி வழங்கி IS படைகளுடன் மோதவிட்டமை ஒருபுறமிருக்க, மறுபுறம் தற்போது PKKயினைப் பலவீனப்படுத்துவதற்கும் துருக்கிக்கு முண்டுகொடுக்கின்றது அமெரிக்கா.
PKK அமைப்பினை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்துவதன் ஊடாக அரசியல் உரிய அரசியல் தீர்வினை எட்டவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுபடுதல் அல்லது தான் நினைத்த அரைகுறைத் தீர்வினைத் திணித்தல் அல்லது சமாதான முன்னெடுப்புகளை இழுத்தடித்தல் அகியவற்றின் வெளிப்பாடே பி.கே.கே மீதான துருக்கியின் போர்த்தீவிரத்தின் உள்நோக்கம்.
கடந்த 2013ஆம் ஆண்டு குர்தீஸ் விடுதலை அமைப்புடன் (PKK) போர்நிறுத்த உடன்படிக்கையினைச் செய்துகொண்ட துருக்கிய அரசாங்கம் மீண்டும் அந்த அமைப்பின் மீது போரினைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
2015 ஜூலை மாத இறுதியில் துருக்கிய எல்லைப்புற நகரமான Suruc இல், தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டதில் 32 பேர் பலியானதைத் தொடர்ந்து IS – ‘இஸ்லாமிய அரசு’ பயங்கரவாத அமைப்பின் மீது முழு அளவிலான போரைத் தொடுப்பதாகத் துருக்கிய அரசாங்கம் பிரகடனப்படுத்தி தாக்குதல்களைத் தொடுத்து வந்திருக்கிறது. IS பயங்கரவாத அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் நிலை கொண்டுள்ளது. ஈராக்கிலும் சிரியாவிலும் கணிசமான பிரதேசங்களைக் கைப்பற்றிய அந்த அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா தலைமையில் தாக்குதல்கள் 2015 ஜூன் மாதத்திலிருந்து தொடங்கப்பட்டன.
இங்கு பிரச்சினை என்னவெனில், ISஇற்கு எதிரான போர் என்று பகிரங்கப் பிரகடனம் செய்துள்ள துருக்கி அரசு, துருக்கியிலும் வட ஈராக்கிலும் (குர்திஸ்தான்) பி.கே.கே நிலைகளையும், சிரியாவில் ISஇற்கு எதிராகப் போராடிவரும் குர்தீஸ் பின்னணியைக் கொண்டுள்ள YPG போராளிகளின் நிலைகளையும் இலக்குவைத்து கடுமையான தாக்குதல்களை நடாத்தியது. மேலும் சொல்லப்போனால் IS மீதான போர் என்ற போர்வையில் துருக்கியின் இலக்கு முழுவதும் குர்தீஸ் போராட்ட அமைப்புகளை, அதிலும் குறிப்பாக பி.கே.கே அமைப்பினைப் பலவீனப்படுத்துவதே முதன்மை இலக்காகக் காணப்பட்டது.
குர்தீஸ் அமைப்புகள் மீது போரைத் திணிப்பதன் மூலம் IS பயங்கரவாதத்தினைத் துருக்கி பாதுகாக்கின்றது என பி.கே.கே அமைப்பின் தலைவர் Cemil Bayik தெரிவித்துள்ளார். பி.கே.கே மீது துருக்கி சரமாரியான தாக்குதல்களை நடாத்துவதால் IS மீதான பி.கே.கே யின் தாக்குதல்வலு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
பி.கே.கே போராளிகளே ஈராக்கிலுள்ள IS இற்கு எதிராக கடுமையாகப் போராடிவருகின்றனர். அதேபோல சிரியாவிலும் YGP அமைப்பு அதற்கெதிரான கடுமையான சவாலாக விளங்கிவருகின்றது. IS இற்கு எதிரான தாக்குதல்களை நடாத்திவரும் பி.கே.கேஅமைப்பிற்கு அமெரிக்கா ஆயுததளவாட உதவிகளை வழங்கிவந்தது.
துருக்கியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குர்தீஸ் பின்னணியுடைய கட்சி (Peoples’ Democratic Party – HDP)இ 13 வீதமான வாக்குகளைப் பெற்று 80 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தது. இது துருக்கியின் அரசதலைவர் Recep Tayyip Erdogan இற்கு பெரும் தலையிடியைக் கொடுத்த நிகழ்வாகும். ஏனெனில் நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசியலமைப்பு; மாற்றம் மூலம் கொண்டுவரும் அவருடைய கனவு தவிடுபொடியாகியுள்ளது. அத்தோடு திட்டமிட்ட முறையில் அரசியல், ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டுவந்த துருக்கியிலள்ள குர்தீஸ் மக்கள் அரசியல் அரங்கில் பலம் பெறத்தொடங்கியுள்ளமை துருக்கிய பெரும்பான்மை அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகின்றது.
Erdogan தலைமை வகிக்கும் Justice and Development Party (AKP) கட்சி 41 வீத வாக்குகளைப் பெற்று பெரிய கட்சியாக இருப்பினும் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை அதற்கு இல்லாமலிருந்தது. அதனால்; தேர்தல் நடைபெற்று முடிவடைந்து 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் புதிய அரசாங்கத்தை; அமைக்க முடிந்திருக்கவில்லை. தேர்தலில் 25 வீத வாக்குகளைப் பெற்ற “Republican People’s Party – CHP” கட்சியுடன் கூட்டணி அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
வட ஈராக்கின் (குர்தீஸ்தான்) குர்தீஸ் பிரதேச சுயாட்சி நிர்வாகமும் துருக்கியும் பரஸ்பரம் பொருளாதார நல்லுறவைக் கொண்டிருக்கின்றன. அங்கு கணிசமான முதலீடுகளையம் துருக்கி செய்துள்ளது. இந்த உறவு குர்தீஸ் சுயாட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் சாதகமான வாய்ப்புகளை வழங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. பொருளாதார உறவினைக் கருவியாகக் கையாண்டு குர்திஸ்தானின் அரசியலில் தனது செல்வாக்கினைச் செலுத்த துருக்கி முனைப்புக் காட்டியதாகக் கூறப்பட்டது. அரசியல் செல்வாக்கினூடாக குர்திஸ்தான் மக்கள் மத்தியில் பி.கே.கே போராட்ட அமைப்பிற்கு இருக்கும் ஆதரவினை இல்லாமற் செய்வதற்குரிய பிரித்தாளும் சூழ்ச்சியைத் துருக்கி கைக்கொள்கின்றது. குர்திஸ்தான் மக்களிடமிருந்து பி.கே.கே அமைப்பினை அந்நியப்படுத்தி, பிளவுபடுத்துவதும் அதனூடாக அந்த அமைப்பினை நலிவடையச் செய்வதும் அதன் உள்நோக்கம்.
துருக்கி – சிரிய எல்லைப் பிரதேசமான Kobani பிராந்தியத்தினை IS வசமிருந்து பி.கே.கே மற்றும் YPG மீட்டெடுத்தது. அத்தோடு ஈராக்கிலும் IS படைகளுக்கு எதிரான கடுமையான போரில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை பி.கே.கே மீட்டெடுத்தது. இதனால் இராணுவ ரீதியில் பி.கே.கே அமைப்பின் பலம் அதிகரித்துள்ளது. இதன் இராணுவ ரீதியிலான வெற்றிகளின் விளைவாக அந்த அமைப்புடன் இணையும் போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றதான தகவல்கள் வெளிவந்தன. அதேவேளை துருக்கியில் அரசியல் அரங்கிலும் பி.கே.கே ஆதரவுடைய குர்திஸ் கட்சியான HDP வளர்ச்சி கண்டுள்ளது. எனவே இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக மீள்எழுச்சி பெற்றுள்ள குர்தீஸ் மக்களுக்கான உச்சபட்சமான அரசியல் தீர்வினை (தனி நாடு உட்பட) வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் தமக்கு எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடுமென்ற அச்சம் துருக்கியைத் பீடித்துள்ளது.
பி.கே.கே அமைப்பினை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்துவதன் ஊடாக உரிய அரசியல் தீர்வினை எட்டவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுபடுதல் அல்லது தான் நினைத்த அரைகுறைத் தீர்வினைத் திணித்தல் அல்லது தீர்வு முயற்சியினை இழுத்தடித்தல் ஆகியவற்றின் வெளிப்பாடே Pமுமு மீதான துருக்கியின் தீவிரப்படுத்தப்பட்ட போரின் உள்நோக்கம். இராணுவ ரீதியில் பி.கே.கேயினைப் பலவீனப்படுத்தும் அதேவேளை அரசியல் அங்கீகாரத்தில் ஒருபடி மேலே சென்றுள்ள HDP கட்சியினை ஒடுக்கும் முனைப்பினையும் துருக்கி கொண்டுள்ளது.
அமெரிக்காவும் துருக்கியின் பி.கே.கே மீதான தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இங்குதான் மீண்டும் அமெரிக்காவின் இரட்டை முகம் வெளிச்சத்திற்கு வருகின்றது. பி.கே.கே அமைப்பிற்கு ஆயுத உதவி வழங்கி IS படைகளுடன் மோதவிட்டமை ஒருபுறமிருக்க, மறுபுறம் தற்போது பி.கே.கே யினைப் பலவீனப்படுத்துவதற்கும் துருக்கிக்கு முண்டுகொடுக்கின்றது அமெரிக்கா.
IS-பயங்கரவாதிகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றது துருக்கி என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. துருக்கிய எல்லைப்பகுதி ஊடாக சிரியாவிற்குள் பயங்கரவாதிகள் பிரவேசிப்பதற்குரிய அனுமதியை துருக்கி வழங்கியிருந்தது அல்லது கண்டும் காணாமலிருந்ததென்ற வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அண்மையில் சிரியாவின் எல்லையிலிருந்து சில பத்து கிலோமீற்றர் தொலைவிலுள்ள துருக்கிய நகரமான Suruc இல் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து துருக்கிய வான்படைத்தளம் ஒன்றினை அமெரிக்காவின் பயன்பாட்டுக்கு துருக்கி அனுமதித்திருக்கின்றது.
குவைத், ஜோர்டான் மற்றும் பாரசீக வளைகுடா (Persian Gulf) ஆகியவற்றின் வான்படைத்தளங்கள் ISஇற்கு எதிரான போருக்கு அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டன. ஆனால் துருக்கியின் வான்படைத்தளம் இராணுவ மற்றும் அமைவிடம் சார்ந்து முலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வகையில் அதனைப் பயன்படுத்தும் அனுமதியை அமெரிக்கா தொடர்ச்சியாகக் கோரிவந்துள்ளது. துருக்கி மறுத்து வந்துள்ளது. ISஉடன் துருக்கி உறவைப் பேணிவருகின்றதென்ற குற்றச்சாட்டு வலுப்பெற்ற புறசிலையில், அதனுடன் தமக்கு ஒட்டுறவு இல்லை என்பதை அமெரிக்கா உட்பட்ட மேற்குலகிற்கு நிரூபிக்கும் நோக்குடன் தனது வான்படைத் தளத்தினை அமெரிக்கப் பயன்பாட்டுக்கு அனுமதித்தது துருக்கி.
சிரியாவில் IS பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முன்னணி அமைப்பான, குர்திஸ் போராட்ட அமைப்பான YPG மீதும் துருக்கி போர் தொடுத்துள்ளது. சிரியாவிலுள்ள குர்தீஸ் பின்னணியைக் கொண்ட பெரிய எதிர்க்கட்சியான Democratic Union Party – PYD கட்சியின் இராணுவப்பிரிவேPeople’s Protection Units –YPG. துருக்கியிலுள்ள PKK அமைப்புடன் நெருக்கமுடையது இந்த அமைப்பு.
PKK மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியுள்ளது என்ற புறநிலையில் நோக்கும் போது மத்திய கிழக்கில், குறிப்பாக சிரியா மற்றும் ஈராக்கில் ஐளு பயங்கரவாதம் வளர்வதை அமெரிக்கா உள்ளார விரும்புகின்றது என்ற முடிவுக்கும் வரவேண்டியுள்ளது. மத்திய கிழக்கினைப் பதட்டம் நிறைந்த சூழலுக்குள் பேணுவது, அமெக்க நலன்களுக்கு சாதகமானதாக அமெரிக்கா கருதுவதாகவே விளங்க வேணடியுள்ளது. IS, PKK, துருக்கி ஆகிய தரப்புகள் சார்ந்த அமெரிக்க நிலைப்பாடுகளும் இரட்டை வேடமும் அதையே உணர்த்துகின்றது.
IS மட்டுமே தமது தாக்குதல் இலக்கு எனவும் PKK நிலைகள் மீது தாம் தாக்குதல் நடாத்தவில்லை என துருக்கி திரும்பத்திரும்பக் கூறிவந்தது. சமகாலத்தில் எழுந்துள்ள துருக்கியின் தேசிய பாதுகாப்பு மீதான உடனடி அச்சுறுத்தலைத் தணிப்பதே தமது தாக்குதலின் நோக்கமெனவும் துருக்கி கூறியிருந்தது.
ISஇன் மிக மோசமான தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குர்தீஸ் மக்கள். YGP போராளிகள் போன்று சீருடை அணிந்து குர்தீஸ் கிராமங்களுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகளைப் படுகொலை செய்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன.
துருக்கியத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைப்பதில் இழுபறிகள் நிலவி வருகின்ற புறநிலையிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கான அரசியலமைப்பு மாற்றக் கனவு தகர்ந்து போயுள்ள Recep Tayyip Erdoganனுக்கு தான் எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடியினைத் திசைதிருப்பும் நோக்கமிருப்பதையும் தற்போதைய போரிற்கான புறக்காரணிகளில் ஒன்றாக வியாக்கியானம் செய்ய முடியும்.
அமெரிக்கா தலைமையில் ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ் இற்கு எதிரான போரில், பிரித்தானியா, கனடா, ஜோர்டான், மற்றும் மொறக்கோ ஆகியன கூட்டுச்சேர்ந்துள்ள. PKK மற்றும் YGPயின் வகிபாகமும் கணிசமானது.
எனவே ஐ.எஸ் உடனான தனது உறவினை மறுத்துரைக்கும் நோக்கத்தினை ஒரு புறமும், Pமுமு உட்பட்ட குர்தீஸ் போராட்ட அமைப்புகளை இராணுவ, அரசியல் ரீதியில் பலவீனப்படுத்துவதுமே துருக்கியின் தற்போதைய போர் தீவிரப்படுத்தலின் மூலம் எனலாம்.
பொங்குதமிழ், ஓகஸ்ட் 2015