பொருள்முதல்வாத உலகும் சூழலியல் பேரழிவும்

பொருள்முதல்வாத உலகமயமாக்கலும் அது ஊதிப்பெருப்பித்துள்ள நுகர்வுக் கலாச்சாரமும் இயற்கையின் சமநிலையில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலை, இயற்கையை மாசுபடுத்தும் காபநீரொக்சைட், கழிவுகளின் வெளியேற்ற அதிகரிப்பு ‘Global Climate Change’ எனப்படும் பூமியின் வெப்ப அதிகரிப்பிற்கான மூலம். இயற்கையின் சமநிலையைக் குலைப்பதால் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் என்பது ஒரு இருப்பியல் அச்சுறுத்தல். போர்களுக்கு அடுத்தபடியாக அல்லது நிகராக சமகாலத்தில் உலகளாவிய விவாதப்பொருளாகியுள்ள பாரிய பிரச்சனையாக புவிவெப்பமயமாதல் விளங்குகின்றது.

வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, சூறாவளி என அண்மைக் காலங்களில் உலகின் பல்வேறு பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்துள்ளன. பருவகாலங்களில் கண்கூடான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பூமியின் வெப்ப அதிகரிப்பு என்பது கையாள்வதற்கு மிகவும் சிக்கலான விவகாரமாக உள்ளது. ஏனெனில் உலகளாவிய ரீதியாக இதனை கையாள்வதற்கு முழு உலகத்தையும் இணைக்க வேண்டியுள்ளது. நாடுகள் பொருளாதார நலன்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் புறநிலையில் நடைமுறைச் சாத்தியம் குன்றிய விடையமாகவே அது உள்ளது. நாடுகளின் உறுதிமொழிகளும் வெறும் உதட்டுச் சேவையாகப் பார்க்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் உலகளாவிய ரீதியில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கட்சி அரசியல் தளங்களில் பசுமைக்கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சூழலியல் சார்ந்த தன்னார்வ அமைப்புகளும் வளர்ந்து வருகின்றன. சூழலியல் ஆபத்துகளின் வெளிப்பாடு இது. அந்தந்த நாடுகள் மட்டத்திலும் உலகளாவிய ரீதியிலும் தீர்மானமெடுக்கும் தரப்புகள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

இது சார்ந்து நோர்வே நிலைமையைப் பற்றிச் சுருக்கமாகச் சிலவிடயங்களைக் குறிப்பிட்டுச் செல்வது பொருத்தமானது. 1989இல் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த நோர்வேயின் பசுமைக்கட்சி (The Green Party) வெறுமனே பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. கடந்த ஆண்டு (2019) மாநகர மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய அளவில் 190 000 வாக்குகளைப் பெற்று நாடுதழுவிய ரீதியில் 5வது கட்சியாக வளர்ச்சி கண்டுள்ளது. தலைநகர் ஒஸ்லோவில் 3வது பெரிய கட்சியாக வலுவடைந்துள்ளது. இந்தப்போக்கு, அதாவது பசுமைக்கட்சியின் வளர்;ச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் ஓரளவு பொருத்தப்பாடுடையது.

ஒஸ்லோவில், அதனை அண்டிய புறப்பகுதிகளில் வாகனத் தரிப்பிடங்களைக் கணிசமாகக் குறைப்பது,
நகர மையப்பகுதிகளில் முற்றாக வாகனத்தரிப்பிடங்ளை இல்லாமற் செய்வது போன்ற திட்டங்கள் மூலம் தனியார் வாகனப் பாவனைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்துச் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தவைக்கும் திட்டங்களும் நோர்வே போன்ற நாடுகளில் இறுதிக்காலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளன. மின்சாரக் கார்களின் (Electric cars) பாவனையை அதிகரிப்பதற்குரிய முறையில் அரசாங்கம் திட்டங்களைவ வகுத்துள்ளது.

மக்கள் மத்தியில் பெற்றோல், டீசல் வாகனங்களைக் குறைப்பதற்கான முனைப்பில் அவற்றுக்கான கட்டணங்கள், வரி நடைமுறைகளை இறுக்கி வருகின்றது. மின்சார வாகனங்களுக்கான கட்டண மற்றும் வரி நடைமுறைகளைத் தளர்த்தியும் வருகின்றது. உதாரணமாக மின்சார வாகனங்கள் நகரத்திற்குள் பிரவேசிக்கும் போது செலுத்துகின்ற நகர உள்நுழைவுக்கட்டணம் பெற்றோல் வாகனங்களை விட அரைவாசிக்கும் குறைவானதே. அதேபோல் மின்சார வாகனங்களுக்கு வருடாந்த சாலைவரியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மின்சார வாகனப் பாவனையை அதிகரிப்பதற்குரிய தற்காலிக நடைமுறைகள் மட்டுமே. அந்த இலக்கு எட்டப்பட்ட பின்னர் படிப்படியாக இவ்வகைக் கட்டண மற்றும் வரி அறவீடுகள் அதிகரிக்கப்படும் என்பது யதார்த்தம்.

சூழலியல் அமைப்புகள், அரசியல் மட்டத்தில் செயற்படும் பசுமைக் கட்சிகளைத் தாண்டி உலகளவில் கவனம் பெற்றிருப்பவர் சுவீடனைச் சேர்ந்த இளம்பெண் கிரேத்தா துன்பர்க். அவர் உலகளாவிய சூழலியல் விழிப்புணர்வின் சமகாலக் கலகமாகவும், எதிர்ப்பின் குரலாகவும் குறியீடாகவும் ஆகியிருக்கின்றார். இப்பொழுது அவருக்கு வயது 17. பூமியின் வெப்ப அதிகரிப்பிற்கு எதிரான காத்திரமான செயற்பாடுகளைக் கோரிப்; போராட்டத்தை அவர் முன்னெடுக்கத் தொடங்கியது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது 15வது வயதில். 2018 ஓகஸ்ட் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த்து சுவீடன் பாராளுமன்றத்தின் முன்பாக அடையாள எதிர்ப்புப் போராட்டத்தினைத் தொடர்ச்சியாகச் சில வாரங்கள் முன்னெடுத்தார்.
சுவீடன் பாராளுமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக கவனயீர்ப்பினைத் தொடங்கியிருந்தார். விளைவுத்தாக்கம் மிக்க செயல்களை அரசியல்வாதிகள் முன்னெடுக்கவேண்டும் என்பது கோரிக்கை. தனியொருவராக அவர் தொடங்கிய சூழலியல் கவனயீர்ப்பு ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாகவே பல்வேறு நாடுகளில் மாணவர்கள், இளம் தலைமுறையினர் பல லட்சம் பேர் தெருவில் இறங்கிப் போராடும் நிலையைத் தோற்றுவித்தது.

‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமைகள்’ ((#FridaysForFuture) எனும் அடையாள வார்த்தையுடன் உலகம் முழுவதும் மாணவர்கள் இவருடன் கைகோர்த்தனர். அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான் என உலகளாவிய ரீதியில் 20 000 வரையான மாணவர்கள் பங்கேற்றனர்.
அவரது எட்டு வயதில் காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் குறித்த கேள்விகளும் கரிசனைகளும் அவருக்குள் தோன்றியிருக்கிறது.

முழுப் பூமிப்பந்தினுடையதும் விலைமதிப்பற்ற வளிமண்டலத்தின் மென் அடுக்குகளின் முகத்தையும் நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு விசித்திரமாக இருந்தது
என சூழலியல் ஆர்வம் தனக்குள் உண்டான சூழல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இவர் சூழலியல் விழிப்புத் தொடர்பான செயல்களில் இறங்குவதற்கு முன்னர் இவரது பெற்றோர் அதில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஆயினும் தானும் பெற்றோரும் மாமிச உணவு உண்பதைக் கைவிடச் செய்துள்ளதோடு, பணி காரணமாக அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் தாயார் விமானங்களைத் தவிர்க்கின்ற நிலைக்கு அவரைச் சமரசம் செய்துள்ளார்.

இங்கே செய்தி என்னவெனில் மாற்றத்தைத் தன்னிலிருந்தும் தனக்கு உரித்துடைய நெருக்கமானவர்களிலிருந்தும் தொடங்குதல் என்பதாகும். மாற்றத்தைக் கோருகின்ற போது அந்த மாற்றத்தை இயன்றவரை எம்மிடமிருந்து தொடங்குதலே நேர்மையுடையது. அதுவே மாற்றத்தைக் கோருவதற்கான அருககையையும் தகமையையும் கொடுக்கிறது.
இக்காலப்பகுதியில் ஐரோப்பாவில் நடைபெறற மாணவர்களின் சூழலியல் கவனயீர்ப்புப் பேரணிகளில் கிரேத்தா பங்கேற்றார். இந்த ஐரோப்பியப் பயணங்களை அவர் தொடருந்துப் பயணங்களாக அமைத்துககொண்டார். அது சூழலியல் பாதுகாப்பினை மட்டுப்படுத்தும் வகையிலான முன்னுதாரணமாக நடந்துகொள்ளும் அணுகுமுறை சார்ந்த செயற்பாடு.

Extinction Rebellion சூழலியல் அமைப்பு லண்டனில் நடாத்திய பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். ‘பல காலமாக, அரசியல்வாதிகளும் அதிகாரத்தில் உள்ளவர்களும் புவிவெப்பமயமாதல் தொடர்பான முன்தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தவில்லை. அரசியல்வாதிகள் இனிமேல் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்வோம்’ என்று தனது உரையில் பதிவுசெய்தார்.

2019 செப்ரெம்பர் இறுதியில் ஐ.நா சூழலியல் மாநாட்டில் உரையாற்றியமை பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
எவ்வளவு தைரியம் உங்களுக்கு,” நான் இங்கு இருக்க வேண்டியவள் இல்லை. சமுத்திரத்தின் மறுபக்கத்தில் பாடசாலையில் இருக்க வேண்டியவள். உங்களுடைய வெற்றுவார்த்தைகளால் என் கனவுகளை நீங்கள் களவாடிவிட்டீர்ககள். நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம்
எனும் அவருடைய வார்த்தைகளும் கேள்விகளும் உலக ஊடகங்களின் பேசுபொருளாகியது.

அவருடைய உரைகள் எளிமையும் உள்ளடக்கச்செறிவும் சொல்வளம் மிக்க வெளிப்பாட்டு வடிவமாகவும் உள்ளது. சூழலியல் மாநாட்டில் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கிற்கும் ‘சிலி’ நாட்டிற்கும் அவர் விமானத்தில் பயணிக்கவில்லை. மாறாக பாய்மரக் கப்பலில் இரண்டு வாரங்கள் பயணம் செய்து அங்கு சென்றடைந்தார். இதுகூட ஒரு குறியீட்டு அர்த்தம் நிறைந்தது.
இந்த இளம் வயதில் இத்தகு நீண்ட கடல்வழிப் பயணத்தை மேற்கொள்வதற்கு ஒரு மனவலிமை, ஓர்மம் வேண்டுமென்பதை மறுக்கமுடியாது. இதனை ஒரு பொப்பூலிஸ்ட் (பெருந்திரள்வாத – கவர்ச்சிவாத) செயலாக நோக்க முடியாது. சூழல் பாதுகாப்பு மீதான நேர்மையான அக்கறையினதும் தான் சொல்லவரும் செய்திக்கும் கோருகின்ற விளைவுத்தாக்கச் செயல்களுக்கும் பற்றிக்கொண்ட கொள்கைக்கும் தான் விசுவாகமாக இருத்தல் என்பது சார்ந்தது இது. கப்பல் பயணத்தின் முடிவில் கிரேத்தாவை வரவேற்க பெருந்திரளானவர்கள்; பதாகைகளுடன் மன்ஹற்றனில் திரண்டிருந்தனர். மாணவர்கள், பாடல் பாடியபடி சிறுவர்கள், உலகநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊடகர்கள் எனப் பெருந்திரள் அங்கு கூடியது.
இவர் ஐரோப்பாவில் பல கவனயீர்ப்புப் போராட்டங்களில், கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார். இத்தாலி, பிரான்ஸ் நாடாளுமன்றங்களில், சுவிசில் உலக பொருளாதார மையத்தில், பர்லின், லண்டன் போன்ற நகரங்களிலும் உரைநிகழ்த்தியிருக்கின்றார். ரைம்ஸ் இதழின் ‘2019 இன் மனிதர்’ விருது வழங்கப்பட்டது. 2019இன் நோபல் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமயமாதல் குறித்த நிகழ்கால மற்றும் எதிர்கால ஆபத்துகளை அவர் எடுத்துச் சொல்கிறார். விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள், அறிக்கைகள், எச்சரிக்கைகள், அறிவியலாளர்களை மேற்கோள் காட்டியே சூழலியல் அழிகளைப் பற்றிப் பேசுகிறார்.ஒரு கொள்கை சார்ந்த உறுதிப்பாடு – அது சார்ந்த கருத்துகளை முன்வைப்பதற்குரிய தளங்களை இலகுவில் ஏற்படுத்திக் கொடுக்கின்றது எனும் வகையில் அவரது உரைகள் பார்க்கப்படுகின்றன. இந்தப் போக்கு விரைவில் மாற்றப்படாவிடில் மோசமான சூழலியல் நெருக்கடிகள் ஏற்படும் என்பதைத் திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கூறுகின்றார்.

கிரேத்தா துன்பர்க் தொடங்கிய கவனயீர்ப்பு உலகளாவிய வெகுசன இயக்கமாக மாறியிருக்கிறது. 2019ம் ஆண்டு வரலாற்றில் என்றுமில்லாத அளவில் சூழலியல் சார்ந்த வெகுசனப் போராட்டங்கள் உலகம் தழுவி நடைபெற்றுள்ளன. மாணவர்களும், இளையவர்களும் பெருமெடுப்பில் தெருவில் இறங்கி புவிவெப்பமயமாதலுக்கு எதிரான திட்டவட்டமான நடவடிக்கைகளைக் கோரிவருகின்றனர்.

கிரேத்தாவின் ஐ.நா உரை உட்பட்ட சூழலியல் போரிக்கைகளுக்கு வலதுசாரி அரசியல் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்துள்ளன. இவர்கள் புவிவெப்பமயமாதல் குறைப்புப் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள்.
ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கியுள்ள மகிழ்ச்சிகரமான ஒரு இளம் பெண்ணாகத் தெரிகின்றார்’ என அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் குறிப்பிட்டமை, கிரேத்தாவைக் கேலி செய்வதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.

அதனைத் தொடர்ந்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூதினும் தன்பங்கிற்கு ‘நல்ல பிள்ளை, ஆனால் தவறான தகவல்களோடு பேசுகின்றார்’ என்று குறிப்பிட்டார். முதலீட்டாளர்களுக்கு வகுப்பெடுப்பதற்கு முன்னர், பொருளாதாரம் கற்றுவிட்டு வருமாறு கிரோத்தாவை நோக்கி அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்ரீவன் மனுச்சின் கூறினார். சுவிசில் உலக பொருளாதார மையத்தில் உரையாற்றிய போது, புதைபடிவ எரிமத்தை (Fossil fuel) கைவிட வேண்டுமென உலகத் தலைவர்களிடம் அவர் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்தே அமெரிக்க நிதி அமையச்சரிடமிருந்த அத்தகைய காட்டமான கருத்து வெளிவந்தது. உலகின் பொருளாதார வல்லரசுகள் சூழலியல் ஆபத்துகளைப் பறந்தள்ளி, அவைசார்ந்து தொலைநோக்கு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் தாண்டி, எற்பத்திக்கும் பொருளாதாரத்திற்கும் முன்னுரிமை கொடுக்கின்றனர் என்பதே இக்கூற்றின் வெளிப்படையான அர்த்தம்.

சூரிய செயற்பாடுகளில் இயல்பாக நிகழும் மாற்றங்களும் காலநிலை மாற்றங்களுக்குக் காரணம் என்ற போதும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் வளிம வெளியேற்றம், எண்ணெய், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களின் அதீத பாவனையும் இன்று மனிதகுலம் அனுபவிக்கும் சூழலியல் அழிவுகளுக்கு முக்கிய காரணமாகியுள்ளன. மனிதத்தவறுகளின் விளைவுவே பூமிவெப்பமயமாதலின் முதன்மைக் காரணி என ஆய்வுகள் சுட்டுகின்றன. குறிப்பாக காபநீர் ஒக்சைட் வெளியேற்றத்தின் அதிகரிப்பு, நிலக்கரி உற்பத்தி, பெற்றோல், டீசல் உற்பத்தி மற்றும் அவற்றின் பாவனைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள் புவிவெப்பமயமாதலின் அதிகரிப்பதற்குரிய காரணமாகும். அத்தோடு காடழிப்பு, குறிப்பாக மழைக்காடுகள் அதிகளவில் அழிக்கப்படுகின்றமையும் பாரிய எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

காபநீரொக்சைட் இயற்கையாக வளிமண்டலத்தில் காணப்படுகின்றதும் தகனத்தின் போது வெளியேறும் வாயு. எண்ணெய் அகழ்வு, நிலக்கரி உற்பத்தி, பெருந்தொழிற்சாலைகளின் உற்பத்தி போன்ற செயற்பாடுகளால் அதிக தகனம் நிகழ்கிறது. பூமி தன்னுள் உள்ளிளுத்துத் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு காபநீரொக்சைட் வெளியேற்றப்படுகின்றது.

ஐ.நா வருடாந்த சூழலியல் மாநாடு 2019 டிசம்பர் 12 – 13 ஆகிய நாட்களில் ஸ்பெயின் தலைநகர் மத்றீட் இல் இடம்பெற்றது. சிலி நாட்டில் நடைபெறவிருந்த மாநாடு அங்கு நிலவிய அரசியல் பதட்டநிலை காரணமாக ஸ்பெயின் நாட்டிற்கு மாற்றப்பட்டது.

சூழலியல் பாதுகாப்பு சார்ந்து அறிவியல் கோருகின்ற நடவடிக்கைகளுக்கும் மாநாடுகளின் பேச்சுவார்த்தைகளில் கண்டடையப்படுகின்ற இணக்கப்பாடுகளுக்குமிடையில் பெரும் இடைவெளி நிலவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சார்ந்து அசமந்தப்போக்குடன் நடப்பதாக Climate Action Tracker ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித நாகரிகத்திற்கும் சுற்றுச்சூழல் இயங்கு சக்திக்கும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தினைத் தடுக்க, 2030இற்குள் 45 வீதத்தால் உலகளாவிய காபநீரொக்சைட் வெளியேற்றத்தினைக் குறைக்க வேண்டுமென அறிவியல் திட்டவட்டமாகக் கூறுகின்றது. இது 2014 வெளிவந்த ஐ.நா சூழலியல் அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மத்றீட் மாநாடு திட்டவட்டமான இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் முடிவுற்றுள்ளது. வளிமவெளியேற்றக் குறைப்பு உட்பட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான நாடுகள் ரீதியான உடன்பாடுகள் எட்டப்படவில்லை. பிரேசில், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் ஒத்துழையாமை இதற்குக் காரணமாகும்.

(தொடரும்)

தினக்குரல், 15. மார்ச் 2020

Leave A Reply