ஃபிடல் கஸ்ட்ரோவும் கியூபாவும் – பகுதி 1

புரட்சியில் வெல்லப்பட்ட கியூபா பனிப்போர் காலத்தின் ஆடுகளமாக விளங்கியது. அதனை மிக நுண்ணிய இராஜதந்திரத் திறன் மூலம் கியூபாவின் பாதுகாப்பிற்கு ஏதுவாக கஸ்ட்ரோ கையாண்டார் என்பது வரலாற்றுப் புரிதலுக்கும் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் மிகப் பயனுடையதாகும்.

ஃபிடல் கஸ்ட்ரோ (1926–2016) என்ற பெயர் புரட்சியின் குறியீடாகப் போற்றப்படும் அதேவேளை சர்வாதிகாரியென்று ஒருசாராரால் தூற்றவும்படுகின்றது. அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் உலகின் வலதுசாரிகளும் அவரை அதிகமதிகம் தூற்றுபவர்களாக உள்ளனர்.ஆசியா, ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பான்மை நாடுகளும் மக்களும் அவரை ஒரு புரட்சியாளரகவும் விடுதலைப் போராட்டத்தின் குறியீடாகவுமே பார்க்கின்றனர். இடதுசாரிய சிந்தனையாளர்கள் உட்பட்ட இன்னுமொரு சாரார் அவரது வரலாற்று வகிபாகத்தை அதற்குரிய முக்கியத்துவத்துடனும் விமர்சனங்களுடனும் அணுகுகின்றனர்.

கொலனி ஆதிக்கத்திலிருந்தும், ஆட்சியாளர்களினாலும் அரச இயந்திரங்களினாலும், இன-மதவாத சக்திகளினாலும் மோசமான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் குழுமங்களுக்கும், அவற்றின் தலைமைகளுக்கும் அவர் முன்மாதிரியாக, உந்துதலாக, நம்பிக்கையாகத் திகழ்ந்து வந்திருக்கிறார் என்பது மிகையல்ல. குறிப்பாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் வாழ்வுரிமையை வலியுறுத்துவதற்குரிய கோட்பாட்டு ரீதியான உந்துதலாக ஃபிடல் கஸ்ரோவும் சேகுவேராவும் திகழ்கின்றனர்.

1500களிலிருந்து 400 ஆண்டுகால ஸ்பெயின் கொலனி ஆட்சியின் கீழிருந்த கியூபா 1898இல் அதிலிருந்து விடுதலை பெற்றது. ஸ்பெயின் வெளியேற்றத்திற்கு கியூபாவிற்கு அமெரிக்கா உதவியது. ஆனபோதும் ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கியூபாவைத் தனது ஆக்கிரமிப்பிற்குள் 1902வரை அமெரிக்கா வைத்துக் கொண்டது. 1902இல் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதும், தொடர்ந்து வந்த காலங்களிலும் அமெரிக்க மேலாதிக்கம் கியூபாவை விட்டு விலகவில்லை. 1898 முதல் 1933 வரையான 35 ஆண்டுகளில் அமெரிக்கா, 3 தடவைகள் கியூபா மீது ஆக்கிரமிப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கியூபாவின் பொருளாதாரத்திலும் வெளியுறவு அரசியலிலும் மேலாதிக்கமும் செல்வாக்கும் செலுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றத்தினை வலுக்கட்டாயமாக அமெரிக்கா திணித்தது. தமது நலன்களுக்கு அச்சுறுத்தல் எனக்கருதும் போது கியூப உள்விவகாரங்களில் வலிந்து தலையிடுவதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பின் அந்த மேலதிக சரத்து மூலம் உருவாக்கிக்கொண்டது அமெரிக்கா. தொடர்ச்சியாகப் பல பத்தாண்டுகள் தனது செல்வாக்கினைத் தீவிரப்படுத்தியும் வந்தது.

கியூபாவின் சீனி உற்பத்தி முற்று முழுதாக அமெரிக்கச் சந்தைக்குரியதாக ஆக்கப்பட்டது. 1906 இலிருந்து 1909 வரை தனது கடற்படையை இறக்கி கியூபாவை ஆக்கிரமித்திருந்தது.
சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டங்கள் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்டதும், ஊழலும் சர்வாதிகாரப் போக்கும் கொண்ட நிர்வாகங்களின் ஆட்சி மாறிமாறி நிகழ்ந்தது.

1930 களின் பிற்பகுதியில் முக்கிய அரசியல் சக்தியாக Batista வின் வளர்ச்சி அமைந்து. 1940 – 1944 வரை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாகவிருந்த அவர் அமெரிக்க அரசியல், பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்திப் பேணிய ஒருவராகவும் விளங்கினார். தொடர்ந்து வந்த காலங்களில் கியூபா மீதான அமெரிக்காவின் மேலாதிக்கப்பிடி இறுகிய நிலையில், கியூபாவின் சமூக பொருளாதார யதார்த்தத்திற்கு பெரும் பாதகமாகவும் முரணாகவும் அது அமைந்தது. 1952 இல் மீண்டும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் பதவியைப் பிடித்த Batista வின் சர்வாதிகார ஆட்சியில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட புறநிலையில் சமூகப் புரட்சி தொடர்பான சிந்தனையும் எதிர்ப்பரசியலும் கூர்மையடைந்து கியூபப் புரட்சிக்கு வித்திட்டது.

1940களின் நடுப்பகுதியில் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்ற போது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொள்வதோடு தொடங்குகிறது கஸ்ட்ரோவின் விடுதலைப்போராட்ட வாழ்க்கையும் வரலாறும். மாணவப்பருவத்திலிருந்து இடதுசாரிப் புரட்சிகரச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவராகவும், கியூபத் தேசியவாதியாகவும் விளங்கினார். கொழுத்து வளர்ந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் விளைவும், அத்துமீறிய மேலாதிக்கமும் தான் கியூபாவின் பொருளாதாரச் சிக்கலுக்கான மூலமென்று கருதினார். மக்கள் புரட்சி மூலமே அதற்கான தீர்வினை அடைய முடியுமென்றும் அவர் திடமாக நம்பினார். Batistaவை ஆட்சியிலிருந்து அகற்றி, புரட்சிகர கியூபாவை உருவாக்குவது ஃபிடல் கஸ்ரோவின் இலட்சியமாகியது.

1953இல் திட்டமிடப்பட்ட தாக்குதல் தோல்வியடைந்து, கைதுக்குள்ளான கஸ்ட்ரோவிற்கு 15 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. ஆனபோதும் 19 மாதங்களில் பொது மன்னிப்புப் பெற்று சிறை மீண்டார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்றார்.

Batista ஆட்சிபீடம் தொடர்ச்சியாகத் தனக்கொதிரான கிளர்ச்சியாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் கடுமையாக அடக்கி வந்த நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்புவதற்காக கஸ்ட்ரோ மெக்சிக்கோவிற்கு சென்றார். அங்குதான் சேகுவேராவுடனான சந்திப்பு நிகழ்கிறது. கஸ்ரோவைப் பற்றிப் பதிவு செய்யும் போது தவிர்க்க முடியாத பெயர் சேகுவேரா.

கியூபப்புரட்சியில் பிடல் கஸ்ரோவிற்கு தோள்கொடுத்து புரட்சியைச் சாத்தியப்படுத்திய தளபதிகளில் சேகுவேரா முதன்மையானவர். சேகுவாரா என்பது வெறுமனே புரட்சிக்குத் துணைபோன ஒரு தளபதி என்ற வரையறைக்குள் மட்டும் அடங்கும் பெயர் அல்ல என்பதை உலகறியும். நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உலகளவில் விடுதலைப் போராட்டத்தின் குறியீடாக விளங்கும் பெயர்களில்; முதன்மையானது. அர்ஜென்டீனாவில் பிறந்து, மருத்துவக் கல்வி பயின்று, கியூபப் புரட்சியில் பங்கேற்று, கியூப குடியுரிமை பெற்றவர் சேகுவேரா. கியூப அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். புரட்சியாளர் என்ற பரிமாணத்திற்கு அப்பால் ஒரு சிந்தனையாளராக, சமூகக் கருத்தாளராக, கோட்பாட்டாளராகவும் சேகுவேராவைப் பார்க்க முடியும்.

அவர் ஒரு உலக மனிதனாகத் தன்னைக் கருதிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அதனை மெய்ப்பிக்கும் வகையில் தனது போராட்ட வாழ்வை அமைத்துக் கொண்டார். எங்கெல்லாம் மனிதம் வதைபடுகின்றதோ, எங்கெல்லாம் அடக்குமுறை மானிட வாழ்வுரிமையை, அரசியல் உரிமையை நசுக்குகின்றதோ அங்கெல்லாம் தனது வாழ்வை அர்;ப்பணித்துப் போராட முன்வந்தார் என்பது மிகையான கூற்றல்ல.

அர்ஜென்டீனாவில் பிறந்து வளர்ந்த அந்த மனிதர், கியூப மக்களின் விடுதலைக்காக பிடலுக்குத் துணை நின்றார். கொங்கோவிற்கும், பொலிவியாவிற்கும் பயணப்பட்டு, கொலனியாதிக்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக ஆயுதப்புரட்சியை ஒருங்கிணைத்துப் போராடினார். 1928 இல் பிறந்த சே 1967 இல் பொலிவியாவில் படுகொலை செய்யப்பட்டார்.

சேகுவாரா அடிப்படையில் பயணங்களின் மீது அளப்பெரும் நாட்டம் கொண்ட ஒருவர். அர்ஜென்டீனாவில் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தில் தொடங்கிய அவரது பயணங்கள் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் தொடர் பயணங்களாக, அளப்பெரும் அனுபவங்களாக உருத்திரண்டன. வட அர்ஜென்டீனாவில் 4500 கி.மி மோட்டார் சைக்கிள் பயணத்தை 1950இல் மேற்கொண்டார். தொடர்ச்சியாக 1952இல் தென் அமெரிக்க நாடுகளுக்கான 6 மாத காலப் பயணத்தினை மேற்கொண்டார். 1953இல் இரண்டாவது முறையாகத் தென் அமெரிக்காவின் Caracas, Venizuela ஆகிய நாடுகளை மையப்படுத்தி திட்டமிடப்பட்ட பயணத்திட்டத்தை இடைநடுவில் மாற்றி மத்திய அமெரிக்காவின் Guatemala நோக்கிப் பயணமானார். அங்கு ஜனாதிபதி Jacobo Arbenz தலைமையில் நிலவிய அரசியல் சமூக எழுச்சி பற்றி அறிந்து கொள்ளும் விருப்பம் காரணமாகவே பயணவழியை மாற்றிக்கொண்டார்.

மோட்டார் சைக்கிள் பயணத்தினைத் தனது நண்பர் அல்பேட்டோவுடன் இணைந்து மேற்கொண்டார். அந்த அனுபவங்கள் «மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்» எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்தன. தமிழ் உட்பட்ட ஏராளமான மொழிகளில் அப்புத்தகத்தின் மொழியாக்கப் பிரதிகள் உள்ளன. நண்பர்கள் இருவரின் பார்வையிலும் தென் அமெரிக்காவின் யதார்த்த நிலை நூலில் விபரிக்கப்படுகின்றது. பயண வழிப்பாதையில் ஏற்பட்ட துர்ரதிஸ்ரவசமான சம்பவங்கள், அனுபவங்கள், காணவும் அறியவும் கிடைத்த மானிடத்திற்கெதிரான அநீதிகள் அவருக்குள் ஒரு சமூக அரசியல் விழிப்புணர்வைப் படிப்படியாக ஏற்படுத்துகிறது.

Guatemalaவில் அமெரிக்காவின் முண்டுகொடுப்பில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பின்னான எதிர்ப்புப் போராட்டங்களில் சிறிது காலம் பங்கேற்றார். போராட்டத்தில் பங்கேற்ற 9 மாத காலப்பகுதி மார்க்சிய சிந்தனைகள் மீதான அவரது நம்பிக்கைகளையும் புரட்சிகர அரசியலின் தேவை தொடர்பான அவரது சிந்தனைகளையும் வலுப்படுத்தியது. அங்கிருந்த போதே பிடல் கஸ்ரோவுடனான தொடர்பு புலம்பெயர் கியூபர் ஒருவர் மூலம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 1955 காலப்பகுதியில் அங்கிருந்து மெற்கிக்கோவிற்குப் புறப்பட்ட சேகுவேராவிற்கும் கியூபப் புரட்சிக்கான திட்டமிடலுக்காக தலைமறைவாக மெக்சிக்கோவில் தங்கியிருந்து பிடல் கஸ்ரோவிற்குமிடையிலான நேரடிச் சந்திப்பு நிகழ்கிறது. 12 பேரை மட்டும் ஏற்றிச்செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட கப்பல் ஒன்றில் 81 புரட்சியாளர்களுடன் மெக்சிக்கோவிலிருந்து கியூபா திரும்புகின்றார் கஸ்ட்ரோ. இது 1956இல் நிகழ்கிறது.

கியூபாவின் தென்கிழக்கு மாநில ‘Sierra Maestra’ மலைத்தொடர்களில் தங்கியிருந்து 2 ஆண்டு காலங்கள் டீயவளைவய ஆட்சி பீடத்திற்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்கான திட்டமிடல், பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனவரி 2, 1959 கியூபத் தலைநகர் ஹவானா மீதான பிடல் கஸ்ட்ரோ, சேகுவேரா தலைமையிலான தாக்குதலில் டீயவளைவய வீழ்த்தப்பட்டு, ஆட்சி நிர்வாகம் கைப்பற்றப்பட்ட நிகழ்வு கியூபப் புரட்சியாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கியூபப் புரட்சியைத் தொடர்ந்து, கியூபாவின் நில மறுசீரமைப்பு மையத்தின் தலைவராக, தேசிய வங்கியின் தலைவர், தொழில்- மற்றும் உற்பத்தித் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளைச் சேகுவாரா வகித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களுக்கும் விடுதலைக்குமானதொரு ஆரம்பப் புள்ளியாகவே கியூபப்புரட்சியை சேகுவேரா நோக்கினார். கியூபாவிலிருந்தவாறே சில நாடுகளில் புரட்சிக்கான பணிகளை ஒருங்கிணைத்தார். அதில் ஒன்று அவரது தாயகமான அர்ஜென்டீனா. அந்த முயற்சி சில மாதங்களிலேயே முறியடிக்கப்பட்டது.

1965இல் கியூப அரசாங்கப் பொறுப்புகளிலிருந்து விலகி, கொங்கோவிற்குப் புறப்பட்டார். ஆபிரிக்க நாடுகளின் விடுதலைக்கான ஒரு ஆரம்பமாக கொங்கோ புரட்சி அவரால் பார்க்கப்பட்டபோதும் அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் கியூபாவிற்கு இரகசியப் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்தவாறு பொலிவிய ஆட்சிபீடத்திற்கு எதிரான புரட்சிகரத் தாக்குதலுக்கான திட்டமிடலில் ஈடுபட்டார். பொலிவியாவில் தாக்குதல் திட்டங்கள் வெற்றியளிக்காது போயிற்று. 1967 ஒக்ரோபர் நாளொன்றில் பொலிவியாவின் Higuera எனும் கிராமத்தின் பாடசாலை ஒன்றில் வைத்து பொலிவிய இராணுவத்தின் கைதிற்கு உள்ளான சே, அமெரிக்க சி.ஐ.ஏ கட்டளைக்கமைய மறுநாள் கொல்லப்பட்டார்.

புரட்சியில் வெல்லப்பட்ட கியூபா பனிப்போர் காலத்தின் ஆடுகளமாக விளங்கியது. அதனை மிக நுண்ணிய இராஜதந்திரத் திறன் மூலம் கியூபாவின் பாதுகாப்பிற்கு ஏதுவாக கஸ்ட்ரோ கையாண்டார் என்பது வரலாற்றுப் புரிதலுக்கும் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் மிகப் பயனுடையதாகும்.

கியூபப் புரட்சியின் பின்னர் 1961இல் அமெரிக்காவிலிருந்த கஸ்ட்ரோ எதிர்ப்பு கியூப புலம்பெயர் வலதுசாரிகளை வைத்து கஸ்ட்ரோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா படையெடுப்பில் இறங்கிய போது, அதனை வெற்றிகரமாக முறியடித்தார் கஸ்ட்ரோ. இது மூக்குடைபட்ட நிலைக்கு அமெரிக்காவைத் தள்ளியது. சகிக்க முடியாத ஆவேசத்தை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தியது இந்த தோல்வி.

அமெரிக்காவை இலக்கு வைத்து கியூப மண்ணில் ரஸ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் தரிப்பதற்கான அனுமதி கஸ்ட்ரோவினால் வழங்கப்பட்டிருந்தது. உலகத்தை அணுவாயுதப் போருக்குள் தள்ளக்கூடிய பதட்டம் நிலவிய காலப்பகுதி அது. ஏனெனில் இத்தாலியிலும் துருக்கியிலும் ரஸ்யாவிற்கு எதிரான அணுவாயுத ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. ரஸ்யாவின் ஏவுகணைகள் கியூபாவில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த அணுவாயுத பதட்டத்தை கியூபாவின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு அடித்தளமாக கஸ்ட்ரோ இராஜதந்திரத்துடன் கையாண்டார். கியூபா மீது அமெரிக்கா ஒருபோதும் படையெடுக்காது என்ற உறுதிமொழியைப் பெறப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில் கியூபாவிலிருந்து ரஸ்ய அணுவாயுத ஏவுகணைகள் அகற்றப்பட்டன. அத்தோடு துருக்கி, இத்தாலியிலிருந்து ரஸ்யாவிற்கெதிரான ஏவுகணைகளை அமெரிக்கா நீக்கிக் கொள்வதற்கான உடன்படிக்கையும் எட்டப்பட்டது. ஒரேநேரத்தில் கியூபாவின் பாதுபாப்பும், அணுவாயுத மோதல் பதட்டத்த்திற்கும் தீர்வு காணப்பட்டமையே கஸ்ட்ரோவின் இராஜதந்திர வெற்றியாகும்.

காக்கைச் சிறகினிலே, பொங்குதமிழ் இணையம் – டிசம்பர் 2016

Leave A Reply