அக-ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அரங்கு:Rainbow of Desire

– பகுதி 1

அகவயப்பட்ட நிலையில் மனிதர்கள் தமது நினைவுகளையும் அனுபவங்களையும் அழகியல் சார்ந்த பரிமாணத்தில் வெளிப்படுத்த முடியும். கடந்தகால அல்லது தன்னுணர்வற்ற நிலையில் நேர்ந்த அனுபவங்களை நிகழ்காலத்திற்கு நெருக்கமாக எடுத்துவருவதற்கு கலைகளின் அழகியல்வெளி துணைநிற்கக்கூடியது. அநேக அரங்குகள் அக மோதல்களை அழகியல் வெளியில் முன்வைக்க விளைகின்றன. அதனூடாக பரந்த பரிமாணத்தை வெளிப்படுத்தவும் முடியும்.

அரங்கியல் அறிஞர் Augusto Boal உருவாக்கிய ‘ஒடுகப்பட்டவர்களுக்கான’ அரங்க வடிவங்களில் ஒன்று ‘Rainbow of Desire – விருப்புகளின் வானவில்’. கவித்துவம் மிக்க பெயரைக் கொண்ட இந்த வடிவ உத்தியானது, ‘அரங்கத்தினையும் மனித உறவுச் சிக்கல்களுக்கான தீர்வுகளையும்’ ஒரு தளத்தில் இணைப்பதற்கான ஆற்றுகைச் செயற்பாட்டினைக் கொண்டிருக்கின்றது. சிக்கலான, நுணுக்கமான பல்பரிமாண வேறுபாடுகளைக் கொண்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டடையவும் சிந்திக்கவும் இந்த உத்தி பயன்படுத்தப்படக்கூடியது. (‘Rainbow of Desire’ அரங்கினை விளிப்பதற்கு ‘வானவில் அரங்கு’ எனும் சொல்லாடலை இக்கட்டுரையில் பயன்படுத்துகிறேன்)

வாழ்வியல் சூழலுக்கேற்ற வடிவ, உத்தி மாற்றம்
இந்த வடிவத்தை Boal உருவாக்கிய பின்னணி அவர் ஐரோப்பாவில் வாழ்ந்த கால அனுபவங்களோடு தொடர்புபட்டது. 1976 காலப்பகுதியில் அவர் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதையடுத்து, பிரான்ஸ்சினைத் தளமாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அரங்கப் பயிற்சிப்பட்டறைகள், ஆற்றுகைச் செயற்பாடுகளை முன்னெடுத்தமை பற்றி உருவக அரங்கம் (Image Theatre) பற்றிய கட்டுரையில் பார்த்திருந்தோம். ஐரோப்பிய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் புறநிலைகளும் லத்தீன் அமெரிக்க புறநிலைகளும் வேறுபட்டவை. பேசுபொருள் தெரிவில் மட்டுமல்ல அரங்க வடிவத்திலும் ஐரோப்பிய சூழல் மாறுதல்களைக் கோரிநின்றதை Boal உணர்ந்தார்.

அக்காலத்தின் லத்தீன் அமெரிக்கப் புறச்சுழல்களுக்கும் அதனையொத்த இராணுவ-சர்வாதிகார ஆட்சிகள் -அவற்றின் சமூக பொருளாதார அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராத் தோற்றம்பெற்ற அரங்க வடிவங்களை ஒப்பீட்டளவில் அரசியல் சமத்துவமுடைய சமூகங்களில் மாற்றங்களின்றி பிரயோகிக்க முடியாது. மக்கள் அரங்கு (Forum Theatre), கட்புலனாகா அரங்கு ((Invisible Theatre), உருவக அரங்கு (Image Theatre) ஆகிய முன்னைய வடிவங்களைக்கூட சமூக-அரசியல்-வாழ்வியல்-புவியியல் புறநிலைகளுக்கும் தேவைகளுக்குமேற்ப மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதையும் புதிய உத்திகளை இணைத்துக்கொள்வதையும் டீழயட ஊக்குவித்தார், விரும்பினார் என்பதை அவ்வடிவங்கள் பற்றிய முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். உருவக அரங்கும் வானவில் அரங்கும் ஐரோப்பிய புறச்சூழல்களின் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர்
இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் ஒடுக்குமுறை, இனவாதம், பாலியல் சுரண்டல், தொழிற்தளங்களில் பாரபட்சம் என்பதாக ஒடுக்குமுறை வடிவங்கள் லத்தீன் அமெரிக்கச் சூழலில் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிவனவாக இருந்தன. ஐரோப்பிய சூழலில் பொருளாதார, சமூக, அரசியல் ஒடுக்குமுறைகளுக்கும் அப்பால் ஏனைய ஒடுக்குமுறைகள், குறிப்பாக அக-ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசுவதற்கு பங்கேற்பாளர்கள் அதிகம் விரும்பினர். இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளான நாட்டின் சூழலுக்குரிய அரங்க ஆற்றுகைகளும் ஐரோப்பிய நாடுகளின் சூழல்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட தேவைகள் உணரப்பட்டன.

அக-ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அரங்கு
வானவில் அரங்கு அக-ஒடுக்குமுறைகளைக் கையாள்வதற்கான நோக்கினை முதன்மையாகக் கொண்டுள்ளது. அக-ஒடுக்குமுறைகள் என்பது தனி மனிதர்கள் அக மற்றும் புறச்சூழல்களின் தாக்கங்களினால் மனதளவில் தமக்குள் கட்டியெழுப்பியிருக்கும் தடைகள், தயக்கங்களைக் குறிக்கின்றது. மட்டுமல்லாது இன்னொரு மனிதருடனான, தொடர்பாடல் உறவில், வெளிப்பாட்டில், ஊடாட்டத்தில் கொண்டிருக்கக்கூடிய தடங்கல்கள், சமூக விலகல் என்பனவற்றையும் அக-ஒடுக்குமுறை சார்ந்தவைகளாக வகைப்படுத்தலாம். இருப்பியல் வெறுமை, தனிமை, சுயம் பற்றிய கேள்விகள், தொடர்பாடல் சார்ந்த சிக்கல்கள் என்பன தனிமனிதர்களின் அக-ஒடுக்குமுறை அம்சங்களாக வகைப்படுவன.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முன்னைய பிரதான வடிவங்களான மக்கள் அரங்கு, கட்புலனாக அரங்கு, உருவக அரங்கு ஆகியன சில முன்னேறிய சமூக மட்டங்களில் பயன்பாட்டுச் சாத்தியம் குறைந்தவை. ஒடுக்குபவர் யார் ஒடுக்கப்படுபவர் யார் எனத் திட்டவட்டமாக வேறுபடுத்தமுடியாத சூழ்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்துவது கடினம். மற்றும் விளைவுத்தாக்கம் பலவீனமானதாகவும் அமைந்துவிடும். முன்னைய அவ்வடிவங்கள் சில இடங்களில் ஒடுக்குமுறைகளைக் கூர்மைப்படுத்தவும், மீள் உருவாக்கவும் பயன்பட்டுவிடுவதான விமர்சனங்களும் உள்ளன. புற-ஒடுக்குதல்களுக்கு வெளியேயான வேறுவகை ஒடுக்குதல் சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய புதிய மாற்று உத்திகளைக் கொண்ட வடிவத்தினைக் கண்டடைய வேண்டிய தேவையின் உந்துதலே வானவில் அரங்கினை வடிவமைக்க வழிகோலியது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முன்னைய வடிவங்களுக்கு இணையாகவும் அல்லது அவற்றுக்கு துணைநிற்கும் அரங்கப் பேசுபொருள் சார்ந்த சூழ்நிலைகளுக்கும் வானவில் அரங்கின் உத்திகளைப் பயன்படுத்த முடியும். கூர்மையான ஒடுக்குமுறை மற்றும் முரண்பாட்டுச் சூழல்களை பகுப்பாய்வு செய்வதற்கும் பயன்தரக்கூடிய வடிவம் இது.

முதன்மைப்பாத்திரம் – எதிர்ப்பாத்திரம்
வானவில் அரங்கின் முதன்மைப்பாத்திரம் Protagonist என அழைக்கப்படுகிறது. ஏனைய ஆற்றுகையாளர்கள், பங்கேற்பாளர்கள் முறையே Actors, Spect-actors எனப்படுவர் ஒடுக்கப்பட்டடோருக்கான அரங்கின் ஆற்றுகையாளர்கள் (Actors), பார்வையாளர்கள்/பங்கேற்பாளர்கள் (Actors, Spect-actors ) இவ்வாறு அழைக்கப்படுகின்றமை பற்றி முன்னர் பார்த்திருந்தோம்.

வானவில் அரங்கின் நிகழ்த்துகையில் Protagonist மற்றும் Antagonist ஆகிய பாத்திரங்களைச் சுட்டும் சொல்லாடல்கள் முக்கியமானவை. Protagonist என்ற சொல்லின் அடி கிரேக்கத்திலிருந்து வந்தது. கிரேக்க நாடகங்களின் முதன்மைப்பாத்திரம்/கதையின்நாயகனை அவ்வாறு அழைக்கும் மரபிருக்கிறது. அந்தச் சொல்லைத்தான் Augusto Boal வானவில் அரங்கின் முதன்மைப்பாத்திரத்திற்கு உள்வாங்கிக் கொண்டார். சமகால வழக்கில் தீவிர போராட்ட குணத்தோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் ஒருவரை protagonist என சுட்டுவதுண்டு.

முரண்பாடும் மோதுகையும் நாடகத்தின் மையம்
‘Antagonist’ என்பது எதிர்ப்பாத்திரத்தைக் குறிப்பது. தனது இலக்கினை அடைவதற்காக முதன்மைப்பாத்திரத்திற்கு எதிராகச் செயற்படும் பாத்திரம் அது சமகால வழக்கில் வில்லன் எனலாம். அரங்கினை முரண்பாட்டின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல உறுதுணையாய் செயற்படுவது எதிராளிப்பாத்திரம். எந்தவொரு நாடக, அரங்க செயற்பாட்டிற்கும் எதிராளிப்பாத்திரம் முக்கியமானது. முரண்பாட்டுச் சூழல் என்பது நாடகத்தி;ற்கு முக்கியமானது. நாடகத்தினைச் சுவாரஸ்யமாகவும் மோதுகையாகவும் வளர்த்துச் செல்வது பார்வையாளர்களின் கவனக்குவிப்பினையும் உணர்வுரீதியிலான ஒன்றிப்போதலையும் அதிகரிக்கும்.

நாடகத்தில் முரண்பாடு வளர்த்துச் செல்லப்பட வேண்டிய முக்கியத்துவம் தொடர்பாக 2019 நடுப்பகுதியில் பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் கலாநிதி சிதம்பரநாதன் மேற்கொண்ட ஒரு காணொளி உரையாடலிலிருந்து ஒரு விடயத்தைப் பகிர்வது பொருத்தமென எண்ணுகிறேன்.

‘நாடகத்தில் முக்கிய அம்சம் ‘முரண்பாடு’. முரண்பாடு வளரவேணும். இரண்டு பாத்திரங்கள் மோதும் போதுதான் முரண்பாடு வளரும். ஒவ்வொரு நிலைகளிலும் அது படிப்படியாக வளர்ந்து வளர்ந்து உச்சத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அதைத்தான் பேரவலம் என்பது….

என இராமாயணத்தின் யுத்தகாண்டத்தைத் தனக்குக் கற்பிக்கும் போது பேராசிரியர் சிவத்தம்பி மேற்கொண்டவாறு கூறியதை அந்த உரையாடலில் நினைவுபடுத்துகிறார் பேராசிரியர் மௌனகுரு. ஈழத்து நாடக மற்றும் கூத்தில் மரபு, மரபு மீறல் இரண்டுக்குமிடையிலான சமநிலையைப் பேணும் முனைப்பு பற்றியும் பேசப்படுகின்றது. வட்டக்களரி ஆற்றுகை வடிவம் எவ்வாறு படச்சட்டை மேடை வடிவத்திற்கு மாற்றம் கண்டது என்பதும் அந்த மாற்றத்தின் தேவை பற்றிய பயனுள்ள தகவல்களும் அதில் பகிரப்பட்டிருந்தன. 1960 களில் ஈழத்தில் நிலவிய அரங்கியல் போக்குகளும் – பிற்பட்ட காலங்களில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும் தொடர்பாக அந்தத்துறையில் இயங்கிய மூத்த அரங்கியலாளரின் அனுபவப் பார்வையில் அந்தக் காணொளி ஒரு முக்கிய ஆவணப்பதிவு அது.

எதிர்ப்பாத்திரம் எதுவாக இருக்கலாம்?
வானவில் அரங்கில் எதிர்ப்பாத்திரம் என்பது ஒரு நபராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சமூகம், அச்சம், மனத்தளை, ஒரு நிறுவனம் அல்லது அதனையொத்த வேறுவகை அம்சங்கள் எதிர்ப்பாத்திரமாக உருவகிக்க முடியும், குறியீடாகக் காட்சிப்படுத்தவும் முடியும். இருப்பினும் பெரும்பாலான நாடகங்களில் எதிர்ப்பாத்திரம் நபர்கள் வழியாகவே சித்தரிக்கப்படுகின்றன.

முதன்மைப் பாத்திரத்தின் கதைசொல்லல் மற்றும் காட்சியமைப்பு ஆகியவற்றினூடு கட்டமைக்கப்பட்டு வளர்த்துச்செல்லப்படும். அதற்கூடான மெருகூட்டல் இதன் அடிப்படை. தொடர்ந்து முதன்மைப்பாத்திரத்தினால் அகநிலைப்பட்ட படிமங்கள், உருவகங்கள் வடிவமைக்கப்படும்.

தனிமனித அனுபவங்கள் ‘கூட்டு அக்கறை’க்குரியவை ஆக்குதல்
அகநிலைப்பட்ட சிக்கல்களை மையப்படுத்திய அரங்கம் என்பதால் தனிமனித அனுபவங்கள் இதற்கான அடிப்படையாக உள்ளன. அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவம் என்பது கதைசொல்லலாக-பகிர்வாக அமையும். ஏனைய பங்கேற்பாளர்கள் அதனுடன் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் கதைத் தெரிவு அமைதல் வேண்டும். ஆகையினால் ஆற்றுகையின் போது மூன்று அல்லது நான்கு பங்கேற்பாளர்கள் வெவ்வேறு கதைகளைப் பகிர்ந்துகொள்வது பயனுடையதென Boal பரிந்துரைக்கின்றார். இதன் நோக்கம் அவற்றிலிருந்து சிறந்த கதைகளைத் தெரிவுசெய்வதன்று. மாறாக அவற்றில் எந்தக்கதை கூடுதலானவர்களால் தமக்கான அனுபவமாக அல்லது தாம் அறிந்த கதையாக அடையாளப்படுத்துகின்றது என்பதற்கானது. எளிமையாகச் சொல்வதானால் ‘இது எனக்கும் நடந்திருக்கலாம்’ என அரங்கிலிருப்பவர்களில் அதிகமானவர்கள் உணரக்கூடிய கதையைத் தெரிவுசெய்தல் இந்த உத்தியின் நோக்கம்.

ஆகவே கதை/சம்பவம்/அனுபவம் தனிமய நீக்கம் செய்யப்படுகிறது. பொதுஅனுபவமாக மாற்றப்படுகிறது. தன்னிலை ஒருமையிலிருந்து தன்னிலை பன்மைக்கு கவனக்குவிப்பு மாற்றப்படுகின்றது. அதாவது முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் கொண்டிருக்கும் அனுபவம் அல்லது சூழ்நிலை கூட்டு அக்கறைக்குரியதாக மாற்றம் பெறுகின்றது.
‘Protagonist’ வானவில் அரங்கச் செயற்பாட்டில் முக்கிய ஆற்றுகையாளர். Protagonistஇன் முதல்வேலை ஆற்றுகைக்குரிய ஒரு அத்தியாயத்தை/பகுதியைக் காட்சிப்படுத்துவதாகும். அதாவது முரண்பாட்டினை உருவகப்படுத்திப் பிரதிபலிக்கும் ஒரு சூழ்நிலையைஃஅனுபவத்தை காட்சிப்படுத்த வேண்டும்.

மக்கள் அரங்கு, கட்புலனாகா அரங்கு, உருவக அரங்கின் கணிசமான உத்திகள் ஒடுக்குவோர் யார், ஒடுக்கப்படுவோர் யார் என்பதை இலகுவாக வேறுபடுத்தி அறியும் வடிவ உத்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஒடுக்குவோர் எனும்போது அரசு, இராணுவம், காவல்துறை, நிலப்பிரபு, முதலாளி என மேலதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடங்குவர். இவர்களால் பாதிக்கப்படுபவர்களாகவும் இவர்களின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வோராகவும், ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளின் மூலம் அதனைத் தகர்த்து மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் ஒடுக்கப்படுவோரின் பாத்திரங்கள் கட்டமைக்கப்படும்.

ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர் சார்ந்த சிந்தனை மரபு
ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ‘ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர்’ எனும் சிந்தனை மரபிற்கு அதிகம் பழக்கப்படாதவர்கள். மக்களில் பெரும்பாலானோர் தம்மை ஒடுக்கப்படுவோராய் அடையாளப்படுத்துவதில்லை, உணர்வதில்லை. இந்தச் சிந்தனை முறையில் நிலவுகின்ற இடைவெளியை சரியான மொழிப்பயன்பாட்டின்; மூலம் இட்டுநிரப்பலாம் என Boal நம்பினார். வறிய மக்களுக்கும் இத்தகைய உணர்வு சார்ந்த, உளவியல் சார்ந்த அகவயப்பட்ட ஒடுக்குமுறைகள் உள்ளன. ஆயினும் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாடு சார்ந்த புற-ஒடுக்குமுறைகள் மோசமானவையாக அவர்களை நெருக்கும் போது புற-ஒடுக்குமுறைகளிலிருந்து வெளிவருதல் என்பது முன்னுரிமை பெறுகிறது.

கலையின் அழகியல் வெளி
மேற்கு வாழ்வியல் சூழலில் அகவயப்பட்ட ஒடுக்குமுறைப் பிரச்சினைகள் அதிகம். ஐரோப்பாவில் மக்கள் அதிகம் இறப்பது பட்டினியால் அல்ல. தற்கொலைகள், அதீத போதையால் இறப்பவர்கள் அதிகம். அகவயப்பட்ட நிலையில் மனிதர்கள் தமது நினைவுகளையும் அனுபவங்களையும் அழகியல் சார்ந்த பரிமாணத்தில் வெளிப்படுத்த முடியும். கடந்தகால அல்லது தன்னுணர்வற்ற நிலையில் நேர்ந்த அனுபவங்களை நிகழ்காலத்திற்கு நெருக்கமாக எடுத்துவருவதற்கு கலைகளின் அழகியல்வெளி துணைநிற்கக்கூடியது.
அநேக அரங்குகள் அக மோதல்களை அழகியல் வெளியில் முன்வைக்க விளைகின்றன. அதனூடாக பரந்த பரிமாணத்தை வெளிப்படுத்தவும் முடியும்.

(தொடரும்)

உசாத்துணை நூல்கள்

– An A to Z of Theory | Augusto Boal: The Rainbow of Desire, By Andy McLaverty-Robinson
– De undertryktes teater:Augusto Boals metoder og praksis, By Arne Engelstad
– The rainbow of desire, by Augusto Boal

மே 2020

Leave A Reply