அமெரிக்க இடைத்தேர்தலும் ஒபாமாவும்! (2014)

அரசுகள், அவை சார்ந்த நிறுவனங்கள், அனைத்துலக உறவுகள் என்பன நலன்கள் சார்ந்த அச்சில் சுழல்வன. அவை வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைய நகர்வன. கொள்கை வகுப்பாளர்களின் கைகளுக்குள் அனைத்தும் அடக்கம். எனவே ஒபாமா ஆட்சியில் அனைத்துலக ரீதியில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமென எதிர்பார்த்திருந்தமை அரசியல் புரிதலில் நிலவும் வறுமை என்பதைத் தவிர வேறில்லை.

அமெரிக்காவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (கொங்கிரஸ்) தேர்தல் 04.11.2014 நடைபெற்றது. இந்தத் தேர்தலையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனற் அவை மற்றும் உறுப்பினர் அவை ஆகிய இரண்டையும் குடியரசுக்கட்சி தன்வசப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமல்ல, அதன் இடைத்தேர்தலும்கூட அனைத்துலக கவனத்தைப் பெற்றுவந்திருக்கின்ற தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலும் செனற் மற்றும் உறுப்பினர் அவைகளுக்கான தேர்தலும் நான்கு ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படுகின்றன. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைக்கான தேர்தலில், உறுப்பினர் அவையில் குடியரசுக்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. இம்முறை இரண்டு அவைகளிலும் பெரும்பான்iமையைப் பெற்றதன் மூலம் இரண்டு அவைகளும் குடியரசுக்கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்துள்ளமை அதன் செயல்வெளியை மேலும் குறுகச் செய்துள்ளது. ஜனநாயகக் கட்சிக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசதலைவர் பராக் ஒபாமாவின் ஆட்சி மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகவே குடியரசுக் கட்சியின் தோல்வி பலமட்டங்களிலும் நோக்கப்பட்டது. இரண்டாவது பதவிக்காலத்தின் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளை ஒபாமா நிர்வாகம் எப்படிக் கடக்கப்போகின்றது என்பதோடு அடுத்த அரசதலைவர் தேர்தல் நோக்கி இருகட்சிகளும் எவ்வாறு தம்மைத் தயார்ப்படுத்தத் தலைப்பட்டுள்ளன போன்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தது.

இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள குடியரசுக்கட்சியின் அரசியல் முடிவுகளையும் தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டிய ஒரு அரசதலைவராகவே ஒபாமாவின் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளும் கடக்கப் போகின்றன. இது ஒபாமாவிற்கு இலகுவான பணியாக இருக்கப்போவதில்லை. தனது கட்சி சார்ந்த அரசியல் நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்துவதாயின் அரசதலைவருக்கு இருக்கின்ற ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பிரயோகிப்பதே ஒபாமாவிற்கு உள்ள ஓரே ஆயுதம்.

இடைத்தேர்தல் ஒன்றிற்கு 2014 போல் அதிகளவு பணம் முன்னெப்போதும் செலவிடப்படவில்லை என்ற தரவுகளும் வெளிவந்துள்ளன. இரு கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கென மட்டும் 4000 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளன.
குடியரசுக் கட்சி பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றியானது, மக்கள் மத்தியில் அக்கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது என்பதன் வெளிப்பாடு அல்ல. ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சி மீதானதும் அதன் ஆட்சி நிர்வாகத்தின் மீதானதுமான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரேயொரு மாற்றுத்தெரிவென்ற புறநிலையிலேயே குடியரசுக்கட்சிக்கு பெரும்பான்மையை எட்டமுடிந்தது என்பது யதார்த்தமாகும்.

கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து ஓபாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய வாக்காளர் பிரிவென அடையாளப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் இளைய தலைமுறையினர், பெண்கள், கறுப்பின மக்கள், மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பின்னணியைக் கொண்டவர்கள் மத்தியில் இம்முறை வாக்களிப்பு விழுக்காடு பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகின்றது. குடியரசுக்கட்சி பெரும்பான்மையைப் பெறமுடியாமற் போனமைக்கு இந்தப்பிரிவினர் மத்தியில் வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சியடைந்தமை முதன்மைக் காரணியாகும். ஒபாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய இந்த வாக்காளர்கள் மத்தியில் உரிய முறையில் பரப்புரைகளை ஜனநாயகக்கட்சி மேற்கொள்ளத் தவறிவிட்டது என்ற கருத்தும் நிலவுகின்றது.

நடுத்தர வயதினர், முதியவர்கள் மற்றும் வெள்ளையின மக்களின் அதிகமான வாக்குகளே குடியரசுக்கட்சியை வெற்றியடையச் செய்துள்ளன. இந்த வாக்காளர் பிரிவினர் பாரம்பரியமாக குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜனாதிபதித் தேர்தலைவிட, கொங்கிரஸ் அவைகளுக்கான தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிக்கை பாரம்பரியமாக குறைவு என்புதும் ஒரு யதார்த்தமாகும். ஜனநாயகக் கட்சியைவிட இருமடங்கு மேலதிகமான மாநிலங்களின் ஆளுநர்களையும் குடியரசுக்கட்சி கொண்டுள்ளது.

செனற் அவை குடியரசுக்கட்சியின் வசமாகியிருக்கும் புறநிலையில், ஒபாமா ஆதரவாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் அரசியல் விவகாரங்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக ஒபாமாவின் சுகாதார மறுசீரமைப்புத் திட்டம் குடியரசுக் கட்சி பெரும்பான்மை வகிக்கும் செனற் அவையில் கடுமையாக எதிர்க்கப்படும். இத்திட்டம் ஏற்கனவே சர்ச்சைக்குரியதாகவும் அதேவேளை நீண்ட காலமாக இழுபறியிலுமுள்ள விவகாரமாகும். அத்தோடு குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையோடு முன்மொழியப்படும் தீர்மானங்கள், சட்ட ஆலோசனைகளை அரசதலைவருக்கு இருக்கின்ற ‘வீட்டோ’ அதிகாரத்தை பிரயோகிப்பதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும்.

கடந்த கால அமெரிக்க ஜனாதிபதிகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆறு ஆண்டுகளில் சில தடவைகள் மட்டுமே ஒபாமா தனது வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் தற்போதைய யதார்த்தத்தில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் அதிகம் ‘வீட்டோ’ பிரயோகிக்கக வேண்டிய நிர்ப்பந்தம் ஒபாமாவிற்கு ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

2010இல் இடம்பெற்ற கொங்கிரஸ் அவைகளுக்கான தேர்தலில் குடியரசுக்கட்சி உறுப்பினர் அவையைக் கைப்பற்றியதிலிருந்தே உள்நாட்டு விவகாரங்கள் சார்ந்து ஒபாமா நிர்வாகத்திற்கு சவால்கள் இருந்து வந்துள்ளன. தற்போது இரு அவைகளையும் இழந்துள்ள சூழல் ஒபாமா நிர்வாகத்தையும் ஜனநாயகக் கட்சியையும் பெரும் திண்டாட்டத்திற்குள் தள்ளியுள்ளது.

ஓபாமாவின் ஆறு ஆண்டுகால ஆட்சி, இந்த இடைத்தேர்தலில் மதிப்பீடு செய்யப்படடு, அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனலாம். வேறொரு வகையில் சொல்வதானால் ஆறு ஆண்டுகால ஆட்சியை மதிப்பீடு செய்யும் ‘பொதுவாக்கெடுப்பு’ என இந்தத் தேர்தலையும் முடிவுகளையும் மேற்குலக ஊடகமொன்று வர்ணித்துள்ளதைச் சுட்டிக்காட்ட முடியும். குடியரசுக்கட்சி அவ்வாறானதொரு அடிப்படையில்தான் பரப்புரைகளை மேற்கொண்டது. குடியரசுக் கட்சியின் இந்தத் தேர்தல் பரப்புரை உத்திக்கு ஒபாமாவும் தூபமிட்டிருந்தார் என்பது இங்கு சுவாரஸ்யமானது. அதாவது இந்நத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களில் எனது பெயர் இடம்பெற்றிருக்கவில்லை, ஆனால் எனது அரசியல் அதில் இடம்பெற்றிருக்கின்றது’ என சில வாரங்களுக்கு முன்னர் ஒபாமா கூறியிருந்தார்.

உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, வேலைவாய்ப்பில்லாதோர் தொகை அதிகரிப்பு, ஒபாமாவின் சுகாதார மறுசீரமைப்பு உள்ளடக்கப் போதைமையும் அதிக செலவும் கொண்டதொரு திட்டம், மத்தியதர வர்க்க மக்களின் வாழ்க்கைத்தரத்தில் வீழ்ச்சி போன்ற உள்நாட்டு விவகாரங்கள் ஒபாமா ஆட்சியின் பெரும் குறைபாடுகளாக வாக்காளர்கள் மத்தியில் குடியரசுக் கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது.
இவ்வகை இடைத்தேர்தல்களில் அனைத்துலக விவகாரங்கள் மக்களின் தெரிவின் மீது செல்வாக்குச் செலுத்தும் வலுவற்றவை என்றபோதும் தற்போது பூதாகரமாகவுள்ள அனைத்துலக விவகாரங்களும் தேர்தல் பரப்புரைகளின் பேசுபொருட்களாக இருந்துள்ளன.

ஈராக்கில் ‘இஸ்லாமிய அரசு – IS’ பயங்கரவாத அமைப்பிற்கெதிரான அமெரிக்காவின் போரும் அணுகுமுறையும், சிரியாவின் உள்நாட்டுப்போரில் அமெரிக்காவின் நிலைப்பாடும் அணுகுமுறையும், ரஸ்ய-உக்ரைன் நெருக்கடியில அமெரிக்காவின் அணுகுமுறை என தற்போதைய அனைத்துலக விவகாரங்களில் ஒபாமா நிர்வாகம் பலவீனமானதும் ஈடாட்டமானதுமான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளதென்ற விமர்சனங்கள் குடியரசுக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி பட்டியலிட்டுள்ள மேற்கூறப்பட்ட உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்கள் சார்ந்த குறைபாடுகள் ஒபாமாவின் தலைமைத்துவ ஆளுமை மீதான குறைகளாக அக்கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது.

நடைபெற்று முடிவடைந்த தேர்தல் அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளையும் 2016இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை நோக்கி சிந்திக்கவும் காய்கள் நகர்த்தவும் வைத்துள்ளது. அந்த வகையில் குடியரசுக்கட்சி தனக்கான அரசதலைவர் வேட்பாளரை அடையாளம் கண்டு முன்னிறுத்த வேண்டிய தேவையுண்டு. அக்கட்சியின் வேட்பாளர் யாராக அமையக்கூடுமென்ற சமிக்ஞைகள் இதுவரை வெளித்தெரியாதிருப்பது அல்லது அடையாளப்படுத்தப்படாமை பெரும் குறையாக அவதானிகளால் கருதப்படுகின்றது. ஜனநாயகக்கட்சியைப் பொறுத்தமட்டில், முந்நாள் வெளியுறவு அமைச்சர் கில்லறி கிளின்ரன் அவர்கள் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என எதிர்வுகூறப்படுகின்றது.
இந்தத் தேர்தல் அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் மீளுறுதி பெறுவதற்கான புதிய திறவுகோலாகவும் கணிக்கப்படுகின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலையும் கருத்தில் கொண்டதாக இந்த எதிர்வுகூறல் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

George W. Bush இனது 8 ஆண்டு கால ஆட்சியில் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அதிருப்திகள் உச்சமடைந்திருந்த தருணத்தில், ‘மாற்றம்’ என்ற சொல்லைத் தனது தாரகமந்திரமாகக் கொண்டு நம்பிக்கை அலையைத் தோற்றுவித்ததன் ஊடாக வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்தவர் ஒபாமா. கறுப்பினப் பின்னணியைக் கொண்டவர் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக முதன்முதலில் போட்டியிருகின்றார் என்பதும் இவருக்குக் கூடுதல் பலமாக இருந்தது.

ஆரம்பத்தில் அவர் மீது கட்டியெழுப்பப்பட்ட பிரமாண்ட பிம்பம் தற்போது ஆறு ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மங்கி வருவதைத் தேர்தல் முடிவுகள் சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது. அரச தலைவர் பதவிக்காலத்தில், குறிப்பாக தொடர்ச்சியாக இரு தடவைகள் அரசதலைவராக தெரிவுசெய்யப்பட்டவர்கள் பதவிக்காலத்தின் இறுதியில் புகழ் மங்குவதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதும் புதயதல்ல. ஒப்பீட்டளவில் அனைத்து நாடுகளிலும் நிகழக்கூடியதே. அமெரிக்க வரலாற்றிலும் இது புதிதல்ல. ஒபாமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்கே முக்கியமான விடயம் யாதெனில் அரசுகள் அவை சார்ந்த நிறுவனங்கள், அனைத்துலக உறவுகள் என்பன நலன்கள் சார்ந்த அச்சில் சுழல்வன. அவை வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைய நகர்வன. கொள்கை வகுப்பாளர்களின் கைகளுக்குள் அனைத்தும் அடக்கம். எனவே ஒபாமா ஆட்சியில் அனைத்துலக ரீதியில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமென எதிர்பார்த்திருந்தமை அரசியல் புரிதலில் நிலவும் வறுமை என்பதைத் தவிர வேறில்லை.

பொங்குதமிழ், நவம்பர் 2014

Leave A Reply