இடிபாடுகளின் குவியலுக்கடியில்!

இடிபாடுகளின் குவியலுக்கடியில்!
ஒவ்வொரு நாளும் இங்கு எமது துயரங்களுக்கு
அழைப்பு விடுத்தபடியிருக்கிறது
ஒவ்வொரு காலடியும் இங்கு நம்பிக்கைகள் மீதான
எங்கள் பெருவிருப்பினை பிணைத்தபடியிருக்கிறது
அனைத்தும்; இங்கு துர்ரதிஸ்ரவசமான பஞ்சத்தின்
வன்முறையை எண்ணி அழுதபடியிருக்கிறது
இங்கு ரத்தம் அமைதியாக உறுதிப்படுத்தப்பட்டு
துக்கம் தரையை நனைக்கிறது.
அவன் இறந்துவிட்டான்
கட்டட இடிபாடுகளின் குவியலுக்கடியில்
புதையுண்டு போகையில்
அவனது பெருமைமிகு ரத்தத்தில் மிதியுண்டது வெறுப்பு
பொறுமையற்ற அவனது மக்களின் வேர்கள்
தேசக்கொடியின் நிழலில் இறுக்கமுடிச்சுக்களுடன் வளரும்
சாம்பற் கண்ணீர் மிக மெதுவாகக் தண்மையடைகிறது
தூய நெருப்பைச் சுற்றி வளைகிறது சகிப்புத்தன்மை
ஏனெனில் நிழல்கள் மீதான
எங்களின் வறண்ட, நன்றியற்ற நீண்ட ஊர்வலத்தினை
அவர்கள் கண்டனம் செய்ய விரும்புகின்றனர்.
ஏனெனில் சுறணையற்ற மறதியின் எல்லையில்
எங்கள் வாழ்வைச் சின்னாபின்னமாக்குவதே
அவர்களின் இலக்கு
‘ஆலி லா பொயின்தே -** ‘Ali La Pointe, ’
ஆயுதத்தைக் கையிலெடுத்த தேசத்தின் புதல்வன்
ஒற்றைத்தவத்தில்
தாராள இரவுகளை இடையூறுசெய்தபடி
அவர்களுடைய துப்பாக்கிகளின் முதற்பார்வையில்
இழிவானவர்களை தோற்கடித்து
அவமானத்தை துடைத்தழித்தான்
இங்கு மற்றுமோர் சந்திப்பில்
அவன் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்கிறான்
அவர்களுடைய இரத்தக்கறைபடிந்த மூச்சு
அவன் அங்கிருக்கிறான்
அடிமைத்தனத்தின் இருண்ட காலத்தின்
பிரபஞ்சத்தை அறிந்தவர்களுக்காக
ஒரு பகிரப்பட்ட கடந்தகாலத்தின்
வன்முறைக் கோபத்துடன்
அவனது முகம்
கொடுமைகளின் கண்ணாடியாக
ஒரு குழு இசையாக அழுகையொலியாக
எங்கள் நம்பிக்கையை இணைத்து
எங்கள் விடுதலையைக் கூர்மையாக்குகிறது
புதிய சூரியன் தூர விரட்டப்பட்ட
எங்கள் கண்களின் சுருக்கங்களைச் சுற்றி
பிணைக்கைதியாக
மீண்டும் இங்கே அவன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.
என்றென்றும் வெட்கித்து, வெறுமையுடன்
நான் சொல்கிறேன்: புள்ளிகள், சுருக்கங்கள்,
மெருகூட்டப்பட்ட பழங்கள்
மரணம் தீர்மானிக்கப்படுவதால் நாங்கள்
விதைக்கப்படுகிறோம்
பசியிலும் வலியது மரணம்
ஓ.தாய்நாடே, அவன் தன் பேரானந்தக் கணத்தில்
உற்சாகப் பெருமிதத்தோடு உன்னை அழைத்திருப்பான்
பின்னர் உன் இறைமையின் பிரகாசத்தை மீட்டெடுக்க
தீப்பிழம்புக்குத் தன்னை ஒப்புப்கொடுத்திருப்பான்.
பிரபுக்களினதும் எஜமானர்களினதும் அவமதிப்புகளால்
நேற்றை வீழ்ச்சி கண்டது
முறையற்ற துயரங்களினால் விழுங்கப்பட்டது.
பணிபுமிக்கவர்களை அவன் நேசித்தான்
மேன்மையானவர்களை விடுவித்தான்
பன்நெடுங் காலப் பரம்பரையின்
கடந்த காலம் அணைகிறது
எங்கள் மகிழ்ச்சி
இன்றையை சுதந்திரத்தைச் சொல்லும்
எங்கள் மவுனங்களில் அவனது பெயர்
முணுமுணுக்கப்படும் போது
நான் உரத்துக் கத்துவேன்:
காஸ்பாவின் குழந்தாய்
தடுப்புச்சுவர்களில் வசந்தம் இளகிக்கொண்டிருக்கிறது.
தடைசெய்யப்பட்ட பூங்காக்களின் சங்கிலிகளை
நீங்கள் தகர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

மூலம்: Djamal Amrani
தமிழில்: ரூபன் சிவராஜா
பிரசுரம்: நடு சஞ்சிகை (பிரான்ஸ்), ஒக்ரோபர் 2019
——-

** இந்தக் கவிதையில் புரட்சி வீரனும் அல்ஜீரிரிய தேசிய விடுதலை முன்னணியின் தலைவருமான அலி லா புவாந் -Ali la Pointe. -வினை கவிஞர் பதிவுசெய்து நினைவுகூருகின்றார்.
கவிஞர் பற்றிய குறிப்பு:
அல்ஜீரியக் கவிஞர் ஐமால் அம்ரணி 1935 Sour El Gozlane-இல் பிறந்தவர். அல்ஜீரிய விடுதலைப் போராட்ட அமைப்புடனான அவரது பங்களிப்பு அவரது சமூக வாழ்வில் பிரதான அங்கமாக இருந்தது. 1956இல் மாணவர் ஆர்ப்பாட்டத்தில் அவரது பங்கேற்குக் காரணமாகக் பிரெஞ் இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு சித்ததிரவதைக்கு உட்படுத்தப்பட்டார். புரட்சி நடவடிக்கைகளுக்காக இரண்டாண்டுகள் சிறைவைக்கப்பட்டு பின், பிரான்சிற்கு நாடுகடத்தப்பட்டார்.
1960 இல் அவருடைய சுயசரிதை நூல் ‘சாட்சி’ எனும் தலைப்பில் வெளிவந்தது. மக்களுக்கான விடுதலைசார்ந்த படைப்பாளியாகத் தன்னை ஒப்புக்கொடுக்க முன்னர் தொழில்முறையாக அவர் ஒரு இராதந்திரியும் ஊடகவியலாளருமாவார். (Sun of Our Night, 1964), L’été de ta peau (The Summer of Your Skin, 1982), La nuit du dedans (The Night Within, 2003). அவருடைய முக்கிய நூலகளாகும். 2005இல் எழுபதாவது வயதில் அல்ஜீரியாவில் மரணமடைந்தார்.

Leave A Reply