அழகுணர்ச்சியும் காதலும் – கலீல் ஜிப்ரான்

உன் பாடலின் உட்பொருள் அழகின் உணர்வெனில்
பாலைவன இதயத்திலும்
உன் பாடலுக்கான ஒரு பார்வையாளன்
உள்ளதை அறி!

உன் அடைவிற்கான தேடல்
வாழ்க்கையின் இதயமெனில்
காணும் பொருளனைத்திலும் அழகினைத் தரிசிப்பாய்
அழகினைப் புறமொதுக்கும் பார்வை குன்றிய விழிகளிலும்
அதனைக் கண்டடைவாய்
அழகின் அற்புதங்களைக்
கண்டடைவதற்கானது நம் வாழ்தல்
மற்றைய அனைத்தும் ஒருவகைக் காத்திருப்பு!

இரண்டேயிரண்டு கூறுகள்தான் இங்குள்ளன,
அவையிரண்டும் அழகும் உண்மையும்:
காதலின் இதயங்களில் அழகு குடியிருக்கிறது
உழைப்பின் கரங்களில் உண்மை குடியிருக்கிறது
பேரழகு என்னை ஆட்கொள்கின்றபோது
அதனிலும் பேரழகான இன்னொன்று
என்னை விடுவிக்கிறது
தருணங்களில் அத்தகு பேரழகுகளிலிருந்தும்
நான் விடுவிக்கப்படுகிறேன்
அழகினைத் தரிசிப்பவனின் கண்களைவிட
அதனை ஆராதிக்க ஏங்குபவனின் இதயம்
பிரகாசித்து ஒளிர்கிறது
காதலில் திளைப்பவருக்கிடையிலான
வெண்வலைத்திரை காதல்!

நாளும் புதுப்பிக்கப்படாத காதல்
பழக்கப்பட்டுவிட்ட ஒன்றாகி
அடிமையென்றாகி முடிகிறது
காதலர்கள் ஒருவரையொருவர் தழுவுவதைக்காட்டிலும்
அவர்களுக்கிடையேயானவற்றை அதிகம் தழுவிக்கொள்கின்றனர்

காதலும் சந்தேகமும் ஒருபோதும்
தோழமை கொண்டிருந்ததில்லை
சுடர்களால் வனைந்த ஒற்றைச் சொல் காதல்
அது கதிர்களின் விரல்களால்
ஒளியாலான தாளில் எழுதப்படுவது!

மூலம்: கலீல் ஜிப்ரான்
தமிழில்: ரூபன் சிவராஜா

Leave A Reply