ஈரான் அணுத்திட்டமும் அமெரிக்க மூலோபாயமும்

அனைத்துலக பொருளாதாரத் தடைநீக்கம் செய்யப்பட்ட பலமான ஈரான் பிராந்தியத்தில் தமது செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் நலிவடையச் செய்துவிடுமென்ற அச்சம் மேற்சொன்ன அரபு நாடுகளுக்கு உள்ளது.

60 தசாப்த காலங்கள் கியூபாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க மூலோபாயத்தின் தோல்வி அமெரிக்காவினால் பகிரங்கமாக அண்மையில் (2015) ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து இருநாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருநாட்டு அரசதலைவர்களும் பனாமாவில் இடம்பெற்ற வட மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கிடையிலான உச்சிமாநாட்டின் பொது நேரடியாகச் சந்தித்து உரையாடியுள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பகைமை முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல மத்தியகிழக்கில் நீண்ட காலமாக அமெரிக்காவினாலும் ஏனைய சக்திமிக்க மேற்குலக நாடுகளினாலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாடு ஈரான்.

ஈரான் மற்றும் அமெரிக்கா தலைமையிலான சக்திமிக்க நாடுகளுக்கிடையில் (அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் பிரான்ஸ், ரஸ்யா, சீனா) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரானின் அணு உற்பத்தித்திட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கை இறுதிக்கட்டத்தினை வந்தடைந்துள்ளது. சுவிஸ் நாட்டின் Lausanne மாநிலத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. ஈரானின் அணுசக்தி உற்பத்திதிட்டத்தினை அணுவாயுத உற்பத்திக்கு இட்டுச்செல்லவிடாது தடுப்பதன் மூலம் ஈரான் ஒரு அணுவாயுத வல்லரசாக உருப்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவது மேற்குலகின் நோக்கம். இந்த உடன்பாட்டுக்குக் கைமாறாக ஈரான் மீது அமுலிலிருக்கும் பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா தலைமையிலான சக்திமிக்க நாடுகள் இணங்கியுள்ளன.

பேச்சுவாத்த்தை மூலம் இணக்கப்பாடுகள் வெற்றிகரமாக எட்டப்பட்டுவிட்டதான தோற்றப்பாட்டினை வலிந்து அமெரிக்கா காட்ட முற்படுகிறது. ஆனால் ஈரான் இதுவிடயத்தில் அதீத நம்பிக்கையை வெளிக்காட்டவில்லை. அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையிலான பகைமை அல்லது இராஜதந்திர இடைவெளி நீண்ட காலமாக நிலவி வருகின்றது. 1979இல் ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சியை அடுத்து இருநாடுகளுக்குமிடையிலான பகைமை நீடித்துவந்துள்ளது.

இவ்விரு தரப்புகளுக்குமிடையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் இறுதிவடிவம் நடைமுறைக்கு வருமாயின் இருதரப்பின் நலன்களும் கைகூடும். அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுடிருந்த ஈரான், மீண்டும் அனைத்துலக உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் திறக்கப்படும். பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றங்களை எட்டமுடியும்.

அமெரிக்காவைப் பொறுத்தமட்டில், ஈரான் ஒரு அணுவாயுத நாடாக உருப்பெறுவதைத் தடுப்பதன் ஊடாக (தடுக்கப்படுகிறது என்பதைவிட தள்ளிப்போடப்படுகின்றது என்றளவில் தான் உடன்படிக்கை அமையுமென்ற தகவல்கள் வெளியாகியுள்ளன) அந்தப்பிராந்தியத்தின் அணுவாயுத வல்லரசாக ஈரான் பலம்பெறுவது தடுக்கப்படுகின்றது. தொடர்ந்தும் தனது ஆதிக்கமும் பிரசன்னமும் செல்வாக்கும் நிலைத்திருக்க வழியேற்படுகிறது என்றளவில் அமெரிக்காவின் இலக்குகள் பூர்த்தியடைகின்றன.
அத்தோடு, ஈராக், சிரியா, மற்றும் ஜெமன் போன்ற போர்ச்சூழல் நிலவும் நாடுகளைக் கையாளும் விககாரங்களில் தனது நட்புசக்தியாக ஈரானை வளைத்துத் தனது அணியில் இணைத்துக் கொள்வது சாதகமானதென்றும் அமெரிக்கா கருதுகின்றது.

அமெரிக்கா – ஈரான் இடையிலான இராஜதந்திர உறவு மீள் உருவாக்கம் பெறுவதும் உடன்படிக்கை தொடர்பான சாதகமான சமிக்ஞைகளும் இஸ்ரேலுக்கு உவப்பானதாக இல்லை. இஸ்ரேல் கடும்மையாக எதிர்த்து வருகின்றது. ஒபாமா நிர்வாகத்திற்கும் – இஸ்ரேலுக்குமிடையிலான அண்மைய முறுகலுக்குரிய பிரதான காரணிகளில் இதுவுமொன்றாகும்.

இஸ்ரேலின் எதிர்ப்பினைத் தாண்டி, இருதரப்பிற்கும் ஒன்றையொன்று நெருங்கவேண்டிய தேவைகள் உள்ளன. 2013ம் ஆண்டு இடம்பெற்ற ஈரானின் ஜனாதிபதித் தேர்தலில் Hassan Rouhani நாட்டினைப் பொருளாதார மேம்பாட்டுக்கு இட்டுச் செல்வதென்ற முதன்மை வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்து ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே அமெரிக்கா, ஏனைய வலுமிக்க நாடுகளின் பொருளாதார, வர்த்தகத் தடைகளிலிருந்து மீழ்வது ஈரானின் நீண்டநோக்கிலமைந்த பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக ஈரான் கருதுகின்றது.

ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுக்கு அணுவாயுத நீக்கம் செய்யப்பட்ட ஈரான் தேவை. ஈரான் எண்ணெய்வளம் கொண்ட நாடு. எண்ணெய் மீது செல்வாக்குச் செலுத்துகின்ற உள்நோக்கமும் அமெரிக்காவிற்கு இருக்க வாய்ப்புண்டு. தவிர ஈரான் மீதான பொருளாதாரத்தடை நீக்கப்படும் போது கணிசமான அளவில் ஈரானின் எண்ணெய் அனைத்துலகச் சந்தைக்கு கொண்டுவரப்படும் கதவுகளும் திறக்கப்படும். இது உலகளாவிய மட்டுத்தில் எண்ணெய் விலை குறைவதற்கும், ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்கும் இட்டுச்செல்லக்கூடிய உடனடி விளைவுகளாக அமையும்.

2013 இறுதியியிலிருந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன. இம்மாத (ஜூன் 2015 முடிவிற்குள் உடன்படிக்கையின் இறுதிவடிவம் இணக்கம் காணப்படவேண்டுமென்ற கால எல்லை விதிக்கப்பட்டு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன.
பொருளாதாரத்தடை நீக்கமென்பது ஒபாமா நிர்வாகத்திற்கு இலகுவாகக் கையாளக்கூடிய விவகாரமாக இருக்கப்போவதில்லை. குடியரசுக்கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அமெரிக்க கொங்கிரஸ் அவையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதென்பது இலகுவல்ல. அதேவேளை 2016ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கின்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் வெற்றியீட்டும் நிலை வருமாயின் தற்பொழுது எட்டப்பட்டுவரும் உடன்படிக்கைகளை மீளப்பெறப்போவதாகக்கூட அச்சுறுத்தல் விடுக்கப்படலாம்.

ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அனைத்துலக அரங்கில் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியதான பிம்பமொன்றினை உருவாக்கும் முனைப்பிற்கு கியூபா மற்றும் ஈரான் விவகாரங்கள் துணைபுரியக்கூடியன. கியூபாவுடனான பகைமை முடிவினைவிட ஈரானுடன் இராஜதந்திர உறவினைப் புதுப்பிக்கும் முயற்சிக்கு கூடுதல் அனைத்துலக பரிமாணம் உண்டு.

ஈரான் உடன்படிக்கைக்கும் வர்த்தகத்தடை நீக்கத்திற்கும் அமெரிக்க கொங்கிரஸ் அவைகளின் ஆதரவு கிட்டாமல் போனால் அனைத்துலக விவகாரங்களில் இராஜதந்திரத்தீர்வுஃபேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கான பொறுப்பு ஒபாமா நிர்வாகத்தைப் போய்ச்சேரும். எனவே அமெரிக்க கொங்கிரஸ் அவை இவ்வுடன்பாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டுமெடன ஒபாமா கோரிக்iவிடுத்துள்ளார்.

ஈரானின் அணுவாயுத விவகாரம் நீண்ட காலமாகச் சர்ச்சைக்குரியதொன்றாக இருந்து வந்துள்ளது. ஈரானின் அணுத்திட்டத்திற்குரிய யுரேனிய செறிவாக்கத்திற்குரிய மூலப்பொருட்கள் உட்பட்ட தொழில்நுட்பத்தினை ரஸ்யா வழங்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் – அமெரிக்க உடன்படிக்கைக்கு எதிராக அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கொங்கிரஸ் அவைகளில், குறிப்பாக குடியரசுக்கட்சி மட்டத்திலும் அமெரிக்க கொள்கை வகுப்பிலும் யூதர்களின் செல்வாக்கினைப் பயன்படுத்தும் வாய்;புகள் இல்லாமலில்லை.

இராணுவ ரீதியில் பலமானதொரு ஈரான் தனது பாதுகாப்பிற்கு மட்டுமல்ல இருப்பிற்கும் அச்சுறுத்தலென இஸ்ரேல் கருதுகிறது. இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிக்க வேண்டுமென்பதைத் தமது கொள்கைப்பிரகடனமாக ஈரான் கொண்டுள்ளது.

ஐ-நா.வினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து பொருளாதாரத்தடைகளும் உடன்படிக்கை சைச்சாத்தான கையோடு நீக்கப்படவேண்டுமென ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஆனால் தடைகளைப் படிப்படியாக நீக்குவது பொருத்தமானதென்ற கருத்தினை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கத் தரப்பு நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்போதைய உடன்படிக்கை எதிர்வுகூறல்களுக்கமைய கைச்சாத்திடப்படுமாயின் நீண்ட நெடுங்காலமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஈரான் அனைத்துலக சமூகத்திற்குள் பரவலாக உள்வாங்கப்படும். அத்தோடு மத்தியகிழக்கிலும் ஈரானின் அரசியல் ரீதியான செல்வாக்கு அதிகரிக்கும்.

அதேவேளை இஸ்ரேல் மட்டுமல்ல, மத்தியகிழக்கின் அரபு நாடுகள் பலவும் ஈரானைச் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் கருதுகின்றன. சவுதி அரேபியா, குவைத், கட்டார், ஜெமன் போன்ற அரபு நாடுகளை (யுசயடி ளவயவநள ழக வாந Pநசளயைn புரடக) அந்த வரிசையில் குறிப்பிடலாம். இதனை எதிர்க்கும் கோதாவில் அமெரிக்காவுடன் பேரம்பேசலில் இறங்கியுள்ளன இந்நாடுகள். கனரக ஆயுத உதவியை அமெரிக்காவிடம் கோரியுள்ளன. அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளது. ஆனால் இந்நாடுகள் எதிர்பார்க்கும் நவீன தொழில்நுட்பத்தை அமெரிக்க வழங்கமாட்டது எனப்படுகின்றது. அனைத்துலக பொருளாதாரத் தடைநீக்கம் செய்யப்பட்ட பலமான ஈரான் பிராந்தியத்தில் தமது செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் நலிவடையச் செய்துவிடுமென்ற அச்சம் மேற்சொன்ன அரபு நாடுகளுக்கு உள்ளது.

ஈரான் அணுத்திட்ட உடன்படிக்கை தொடர்பாக இஸ்ரேலைச் சாந்தப்படுத்தும் முயற்சியில் ஒபாமா நேரடியாக ஈடுபட்ட போதும், அதனை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் தயாராக இருக்கவில்லை. அமெரிக்கா மேற்கொள்ளும் உடன்படிக்கை ஈரானின் அணுவாயுத உற்பத்தியைத் தடுக்கவில்லை எனவும், அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குரிய வாய்ப்பினை இந்த உடன்படிக்கை வழங்குகின்றது என்று இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நேதன்யாகு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்காவின் தொடர்ச்சியான அக்கறையினை ஈரானுடனான உடன்படிக்கை நீர்த்துப்போகச் செய்துவிடாதென நேதன்யாகுவைச் சமாதானம் செய்ய ஒபாமா முயன்றுவருகின்றபோதும் நேதன்யாகு அதனை ஏற்கத்தயாராகவில்லலை.
இது மாபெரும் வரலாற்றுத் தவறு மற்றும் இஸ்ரேலின் இருப்பிற்கான ஆபத்து எனவும் இஸ்ரேல் இந்த உடன்படிக்கையினை வர்ணித்துள்ளது.

ஈரானுடனான உடன்படிக்கை எட்டப்பட்ட போதும், அப்பிராந்தியத்தில் தனது இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கும் எண்ணம் அமெரிக்காவிற்கு இல்லையென அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் Chuck Hage கூறியிருந்தார். அமெரிக்க இராணுவ ஆளணிகளும், கடற்படைக் கப்பல்களும் தொடர்ச்சியாக புரடக பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டுள்ளன.

உடன்படிக்கையின்படி அணுத் தொழில்நுட்பத்திற்குரிய யுரேனிய செறிவாக்கத்தினை ஈரான் தொடர முடியும். ஈரானின் அணுத்தொழில்நுட்பம் அணுவாயுத உற்பத்திக்கு இட்டுச்செல்லாத வகையில் மடடுப்படுத்தப்பட்ட அளவில் யுரேனிய செறிவாக்கத்தினையும் உற்பத்தியையும் பேணுவதற்குரிய அனுமதி ஈரானுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஈரானின் அனைத்து அணுத்திட்டங்களும் அதற்குரிய தொழில்நுட்ப மையங்களும் அனைத்துலக அணுசக்தி மையத்தின் (international atomic energy agency – IAEA) ) தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பரஸ்பரம் இருதரப்பும், அதாவது அமெரிக்கா தலைமையிலான மேற்படி சக்திமிக்க நாடுகளும் ஈரானும் இவ்வுடன்படிக்கை மூலம் இலாபமடைகின்றன. இலாபக்கணக்கு சற்றுக் கூடிக்குறையுமே தவிர, ஒட்டுமொத்தமாகப் பார்க்கின் இருதரப்பும் இலாபமடைகின்றன. நலன் என்ற அச்சில் அனைத்துலக அரசியல், நாடுகளுக்கிடையிலான உறவு சுழல்கின்றது என்பது இவ்விவகாரத்தின் வாயிலாக மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இருதரப்பிற்கும் நலன் பயக்கத்தக்க பேரம்பேசும் அரசியலின் அடிப்படைகளுக்கு அமையவே இவ்விவகாரம் கையாளப்படுகின்றது என்பதும் வெள்ளிடை மலை.

பொங்குதமிழ், ஜூன் 2015

Leave A Reply