உக்ரைன் நெருக்கடி: ’கிருமியா’ உடைவும் ரஸ்யாவின் இராணுவ முனைப்பும்

ஐனநாயகம், நல்லாட்சி, ஊடக-கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் தமது நலன்களுக்குச் சாதகமான ஆட்சியை நிறுவ வழிவகுப்பது என்பது மேற்குலக வல்லரசுகளின் நலன் சார்ந்த அரசியல் காய்நகர்த்தல்கள் என்பது கடந்த காலமும் சமகாலமும் உணர்த்தும் உண்மை. முன்னாள் சோவியத் மற்றும் யூகோஸ்லாவிய குடியரசு நாடுகளில் மேற்கு ஆதரவு அரசாங்கங்களை அமைப்பது என்பது அமெரிக்கா தலைமையிலான நகர்வுவாக இருந்து வந்துள்ளதென்பது இரகசியமான ஒன்றல்ல.

உக்ரைன் நாட்டின் சுயாட்சிப் பிரதேசமாக விளங்கிய கிருமியா-குடாவினை ரஸ்யா தனது ஆட்சி நிர்வாகத்தின் கீழ் ஏப்ரல் 2014 இணைத்தது. உக்ரைன் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட அனைத்துலகின் அழுத்தங்களையும் தாண்டி இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. இறைமையுள்ள அயல் நாடொன்றின் பிராந்தியம் ஒன்றினைத் தன்னோடு இணைத்துள்ள ரஸ்யாவின் இந்நகர்வு, எதேச்சதிகாரமானதாகவும், அதேவேளை பிராந்திய பலத்தினை நிலைநிறுத்தும் ரஸ்யாவின் இராணுவ முனைப்பாகவுமே கருதப்படுகின்றது.

ரஸ்யப் படைகளின் பிரசன்னத்தோடு மார்ச் 16ஆம் நாள் (2014) கிருமியாவில் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட்டு, 97 விழுக்காடு மக்கள் ரஸ்யாவுடனான இணைவுக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து கிருமியாவை தன்னோடு ரஸ்யா இணைத்துள்ளது.

உக்ரைன் நெருக்கடியின் விளைவாக அதன் சுயாட்சிப் பிராந்தியமான கிருமியா ரஸ்யாவுடன் இணைக்கப்பட்ட பின்னணி, சமகாலம், எதிர்காலச் சவால்கள் குறித்ததொரு பார்வையாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

உக்ரைன் நெருக்கடியின் பின்னணியில் ரஸ்யாவிற்கும் மேற்குலகிற்குமிடையிலான இராஜதந்திர பொருளாதார மற்றும் படைத்துறை சார்ந்த உறவுகள் கணிசமான பாதிப்பிற்கு உள்ளாகுமெனப் பார்க்கப்படுகின்றது. ஏலவே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் ரஸ்யாவும் இருதுருவங்கள். பனிப்போருக்கு முந்தைய முறுகலின் தாக்கம் முற்றிலுமாகத் தணியாத புறச்சூழல் நிலவுகின்றது. தத்தமது நலன்சார் அரசியலுக்காக ஒன்றை ஒன்று கையாள்கின்ற இராஜதந்திர நெகிழ்வு நிலவிவந்த போதும், அதன் மறுபக்கத்தில் மறைமுகமான வல்லரசுப் போட்டியும் நிலவுகின்றதென்பதை மறுப்பதற்கில்லை.

1954ஆம் ஆண்டு அன்றைய சோவியத் குடியரசான உக்ரைனுக்கு Nikita Khrushchev அவர்களால் கிருமியா தாரைவார்க்கப்பட்டது. NNikita Khrushchev பனிப்போரின் குறிப்பிட்ட சில ஆண்டுகள் (1953 – 1964) (1953 – 1964, General Secretary of the Communist Party of the Soviet Union) சோவியத் ஒன்றிய கொம்யூனிச கட்சிக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் தலைமை தாங்கியவர். அன்று தாரைவார்க்கப்பட்ட கிருமியாவை, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் மீளப்பெற்று, வரலாற்றில் நிகழ்ந்த தவறொன்றை சரி செய்து, பிராந்திய இயல்புநிலையை மீளுறுதி செய்ததாக இந்த இணைப்பினை ரஸ்ய அரசதலைவர் விளாதிமீர் பூதின் நியாயப்படுத்தியுள்ளார்.

சோவியத் உடைவென்பது கடந்த நூற்றாண்டின் பாரிய புவிசார் அரசியல் பேரழிவு எனவும் பூதின் கூறியுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தப் புறநிலையில் மீண்டும் தனது எல்லைகளை அகலப்படுத்தும் ரஸ்யாவின் வல்லரசு முனைப்பு அண்மைக்காலங்களில் வெளிப்பட்டுவருவதாக மேற்குலகம் அஞ்சுகின்றது.

கிருமியா உடைப்பு என்பது 1989இல் நிகழ்ந்த பேர்லின் சுவர் உடைப்பிற்குப் பினனர் நடைமுறைக்கு வந்த ’ஐரோப்பிய ஒழுங்கிற்கு’ முரணானதும் அச்சுறுத்தலானதுமாக ஐரோப்பிய நாடுகளால் பார்க்கப்படுகின்றது. அத்தோடு 2ஆம் உலகப் போர் முடிவிற்குப் பின்னர், ஐரோப்பிய நாடு ஒன்று இன்னொரு நாட்டின் இறைமைக்கு உட்பட்ட ஆள்புலத்தை படைபலம் மூலம் தன்னகப்படுத்தியுள்ள சம்பவமாகவும் இது சித்தரிக்கப்படுகின்றது.

பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட்டு மக்கள் கருத்தறியப்பட்டு இணைப்பு தொடர்பான தீர்மானம் எட்டப்பட்;டதென்ற போதிலும், பிராந்திய சக்தியாகத் தனது அதிகார பலத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ரஸ்யாவின் இராணுவ முனைப்பாகவே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தால் ரஸ்யாவின் இந்நடவடிக்கை அணுகப்படுகின்றது. சோவியத் குடியரசுகளும் யூகோஸ்லாவியக் குடியரசுகளும் சுயநிர்ணய அடிப்படையில் தனித்தனி நாடுகளாக பிரிந்து சென்றமை, இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் தீமோர் (2002), எதியோப்பியாவிலிருந்து எரித்தியா(1993), சேர்பியாவிலிருந்து கொசவோ (2008), மொன்ரநீக்ரோ (2006) ஆகியன பிரிந்து சென்றமை என வரலாற்றில் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளுக்கும் கிரிமியாவிற்கும் அடிப்படையில் நிறைந்த வேறுபாடுகள் உள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் கிழக்கில் ரஸ்யா, வடக்கில் பெலருஸ் (Belarus) ஆகிய எல்லை நாடுகளையும் போலந்த், ஸ்லவாக்கியா, ஹங்கேரி ஆகியனவற்றை மேற்கு எல்லையாகவும், றொமேனியா, மொல்டோவா ஆகிய நாடுகளை தென்மேற்கு எல்லைகளாகவும் கொண்டுள்ளது. தெற்கில் கருங்கடலையும் கொண்டுள்ளது.

கிரிமியா தற்பொழுது ரஸ்ய ஆட்சிபீடத்தின் ஒரு அங்கமாகி விட்டது. குறுகிய கால அடிப்படையில் அதில் மாற்றமேதும் நிகழ வாய்ப்பற்ற நிரந்தர முடிவாகவே இது அமைந்துவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ரஸ்யாவின் இந்த நகர்வினை, உக்ரைன் நாட்டின் அரசியலமைப்பு, அனைத்துலக சட்ட நியதிகளை மீறும் எதேச்சதிகாரமான செயல் என கண்டித்துள்ளதோடு, பொருளாதாரத்தடைகளையும் அறிவித்துள்ளன.

நீண்ட காலமாக உக்ரைன் அரசியல் நெருக்கள் சூழ்ந்த நாடாக இருந்து வந்துள்ளது. 2004 இல் நிகழ்ந்தேறிய செம்மஞ்சள் புரட்சி (Orange Revolution), அதன் பின்னரான ஆட்சி மாற்றமேனும் திடத்தன்மை கொண்ட நிலையான ஆட்சியை அந்நாட்டிற்கு வழங்கவில்லை. அத்தோடு பொருளாதாரமும் நலிவுற்ற நிலையில் இருந்து வந்துள்ளது. அரசியல் திடமின்மையின் நீட்சியே கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நிகழ்;ந்தமைக்கும் ரஸ்யாவுடனான இணைவுக்குமுரிய வெளிப்படையான மூலமாகும்.

எதிர்க்கட்சி தலைமையில் பெருமெடுப்பிலான தொடர்ச்சியான கிளர்ச்சிப் போராட்டங்களின் விளைவாக, ரஸ்ய ஆதரவாளரான உக்ரைனின் முன்னாள் அரசதலைவர் Viktor Janukovitsj இந்த 2014 பெப்ரவரி இறுதியில் பதவி விலக்கப்பட்டார். அவர் நாட்டைவிட்டு வெளியேறவும் நேர்ந்தது. அதையடுத்து மேற்குலகிற்கு ஆதரவான புதிய தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது. எதிர்வரும் மே மாத இறுதியில் புதிய அரசாங்கத்தைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாம் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுவதாகவும், தற்போதைய தற்காலிக அரசாங்கத்தினை ஏற்க மறுத்தும் கிரிமியா சுயாட்சி நிர்வாகம், ரஸ்யாவிடம் பாதுகாப்புக் கோரியிருந்ததோடு. ரஸ்யாவுடன் இணையும் விருப்பினையும் வெளிப்படுத்தியிருந்தது. கிரிமியாவின் 70 விழுக்காடு மக்கள ரஸ்ய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

2004இலும் Viktor Janukovitsjஇன் தேர்தல் மோசடிகளுக்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்களே செம்மஞ்சள் புரட்சிக்கு வித்திட்டது. அன்றைய தருணம் அவருடைய பதவி பறிக்கப்பட்டு, மேற்குலக ஆதரவாளரான Viktor Jusjtsjenko உக்ரைனின் அரசதலைவராக (2005 – 2010) பதவிக்கு வந்தார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூண்டுதலின் பின்னணியில் செம்மஞ்சள் புரட்சி நிகழ்ந்தேறியது.

ஐனநாயகம், நல்லாட்சி, ஊடக-கருத்துச் சுதந்திரம் என்ற பேரில் தமது நலன்களுக்குச் சாதகமான ஆட்சியை நிறுவ வழிவகுப்பது என்பது மேற்குலக வல்லரசுகளின் நலன் சார்ந்த அரசியல் காய்நகர்த்தல்கள் என்பது கடந்த காலமும் சமகாலமும் உணர்த்தும் உண்மை. முன்னாள் சோவியத் மற்றும் யூகோஸ்லாவிய குடியரசு நாடுகளில் மேற்கு ஆதரவு அரசாங்கங்களை அமைப்பது என்பது அமெரிக்கா தலைமையிலான நகர்வுவாக இருந்து வந்துள்ளதென்பது இரகசியமான ஒன்றல்ல.

இலங்கைத் தீவிலும் தமக்குச் சாதகமான அல்லது மேற்குலக ஆதரவு மற்றும் தாராளவாத பொருளாதாரக் கொள்கையுள்ள ஆட்சியை (ரணில்) அமைப்பதற்கு மேற்குலகு முனைப்புக் காட்டியமையும், தற்போது மகிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து நீக்கி, ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதை இனப்பிரச்சினைக்கான தீர்வுகளில் ஒன்றாக மேற்குலகம் கருதுகின்றமையையும் இங்கே சுட்டிக்காட்ட முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார கூட்டுறவு உடன்படிக்கையில் கைச்சாட்திட Viktor Janukovitsj மறுத்ததன் பின்னணியில் உக்ரைனில் கிளர்ச்சியும் நெருக்கடியும் வெடித்து, தற்காலிக அரசாங்கம் உருவானது. நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கை உகந்தது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இணைவு நோக்கிய நகர்வுகள் அவசியமென்றும் கருதுவோரே தற்போதைய தற்காலிக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

உக்ரைன் மற்றும் ரஸ்யாவிற்கிடையில் இராஜதந்திர உறவு நலிவுற்று தோல்வி கண்டுகள்ளது எனலாம். 2004 முதல் மேற்கு ஆதரவுக் கட்சியும், ரஸ்ய ஆதரவுக் கட்சியும் மாறிமாறி ஆட்சியில் இருந்தன என்பது இரு நாடுகளுக்குமிடையிலான சீரற்ற இராஜதந்திர உறவுக்கான பின்னணியாகும்.

ரஸ்யாவுடனான கிருமியாவின் இணைப்பானது, கிருமியாவும் ரஸ்யாவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. முதலாவது சவால், அனைத்துலக நாடுகளின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்காது, அவற்றின் அங்கீகாரமின்றி, உக்ரைனின் இறைமையை மீறி அவசர கதியில் நிகழ்ந்துள்ளது இந்த இணைப்பு. இது பெரும்பாலும் இராஜதந்திர மற்றும் பொருளாதார நிலைகளில் ரஸ்யாவிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தக்கூடியது.

கிருமியாவிற்கான மிகப்பெரிய சவாலாகக் கூறப்படுவது, ரஸ்யாவுடன் தரைவழித் தொடர்பற்ற அதன் புவியியல் அமைவிடமாகும். Kertsj நீரிணை ஊடாக 45கி.மி நீளமான பாலம் அமைக்கப்படுமென ரஸ்யா உறுதியளித்துள்ளது. ஆனால் இது நீண்டகால செயற்திட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்.

கிருமியாவில் நிலைகொண்டுள்ள உக்ரைன் இராணுத்தினரின் நிலையும் கேள்விக்குரியது. ’புதிய’ கிருமியாவிற்கு விசுவாசமான இராணுவத்தினர் கிருமியாவில் தொடர்ந்தும் இருக்கலாம். ஏனையோர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு உக்ரைனுக்கு செல்ல வேண்டுனெ;பது கிருமிய சுயாட்சி நிர்வாகத்தின் நிலைப்பாடு. கிருமியாவிலுள்ள உக்ரைன் படைத்தளங்கள் மற்றும் கடற்படைத்தளங்களை ரஸ்யா தன்னகப்படுத்தும் முனைப்பில் ஏலவே இறங்கியுள்ளது.

கிருமியாவிற்குரிய 80 வீதமான குடிநீர் உக்ரைனிலிருந்தே வழங்கப்பட்டு வருகினறது. தனது பிரதேசத்தை இழந்த விரக்தி நிலையிலும் குடிநீர் வழங்கலை உக்ரைன் நிறுத்தவில்லை. உக்ரைனுக்கான இயற்கை வாயு ரஸ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இயற்கை வாயு ஏற்றுமதியை ரஸ்யா நிறுத்தக்கூடும் என்ற அச்சத்தினால் குடிநீர் வழங்கலை உக்ரைன் நிறுத்தவில்லை என்ற முடிவுக்கும் வரலாம்.

கிருமியா மட்டுமல்ல, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களிலும் (ரஸ்ய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பொரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்கள்) உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான உணர்வு அதிகரித்துள்ளதாகவும், ரஸ்யாவிடம் இப்பிரதேசங்களும் பாதுகாப்புக் கோரியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ரஸ்யாவின் தூண்டுதலினால் இந்த நிலை உருவாக்கப்பட்டதாகவும் பரவலாகப் பேசப்படுகின்றது. எனவே உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கின் அதிருப்திப் பிரதேசங்களை ரஸ்யா தன்னோடு இணைப்பததற்குப் பின்நிற்கப் போவதில்லை என்ற கருத்தும் நிலவுகின்றது.

இப்பகுதிகளை அண்டிய எல்லைப் பிரதேசங்களில் (தெற்கு – கிழக்கு பிரதேச எல்லைகளில்) பெருமளவு ரஸ்யப் படைகள் குவிக்கப்பட்டு பயிற்சி ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை ரஸ்யா எந்நேரமும் உக்ரைனின் இப்பகுதிகள் மீது படையெடுப்பினை மேற்கொள்ளக்கூடும் என்ற பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்யாவின் உயர் தொழில்நுட்பம் பொருந்திய படைகளை எதிர்கொள்வதற்குரிய படைத்துறையோ வளங்களோ உக்ரைனிடம் இல்லை.

தற்போதைய உக்ரைன் அரசாங்கம் ஜனநாயக முறையில் மக்களால் தெரிவான அரசாங்கம் அல்ல. அது மக்களாணை பெறாத ஒரு தற்காலிக அரசாங்கம். மே இறுதியில் (2014) தேர்தல் நடாத்தப்பட்டு, செயற்திறன் மிக்கதும் நீண்ட கால அடிப்படையில் திடமான ஆட்சியை வழங்கக்கூடிய அரசாங்கமாக அமையாவிட்டால் ரஸ்ய – உக்ரைன் நெருக்கடி மேலும் கூர்மையடையும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முதலாவது பெரிய வாயு வழங்கல் (ஏற்றுமதி) நாடு ரஸ்யா. ரஸ்யாவின் வாயு இறக்குமதியில் ஜேர்மன் பெரிதும் தங்கியுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஸ்யா மீதான பொருளாதாரத்தடை நடைமுறையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குரியதே. எண்ணெய் மற்றும் வாயு இறக்குமதியில் ரஸ்யாவில் தங்கியிருப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் திட்டத்தில் ஜேர்மன் அரசதலைவர் யுபெநடய ஆநசமநட இறங்கியிருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளிவந்துள்ளன. வேறு சில நாடுகளிலிருந்து வாயு இறக்குமதியை முன்னெடுப்பதற்கான மாற்றுவழிகள் ஆராயப்படுகின்றன.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்டது போல, கிருமியா ரஸ்யாவுடன் இணைக்கப்பட்டதில் இனி மாற்றமேதும் நிகழ வாய்ப்பில்லை. ஆனால் ரஸ்ய மக்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரைனின் வேறு பிரதேசங்களை ரஸ்யா கைப்பற்றுவதைத் தடுப்பதும், கிழக்கு ஐரோப்பாவில் ரஸ்யாவின் இராணுவ முனைப்பினைக் கட்டுப்படுத்துவதுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஸ்யா மீதான தற்போதைய பொருளாதார தடைகளின் நோக்கமாகும்.

உடனடி விளைவாக G8-நாடுகளின் (உலகின் 8 செல்வந்த நாடுகள்) கூட்டங்களிலிருந்து ரஸ்யா தற்காலிகதாக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நெதர்லாந்தின் Haagஇல் G8இற்குப் பதிலாக G7 மாநாடு நடந்து முடிந்துள்ளது. ரஸ்யா தனது போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் வரை பொருளாதார, மற்றும் சில படைத்துறை சார்ந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கிரிமியா மற்றும் உக்ரைனில் பதட்ட நிலைமைகள் தணிவுற்று சீரான அரசியல் சூழல் உருவாகுமிடத்து இந்த நெருக்கடி பற்றிய அனைத்துலகக் கவனம் குறைந்து போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொங்குதமிழ், ஏப்ரல் 2014

Leave A Reply