ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் வளமும் சர்வதேசத்தின் பூகோள அரசியல் மூலோபாயமும்

ஐ.எஸ் பயங்கரவாதம் சிரியா, ஈராக்கின் எல்லைகளைக் கடந்து முழு உலகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக ஆக்கப்பட்டுள்ளது. அப்படிக் காட்டிக் கொள்வதற்குரிய தேவையும் முனைப்பும் சர்வதேசத்திற்கு உள்ளது. அதேவேளை அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் என்ற கோசத்தையும் மேற்குலக எதிர்ப்பையும் கொண்டிருக்கும் ஐ.எஸ் இவ்வகைக் கருத்துருவாக்கத்தை விரும்பும் வகையில், தம்மீதான அச்சத்தினைப் பரவலாக்கி வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல் அதனை நிரூபித்தது.

சிரியாவிலும் ஈராக்கிலும் குறிப்பிடத்தக்க அளவிலான எண்ணெய் வளத்தினை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தன்வசப்படுத்தியுள்ளமையும், கறுப்புச் சந்தை மூலம் தனக்கான நிதிநிலையினைத் தக்கவைத்துள்ளதான தகவல்கள் அண்மைக்காலங்களில் வெளிவந்துள்ளன. சர்வதேச சந்தை விலையில் காற்பங்கு (1/4) விலைக்கு ஐ.எஸ் எண்ணெய் கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றது.

சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள ஏனைய குழுக்களுக்கு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் குறைந்த விலையில் அதிகம் விற்கப்படுகிறது. சிரியாவின் Assad ஆட்சிபீடம், ஐ.எஸ் மற்றும் Assad அரசபடைகளுக்கும் எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழுக்களும் ஐ.எஸ் வசமுள்ள எண்ணெயில் தங்கியுள்ளன, அதனிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்கின்றன என்பது சுவாரசியமான அதேவேளை யதார்த்தப் புறநிலையுமாகும்.

துருக்கியின் எல்லைப்பிரதேசங்கள் ஊடாக, தரைவழியாக எண்ணெய் கடத்துவதற்கு ஐ.எஸ் இற்கு துருக்கிய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது அல்லது கண்டும்காணாமல் விட்டுள்ளது என்பது பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகிய விவகாரமாகும். துருக்கியும் ஐ.எஸ் அமைப்பிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்கின்றது. இது நீண்டகாலமாக நிலவிவரும் குற்றச்சாட்டு. எண்ணெய்க் கடத்தல் மாத்திரமல்ல. ஐ.எஸ் ஆயுததாரிகள், அதில் புதிதாக இணையும் ஆளணிகள் சிரியாவிற்குள் நுளைவது, ஆயுததளபாடங்கள் கொண்டு செல்வது உட்பட்ட ஐ.எஸ் அமைப்பின் பல்வேறு நகர்வுகள் துருக்கி எல்லையூடாக நிகழ்கிறது, துருக்கி அதற்கு அனுமதி வழங்கியுள்ளது போன்ற குற்றச்சாட்டுகளும் புதியவை அல்ல.

துருக்கி கண்டும்காணாமல் விட்டுள்ளது என பல சர்வதேச ஊடகங்களும் குற்றம் சாட்டி வந்துள்ளன. சிரியாவிலிருந்து தரைவழியாக துருக்கியின் எல்லையூடாக பாரவுந்துகளில் எண்ணெய் கடத்தப்படுகின்றமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ரஸ்ய போர் விமானமொன்றினை சிரியாவின் வான் எல்லையில் துருக்;கி சுட்டுவீழ்த்தியதை அடுத்து, ஐ.எஸ் இடமிருந்து துருக்கி எண்ணெய் கொள்வனவு (பெறுகின்றது) செய்கின்றதென ரஸ்யா சுட்டிக்காட்டியிருந்தது. துருக்கி இவ்வகைக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்திருக்கின்றது. ஆனால் இது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது என்பதே சர்வதேச ஊடகங்களில் பரவலாக வெளிப்பட்ட செய்தி. ஈராக்கும் இந்த விவகாரத்தில் துருக்கியைச் சாடியிருந்தது.

ஐ.எஸ் எண்ணை வருமானத்தை நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் (2015 டிசம்பர்) ஐ.நா பாதுகாப்பு சபை கூடியது. ஐ.எஸ் எண்ணெய் வணிகத்துடன் தொடர்புபட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடையுத்தரவு பிறப்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பிரான்ஸ் மீது 2015ஆம் ஆண்டு நவம்பர் 13 மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஐ.எஸ் இற்கு எதிரான சர்வதேசத்தின் போர் தீவிரப்படுத்தலில் பிரான்சின் பங்கும் முனைப்பும் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. ஐ.எஸ் எண்ணெய் வணிகத்தை அனுமதிக்கின்ற, அதனிடம் எண்ணெய்க் கொள்வனவில் ஈடுபட்டுள்ள நாடுகள் மீது பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற முனைப்பு பிரான்சிடமிருந்து அதிகம் வெளிப்பட்டது. இந்தப் பின்னணியில் நேட்டே அங்கத்துவ நாடான துருக்கி மீதான அழுத்தங்கள் அதிகரித்தன.

ஐ.எஸ் பயங்கரவாதம் சிரியா, ஈராக்கின் எல்லைகளைக் கடந்து முழு உலகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக ஆக்கப்பட்டுள்ளது. அப்படிக் காட்டிக் கொள்வதற்குரிய தேவையும் முனைப்பும் சர்வதேசத்திற்கு உள்ளது. அதேவேளை அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் என்ற கோசத்தையும் மேற்குலக எதிர்ப்பையும் கொண்டிருக்கும் ஐ.எஸ் இவ்வகைக் கருத்துருவாக்கத்தை விரும்பும் வகையில், தம்மீதான அச்சத்தினைப் பரவலாக்கி வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல் அதனை நிரூபித்தது.

12-01-2016 துருக்கியின் முக்கிய நகரான Istanbulஇல் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதில் 11 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். 14-01-16 இந்தோனேசியத் தலைநகர் Jakartaஇல் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Istanbulஇல் தாக்குதல் நடாத்தப்பட்ட பகுதிக்கு ஆண்டுதோறும் பெருமெண்ணிக்கையிலான வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் செல்லும் இடமாகும். வெளிநாட்டுப் பயணிகள் துருக்கிக்குச் செல்வதற்கு அஞ்சும் நிலையை ஏற்படுத்துவது துருக்கியின் பொருளாதாரத்திற்குப் பெரும் அடியாக அமையும். இதன்; பின்னணியில் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ் நிலைகள் மீது துருக்கியின் தரைப்படைகள் முதற்தடவையாகத் தாக்குதல்களைத் தொடுத்திருந்தன.

இத்தாக்குதல்களும், ஐ.எஸ் இற்கு எதிரான சர்வதேசக் கூட்டணிக்கு துருக்கி ஒத்துழைப்பு வழங்கத் தொடங்கியிருந்தமையும் ஐ.எஸ் தொடர்பான துருக்கியின் அணுகுமுறையில் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்பட்ட விடயமாகியது.

Istanbul தாக்குதல்கூட துருக்கியை தம்முடன் முழுமையான அளவில் அணிசேர்ப்பதற்கான மேற்கின் திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருத இடமுண்டு. தாக்குதலுக்கு முன்னர் பேரளவில் மேற்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஐ.எஸ் இற்கு எதிராகக் களமிறங்குவதாகவும் துருக்கி காட்டிக் கொண்ட போதும் முழு அளவில் இறங்கவில்லை.

ஐ.எஸ் மீது தாக்குதல் என்ற போர்வையில் குர்திஸ் விடுதலை அமைப்பின் மீதே பாரிய தாக்குதல்களைத் துருக்கியப் படைகள் மேற்கொண்டன. அத்தோடு ஐ.எஸ் அமைப்பிற்கு நெருக்கமான (Assad படைகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள) சன்னி முஸ்லீம் ஆயுதக்குழுக்களுக்குத் துருக்கி உதவிகளை வழங்கி வந்தது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக துருக்கியின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் குர்தீஸ் விடுதலை அமைப்பினை பலவீனப்படுத்தி அழித்தொழிப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ள துருக்கி, ஐ.எஸ் பயங்கரவாதத்தை அடுத்த நிலையிலேயே வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே வெளியுறவு அமைச்சகத்திற்காக Rystad Energy ஆய்வுநிறுவனம் ஐ.எஸ் எண்ணெய் விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றினை சமகாலத்தில் வெளியிட்டிருந்தது. துருக்கி நாட்டின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்ட கறுப்புச் சந்தை மூலம் விற்பனைக்கு வருகின்றது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. சதாம் உசேன் காலத்தில், சர்வதேச ரீதியில் ஈராக் மீது விதிக்கப்பட்ட பொருளாதார நெருக்குவாரங்களை எதிர்கொள்ள சதாமுக்கு உதவிய கறுப்புச்சந்தை முகவர்கள் மூலம் ஐ.எஸ் இன் எண்ணெய் வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

சதாம் காலத்தில் பயன்படுத்திய கறுப்புச்சந்தை வழிமுறைகளும் பொறிமுகைளும் மீளுயிர்ப்பிக்கப்பட்டுள்ளதெனக் கூறப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதி மற்றும் அதிலிருந்து ஈட்டப்படும் வருமானத்தைப் பணமாக்கி ஐ.எஸ் இடம் சேர்ப்பித்தல் உட்பட்ட நடவடிக்கைகளை இவ்வகை முகவர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றதாக அந்த அறிக்கை சுட்டுகின்றது.

இப்படியாக சிரியாவிலும், வட ஈராக்கிலுமாக அந்நாடுகளின் மொத்த எண்ணெய் வளத்தில் 40 வீதம் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. போர் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி கண்டிருக்கின்றது. உற்பத்தியைப் பேணுவதற்கும் பெருக்குவதற்குமுரிய தொழில்நுட்பம், நிபுணத்துவ அறிவு, தொழில்நுட்பவியலாளர்கள் ஐ.எஸ் வசம் போதியளவு இல்லை. அதனால் எண்ணெய் உற்பத்தியை அதனால் சீராக முன்னெடுக்க முடியாதுள்ளது. எனவே நீண்டகால அடிப்படையில் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதும் ஐ.எஸ் இற்குச் சுலபமாக இருக்கப் போவதில்லை.

தற்போதுள்ள வசதிகளைக் கொண்டு குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு இதனைத் தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக நோர்வேஜிய ஆய்வறிக்கை கூறுகின்றது. ஆனால் ஐ.எஸ் அமைப்பினைப் பலவீனப்படுத்தும் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் இலக்கு வெற்றிபெறாது போகுமாயின், எண்ணெய் வள அபிவிருத்திக்குரிய தொழில்நுட்பத்தினை அந்த அமைப்பு பெற்றுக்கொள்ளும் எனப்படுகிறது.

ஆனால் எரிவாயு உற்பத்திக்குரிய வளம் ஐ.எஸ் வசம் ஒப்பீட்டளவில் உள்ளதாக அறியமுடிகின்றது. போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பிற்கும் மின்சார மற்றும் வேறுபல உற்பத்திகளுக்கு எரிவாயு அவசியமாகவிருப்பதால் அது சார்;ந்த ‘புரிந்துணர்வு’ அவற்றுக்கு மத்தியில் நிலவுகின்றது. அதாவது எரிவாயு உற்பத்திக்கான உட்கட்டுமானங்கள் மீதும் தாக்குதல் நடாத்துவதில்லை என்ற உடன்பாடே அது. பொதுவாகவே போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்புகளும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களில் தங்கியிருப்பதால் அவை சார்ந்த உட்கட்டுமானங்கள் போர் நடவடிக்கைகளின் போது அழிந்துவிடாது தவிர்த்தன.

எண்ணெய் மூலம் ஈட்டப்படும் வருமானமே, ஐ.எஸ் பயங்கரவாத இயந்திரத்தை தொடர்ந்து இயங்க வைக்கின்றது. இந்தக் கறுப்புச் சந்தை எண்ணெய் ஐரோப்பாவிற்கும் வந்தடைகின்றது. சிரியா மற்றும் வட ஈராக்கிலிருந்து தரைவழியாகவும் பின்னர் துருக்கியின் Ceyhan துறைமுகத்திலிருந்து கடல்வழியாக பிரான்சின் Marseille துறைமுக நகரத்திற்குக் கடத்தப்படுகின்றது.

ஐ.எஸ் நிதிவளத்தைப் பலவீனப்படுத்துவதென்ற சர்வதேச முனைப்பும் பரப்புரையும் தீவிரமாகியுள்ளது. எண்ணெய் கடத்திச் சென்ற நூற்றுக்கும் மேறபட்ட பாரவுந்துகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. எண்ணெய் உற்பத்தித் தளங்கள், அதன் உட்கட்டுமானங்கள் மீது தாக்குதல் நடாத்துவதை அமெரிக்காவும் தவிர்க்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அரசியலின் தீர்மான சக்தியாக எண்ணெய் விளங்குகின்றது என்பதனை விளக்கும் நிலைப்பாடாக இதனைப் பார்க்கமுடியும். மத்தியகிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவதும் அதற்கான கடற்போக்குவரத்தினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அமெரிக்காவின் பூகோள அரசியல் மூலோபாயத்தின் மூலமாகும்.

பொங்குதமிழ் இணையம், ஜனவரி 2016

Leave A Reply