கட்புலனாகா தியேட்டர் – (Invisible Theatre) – பகுதி 2

கட்புலனாகா தியேட்டரில் அதன் முதன்மைப் பாத்திரங்கள் பாதுகாப்புக் காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுவர். மீதமுள்ள பாத்திரங்களும், அவதானிகளும் கையாளப்பட்ட பேசுபொருளை மேற்கொண்டு விவாதித்துச் செயற்படுவர்.
கட்புலனாக தியேட்டர் முற்றுமுழுதாக வெற்றியடையலாம் அல்லது படுதோல்வியடையலாம். இரண்டுக்குமான இடைவெளி மிகக்சொற்பம். எந்தக் கட்டத்தில் மக்கள் தலையிட்டுக் கருத்துக்கூறுவர் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அது நடைமுறைச் சாத்தியமில்லை. சில சம்பவங்களில் எவருமே தலையிடமாட்டார்கள். பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல், எதுவும் செய்யாமல் அப்படியே கடந்துபோகவும்கூடும்.
எனவே ஒரு எழுத்துரு தயாரிக்கப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டால் மட்டும் ஒரு கட்புலனாக தியேட்டர் நிகழ்த்துவதற்குத் தயார் என்று அர்த்தப்படமாட்டாது. முன்தயாரிக்கப்பட்ட நாடகம் நிகழ்த்தப்படும் போது, இடையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள் பிரதி எழுத்துருவின்போதும் ஒத்திகையின் போதும் கவனம் கொள்ளப்படவேண்டும்.
மாற்றுக் காட்சிகளும் முன்தயாரிப்பும்

***
அதற்குரிய வகையில் மாற்றுத் திருப்புமுனைக்காட்சிகள், உரையாடல்கள் எழுதப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டிருத்தல் அவசியம். அவ்வாறு மாற்றுக் காட்சிகள் ஒத்திகை பார்க்கப்பட்ட நிலையிலும் எதிர்பாராத திசையில் செல்லக்கூடும். ஆயினும் நிகழ்த்தலின் போது நேரக்கூடிய மாற்றங்களை நுணுக்கமாகப் பகுப்பாய்வுசெய்யும் பட்சத்தில் நாடகத்தினை கட்டுப்பாடு மீறாமல் அதன் நோக்கத்தை அடைய முடியும். இங்குதான் முன்தயாரிப்பிற்குப் போதிய நேரமும் வளங்களும் செலவிடுவது இன்றியமையாததாகின்றது.
அதனை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அவசியமான மற்றுமொரு விடயம், இதன் பேசுபொருள் ஆற்றுகையாளர்களுக்கு பரிட்சயமான, அவர்கள் அனுபவித்த ஒடுக்குமுறையின் அம்சத்தினைத் தெரிவுசெய்வது பொருத்தமிக்கது. அந்தச்சூழலில் கூடியுள்ள மக்கள் இது தமது சொந்தப் பிரச்சினை என்று உணரும் வகையில் பேசுபொருளின் மையப்புள்ளி இருத்தல் வேண்டும்.அத்தகைய தெரிவென்பது தம்மைச் சுற்றி நடப்பவை தொடர்பான விழிப்புணர்வினை பார்வையாளர்களுக்கும் ஆற்றுகையாளர்களுக்கும் வழங்குகின்றது.
பேசுபொருள் தெரிவு

***
பெரிய வடிவத்திலான ஒடுக்குமுறையாக இருக்கவேண்டுமென்ற அவசியம்கூட இல்லை. நாளாந்த வாழ்வின் சிறிய விடயங்களையும் முன்னெடுக்கலாம். இது கட்புலனாகா அரங்கத்திற்கு மட்டுமல்ல. குழசரஅ தியேட்டர் உட்பட்ட ஒடுக்கப்பட்டடோருக்கான அரங்கின் ஏனைய கூறுகளுக்கும் பொருந்தும். உளவியல் ஒடுக்குமுறை, தனிமைப்படுத்தல் ஒடுக்குமுறை, குடும்ப வன்முறை, ஒருவரின் சுயமரியாதைக்கு எதிரான செயல், ஒருவரைப் பாரபட்சதாக நடாத்துதல், தனிநபர் சுதந்திரம் உட்பட்ட சுபீட்ச வாழ்வுக்கான தடைகள் என சிறிய விடயங்களையும் இதன் பேசுபொருளாக கையாளலாம்.
பாரிய அதிகார வன்முறைகள், சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்ப்பது போல், சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளையும் தீவிரமாக எதிர்க்கவேண்டுமென்பது டீழயடஇன் உறுதியான நிலைப்பாடு. காலம்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் சம்பிருதாயங்கள் (பிற்போக்கான) மீது கேள்வியெழுப்புவது, அவற்றைத் தலைகீழாக மாற்றுவது என்ற நோக்குநிலையில் அவர் சிந்தித்தார். அவ்வாறானதொரு தலைகீழ் உலகத்தை எதிர்கொள்வதன் மூலம் மூளையில் பதியப்பட்ட பிற்போக்கான சம்பிருதாயங்கள் தொடர்பான சிந்தனை மாற்றத்தினைத் தூண்டுகின்ற அரங்கியல் வடிவமாக இதனை முன்னிறுத்துகின்றார்.
சுயஒடுக்குதலுக்கு வழிகோலும் சடங்குபூர்வச் சிந்தனை

****
Boal கருத்தியல் நிலைப்பாட்டில், சடங்கு (Ritual) என்பது ஒரு எதிர்மறையான சொல். Ritual மற்றும் Rites இரண்டையும் வேறுபடுத்திப் புரிந்துகொண்டவர். Rituals என்பவை இறுக்கமானவை. இயந்திரத்தன்மையுடையவை. எம்மை நாமே ஒடுக்குகின்ற சுயஒடுக்குதலுக்கு வழிகோலுபவை என்பது அவரின் வாதம். சடங்குபூர்வமான சிந்தனையும் மனப்பான்மையுமே பழக்கப்பட்ட அந்தந்த விடயங்கள் அப்படியப்படியே இருக்கவேண்டும், பேணப்படவேண்டுமென்று மனிதர்களை வழிநடத்துகின்றன.
அவை பிரச்சினைகளுக்குரிய தீர்வினைக் கண்டடையத் தடையாகவுள்ளன.
காலப்பொருத்தம், தேவை, சூழல் பற்றிய மீளாய்வுகளின்றிக் காலங்காலமாகப் பின்வற்றிவருவதைக் கேள்விகளின்றிப் பேணுவதையே இங்கு எதிர்மறையான அர்த்தத்தில் சடங்கு என்று குறிக்கப்படுகின்றது. பெரும்பாலானவை மதம் சார்ந்த நடைமுறைகளோடு தொடர்புடையவை. இன்னும் சில பண்பாட்டு வாழ்வியலோடு தொடர்புடையவையாகவும் உள்ளன.
சடங்குகள், சம்பிருதாய நடைமுறைகளிலுள்ள ஒடுக்குமுறை அம்சங்களை உடைப்பதும் கட்புலனாகா தியேட்டரின் நோக்கங்களில் ஒன்று. அத்தகைய பிற்போக்குச் சடங்குபூர்வ சிந்தனைகளிலிருந்து விடுபடுவதற்கு அடிப்படை முதலில் அவை யாவென அடையாளம் காண்பதாகும்
கட்புலனாகா தியேட்டர்: கொள்கை, தார்மீக ஆட்சேபனைகள்

****
கட்புலனாகா தியேட்டர் தொடர்பாக தார்மீக அடிப்படையிலான ஆட்சேபனைகள் சில மட்டங்களில் உள்ளன. இதிலுள்ள இரகசியத்தன்மை தொடர்பான ஆட்சேபனை அது. அதாவது,
– இதனை நாடகமென எவருககும் தெரியாதவண்ணம் நிகழ்த்துவது
– இந்த வடிவத்தின் நிகழ்முறையில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாமை
– இதன் முரண்பாட்டுச் சூழ்நிலையில் நடித்த நடிகர்கள் நாடகம் முடிந்த பின்னாட்களில் ஒன்றாய் காணப்படுவதைத் தவிர்த்தல் அல்லது அது தொடர்பாகக் கவனமாக இருத்தல்
– நாடகம் முடிந்த பின்னர், நடிகர்கள் ஒருவகை அசவுகரியத்தை எதிர்கொள்ள நேருதல்
கொள்கை நிலைப்பட்ட ஆட்சேபனைகளும் சில மட்டங்களில் இந்த அரங்க வடிவம் தொடர்பாக உள்ளது. அதாவது மக்கள் கூடும் ஒரு இடத்தில், தமது சுயத்திற்கு மாறாக இன்னொருவராக (வேறொரு பாத்திரமாக) மக்கள் கூடுமிடத்தில் நடந்துகொள்வதென்பது நடிகர்களுக்கு அசவுகரியத்தைக் கொடுக்கக்கூடியது.
மேடை நடிகர் – கட்புலனாகா ஆற்றுகை நடிகர்

***
மேடையில் ஒரு நடிகராகத் தோன்றும் போது இந்தச் சிக்கல் இல்லை. பார்வையாளருக்கும், நடிகருக்குமான உறவு நிலை என்பது முன்னறிவிக்கப்பட்ட ஒன்று. ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரத்தை நடிகர் மேடையில் நிகழ்த்துகிறார் எனும் இயல்பான புரிந்துணர்வு பார்வையாளருக்கு இருக்கின்றது. தானாக இல்லாமல் இன்னொருவராக ‘முகமூடி’ அணிந்திருக்கிறேன் என்பதை நடிகரும் தன் பார்வையாளருக்கு தெளிவுபடுத்திவிடுகின்றார்.
கட்புலனாகா தியேட்டரில் இந்த நடிகர்- பார்வையாளர் உறவு முற்றிலும் தலைகீழானது.
அங்கு வேறொரு பாத்திரத்தை நடிகர் ஏற்றிருக்கின்றபோதும், பார்வையாளர்களுக்கு அது தெரிந்திருப்பதில்லை. இந்த நிலை சில நடிகர்களுக்கு உணர்வுரீதியான, தார்மீக ரீதியான மற்றும் கொள்கை ரீதியான சங்கடத்தைக் கொடுக்கக்கூடியது. ஆகையினால் நாடகம் முடிந்த பின்னர், வெளிப்படையாக மக்களுக்கு அதனை நாடகமென அறிவிப்பது தார்மீக அடிப்படைக்கு வலுச்சேர்க்கும் என்ற வாதமும் உள்ளது.
ஒடுக்குமுறைக்கு உட்படுத்துபவராகப் பாத்திரமேற்பவர் பொதுத்தளத்தில் தொடர்ச்சியாக அப்படியான ஒரு சிந்தனையுடைய மனிதராகப் பார்க்கப்படுவதற்கும் அணுகப்படுவதற்குமுரிய சூழல் நடிகரைப் பொறுத்தமட்டில் அசவுகரியமானது.
சவால் நிறைந்த வடிவம்

***
ஏனைய நாடக வடிவங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபடுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட வடிவங்கள் போல் பாத்திரமென்ற ‘முகமூடி’க்குபின் ஒளிய முடியாது. இதில் நடைமுறை யதார்த்த ஒழுங்குக்கு அமைய நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
ஆகையினால் இது சவால் நிறைந்த வடிவம். அதனைக் கையாள்வோர், அதில் ஈடுபடுவோரிடமிருந்து மிகுந்த பொறுப்பு, நேர்மையைக் கோருகின்ற வடிவமாகும். அவ்வாறான பங்கேற்பாளர்களினால் தான் இந்த வடிவத்தின் தார்மீகப் பொறுப்பினைப் பேணமுடியும்.
முன்தயாரிப்பின் போது ஒரு புனைவு நிலையிலிருக்கும் கட்புலனாகா தியேட்டர் நிகழ்த்தப்படு; போது யதார்த்தத்திற்கு மாறுகின்றது. ஒடுக்குமுறைக்கெதிரான நிகழ்கலை வடிவமாகவும் மறுபுறத்தில் நாடக மரபை உடைக்கும் வடிவமாகவும் பார்க்கக்கூடியது.
கட்புலனாகா தியேட்டர் பிறந்த கதை

****
1971இல் பிரேசிலின் இராணுவ ஆட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டு சித்திரவகைகளுக்கு உட்படுத்தப்பட்ட Boal விடுதலைக்குப் பின்னர் அர்ஜென்டீனாவினைத் தளமாகக் கொண்ட 5 ஆண்டுகால புலப்பெயர்வு வாழ்வுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டார். அர்ஜென்டீனாவிலும் அது இராணுவ ஆட்சிக்காலம். பிரேசிலைப் போலவே மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், தடைகளும் நிலவிய ஒரு வாழ்வியல் சூழலே கட்புலனாக தியேட்டரின் வடிவ உருவாக்கத்திற்கு வழிகோலியது. அதாவது ஒடுக்கப்பட்டோருக்கான தியேட்டரினை வெளிப்படையாக நடாத்துவதற்கு இராணுவ ஆட்சிச்சூழல் இடமளிக்காத புறநிலையில் நாடகமெனக் கண்ணுக்குப் புலப்படாத வகையில் புதிய நாடக வடிவத்தை கண்டடைய வேண்டியிருந்ததன் பெறுபேறாக கட்புலனாக தியேட்டரினை டீழயட தோற்றுவித்தார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக Boal நேரடியாக நாடக ஆற்றுகைகளில் பங்கேற்கவில்லை. நாடகம் நிகழ்த்தப்படும் இடத்திற்கு அருகில் ஒரு உணவகத்திலோ, அல்லது வேறொரு இடத்திலோ நின்றபடி அவர் நாடகத்தினையும் அதன் நகர்வையும் அவதானித்து வந்துள்ளார். கைது மற்றும் பிரேசில் ஆட்சியாளர்களிடம் கையளிக்கப்படக்கூடிய ஆபத்துகளை அவ்விதம் அவர் தவிர்த்தார்.
ஐரோப்பாவில் Boalஇன் அரங்கச் செயற்பாடுகள்

***
1970களில் லத்தீன் அமெரிக்காவின் அரசியல் சூழல், Boalஇன் அரங்கச் செயற்பாடுகளுக்கு பெரும் நெருக்குவாரங்களை ஏற்படுத்தியது. இப்புறநிலையில் 1976இல் அவர் ஐரோப்பாவிற்கு தற்காலிகமாக புலம்பெயர்கிறார். முதல் ஓரிரு ஆண்டுகள் போர்த்துக்கல்லிலும் பின்னர் பாரிசிலுமாக மொத்தமாகப் பத்தாண்டுகள் ஐரோப்பிய வாழ்வு அமைகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கினை அறிமுகப்படுத்துவதிலும், அதனை அடுத்தடுத்த படிநிலையில் வடிவமாற்றத்திற்கு வளர்த்துச் செல்வதிலும் தனது சக்தியைச் செலவிட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நிரந்தர அரங்கச் செயற்பாட்டுக்குழுவினை அமைத்து, ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய நாடுகள் உட்பட்ட பல்வேறு நாடுகளில் அரங்கவியல் பயிற்சிப் பட்டறைகள், கருத்தமர்வுகள், வகுப்புகள், அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
ஐரோப்பிய சமூக, பண்பாட்டு, அரசியல் சூழலுக்கு ஏற்ப ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கினை அறிமுகம் செய்து பரவச் செய்தார். மக்கள் மத்தியில் அவதானித்த ஒடுக்குமுறை மூலங்களைக் கருத்தில் கொண்டு நுட்பமான வடிவத்தை அறிமுகம் செய்வதில் பிரக்ஞை கொண்டிருந்தார். லத்தீன் அமெரிக்கச் சூழலில் அவரது அரங்குகள் என்பது அரசியல், இராணுவ, பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பேசுபொருளை முக்கியப்படுத்தின. ஐரோப்பியச் சூழலில் சுயஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு முதன்மைப் பேசுபொருளாக அவரால் உணரப்பட்டது. தனிநபர்கள் மற்றும் சமூகக் கூட்டுளவியலில் வேரோடியிருந்த சடங்குபூர்வமான குறுகிய சிந்தனைகள் தொடர்பான அம்சங்களை ஒடுக்குமுறைக்கூறுகளாக அடையாளம் கண்டார். சுயவெளிப்பாட்டிற்கும் சுதந்திரத்திற்குமான எல்லைக்குறுக்கத்தைத் தகர்ப்பதற்கான கருவியாக ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கச் செயற்பாடுகள் கையாளப்பட்டன.

–முற்றும்–

Leave A Reply