காடழிப்பும் கடல்மட்ட உயர்வும்: பெரும் இருப்பியல் அச்சுறுத்தல்!

காட்டுத் தீ, காடழிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றன காட்டின் வகிபாகத்தைப் பலவீனப்படுத்தி எதிர்மறையான சுழற்சியை ஏற்படுத்துகின்றது. பருவகாலங்களில் சமநிலை அற்ற, இயல்பான சுழற்சி அற்ற மாற்றங்கள் நிகழ்கின்றன. வறட்சியான பகுதிகள் மேலும் வறட்சியடைகின்றன. இயற்கையின் கூறுகளை, வளங்களை மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நாளாந்த வாழ்விற்கும் பாரிய குந்தகங்களை ஏற்படுத்துகின்றது என்பது வெள்ளிடை மலை. உணவு, குடிநீர்த் தட்டுப்பாடு, உடல் நல மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள், நோய்த் தொற்றுக்கள், பொருளாதார ஈடாட்டம், இடப்பெயர்வு, இயற்கை அழிவு, வாழ்விடங்கள், சொத்துகள் அழிவு, வாழ்வாதார இழப்பு, உட்கட்டுமானச் சிதைவுகள் என பல்வேறு நாடுகளில் குடிமக்களுக்கான நேரடிப் பாதிப்புகள் பாரிய அளவிலானவை.

Climate change எனப்படும் ‘காலநிலை மாற்றம்’ நாளாந்த வெயில், குளிர், மழை, காற்றினைக் குறிப்பதல்ல. நாளாந்த நிலைகள் வானிலை (Weather) என்பதாகும். காலநிலை என்பது Climate) நீண்ட கால அடிப்படையில் பூமியில் வழமைக்கு மாறான எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்ற அறிவியல் தரவுகள், அளவீடுகளிலிருந்தும் கண்டடையப்பட்ட மாற்றங்கள், விளைவுகளைக் குறிக்கின்றது.

தமிழில் இந்தச் சொற்களின் பாவனை ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல. நீண்ட கால அடிபபடையில் எனும் போது அது பத்தாண்டு இடைவெளிகளுக்குள் அல்லது நூற்றாண்டு இடைவெளிகளுக்குள் ஏற்பட்டுவந்த, ஏற்படப் போகின்ற மாற்றங்களைச் சுட்டுகின்றது.
உதாரணத்திற்கு நோர்வேயில் அண்மையில் வெளிவந்த தகவல்களின்படி 2019ஃ2020 பனிக்காலம் 120 ஆண்டுகளுக்குப் பின்னர் சராசரியைவிட 4,5 செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகியிருந்தமை அளவிடப்பட்டுள்ளது. இன்னொரு முறையில் சொல்வதானால் சராசரியைவிட 4,5 பாகை செல்சியஸ் குளிர் குறைந்த காலப்பகுதியாக அளவிடப்பட்டுள்ளது. இதே காலப்பகுதிதான் அதிக மழை பதிவாகியுள்ளது.

1900 ஆம் ஆண்டு நோர்வேயின் வானிலை ஆய்வு மையம் வானிலை அளவுகளைப் பதிவு செய்யத் தொடங்கியது. நீண்ட கால அடிப்படையிலான காலநிலை மாற்றங்கள் சார்ந்த கணிப்பீடுகள் இதையொத்த வகையிலேயே அளவிடப்படுகின்றன. கணிக்கப்படுகின்றன. இத்தகையை பாரிய மாற்றங்களின் ஒட்டுமொத்த விளைகளும் உலகளாவிய வெப்பமயமாதல் ஆபத்துகளின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன.

அண்மையில் அவுஸ்ரேலியாவின் பல பிரதேசங்களில் பாரிய காட்டுத் தீ பரவியது. அமேசான் காடுகள் தொடர்ச்சியாக எரிந்தும் மனிதத் தேவைகளுக்காக அழிக்கப்பட்டும் வருகின்றன. அவுஸ்ரேலியத் தீ-விபத்துகளில் இயற்கையின் பெரும் பிரதேசங்கள் அழிவுற்று, தனித்துவமான விலங்கினங்களும் உயிரிழந்துள்ளன. சிட்னிப் பல்கலைக்கழக சூழலியல் ஆய்வாளர்களின் தகவல்களின்படி, ஒரு பில்லியன் வரையான மிருகங்களும் பறவைகளுமாக உயிரினங்கள் தீயினால் பலியாகியுள்ளன. அவுஸ்ரேலியாவில் மட்டும் உயிர்வாழும் கொவாலா-கரடிகள் பெரிதும் அழிந்துள்ளன.

தொடர்ந்த தீபத்துகளின் விளைவினால் காற்று பாரியளவில் மாசடைந்து சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிட்னி, Brisbane பிரதேசங்களில் குழந்தைகள், வயோதிபர்கள், அஸ்த்மா நோயாளர்கள் சுவாசப்பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்ததாகத்; தகவல்கள் வெளிவந்திருந்தன. தீ பரவிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் அமைந்துள்ள நியூசிலாந்தின் பல பகுதிகளில்கூட காற்று மாசடைவு அவதானிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

மிக மோசமான நீண்டகால வறட்சி மற்றும் அதீதவெப்பம் என்பன தீ பரவுவதற்கான காரணங்களாகும். தீ கடுமையாகப் பரவிய தென் மற்றும் கிழக்கு அவுஸ்ரேலியப் பிரதேசங்களின் சராசரி வெப்பநிலை 45 பாகை செல்சியஸ். அவுஸ்ரேலியாவில் வருடாவருடம் தீ-விபத்து ஏற்படுவது வழமையான ஒன்று. இம்முறை ஏற்பட்ட தீ பாரியதாகவும் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்குப் பல நாட்கள் நீடித்தது. அரசாங்கம் ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை என்ற விமர்சனங்களும் உள்ளன.

2019இல் உலகின் மிகப்பெரிய நிலக்கரி ஏற்றுமதி நாடாக அவுஸ்ரேலியா பதிவாகியுள்ளது. நிலக்கரி உற்பத்தி புவிவெப்பமயமாதலின் முதன்மைக் காரணிகளில் ஒன்று என்பதோடு, காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணியுமாகும். இறுதி நான்கு ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவின் காபனீரொட்சைட் வெளியேற்றம் அதிகரித்துள்ளது என்ற தரவும் வெளிவந்துள்ளது. இதனை மாற்றுவதற்கு உகந்த திட்டங்களை கண்டடைவதில் அரசாங்கம் முனைப்புக்காட்டவில்லை எனப்படுகிறது. பிரதமர் Scott Morrison தற்போதைய காட்டுத்தீயைப் புவிவெப்பமயமாதல் பிரச்சனையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை. அதற்குரிய நம்பகமான ஆய்வுத் தகவல்கள் இல்லை என அவர் கூறியதாக ஊடகத் தகவல்கள் வெளிவந்திருந்தன.

காட்டுத்தீயின் பேரழிவைத் தடுக்கும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளோடு சமாந்தரமாக வளிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அவுஸ்ரேலியா மேற்கொள்ளவேண்டுமென்பது சூழலியல் அக்கறையாளர்களின் கோரிக்கையும் எதிர்பார்ப்புமாக இருக்கின்றது.

காட்டுத் தீ அடிக்கடி நிகழும் மற்றைய பிராந்தியம் அமேசான். தென்-அமெரிக்காவை அமைவிடமாகக் கொண்டுள்ள அமேசான் மழைக்காடுகள் ஐந்தரை மில்லியன் சதுர கி.மி பரப்பளவைக் கொண்டவை. ஒன்பது நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியம் இது. இதன் 60 வீதமான நிலம் பிரேசில் நாட்டிற்குள்ளும் ஏனையவை பொலிவியா, பேரு, எக்குவாடோர், கொலம்பியா, வெனிசுவேலா, கயானா, பிரெஞ் கயானா, சுரிநாம் போன்ற நாடுகளை உள்ளடக்கியுள்ள உலகப் பெருங்காடாகும். உலகின் மொத்த மழைக்காடுகளில் அரைவாசியை அமேசான் கொண்டிருக்கின்றது.

அமேசான்நதி உலகின் மிக நீளமான இரண்டு நதிகளில் ஒன்று. மற்றது நைல்நதி. அமேசான்நதி, அதன் கிளை நதிகள் அனைத்தும் இணைந்ததாக உலகின் 20 வீதமான நதிவழிக் குடிநீரைக் கொண்டிருக்கின்றது. பூமியின் மொத்த நிலப்பரப்pல் 4 வீதங்களை மட்டுமே அமேசான் கொண்டுள்ளது என்றபோதும் உலகின் மூன்றில் ஒரு பகுதி மரங்கள், விலங்குகள், பூச்சி வகைகள் இங்கு காணப்படுகின்றன.

அமேசான் பிராந்தியத்தின் 50 வீதமான மழைவீழ்ச்சிக்கு இக்காடுகளே மூலம். மட்டுமல்லாமல் இக்காடுகள் தென்-அமெரிக்க எல்லைகளைத் தாண்டிய பிராந்தியங்களின் மழைவீழ்ச்சி புறநிலைகளில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இப்பெருங்காடுகள் அதிகளவு கார்பனைத் தமக்குள் சேமித்து வைத்துள்ளன. காடுகள் அழிக்கப்படும் போது அவை வளிமண்டலத்திற்குள் பரவி, உலக வெப்பமயமாதலை அதிகரிக்கின்றன.

அமேசான் காடழிப்பு 2004இல் உச்சத்தை அடைந்தது. அது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான தீவிபத்துக்கள் ஏற்பட்டுவருகின்றன.
பெருமளவு மழைக்காடுகள் மூலப்பொருட்களுக்காகவும் பயிர்ச்செய்கைக்காகவும் விலங்குகளுக்கான தீவனம், காதித உற்பத்தி, கட்டடங்களுக்கான மரத்தேவை, எரிபொருள் போன்ற தேவைகளுக்காகவும் அழிக்கப்படுகின்றன. சாலைகள் மற்றும், நீர்-மின்சக்தி நிர்மாணத் திட்டங்கள் என்பனவும் காடழிப்பிறகான மற்றைய காரணிகள். உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களுக்காக பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இறுதிப் பத்தாண்டுகளில் செம்பனையெண்ணெய், சோயா, இறச்சி உற்பத்திகளுக்காகவும் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டுவருவதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியா போன்ற நாடுகளில் செம்பனை எண்ணெய் உற்பத்திக்காக மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. செம்பனை எண்ணெய் உலகின் முக்கிய நுகர்வு-ஏற்றுமதிப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. இதற்காக மழைக்காடுகள் அழிக்கப்பட்டு அந்நிலங்களில் செம்பனை பயிரிடப்பட்டு, எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த உற்பத்தித் தொழிலில் பெருமளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனக்கூறப்படுகின்றபோதும் இதற்கான காடழிப்பு என்பது மிகப்பெரும் சூழலியல் அழிவை ஏற்படுத்துகின்றது.

அமேசான் காட்டுத் தீ, காடழிப்பின் விளைவுகளாக மழைக்காடுகள் வறண்ட புல்நிலங்களாகவும் வனாந்தரங்களாகவும் மாறிவருகின்றன.
நிலமற்ற சிறு விவசாயிகள் மீதே முன்னர் காடழிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் பெரிய வணிக நிறுவனங்களே அதிகம் காடழிப்பிற்குப் பின்னால் நிற்கின்றன. அதுவும் குறிப்பாக காடழிப்பு அதிகரித்துள்ள தென்-அமெரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் பல்தேசிய வணிக நிறுவனங்கள் மூலகர்த்தாக்களாக உள்ளன.

காட்டுத் தீ, காடழிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றன காட்டின் வகிபாகத்தைப் பலவீனப்படுத்தி எதிர்மறையான சுழற்சியை ஏற்படுத்துகின்றது. பருவகாலங்களில் சமநிலை அற்ற, இயல்பான சுழற்சி அற்ற மாற்றங்கள் நிகழ்கின்றன. வறட்சியான பகுதிகள் மேலும் வறட்சியடைகின்றன. ஈரமான பகுதிகள் மேலும் ஈரமடைகின்றன. மரங்களுக்கும் மிருகங்களுக்கும் இருப்பியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பழமரங்கள் இலைதுளிர் காலத்திற்கு முன்பாகவே பூக்கத்தொடங்குகின்றன. வலசைப்பறவைகள் உரிய காலத்திற்கு முன்பாகவே திரும்புகின்றன.
புவிவெப்பமயமாதல் விளைவுகள் இயற்கையின் பன்முகத் தன்மைக்கு அச்சுறுத்தலாகியுள்ளன. மழைவீழ்ச்சி அமைப்பு முறைமை குலைவு, கடல் வெப்ப அதிகரிப்பு, பனிப்பாறை உருகுதல், வறட்சி என புவிவெப்பமயமாதலின் விளைவுகளின் பட்டியல் மிகப்பெரியது. மேலும் விவசாயம் பாதிப்படைகின்றது குடிநீர் மூலங்கள் அருகிவருகின்றன.

இயற்கையின் கூறுகளை, வளங்களை மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நாளாந்த வாழ்விற்கும் பாரிய குந்தகங்களை ஏற்படுத்துகின்றது என்பது வெள்ளிடை மலை. உணவு, குடிநீர்த் தட்டுப்பாடு, உடல் நல மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள், நோய்த் தொற்றுக்கள், பொருளாதார ஈடாட்டம், இடப்பெயர்வு, இயற்கை அழிவு, வாழ்விடங்கள், சொத்துகள் அழிவு, வாழ்வாதார இழப்பு, உட்கட்டுமானச் சிதைவுகள் என பல்வேறு நாடுகளில் குடிமக்களுக்கான நேரடிப் பாதிப்புகள் பாரிய அளவிலானவை.

கடந்த இருபது ஆண்டுகளில் கிறீன்லாந் தீவு, அந்தார்ட்டிகா பெருங்கடல் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளின் பனிப்பாறைகள் அளவில் குறுகியுள்ளன. புவிவெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுகின்றன. பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர்மட்ட உயர்வு மேலும் அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கண்டறிந்த தகவல்.
தீவுத் தேசங்கள், கடல் மட்டத்திற்கு மிக அண்மையில் நில அமைவைக் கொண்ட நாடுகள் கடல் மட்ட உயர்வினனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. பூமியின் அரைப்பங்கு மக்கள் கரையோரங்களை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றனர்.

நோர்வே போன்ற நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்படுகின்றது. அண்மைக்காலமாக மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளது. பனிக்காலம் குறுகி வருகின்றது. துருவநரி, பனிக்கரடி போன்ற மிருகங்களின் உயிர்வாழ்தலுக்கு அவசியமான உகந்த சூழல் பாதிப்படைந்து வருகின்றது.

நீர்மட்ட உயர்வினால் பசுபிக் பெருங்கடலின் தீவுகள் பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டுள்ளன. புவிவெப்பமயமாதலின் பாரதூர விளைவுகள் பொருட்படுத்தப்படாது விடப்படுமாயின் இத்தீவுகள் கடலில் மூழ்கும் ஆபத்து நிலவுவதாக ஆய்வுகள் சுட்டுகின்றன.

கிர்பத்தி (Kiribati) மத்திய பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவுத் தேசம். உத்தியோகபூர்வப் பெயர் கிரிபாஸ் குடியரசு என்பதாகும். 33 பவளத்தீவுகளைக் கொண்டுள்ளது. தீவுகள் இணைந்த பரப்பு 3 500 000 சதுர கி.மி. ஆனாலும் 800 சதுர கி.மி நிலப்பரப்பளவுடையது. 116 000 வரையான மக்கட்தொகையைக் கொண்ட இத்தேசத்தின் பெரும்பகுதி நிலம் கடல்மட்டத்திலிருந்து 1- 2 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. கிர்பத்தியின் அயல் நாடுகளான அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாண்ட் ஆகியன அதிகளவு வளிம வெளியேற்றத்தைக் கொண்டுள்ள நாடுகள்.

2014 வாக்கில் பீஜி தீவுகளிடமிருந்து நிலங்களை கிரிபத்தி வாங்கியது. அந்நிலங்களில் தற்போதைக்கு பயிர்விளைவிப்பதும், கிர்பட்டியில் நீர்மட்டம் உயர்ந்து அதன் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் நிலை ஏற்படத்தொடங்கும் போது தனது மக்களை பீஜியில் குடியிருத்துவது என்பது நிலக் கொள்வனவின் நோக்கம்.

நோர்வேயின் Equinor பெற்றோலிய நிறுவனம் அவுஸ்ரேலியாவின், பெரிய அவுஸ்ரேலிய விரிகுடாவில் (Great Australian Bight) பெற்றோல் தேடலில் மும்முரமாக இறங்கியுள்ளது. இது அவுஸ்திரேலியாவின் தெற்குக் கரையோரத்தில் மைய மற்றும் தெற்குப்பகுதியினை அமைவிடமாகக் கொண்டுள்ள விரிகுடா. இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்கின் ஒரு பகுதியாகவும் உள்ளது. நோர்வேயின் வட துருவப் பிரதேசமான Lofoten போன்ற பிரதேசம் இது. இவற்றின் அமைவிடம் மிக பலவீனமான இயற்கையைக் கொண்டுள்ளதோடு, இங்குள்ள உயிரினங்கள் ஏற்கனவே புவிவெப்பமயமாதலின் விளைவாக அழிவடைந்து வருகின்றன. எரியுற வீட்டில் கூரையைப் பிடுங்கும் நிலைக்கு ஒப்பானது நோர்வே எண்ணெய் நிறுவனத்தின் இந்தச் செயல்.

அவுஸ்ரேலியாவின் இந்தப் பகுதிக்கடலில் உள்ள 85 வீதமான உயிரினங்கள் உலகின் வேறு எந்தப்பகுதியிலும் காணக்கிடைக்காது எனப்படுகிறது. இங்கு எண்ணெய் அகழ்வு மேற்கொள்ளப்படுமாயின் அதனால் ஏற்படப்போகும் கசிவுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தனித்துவமான அவ் உயிரினங்கள் அழிய நேரிடும்.

புவிவெப்பமயமாதல் விளைவாக உலகளாவிய ரீதியில் ஆண்டென்றுக்கு 25 மில்லியன் வரையான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டியிருக்கின்றது. இயற்கை அனர்த்தங்கள், குடிநீர், உணவுப் பற்றாக்குறை, வெள்ளப்பெருக்கு, வறட்சி என்பன இவ்வகை இடப்பெயர்வுகளுக்கான காரணிகள் என்ற தகவலை ஜெனிவாவைத் தளமாகக் கொண்டியங்கும் உள்நாட்டில் இடம்பெயர்வோர் கண்காணிப்பு மையம் (Internal Displacement Monitoring Centre -IDMC) வெளியிட்டிருந்தது.

போர்ச் சூழல்களால் உள்நாட்டுக்குள் இடம்பெயர்பவர்கள் போர் முடியும்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்புகின்ற குறைந்தபட்ச வாய்ப்பேனும் உள்ளது. ஆனால் இயற்கையினால் வாழிடம் சிதைக்கப்படும் போது வாழ்வாதாரம் முற்றிலும் இல்லாமல் ஆக்கப்படுகின்றது. ‘Climate refugees’ என்ற தனியான சொல்லாடல் இயற்கை அனர்த்தங்கள், சூழலியல் மாற்றங்களினால் இடம்பெயர்வேரைக் குறிக்க ஐ.நாவினால் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் போர் மற்றும் முரண்பாட்டுச்சூழல்களிலிருந்து இடம்பெயரும் மக்களையே அகதிகள் என்ற சொல்லுக்குரிய சர்வதேச சட்டவரையறை கொண்டிருக்கின்றது.

உலகின் முன்னணி சூழலியல் ஆய்வாளர்கள் பூமியின் வெப்ப அதிகரிப்பிற் மனிதர்களே மூலகாரணம் என்கின்றனர். எண்ணெய் அகழ்வும் அதன் பாவனையும், நிலக்கரி மற்றும் வாயு உற்பத்திகள் வளிமண்டலத்தின் சமநிலையை மாற்றுகின்றன. அதுவே பூமிப்பந்தில் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்ததும் வகையிலான சூழலியல் மாற்றத்திற்கு அடிகோலுகின்றது. விஞ்ஞானபூர்வமான ஆய்வுத்தகவல்கள் மட்டுமல்ல சாதாரண பகுத்தறிவுடன் நோக்கும்போதுகூட இவற்றைப் புரிந்துகொள்ளமுடியும்.

இந்த நிலையை மாற்றுதற்கான ஒரேயொரு வழி கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது. அத்தோடு வளிமண்டலத்தில் சேர்ப்பிக்கப்படும் கார்பன் வாயுவை நீக்குவதற்குரிய சிறந்த வழிமுறைகளைக் கண்டடைவது. அந்தச் செயற்பாடு கார்பன் கைப்பற்றல் அல்லது சேமிப்பு (Carbon capture and storage) என அழைக்கப்படுகிறது.

எரிசக்தி உற்பத்தியிலிருந்தே அதிக கார்பன் வெளியேற்றம் நிகழ்கிறது என்பதைப் பார்த்தோம். கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்குரிய திட்டவட்டமான சில பரிந்துரைகளை ஐ.நா. சூழலியல் குழு (UN Climate Panel) முன்வைத்துள்ளது.

• எரிசக்தி உற்பத்தியின் கார்பன் வெளியேற்றத்தினை அதன் தற்போiதைய நிலையிலிருந்து, 2040 – 2070 காலப்பகுதிக்குள் 90 வீதத்தால்; குறைக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. அப்படியாயின் எண்ணெய் மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளுக்கு மாற்றாக நீரலை, காற்றலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தித் தொழில்நுட்பத்தைப் பெருக்கவேண்டும்.

• உலக மக்கட் தொகையில் ஐம்பது வீதத்திற்கு மேலானவர்னள் நகரங்களில் வாழ்கின்றனர். இந்தத் தொகை அதிகரித்துச் செல்கின்றது. 2050 தறுவாயில் 64- 69 வீதமாக இது உயரும். எனவே நகர உட்கட்டுமானங்கள், கட்டடங்கள் புதைபடிவ எரிசக்தியில் (Fossil fuel) தங்கியிராத நிலை அதிகரிக்கப்பட வேண்டும். தனியார் வாகனப் பாவனைகள் குறைக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்துச் சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

• மக்களுடைய நுகர்வு மற்றும் உணவு – வாழ்க்கை முறை நிலைகொள் தன்மையுடையதாக அமைக்கப்படவேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் இதற்குப் பங்களிக்க முடியும்:’
• உணவினை வீணாக்காது அளவாக உட்கொள்ளுதல்.
• இறைச்சி வகைகளைக் குறைவாக உட்கொள்ளுதல்
• பொதுப் போக்குவரத்துச் சேவையினை அதிகம் பயன்படுத்துதல்.

எனவாக ஐ.நா சூழலியல் பரிந்துரை அறிக்கை சுட்டுகிறது.

1990களிலிருந்து சூழலியல் விவாதங்களுக்கும் இணக்கப்பாடுகளுக்குமான சர்வதேச அரங்காக ஐ.நா அமைந்து வந்துள்ளது. வருடாந்த மாநாட்டில் உலக நாடுகள் பங்கேற்று சூழலியல் சவால்களுக்கான தீர்வுகள் குறித்தும் எந்தெந்த நாடுகள் என்ன திட்டங்களை முன்னெடுப்பதென்ற இணக்கங்கள் எட்டப்படுவதுண்டு. சூழலியல் சார்ந்த விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளும் ஐ.நாவினால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

ஐ.நா சூழலியல் மாநாட்டின் முக்கிய அம்சமாக பாரிஸ் உடன்படிக்கை பார்க்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் முன்னெடுக்கவேண்டிய சூழலியல் மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கிய சர்வதேச கூட்டு உடன்படிக்கை இது.

இது சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட கூட்டு ஒப்பந்தம் என்றபோதும் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதாக 2017 இல் அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிறம்ப், அமெரிக்காவிற்குச் சாதகமான வகையில் புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட வேண்டுமென்று கோரியிருந்தார். 2019 உத்தியோகபூர்வமாக அமெரிக்க வெளியேறியது. பொருளாதார பலம் பெருந்திய, சூழலியல் மாசுபடுதலுக்கு முதன்மைக்காரணிகளாக இருக்கும் நாடுகளே சூழலியல் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்துவருகின்றன என்பதனை அமெரிக்காவின் இந்த அணுகுமுறை நிரூபிக்கின்றது.

மார்ச் 2010

Leave A Reply