கியூபா: மனிதாபிமான மருத்துவமும் அமெரிக்காவின் திட்டமிட்ட இடையூறுகளும்

பனிப்போருக்குப் பின்னான உலக ஒழுங்கிலும் செப்ரெம்பர் 11 இற்குப் பின்னான அமெரிக்க நலன்களை முன்னிறுத்திய மற்றுமோர் புதிய உலக ஒழுங்கிலும் அமெரிக்கா தலைமையில் உலகம் முழுவதும் மேற்குலகம் இராணுவத்தை அனுப்பி போர்களை விரிவுபடுத்தியுள்ளது. கொரோனா இன்னுமோர் பதிய உலக ஒழுங்கினைத் தோற்றுவிக்கவிருக்கின்றது. உலகம் முழுவதும் அதிகார நலன்களுக்காக அமெரிக்காவும் மேற்குலகமும் இராணுவங்களை அனுப்பி மனித குலத்தினை அழித்துவரும் புறநிலையில்தான் உலகெங்கும் மருத்துவர்களை அனுப்பி மனித குலத்தினை மீட்கும் உன்னதப் பணியினைக் கியூபா செய்து வருகின்றது.

‘வெள்ளை அங்கி அணிந்த கியூப படையினர்’ – Army of white coats என்ற சொல்லாடல் சூட்டப்பட்ட கியூப சிறப்பு மருத்துவப் பிரிவு 1960 இல் உருவாக்கப்பட்டது. அப்பிரிவிலிருந்தே மருத்துவப்பணியாளர்கள் சிலிக்கு அனுப்பப்பட்டனர். தென் அமெரிக்க, ஆபிரிக்க மற்றும் ஆசியப் பிராந்தியங்களின் 158 நாடுகளுக்கு, 300 000 வரையான மருத்துவப் பணியாளர்களை இதுவரை கியூப பணியில் ஈடுபடுத்தியுள்ளது என்பது கியூப அரசின் தகவல்.
ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கு, ஆசியா என கியூபா உலகின் பல கண்டங்களிலும் 164 வரையான நாடுகளில் பங்களித்து, இன்றைய நெருக்கடியில் ஐரோப்பாவிற்கும் பங்களிக்கின்றது. இத்தனைக்கும் அமெரிக்காவைத் தவிர, உலகின் பெரும்பாலான நாடுகள், தலைவர்கள், கியூபாவின் தன்னலமற்ற மருத்துவப் பங்களிப்பினை வரவேற்று அங்கீகரித்துள்ளனர்.

கொரோனா நெருக்கடி – தடுமாறும் மேற்கு – கியூபா, சீனா உதவி
கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர் கொள்வதில் மேற்குலக நாடுகளின் மருத்துவத்துறை தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில்; சர்வதேச ரீதியில் இதனைக் கையாள்வதற்கான உதவிகள் கியூபாவிடமும் சீனாவிடமும் கோரப்பட்டன. கியூப மருத்துவப் பணியாளர்கள், இத்தாலியினால் அழைக்கப்பட்டுள்ளனர். சீனா மருத்துவ உபகரணங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வருகின்றது. முதற்கட்டமாக ஒரு மில்லியன் மூக்கு-வாய்க் கவசம் மற்றும் கையுறை (Masks and gloves) பிரான்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 2020 மார்ச் நடுப்பகுதியில் ஒரு தனி விமானத்தில் செயற்கைச் சுவாசக்கருவிகள் மற்றும் மூக்கு-வாய்க் கவசம் (respirators and masks) உட்பட்ட மருத்துவ உபகரணங்களைச் சீனா இத்தாலிக்கு அனுப்பிவைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கையறுநிலை
ஐரோப்பிய ஒன்றியத்திடமும் அதன் உறுப்பு நாடுகளிடமும் இத்தாலி உதவி கோரியிருந்தது. நெருக்கடி காலத்தில் தமக்கான களஞ்சிய இருப்பினை இழக்க விரும்பாத காரணத்தைக் குறிப்பிட்டு இத்தாலிக்கு உதவ ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன. இத்தாலியின் கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தினால் உரிய பொறுப்புணர்வுடன் செவிசாய்க்கப்படவில்லை.
நாடுகளின் கூட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வகிபாகத்தைக் கேள்வியெழுப்பும் வகையில் இத்தாலி நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை நோக்கப்படுகின்றது.

இத்தகைய இடர்காலத்தில் உதவிகள் அதிகம் தேவைப்படும் நாடுகளுக்குது; தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவில்லை. அதற்கான பொறிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. இத்தாலிக்கு மட்டுமல்ல. கிரோக்கத்தீவுகளில் நிரம்பியுள்ள அகதிகள் நெருக்கடியினைக் கையாள்வதற்குரிய உதவிகளையும் கிறீஸ் நாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்க முன்வரவில்லை.

கொரோனா நெருக்கடியில் சேர்பியாவுக்குரிய உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்த நிலையில் சீனா உதவிகளை அனுப்பியுள்ளது. ஐரோப்பிய ஒருமைப்பாடு என்பது ஒரு கட்டுக்கதை என்பது தெளிவாகியுள்ளது எனச் சர்பிய ஜனாதிபதி Aleksandar Vucic சாடியிருந்தார்.

இத்தகைய ஒரு நெருக்கடியைக் கையாள்வதற்குரிய மருத்துவ ஒருங்கிணைப்பிற்குரிய முன்வகுக்கப்பட்டபொதுக்கொள்கையினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கவில்லை. மட்டுமல்லாது நெருக்கடி ஏற்பட்ட பின்னர்கூட அத்தகைய ஒரு ஒருங்கிணைப்பிற்குரிய பொறிமுறையைக் கண்டடையவுமில்லை. மாறாக உறுப்புநாடுகளின் உதவிக்கோரிக்கைகளைச் செவிமடுக்காது அசமந்தப் போக்கினையே கொண்டிருக்கின்றது.
ஈரான், ஈராக், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் கொரோனா கட்டுப்படுத்தல் பாதுகாப்பு சார்ந்த மருத்துவ உபகரணங்களைச் சீனா அனுப்பி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் சார்ந்து சீனாவின் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியிருந்தது. குறித்த சில நாட்களுக்குள் புதிய மருத்துவமனைகளைக் கட்டமைத்து, அவசரகால நடைமுறைகளை அமுல்படுத்தி கொரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்திய சீனாவின் செயற்பாடுகள் உலக நாடுகளால் முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகின்றன. சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்நெருக்கடிகால முன்தடுப்பு விதிமுறைகளை வகுத்துத்துள்ளன.

இதேவேளை உலகளாவிய இடர்காலத்தில் மருத்துவ ரீதியிலான ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளும் உலக சுகாதார அமைப்பிற்கான நிதியுதவியை நிறுத்தும் முடிவினை டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 15 அறிவித்தது. உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) எதிரான அமெரிக்காவின் இத்தகைய கடும்போக்கு உலக மட்டத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் முடிவு உலகம் முழுவதும் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பெருந்தொற்று நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு சரியான முறையில் கையாளவில்லை என்பதோடு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது. பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் பல மேற்கத்திய அரசாங்கங்கள், குறிப்பாக அமெரிக்காவின் சில கொள்கை நடவடிக்கைகளை உலகசுகாதார அமைப்பு விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கியூப சர்வதேச மருத்துவம்: இராஜதந்திர, பொருளாதார பிம்பம்!
கியூபாவின் மருத்துவக் கொள்கை என்பது எல்லைகளற்றது. சர்வதேச மயப்பட்டது. மனிதாபிமான முன்னுரிமை கொண்டு கட்டமைக்கப்பட்டது. அதன் துணை விளைவுகளாக கியூபாவின் சர்வதேச இராஜதந்திர மற்றும் பொருளாதார பிம்பமாகவும் அது பார்க்கப்படுகின்றது. ஆனால் இங்கு கவனிக்கவேண்டியது என்னவெனில் கியூபா தனது சர்வதேசிய மருத்துவப் பங்களிப்பிற்கு நிபந்தனையாக பொருளாதார நலன்களை முன்னிறுத்தவில்லை. அரசியல் நலன் சார்ந்த உடன்பாடுகளுக்காகக் காத்திருக்கவில்லை. தெளிவான மருத்துவக் கொள்கையோடு அவசரகால உதவிகளுக்கும் தன் மருத்துவர்களை அனுப்பியுள்ளது. அந்நாடுகளின் மருத்துவத்துறைகளை உருவாக்கி வளர்த்தெடுப்பதற்கும் பங்களித்துள்ளது. ஹைத்தி, அல்ஜீரியா, அங்கோலா, நிகுரகுவா ஆகிய நாடுகளின் அரச மருத்துவ நிலையங்கள் கியூபாவினால் உருவாக்கப்பட்டவை.

கியூபாவின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாக மருத்துவத்துறை விளங்குகின்றது. 2014இல் உலகளாவிய மருத்துவ சேவைகளிலிருந்து 8.2 பில்லியன் டொலர் வருமானம் கணக்கிட்டிருந்தது. இது நாட்டின் சுற்றுலாப் பணயத்துறை வருமானத்திலும் கூடுதலானது. பொருளாதார மாற்றீடுகள் என்பன இயல்பாக அந்தந்த நாடுகளின் வளங்களுக்கும் தேவைகளுக்குமேற்ற பரஸ்பர பரிமாற்றமாக அமைந்ததை. மருத்துவ சேவைக்கு மாற்றாக கியூபா வெவ்வேறு நாடுகளுடன் வெவ்வேறு புரிந்துணர்வு உடன்பாடுகளை, பொருட்கள் அல்லது சேவைப்பரிமாற்றங்களை கொண்டிருக்கின்றது. உதாரணமாக வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் பெற்றுக்கொள்வதைக் குறிப்பிடலாம்.

இது தொடர்பாக பிடலின் கூற்றொன்றினைப் பதிவுசெய்வது இங்கு பொருத்தமானது.
அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்:

‘கியூப மருத்துவர்கள், ஏனைய மருத்துவப்பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒரு விதிவிலக்கான சக்தியாக உள்ளனர். வேறெந்த நாடுகளிலும் இத்தகைய நிலையைக் கொண்டிருக்கவில்லை. எம் தீவிலுள்ள சர்வதேச படைவீரர்களைப் போல அவர்களும் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். வெளிநாடுகளில் அவர்களின் பணிகள் கடுமையான நெறிமுறைத் தரங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அவர்களின் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அல்லது சேவைகளைப் பெறும் நாடுகளின் சூழ்நிலைகளுக்கேற்ப விற்கப்படுகின்றன. மருத்துவ சேவை ஏற்றுமதிசெய்யப்படுவதில்லை’.

அரைநூற்றாண்டு கடந்த பொருளாதாரத் தடைகள்
அமெரிக்காவின் அரைநூற்றாண்டுக்கு மேலான தொடர் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்குள் ஒரு வலுவான மருத்துவத்துறையைக் கியூபா கட்டியெழுப்பியது. அமெரிக்காவின் தடை என்பது தனியே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடைப்பட்ட உறவைக் குறிப்பதல்ல. நடைமுறையில் அது அமெரிக்க – மேற்குலக நட்புசக்திகளின் கூட்டுத்தடை. சோவியத் உடைவுக்குப் பின்னர் கியூபா மேலும் தனிமைப்படுத்தப்பட்டது. பொருளாதாரம் மேலும் நலிவுற்றது.

மருத்துவத்துறையை வளர்த்தெடுப்பதற்கான தொழில்நுட்ப வளங்கள், கருவிகள், நிதிவளம், அறிவியல் பரிமாற்றம் ஆகிய அனைத்து வளங்களையும் மறுக்கும் வகையிலான அமெரிக்காவின் தடைகளுக்கு மத்தியில் இத்துறை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பொது சுகாதாரத்துறையை தரமாகவும் மேம்பட்ட நிலையிலும் பேணுகின்ற முனைப்பினால் துரித மருத்துவ ஆய்வுகள், புத்தாக்க முனைப்புகள், பரிசோதனைகள் என நேர்த்தியான திட்டமிடல்களே கியூபாவின் மருத்துவ மற்றும் உயிரியர் தொழில்நுட்பம் முதன்மை இடத்தினை வகிக்க வழிகோலியுள்ளது.
1981இல் பல்துறைமை அறிவியல் மையமாக உயிரியல் துறை தொடங்கப்பட்டது. பெரும்பாலான வளர்முக நாடுகள் மரபணு மீளமைப்பு (recombinant DNA), மனித மரபணுச் சிகிச்சை, உயிரியல் சார்ந்த தொழில்நுட்ப வளங்களைக் கொண்டிராத சூழலில் கியூபா உயிரியல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தியது.

ஒபாமா நிர்வாகமும் கியூபாவும்
கியூபாவுடனான ஒரு இராஜதந்திர உறவிற்கான கதவுகளை ஒபாமா நிர்வாகம் திறக்க முற்பட்டது. பொருளாதாரத் தடைகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டன. இருதரப்பிற்குமிடையில் உயர்மட்ட நேரடிச் சந்திப்புகள் இடம்பெற்றன. 2016 இல் ஒபாமா நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் கியூபா சார்ந்த ஒரு நல்லிணக்கக் கொள்கை மாற்றமாக நோக்கப்பட்டது. இராஜதந்திர மீள் உருவாக்கம் அல்லது இரு நாட்டுக்குமிடையிலான உறவில் ஒரு இயல்புநிலை ஏற்படுத்துதல் எனும் அளவில் கணிக்கப்பட்டது.

டிறம்ப் நிர்வாகத்தின் விடாப்பிடி
ஆனபோதும் 2016இல் நிகழ்ந்த ஆட்சிமாற்றமும் டிறம்பின் வருகையும் அமெரிக்க – கியூப உறவினை மீண்டும் நிலைக்குக் கொண்டுபோயுள்ளன. கியூபாவிற்கு எதிரான பொருளாதாரத்தடைகள், கட்டுப்பாடுகளை டிறம்ப் நிர்வாகம் விரிவுபடுத்தியது. மட்டுமல்லாமல் கியூபாவினுடைய சர்வதேச மருத்துவப் பங்களிப்பிற்கு அமெரிக்கா பெரும் இடையூறுகளைச் செய்துவருவதாக கியூபா குற்றம்சாட்டியுள்ளது. கியூப மருத்துவக் குழுக்களை பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேற்றுவதற்குரிய அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகித்து வருகின்றது.

பொலிவியா மற்றும் பிரேசிலிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டாயிற்று. கியூபாவிற்குரிய இறக்குமதிகளைச் செய்யும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை வழங்கியுள்ளதோடு, கியூப வர்த்தகத்தை மேலும் தளம்பச் செய்து உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கிவருகின்றது டிறம்ப் நிர்வாகம்.

ஓபாமா நிர்வாகத்தின் புதிய அணுகுமுறையின் ஒரு அங்கமாக இருநாட்டுக்குமிடையிலான மருந்துப்பொருட்கள் பரிமாற்றமும் தொடங்கியிருந்தது. 2015இல் நுரையீரல் புற்றுநோய் எதிர்ப்புக்குரிய Cimavax எனும் புதிய தடுப்பூசி அமெரிக்காவிற்கு அனுப்புவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதான தகவல் வெளியாகியிருந்தது. இம்மருந்து கியூபாவின் மூலக்கூறு நோயெதிர்ப்பு மையத்தினால் (Center for Molecular Immunology) தயாரிக்கப்பட்டதாகும்.

2010இலிருந்து உலக சுகாதார அமைப்பும் பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பும் (Pan American Health Organization) கியூபாவுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றன. மகப்பேறுக்கு முற்பட்டகாலப் பராமரிப்பு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் துணைகளுக்கான எச்.ஐ.வி பரிசோதனை, எச்.ஐ.வி தொற்றுள்ள தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம், அறுவைச்சிகிச்சை மூலமான குழந்தை பிறப்பித்தல், தாய்ப்பால் மாற்று போன்ற திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு மருத்துவத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மனிதப் பேரிடர் காலத்திலும் கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா
கொரோனா நெருக்கடி என்பது சமூக, பொருளாதார, பண்பாட்டு, வாழ்வியல் என சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது என்ற போதும் நேரடியாக மருத்துவத்துறையுடன் அதிகம் தொடர்புபட்டது. நாடுகள் தத்தமது பொதுசுகாதாரத்துறையின் கட்டமைப்புகளையும் அவற்றின் இயங்குவலுவினையும் மீளபரிசீலனைக்கும் மீள்கட்டமைப்பிற்கும் உள்ளாக்க வேண்டிய தேவையை நிர்ப்பந்தித்துள்ளது.

இத்தகு மனிதப் பேரிடர் காலகட்டத்திற்கூட கியூபாவிற்கெதிரான தன் தீவிரத்தினை
அமெரிக்கா கைவிடவிடவில்லை. ஏனைய நாடுகளுக்கான கியூபாவின் மருத்துவ உதவிகளைத் தடுக்கும்வகையில் பகிரங்கமாக முனைப்புக் காட்டிவருகிறது. கியூப மருத்துவப் பங்களிப்பினை நிராகரிக்குமாறு, அமெரிக்க அரசாங்கம் ஹவானாவிலுள்ள அதன் தூதரகத்தினூடாக உதவிபெறும் நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச மருத்துவ சேவைகளின் மூலம் கியூப மருத்துவர்களும் தாதியர்களும் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை கியூப அரசாங்கம் பிடித்துக்கொள்கின்றது. மருத்துவப் பணியாளர்கள் மோசமான சுரண்டலுக்கு உடபடுத்தப்படுகின்றார்கள் என ஹவானாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ரிவிட்டர் தளத்தில் பதிவிட்டிருப்பதாக Cuban News Agency செய்திச் சேவையை மேற்கோள் காட்டிய தகவல் வெளிவந்திருந்தது. இது புதிதல்ல. ஏலவே கியூப மருத்துவத்துறையை அது பங்களித்துக்கொண்டிருக்கும் நாடுளிகளிலிருந்து வெளியேற்றுவதற்கான அழுத்தங்களை அமெரிக்கா கொடுத்து வந்திருக்கின்றது. ஆனபோதும் இன்றைய கொரோனா நெருக்கடிகளின் போதும் அதே அணுகுமுறையைத் தொடரவதென்பது அமெரிக்காவின் மானிட விரோதப் போக்கினை வெளிப்படுத்துகின்றது.

கியூப மருத்துவர்களை இழிவுபடுத்தும் பின்புலங்களோடு, கியூபாவைப் பொருளாதார ரீதியிலும் முடக்கும் முனைப்பின் வெளிப்பாடு இதுவாகும். பொலிவியா, பிரேசில், எகுவாடோர் போன்ற நாடுகளில் மக்கள் போராட்டங்களை கியூபா தூண்டி விடுகின்றது என்ற குற்றச்சாட்டினை இந்நாட்டின் அமெரிக்க ஆதரவு வலதுசாரி அரசாங்கங்கள் முன்வைத்துள்ளன. இவ்வாறான காரணங்களை முன்வைத்து அங்கிருந்து கியூப மருத்துவத்திட்டங்களை நிறுத்தி மருத்துவப் பணியாளர்களை வெளியேற்றியுள்ளன.

பெருந்தொற்று நெருக்கடியின் உச்ச விளைவுகளுக்கு மத்தியிலும் கியூபாவிற்கான மருந்துப்பொருட்கள், செயற்கைச் சுவாசக்கருவிகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை உட்பட்ட பரிமாற்றங்களைத் தடுக்கின்றது. கியூபாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி வந்த Swiss manufacturer IMT Medical மற்றும் ventilator company Autronic இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க ஏVyaire Medical நிறுவனத்தின் பங்காளர்களாக உள்ளடக்கப்பட்டதையடுத்து கியூபாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்க முடியாதென இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இது ஏப்ரல் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்போருக்குப் பின்னான உலக ஒழுங்கில் அதிகார அரசியல், பொருளாதார நலன், செல்வாக்குச் செலுத்தல் அணுகுமுறைகளுடன் ஒருபக்கம் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குத் தத்தமது இராணுவங்களை அனுப்பின. செப்ரெம்பர் 11 இற்குப் பின்னான அமெரிக்க நலன்களை முன்னிறுத்திய மற்றுமோர் புதிய உலக ஒழுங்கிலும் அமெரிக்கா தலைமையில் அப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, லிபியா என உலகம் முழுவதும் மேற்குலகம் இராணுவத்தை அனுப்பி போர்களை விரிவுபடுத்தியுள்ளது. கொரோனா இன்னுமோர் பதிய உலக ஒழுங்கினைத் தோற்றுவிக்கவிருக்கின்றது. உலகம் முழுவதும் அதிகார நலன்களுக்காக அமெரிக்காவும் மேற்குலகமும் இராணுவங்களை அனுப்பி மனித குலத்தினை அழித்துவரும் புறநிலையில்தான் உலகெங்கும் மருத்துவர்களை அனுப்பி மனித குலத்தினை மீட்கும் உன்னதப் பணியினைக் கியூபா செய்து வருகின்றது.

25/04/2020

Leave A Reply