கொலம்பியா: முரண்பாடும் சமாதானப் பேச்சுகளும் தீர்வும்

இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்பதை இருதரப்பும் உணர்ந்த புறநிலையில் அரசியல் ரீதியிலேயே கொலம்பியாவின் முரண்பாடுகளுக்குத் தீர்வைக் கண்டடைய முடியுமென்று இருதரப்பும் நம்பிக்கையும் விருப்பும் கொண்டிருந்த புறநிலையிலேயே பேச்சுவார்த்தைகள் நேர்மறையான பாதையில் நகர்ந்தன. நான்கு ஆண்டுகளாக முன்னேற்றகரமாக நகர்ந்து வரும் கொலம்பிய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான இறுதித்தீர்வு 2016 இறுதிப்பகுதியில்; எட்டப்பட்டது. கொலம்பியாவின் அரசியல் எதிர்காலத்தைத் திடப்படுத்தும் வகையிலானதும் நிலைத்து நீடிக்கக்கூடியதுமான இறுதித்தீர்வாகவும் கருதப்படுகின்றது.

கொலம்பிய கிளர்ச்சியாளர்களுக்கும் (FARC and ELN) கொலம்பிய அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் கவனத்தை ஈர்த்துள்ள அனைத்துலக விவகாரங்களில் ஒன்றாகவுள்ளது. இரு தரப்பிற்குமிடையிலான முதலாவது பேச்சுவார்த்தை 2012 ஒக்ரோபர: மாதம் ஒஸ்லோவில் தொடங்கப்பட்டது. இச்சமாதான முயற்சியில் இருதரப்பிற்குமிடையிலான அனுசரணை நாடாக நோர்வே விளங்குகின்றது. தொடர்ச்சியான பலசுற்றுப் பேச்சுகள் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெற்றன. இந்தப்பின்னணியில் கொலம்பியாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்கான மூலகாரணிகள், கெரில்லா அமைப்புகளின் தோற்றம், வளர்ச்சி, சமாதானப் பேச்சுகள் பற்றியதான ஒரு பார்வையைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

தென்-அமெரிக்காவை அமைவிடமாகக் கொண்டுள்ள கொலம்பியா பசுபிக் மற்றும் கரிபியன் கடல்களை எல்லைக் கரையோரங்களாகக் கொண்டுள்ளதோடு, எக்குவாடோர், வெனிசுவெலா, பிரேசில் ஆகிய நாடுகளை அயல்நாடுகளாகவும் கொண்டுள்ளது. 46 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்டுள்ள இந்நாட்டின் தேசிய மொழி ஸ்பானிஸ். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இனக்குழுமங்கள் இங்கு வாழ்கின்றனர். வர்க்க ரீதியான வேறுபாடுகள் நிறைந்த சமூகக்கட்டமைப்பினைக் கொலம்பியா கொண்டுள்ளது. வறியோருக்கும் செல்வந்தருக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. கிராமங்களின் விவசாய நிலங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சில நிலப்பிரபுகளுக்குச் சொந்தமானவையாகவுள்ளன.

FARC (Revolutionary Armed Forces of Colombia) என்ற கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படை மற்றும் ELN (National Liberation Army) எனப்படும் கொலம்பிய தேசிய விடுதலை அமைப்பு ஆகியன கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதப்போராட்டங்களை முன்னெடுத்த முக்கிய கெரில்லா அமைப்புகளாகும். வேறு பல கெரில்லா அமைப்புகள் இயங்கிய போதும் இவ்விரு அமைப்புகளுமே பலம் மிக்கனவாக வளர்ந்த அமைப்புகள். தென் அமெரிக்காவில் பெரிய கெரில்லா அமைப்பாக FARC பார்க்கப்படுகின்றது.

ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அரசியல் தீர்வினை எட்டுதல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு உரிமைகள், விவசாய நிலங்கள் பங்கீடு தொடர்பான மறுசீரமைப்பு, போதைப்பொருள் பிரச்சினைக்கு முடிவுகட்டுதல் என்பனவற்றிற்கு பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென்ற அடிப்படையில் சமாதானப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு 2016 இறுதியில் சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டது. இருதரப்பிற்குமிடையிலான சமாதான உடன்படிக்கை 50 ஆண்டுகால ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

முரண்பாட்டுக்கான வரலாற்றுப் பின்னணிகளைப் புறந்தள்ளி, செப்ரெம்பர் 11 இன் பின்னர் பயங்கரவாதத்திற்கெதிரான போராகச் சித்தரிக்கப்பட்டு கிளர்ச்சி அமைப்புகளை அழித்தோழிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது கொலம்பிய அரசாங்கம். 2002 – 2010 காலப்பகுதியில் அரசதலைவராகவிருந்த Álvaro Uribe காலப்பகுதியில் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கொலம்பிய படைத்துறையைப் பலப்படுத்தவும், FARC அமைப்பிற்கெதிரான போருக்கும் அமெரிக்கா பெருந்தொகை நிதியுதவியை கொலம்பியாவிற்கு வழங்கி வந்தது. கிளர்ச்சி அமைப்புகள் பெரும் நிலப்பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன.

கொலம்பியாவின் உள்நாட்டுப் போர் அரை நூற்றாண்டு கால நீட்சியுடையது. 1964 காலப்பகுதியிலிருந்து அங்கு ஆயுதப்போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. 50 ஆண்டு கால போர்ச்சூழலினால் அந்நாட்டு மக்கள் பெரும் மனித அவலங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். 250 000 வரையான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5 மில்லியன் வரையான மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.

2012 இற்கு முன்னரும் பல தடவைகள் பேச்சுவார்த்தை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. 2012 இலிருந்து நான்கு ஆண்டுகால பேச்சுவார்த்தைகள் 2016 இறுதியில் முடிவுக்கு வந்தன.

FARC அடிப்படையில் கொள்கை ரீதியாக ஒரு இடதுசாரிக் கெரில்லா அமைப்பாகும். நில உரிமை மறுசீரமைப்பு, சமூக மறுசீரமைப்பு, ஜனநாயக மயப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை, அதிகாரப்பரவலாக்கல் ஆகியன இந்த அமைப்பின் போராட்டக் கோரிக்கைகள். நாட்டில் நடந்தேறிய இரத்தக்களறிக்கு தாமும் காரணமென்று பேச்சுவார்த்தைகளின் போது FARC பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. அதன் மூலம் அந்த அமைப்பு தன்னைச் சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கியது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கொலம்பிய அரசாங்கமும் ஐம்பது ஆண்டு கால முரண்பாட்டுச் சூழலில் நிகழ்ந்தேறிய மோசமான அவலங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் தாம் பொறுப்பேற்பதாக அறிவித்தது. தம்மைச் சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி, நடந்தேறிய உரிமை மீறல்களுக்கான தத்தமது பொறுப்பினை வெளிப்படைத்தன்மையுடன் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளமை பேச்சுவார்த்தையின் முன்னோக்கிய நகர்விற்கான முக்கிய படிநிலையாகக் கருதப்படுகின்றது.

1948 – 1958 வரையான காலப்பகுதியிலும் கொலம்பியா பெரும் போருக்கு முகம் கொடுத்தது. நாட்டின் பழமைவாத சக்திகளுக்கும் தாராளவாத சக்திகளுக்குமிடையிலான இந்தப் போர் 300 000 வரையான உயிர்களைப் பலியெடுத்ததாக கூறப்படுகின்றது. இந்தப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கிராமப்புற விவசாயிகள் தமது பாதுகாப்பிற்காக தனியான ஆயுதப்படைகளை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்ட படைகள் நாட்டின் கொம்யூனிச கட்சியின் ஆதரவைப் பெற்றது. கொம்யூனிசக் கட்சியும் விவசாயிகள் மத்தியில் செல்வாக்கினை வளர்த்துக்கொள்ள இப்புறநிலை ஏதுவாக அமைந்ததாக அறிய முடிகின்றது.

அரச இயந்திரத்தின் வேலைவாய்ப்புகள் மேற்சொன்ன இரண்டு தரப்புகளுக்குமிடையில் பங்கிடுதல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இருதரப்பினரின் பங்குபற்றல் ஆகிய இணக்கப்பாடு எட்டப்பட்ட புறநிலையில் 1958 இல் பழமைவாத முகாமுக்கும் தாராளவாத முகாமுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. இவ்விரு தரப்பினரும் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தடைசெய்து, ஒற்றை அதிகார மேலாதிக்கத்தை நிலைநாட்டினர். இந்தப் புறநிலையில் இடதுசாரிச் சிந்தனையைக் கொண்டதும், விவசாயிகளால் உருவாக்கப்பட்டதுமான ஆயுதப்படைகள் மத்தியிலிருந்து கெரில்லா விடுதலை அமைப்புகள் தோற்றம்பெற்று வளரத் தொடங்கின. 1959இல் நிகழ்ந்த கியூபப்புரட்சியும் கொலம்பியாவில் விடுதலை அமைப்புகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நேர்மறையான தாக்கமாகவும் உந்துதலாகவும் அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

FARC மற்றும் ELN ஆகியன கொலம்பியாவின் பெரிய ஆயுதக்கிளர்ச்சி அமைப்புகளாக வளர்ச்சி கண்டு, பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. காலப்போக்கில் பல துணை இராணுவக்குழுக்களும் உருவாகின. துணை ஆயுதக்குழுக்களை ஒன்றிணைத்து கூட்டுப்படையொன்று (United Self-Defense Forces of Colombia) 90களின் இறுதியில் உருவாக்கப்பட்டது. 80களில் நிலப்பிரபுக்களால் உருவாக்கப்பட்ட இவ்வகைத் துணை ஆயுதக்குழுக்கள் FARC மற்றும் ELN கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக, அரச இயந்திரத்தைப் பாதுகாக்கும் முனைப்புடன் கொலம்பிய கையாளப்பட்டன.

கொலம்பியாவைப் பொறுத்தவரை போதைப்பொருள் பெரும் பிரச்சினையாக இருந்துவந்துள்ளது. துணை இராணுவக்குழுக்கள் மற்றும் கெரில்லா அமைப்புகள் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்திலிருந்தே தமக்கான நிதிவளத்தை பெரிதும் பேணிவந்துள்ளன எனப் பரவலாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. போதைப்பொருள் உற்பத்தி ஒழிப்பு பேச்சுவார்த்தையின் முக்கிய பேசுபொருட்களில் ஒன்றாக இருந்தது.

இது விடயத்தில் அமெரிக்கா பல ஆண்டுகளாக தலையிட்டு வந்துள்ளது. அமெரிக்கா உட்பட உலகளாவிய ரீதியில் விற்கப்படும் Cocaine, Marijuana வகைப் போதைப்பொருட்கள் கொலம்பியாவில் பயிரிடப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்புடன் அமெரிக்கா இதில் இறங்கியுள்ளது. கொலம்பியாவிலுள்ள போதைப்பொருள் செடிகளை இரசாயன ஊசிமருந்து மூலம் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் 2001இலிருந்து அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கை உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. போதைச் செடி அழிப்பிற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன ஊசி மருந்துகள் அந்த மண்ணிலுள்ள ஏனைய வளம் மிக்க மரங்கள், பயிர்ச்செடிகளையும் பூண்டோடு அழிக்கக்கூடிய விசமருந்துகள். இது ஏலவே வறுமை சூழ்ந்துள்ள விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் இதுவென்பது முதலாவது விமர்சனம். அமெரிக்காவின் தலையீட்டுக்கான உண்மையான காரணம் அங்குள்ள எண்ணெய் வளத்தினைக் கையகப்படுத்துதலேயன்றி போதைச்செடி அழிப்பு அல்ல என்பது இரண்டாவது விமர்சனம். கிளர்ச்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலுள்ள கொலம்பியாவின் தெற்கு பிராந்தியமான அமாசூனாஸ் (Amazonas) எண்ணெய் வளத்தினைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே கொலம்பியா மீதான அமெரிக்காவின் தலையீட்டுக்கும் ஈடுபாட்டுக்கும் எண்ணெய் வளமே முதன்மைக் காரணியென்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

‘செப்ரெம்பர் 11’ இனை அடுத்து FARC மற்றும் ELN அமைப்புகளை அமெரிக்கா பயஙகரவாதப்பட்டியலில் இணைத்தது. இந்த அமைப்புகள் ஐரோப்பிய ஒன்றியம், கொலம்பியா, கனடா, சிலி, நியூசிலாந் ஆகிய நாடுகளும் இவற்றைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்திருந்தது. வெனிசுவேலா, பிரேசில், அர்ஜென்டீனா, எக்குவாடோர், நிகரகூவா ஆகிய அந்தப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் இந்ந அமைப்புகளைத் தடைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே இதுவரை கிட்டத்தட்ட 12 நாடுகளின் சமாதான முயற்சிகளில் அனுசரணை நாடாக செயற்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை வெற்றியளிக்கவில்லை என்பது தனியாகப் பேசப்படவேண்டிய விவகாரங்கள். 1998 காலப்பகுதியிலிருந்து கொலம்பிய சமாதான முயற்சியில் நோர்வே களமிறங்கியிருந்தது. ஐ.நா.வின் துணைப்பொதுச் செயலாளராக நோர்வேஜிய இராஜதந்திரியான ஜான் ஏகலாண்ட் அவர்கள் பொறுப்புவகித்த போது கொலம்பியாவிற்கான ஐ.நா பிரதிநிதியாகவும் அவர் பொறுப்பு வகித்தார். அக்காலப்பகுதியில் அவரது தலைமையில் நோர்வே கொலம்பிய சமாதான முயற்சிகளில் தனது முனைப்பினைத் தொடங்கியிருந்தது. பிரான்ஸ், ஸ்பெயின், கியூபா, சுவிஸ் ஆகியனவும் இம்முயற்சியில் நோர்வேக்கு துணைநின்றன.

வறிய விவசாயிகளுக்குரிய நிலப்பங்கீடு, விவசாயத்துறையில் மறுசீரமைப்பு ஆகியன கிளர்ச்சியாளர்களின் மூலக்கோரிக்கைகளாகும். FARC, ELN அமைப்புகளின் ஆயுதக்கையளிப்பு, மைய அரசியல் நீரோட்டத்தில் பங்கேற்பு சார்ந்த விவகாரங்களும் பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

கிழக்குத்தீமோரில் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சி வெற்றியில் முடிவடைந்தது. இந்தோனேசிய ஆக்கிரமிப்பிலிருந்து கிழக்குத்தீமோர் தன்னை விடுவித்துக் கொண்டதோடு, பொதுவாக்கெடுப்பு மூலம் தனிநாடாகவும் உருவானது. இலங்கைத் தீவில் நோர்வே தலைமையிலான சமாதான முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது. பாரிய இன அழிப்பினைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டதோடு, விடுதலைப் போராட்ட அமைப்பும் அழிக்கப்பட்டது. பலஸ்தீன – இஸ்ரேல் தரப்புகளுக்கிடையிலான நோர்வேயின் சமாதான முயற்சி, அரசியல் தீர்வுகள் எட்டப்படாது 20 ஆண்டுகளைத் தாண்டி இழுபடுகின்றது. 2011இல் பொதுவாக்கெடுப்பு மூலம் தனிநாடாக உருவான தென்-சூடான் சமாதான முயற்சிகள் அமெரிக்கா தலைமையில் நடைபெற்றிருந்தாலும் நோர்வேயும் முக்கிய பங்காற்றியிருந்தது.


மேற்கூறப்பட்ட நோர்வேயின் தோல்வியுற்ற சமாதான முயற்சிகளுக்கான பொறுப்பினை நோர்வேயின் தலையில் மட்டும் கட்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. சமாதான முயற்சிகளின் தோல்விகளுக்கு அனைத்துலக பிராந்திய சக்திகளோடு, முரண்பாட்டில் தொடர்புபட்ட தரப்புகள் முக்கிய பொறுப்பேற்க வேண்டியவர்களாவர். போர் மற்றும் முரண்பாட்டுச் சூழல்கள் நிலவும் நாடுகள் மற்றும் தரப்புகளுக்கிடையிலான பல சமாதான முயற்சிகளுக்கு நோர்வே அனுசரணை நாடாக செயற்பட்டிருக்கின்றது. தற்போதும் செயற்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் சமாதானத்திற்காக உழைப்பது தொடர்பான ஒரு பிம்பம் அனைத்துலக மட்டத்தில் நோர்வேக்கு உண்டு. சமாதான முயற்சிகளின் வெற்றி தோல்விகள் பற்றிய மீளாய்வுக்கு அப்பாற்பட்டு இந்த பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. சமாதான முயற்சிகளில் வல்லரசுகளினதும் பிராந்திய சக்திகளினதும் நலன்களை நிலைநாட்டுவதற்கான கருவியாக நோர்வே கையாளப்படுகின்றது என்ற விமர்சனங்களும் உள்ளன.

தாம் சிறியதொரு நாடு என்ற அடிப்படையில் சமாதான முயற்சிகளில் மட்டுப்படுத்தப்பட்ட செயல்வெளி மட்டுமே தமக்கு இருப்பதாகவும், முரண்பாட்டில் தொடர்புபட்ட தரப்புகளின் பரஸ்பர விட்டுக்கொடுப்பு மற்றும் சமாதானத்தின் மீதான உண்மையான விருப்பு நோக்கிய செயற்பாடுகள் மற்றும் பிராந்திய, அனைத்துலக சக்திகளின் கைகளிலேயே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான திறவுகோல் இருக்கின்றது என்ற தொனிப்பட எரிக் சூல்ஹைம் போன்ற நோர்வேயின் சமாதான அனுசரணையாளர்கள் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்பதை இருதரப்பும் உணர்ந்த புறநிலையில் அரசியல் ரீதியிலேயே கொலம்பியாவின் முரண்பாடுகளுக்குத் தீர்வைக் கண்டடைய முடியுமென்று இருதரப்பும் நம்பிக்கையும் விருப்பும் கொண்டிருந்த புறநிலையிலேயே பேச்சுவார்த்தைகள் நேர்மறையான பாதையில் நகர்ந்தன. நான்கு ஆண்டுகளாக முன்னேற்றகரமாக நகர்ந்து வரும் கொலம்பிய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான இறுதித்தீர்வு 2016 இறுதிப்பகுதியில்; எட்டப்பட்டது. கொலம்பியாவின் அரசியல் எதிர்காலத்தைத் திடப்படுத்தும் வகையிலானதும் நிலைத்து நீடிக்கக்கூடியதுமான இறுதித்தீர்வாகவும் கருதப்படுகின்றது.

பொங்குதமிழ், டிசம்பர் 2014

(சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2014 காலத்தில் எழுதப்பட்ட கட்டுரை. 2016இல் இறுதித் தீர்வு எட்டப்பட்டமை Update செய்யப்பட்டுள்ளது)

Leave A Reply