‘கோவிட் – 19’ தடுப்பூசி: நீதியற்ற பங்கீடும் காப்புரிமை விலக்குக் கோரிக்கையும்!

தடுப்பூசி பங்கீட்டில் நீதியற்ற அணுகுமுறைக்கும் காப்புரிமை விலக்குக்கு எதிரான போக்கிற்குமான முதன்மைக் காரணி வணிகநோக்கம். ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, சுவிஸ், நோர்வே போன்ற நாடுகள், உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி அளவினை அதிகரிக்கின்ற அனுமதியைத் தடுக்கின்றன. காப்புரிமை விலக்கிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதனூடாக வறிய, நடுத்தர நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதையும் சென்றடைவதையும் தடுக்கின்றன

காப்புரிமை விலக்கிற்கு எதிரான நாடுகள் மீது முறைப்பாடு

செல்வந்த நாடுகள் இன்னமும் வறிய மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கான தடுப்பூசித்திட்டத்தைத் தடுத்துவருகின்றன. தடுத்துவருகின்றன என்பதன் பொருள் நடைமுறையில் இரண்டு வகைப்படுகின்றது. ஒன்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு, தமது தேவைக்கும் அதிகமாக கொள்வனவு செய்துவருகின்றமை. மற்றையது கோவிட்-19 தடுப்பூசித் தயாரிப்பின் காப்புரிமையில் தற்காலிக விலக்களிப்பதற்குத் தடையாக இருக்கின்றமை. தடுப்பூசித் தயாரிப்பின் காப்புரிமை விலக்களிப்பிற்குத் தடையாக ஐரோப்பிய ஒன்றியம், பிரத்தானியா, நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகள் உள்ளன.

பெருந்தொற்றானது கடந்த 2 ஆண்டுகளில் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்துள்ளது பெருந்தொற்று. அவர்களில் 115 000 வரையானவர்கள் மருத்துவப் பணியாளர்கள். உலகின் 28 நாடுகளைச் சேர்ந்த மருத்துவத்தாதியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் கூட்டாக இந்நாடுகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் மையத்தில் முறைப்பாடு செய்துள்ளன. ஐ.நாவின் நலவாழ்வு உரிமைகளுக்கான சிறப்பு அறிக்கையாளர் Tlaleng Mofokeng இற்கு அம்முறைப்பாட்டு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிப் பங்கீடு தொடர்பான மேற்கு நாடுகளின் அணுகுமுறை மற்றும் ஒத்துழையாமை என்பன அநாவசியமான உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்கின்றன – அது பாரிய மனித உரிமை மீறல் – தடுப்பூசி மேலாதிக்கம் என அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரசாங்கங்கள், உலக மக்களின் நலவாழ்வை விலைகொடுத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வணிக இலாபத்தினைப் பாதுகாக்கின்றன என்றும் ஐ.நாவிற்கு கையளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரேசில், இந்தியா, தென் ஆபிரிக்கா, கிறீஸ் உட்பட்ட 28 நாடுகளைச் சேர்ந்த 2.5 மில்லியன் மருத்துவத்தாதியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் கூட்டமைப்பு மேற்படி முறைப்பாட்டினைச் செய்துள்ளது. இடதுசாரிச் செயற்பாட்டாளர்களையும் சமூக அரசியல் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கின்ற Pசழபசநளளiஎந ஐவெநசயெவழையெட எனும் அமைப்பு இச்செயற்பாட்டினை ஒருங்கிணைத்துள்ளது.

130 நாடுகள் ஆதரவு
மேற்கூறப்பட்ட இந்த நாடுகள், உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி அளவினை அதிகரிக்கின்ற அனுமதியைத் தடுக்கின்றன. காப்புரிமை விலக்கிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதனூடாக வறிய, நடுத்தர நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதையும் சென்றடைவதையும் தடுக்கின்றன. ஒக்ரோபர் 2020 இந்தியாவும் தென்-ஆபிரிக்காவும் உலக வணிக மையத்தில் ஒரு ஆலோசனையை முன்மொழிந்திருந்தன. கோவிட்-19 தடுப்பூசி, மருந்துவகைகள், மருத்துவ உபகரணங்களுக்கான புலமைச்சொத்துரிமையில் தற்காலிக விலக்கினைக் கோருதல் அந்த ஆலோசனை முன்மொழிவின் உள்ளடக்கம். அந்த முன்மொழிவினைத் தீர்மானமாகக் கொண்டு வருவதற்கு உலக வணிக மையத்தில் ஒருமித்த உடன்பாடு எட்டப்படவேண்டும். அமெரிக்கா உட்பட்ட 130 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, சுவிஸ், பிரித்தானியா ஆகிய நான்கு தரப்புகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளன. நோர்வேயில் கடந்த செப்ரெம்பர் புதிய அரசாங்கம் பதவியேற்றதை அடுத்து, தற்காலிக காப்புரிமை விலக்கிற்கான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைச் சொத்துரிமைகளின் வணிக அம்சங்கள் தொடர்பான உடன்படிக்கை என்பது ஒரு சர்வதேச உடன்படிக்கையாகும் (The Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights – TRIPS). 1994இல் உலக வணிக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டதாகும். பெரும்பாலான புலமைசார் சொத்து வகைகள் தொடர்பில் அவற்றின் காப்புரிமைக்கும் நெறிப்படுத்தலுக்குமான ஆகக்குறைந்த தரநிர்ணயங்களையும் விதிமுறைகளையும்; உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்துகின்றது. தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குரிய மருத்துவ, தொழில்நுட்ப வசதிகள் உள்ள நாடுகள் தமக்குத்தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும், ஏனைய நாடுகளுடன் பகிரவுமான வழியை ஏற்படுத்துவது காப்புரிமை விலக்குக் கோரிக்கையின் நடைமுறை அர்த்தமாகும்.

பங்கீட்டில் பாரபட்சம் – புதிய புதிய தொற்றலைகள்
உலகளாவிய பெருந்தொற்று மீண்டும்மீண்டும் புதிய புதிய அலைகளாக இரண்டாண்டுகளைக் கடந்து தொடர்கின்றது. தடுப்பூசி பாவனைக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. பெரும் செல்வந்த நாடுகளின் மக்களில் சராசரியாக 70 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டு குறித்த வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசித் திட்டமும் தொடங்கப்பட்டாயிற்று. மொத்தமாக ஏழு பில்லியன் தடுப்பூசிகளை இந்நாடுகள் கொள்வனவு செய்துள்ளன. வறிய, நடுத்தர வருமான நாடுகளின் நிலை முற்றும் தலைகீழாக உள்ளன. சராசரியாகப் 10 வீதமான மக்களுக்கே இரண்டு தடவைகள் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 300 மில்லியன் வரையான தடுப்பூசிகளே இந்நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆபிரிக்க நிலைமைகள் மேலும் மோசம். 6 வீதத்தினருக்கு மட்டுமே இரண்டு தடவைகள் தடுப்பூசிகள் கிட்டியுள்ளன.

பாரபட்சமான பங்கீடு அநீதியானது என்பது மட்டுமல்ல முழு உலகிற்கும் பேராபத்தானதும்கூட. புதிய புதிய உருமாற்றங்களுடன் வைரஸ் வகைமைகள் தோன்றுவதற்கும் மீண்டும் மீண்டும் புதிய தொற்றலைகள் தோன்றி நீடிப்பதற்கும் வழிகோலக்கூடியது. உலக நாடுகளுக்கான பங்கீட்டில் சமநிலை பேணப்படாதுவிடின், தடுப்பூசிகளை மீறி, கொரோனா பரவக்கூடிய ஆபத்துகள் பற்றி முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கை யதார்த்தத்தில் இன்று நடந்தேறிவருகின்றது.

மீண்டும் சமூக முடக்கம்
நவம்பர் இறுதியில் ‘ஒமிக்ரோன் – Omicron’ என்ற புதிய உருமாறிய வைரஸ் வகைமை தற்போது பல நாடுகளில் பரவத்தொடங்கியிருந்தது. முன்னைய வகைமைகளைவிட ஒமிக்ரோனின் தொற்றுவேகம் அதிகமெனப்படுகின்றது. இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுக்கும் பாடசாலைச் சிறுவர்களுக்கும் அதிகமாகப் பரவிவருகின்றது. பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளின் மூலமாக வீட்டிலுள்ள ஏனையவர்களுக்கும் தொற்றிவருகின்றது. இதன் விளைவாக சமூக முடக்கத்திலிருந்து படிப்படியாகவும் முழுமையாகவும் வெளிவந்த நாடுகள் மீண்டும் இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளன. வாரத்தில் சில நாட்கள் வேலைத்தளங்களிற்குச் சென்றுவந்தவர்கள் மீண்டும் எல்லாநாட்களும் வீட்டிலிருந்து வேலை செய்கின்ற நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் ஒரு மீற்றர் இடைவெளி, ஒன்றுகூடல்கள், கலைநிகழ்வுகள் தொடர்பான விதிமுறைகள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன. சிறுவர் – இளையோர் பாடசாலைகள் பல மீண்டும் ‘வீட்டுக்கல்விக்கு’ சென்றுள்ளன. உதாரணமாக நோர்வே போன்ற நாடுகள் ஒக்ரோபர் நடுவில் முழுவதுமாக கொரோனா விதிகள் நீக்கப்பட்டு டிசம்பர் ஆரம்பத்தில் மீண்டும் அரை முடக்கத்திற்குச் சென்றுள்ளன.

பல்தேசிய வணிக இலாபநோக்கங்களுக்கு முன்னுரிமை
பல்தேசிய வணிக நிறுவனங்களின் இலாபத்தைவிட, மனித உயிர்களுக்கும் மக்களின் நலவாழ்விற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்ற குரல்கள் எழுப்பப்படுகின்றன. தடுப்பூசி உற்பத்தியின் காப்புரிமை விவகாரம் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது. காப்புரிமை விலக்குத் தொடர்பான உடன்பாட்டினை எட்டுவதற்கு உலக வணிக அமைப்பு காத்திருக்கின்றது. டிசம்பர் மாதம் இதுவிவகாரம் தொடர்பான உலக வணிக அமைப்பின் கூட்டம் சுவிஸ் நாட்டில் நடைபெற இருந்தது. ஒமிக்ரோன் பரம்பலின் காரணமாக அக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஒரு முட்டுச்சந்தியில் நிற்கின்றது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் கூட்டம் நடைபெறுமென எதிர்பார்க்க முடியாது எனப்படுகின்றது. காப்புரிமை விலக்குத் தொடர்பான உடன்படிக்கை எட்டப்படுமாயின் ஆபிரிக்காவில் 7 நிறுவனங்கள் தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்குத் தயாராக உள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு கடந்த பயணங்களைக் கட்டுப்படுத்துவது முதன்மைத் திட்டமாகியிருக்கிறது. பல ஐரோப்பிய, ஆசிய நாடுகள் தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து தமது நாடுகளுக்கான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. உலகளாவிய தடுப்பூசி இடைவெளி நிரப்பப்படாமல் தொடருமாயின் புதிய புதிய கோவிட் வைரஸ் வகைமைகள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு?
இன்றைய நிலைமைக்கு முற்றுமுழுதான பொறுப்பு செல்வந்த நாடுகள். பொறுப்பு என்பது மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, தமது தமது சொந்த நலன் சார்ந்த பொறுப்பின்மையின் வெளிப்பாடு என்றுகூடச் சொல்லலாம். தடுப்பூசிப் பங்கீடு உலகளவில் நியாயமாக நடைபெறும்போதுதான் தொற்றுப்பரம்பலைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். திரும்பத்திரும்பச் சமூக முடக்க நிலை நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தலாம். பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணலாம்.

மேற்குநாடுகள் தேர்ந்தெடுத்த பாதை, கைக்கொண்ட அணுகுமுறை உலக நாடுகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளைப் பேணியதன் விளைவே இன்றைய நெருக்கடிக்கான காரணி என்கிறார் Duke Global Health Institute இன் செயற்திட்ட இணைப்பாளர் Andrea Taylor. செல்வந்த நாடுகள் தடுப்பூசி நிறுவனங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் Covax எனும் சர்வதேச தடுப்பூசிப் பங்கீட்டுத் திட்டத்தின் இலக்குகளைக் குழிதோண்டிப் புதைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சனங்களை முன்வைக்கின்றார். வைரசின் ‘டெல்ரா’ வகைமை இந்தியாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, அடுத்த உருமாறிய வகைமை ஆபிரிக்காவில் தோன்றும் என்பது முன்னரே கணிக்கப்பட்ட ஒன்றே என்றும் கூறுகின்றார் Taylor. இது பல்வேறு அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்ட விடயமே. அதாவது பாரபட்சமான தடுப்பூசிப் பங்கீடு பல்வேறு உருமாற்ற வைரசுகளின் தோற்றத்திற்கும் தொற்றுக்கும் பரம்பலுக்குமான காரணியாய் அமையுமென்பதாகும். தடுப்பூசிகளை முந்திக்கொண்டு பதுக்கிய தேசங்கள் அனைத்தும் இப்போது மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய முடக்க நிலைக்குத் திரும்பியுள்ளன.

செயல்வலுவற்ற தடுப்பூசி இலக்கு
G20 நாடுகள் உட்பட்ட சில தரப்புகள் 2021இற்குள் அனைத்து நாடுகளும் 40 வீதமான மக்களுக்கு முழுமையான தடுப்பூசிகள் போடப்படுவதை இலக்காகக் கொண்டிருந்தன. பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கிற்கு ஆதரவையும் தெரிவித்துள்ளன. ஆனால் வெறும் வாய்மொழி இணக்கம் மட்டுமேயன்றி செயல் ரீதியான நகர்வுகள் மிகவும் மந்தம். இந்த இலக்கினை அடைவதாயின் இந்த ஆண்டுக்குள் 650 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் (செயற்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதற்கு மேலதிகமாக) வறிய-நடுத்தர நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும் 80 நாடுகள் இந்த இலக்கிற்கு அண்மையில்கூட நெருங்கமுடியாத புறச்சூழல் நிலவுகின்றது.

ஆபிரிக்காவிற்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக டிசம்பர் முதல்வாரம் அறிவித்துள்ளது. அவற்றில் 600 மில்லியன்களை இலவசமாக வழங்கவுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. சீன மருத்துவப் பணியாளர்களை அனுப்புவதற்கும், மருத்துவத் திட்டங்களைத் தொடங்கவும் உள்ளது. சீனாவிற்கு ஆபிரிக்காவில் பொருளாதார, முதலீட்டு இலக்குகளுக்கான நுழைவாக இத்தகைய உதவித்திட்டங்களைப் பயன்படுத்துவது வழமை என்றபோதும் இன்றைய தடுப்பூசிப் பாரபட்ச சூழலில் ஆபிரிக்க நாடுகளுக்கான உதவிகள் மிக முக்கியமானவை.

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் ஏக அதிகாரம்
தடுப்பூசி பங்கீட்டில் நீதியற்ற அணுகுமுறைக்கும் காப்புரிமை விலக்குக்கு எதிரான போக்கிற்குமான முதன்மைக் காரணி, வணிகநோக்கம் மேலோங்கியிருப்பதனை வெளிப்படுத்துகிறது. Pfzer உலகின் வலிமையான வணிக நிறுவனமாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மேலாதிக்க அதிகார நிலையை அது பெற்றுள்ளது. இது அமெரிக்க நிறுவனம். கோவிட்-19 தடுப்பூசித் தயாரிப்பிற்கு முன்னர், வயாகரா மாத்திரை இந்நிறுவனத்தின் அதிகம் அறியப்பட்ட மருந்துப் பொருள். ஜேர்மன் நாட்டின் BionTech ஆய்வு மற்றும் மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கோவிட்-தடுப்பூசியைத் தயாரித்துவருகிறது. இதற்காக ஜேர்மன் அரசு 375 மில்லியன் ஐரோக்களை தடுப்பூசி நிதியமாக BionTech நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. புற்றுநோய்ச் சிகிச்சைக்கான மருந்துத் தயாரிப்பில் BionTech முக்கியமானது. Pfzer உலகின் முதன்மையான உயிரியல் மருந்துத் (Biopharmaceutical Company) தயாரிப்பு நிறுவனம்.

சந்தையில் முதலிடத்தில் Pfzer
Pfzer முதன்மையான கோவிட்-19 தடுப்பூசிச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதன் விளைவாக BionTech நிறுவனமும் பெரும் வருமானத்தை ஈட்டி வருகின்றது. ஜேர்மன் தேசிய உற்பத்தி வருமானத்தில் அரை வீதத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு தனிநிறுவனமும் ஜேர்மன் நாட்டின் தேசிய உற்பத்தி வருமானத்தில் இத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனப்படுகிறது. அந்நிறுவனத்தின் சராசரி ஆண்டு வருமானம் 3,6 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு 165 பில்லியனாக உயர்ந்துள்ளது. விகிதக்கணக்கில் சொல்வதானால் 4400 வீத வருமான அதிகரிப்பினை அந்நிறுவனம் அடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனும், நாடுகளுடன் நேரடியாகவும் விற்பனை உடன்படிக்கைகளைச் செய்துள்ளது Pfzer. மட்டுமல்லாமல் பெரும் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ள நிறுவனமாக உள்ளதால், பெரும்பாலான செல்வந்த நாடுகளின் கொள்வனவுப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலை அந்நிறுவனத்திற்குரிய ஏக அதிகாரத்தை வழங்க வழிகோலியுள்ளது.

எயிட்ஸ் அனுபவப் பாடம் – மருந்து – காப்புரிமை
எயிட்ஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகம் பெற்றுக்கொண்ட அனுபவத்தினைக் கொரோனாப் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிப் போராட்டத்திலும் கைக்கொள்ளவேண்டுமென்ற கருத்துகளும் பேசுபொருளாகியுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்னர் எயிட்ஸ் என்ற தொற்றுநோய் மருத்துவ ஆய்வு ரீதியாக முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. அதற்கு எதிரான மருத்துவம் கண்டறியப்பட்டு, அதாவது எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டவரைச் சாவிலிருந்து காப்பதற்கான மருந்து கண்டடையப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதற் பதினைந்து ஆண்டுகளும் மருத்துவமில்லாமல் பெருமெண்ணிக்கையிலான நோயாளிகள் பலியாகினர். தீராத கொடிய நோய் என்ற நிலையிலிருந்து மருத்துவச்சிகிச்சையுடன் சாதாரண வாழ்க்கையை வாழக்கூடிய நிலை மருத்துவ வசதியுள்ள பல நாடுகளில் இன்று நிலவுகின்றது. ஆனால் வறிய ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் எயிட்ஸ் நோயாளர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் இல்லை.

எச்.ஐ.வி (HIV) மருந்துகளும் காப்புரிமையோடுதான் முதலில் சந்தைக்கு வந்தன. வறிய நாடுகளில் அம்மருந்துகளை மக்கள் இலகுவில் பெறமுடியாதவாறு அவற்றின் விலையும் உச்சமாக இருந்தன. பின்னர் இந்திய மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த விலையில் எச்.ஐ.வி மருந்துகளின் நகல் தயாரிப்புகளைத் தயாரித்தன. காப்புரிமையைக் கொண்டிருந்த நிறுவனங்கள் எதிர்த்தன. ஆனால் தொடர் அழுத்தங்கள், போராட்டங்கள் காரணமாக காலப்போக்கில் விட்டுக்கொடுத்தன. 1999இலிருந்து எச்.ஐ.வி முதற்கட்ட மருந்துகள் 99 வீத மலிவு விலையில் கிடைக்கின்ற சூழல் ஏற்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு கூறுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளில், மருந்து எளிதாகக் கிடைக்கின்ற புறநிலை காணப்படுவதால் 11 மில்லியன் வரையான எயிட்ஸ் நோயாளர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுதாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பெருந்தொற்றின் சங்கிலி – உலக மயமாக்கல் யாதார்த்தம்
உலகளாவிய இந்தப் பெருந்தொற்றின் சங்கிலியை உடைப்பதென்பது சுலபமானதல்ல. உலக மயமாக்கல் சூழலின் யதார்த்தம் என்பது, கண்ணுக்குப் புலப்படுகின்றதும் புலப்படாததுமான பல அடுக்குகளிலான வலைப்பின்னல்களைக் கொண்டிருக்கின்றது. நாடு கடந்த மனித நடமாட்டம் மட்டுமல்ல, நுகர்வு வாழ்வும் அதன் பொருளுலகும் அத்தகைய பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. இத்தகைய யதார்த்தத்தில் தொற்றுப் பரம்பலின் சங்கிலியை உடைப்பதற்குரிய அடிப்படையாக அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி சென்றடைய வேண்டும். இதுவே இன்றைய நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான மருத்துவ அறிவியல் தீர்வு.

தடுப்பூசி பாவனைக்கு வராதுபோயிருப்பின் ஐரோப்பாவில் மட்டும் இன்னும் அரை மில்லியன் மக்கள் பலியாக நேர்ந்திருக்கும் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டிருக்கின்றது. இங்கேதான் மறுவளமாக ஒரு கேள்வியை மேற்கினை நோக்கிக் கேட்க வேண்டியிருக்கின்றது. தடுப்பூசிக் காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டு, நீதியான முறையில் உலகநாடுகளுக்கிடையிலான பங்கீடு இடம்பெற்றிருப்பின் எத்தனை மில்லியன் உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் என்பதே அந்தக் கேள்வியாகும். தடுப்பூசிப் போராட்டம் உலகின் வலுச்சமநிலையையும் வெகுவாக மாற்றிப்போட்டுள்ளது என்பதும் கவனத்திற்குரியது.

தாய்வீடு
தினக்குரல்
ஜனவரி 2022

Leave A Reply