சர்வாதிகார ஆட்சி, வெகுசனப்போராட்டம், உள்நாட்டுப் போர், சர்வதேசத் தலையீடு – சிரியா பகுதி 1

Assad ஆட்சிபீடம் உள்நாட்டிலும் வெளியிலும் ஒரு அடக்குமுறை ஆட்சிபீடமாகவே பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பான்மை சன்னி முஸ்லீம் மக்களாக இருக்கின்றபோதும், மக்கட்தொகையில் 12 விழுக்காடாகவுள்ள சியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த யுளளயன குடும்ப ஆட்சி 44 ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்தச் சமூகத்தவர்களே அரச இயந்திரத்தினதும் அதன் நிர்வாக அலகுகளினதும் உயர்பதவிகளில் பெரும் சலுகைகளைப் பெற்றுவந்துள்ளனர்.

2010 இறுதிக்காலப்பகுதியில் காலப்பகுதியில் மத்திய கிழக்கில், அரபு நாடுகளில் ஏற்பட்ட வெகுசனப் போராட்டங்களின் தொடர்விளைவாக 2011இல் சிரியா நாட்டிலும் மக்கள் போராட்டம் வெடித்தது. 2000ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் Bashar Al-Assad இன் சர்வாதிகார ஆட்சிபீடத்தை ஆட்டங்காணச் செய்யும் முனைப்புடன் எழுந்த கிளர்ச்சிப் போராட்டம் உள்நாட்டுப் போராக விரிவாக்கமடைந்து 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்துவருகின்றது. பதவி விலகல், அரசியல் மறுசீரமைப்பு மற்றும் ஜனநாயக வெளி உருவாக்கம் என்பனவே மக்களினதும் கிளர்ச்சியாளர்களினதும் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.

22 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்டுள்ள சிரியா இனத்துவ மற்றும் மத ரீதியாகப் பிளவுபட்ட சமூகக் அமைப்பினைக் கொண்டுள்ள தேசம். அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள். அதிலும் பெரும்பான்மையினர் இஸ்லாத்தின் சன்னி பிரிவினைச் சேர்ந்தவர்கள். Assad உட்பட்ட சிரியாவின் ஆட்சிபீட முக்கியஸ்தர்கள் சீயா இன முஸ்லீம் பின்னணியைக் கொண்டவர்கள். சீயா முஸ்லீம்கள் சிரியாவின் மக்கள் தொகையில் 12 வீதத்தினைக் கொண்ட சிறுபான்மையினர்.

44 ஆண்டுகளாக Assad குடும்ப ஆட்சி சிரிய அரசியலில் நீடித்து வந்துள்ளது. 1970இல் தற்போதைய ஜனாதிபதியினது தந்தையான Hafez Al-Assad இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் சிரியாவின் ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியனார். அதற்கு முன்னர் 20 ஆண்டு காலமாக மோசமான அரசியல் திடமின்மை அங்கு நிலவியது. Hafez Al-Assad அரசிற்கு எதிராக இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைமையில் 1982இல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் இரும்புக்கரம் கொண்டு Hafez படைகளினால் முறியடிக்கப்பட்டது. தந்தையினால் எத்தகைய வழிமுறைகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதோ, அதனை ஒத்த மோசமான அணுகுமுறையை மகனும் கையாள்வதாகக் கூறப்படுகின்றது.

பனிப்போரின் ஒரு வகையிலான தயாரிப்பாக Hafez தலைமையிலான சிரியாவின் ஆட்சிபீடம் அமைந்தது. அன்றைய சூழலில் சோவியத் ஒன்றியத்தினைத் தனக்கான பாதுகாப்பு அரணாக ர்யகநண ஆட்சிபீடம் கருதியது. அத்தோடு மேற்கிற்கு எதிரானதொரு தேசியவாதக் கொள்கையும் கட்டமைத்து வளர்த்தெடுக்கப்பட்டது. பனிப்போர் முடிவடைந்து இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்ட தறுவாயிலும், பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் நட்புறவினை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட்ட புறநிலையிலும் தனது கொள்கைப் புதுப்பித்தல் சார்ந்து அக்கறைப்படாமல் இருந்து வந்துள்ளது சிரியாவின் ஆட்சிபீடம்.

ரஸ்யா தொடர்ந்தும் பல வழிகளில் சிரியாவின் ஆதரவு சக்தியாக இருந்து வருகின்றது. சிரிய ஆட்சிபீடத்திற்கு எதிரான ஐ.நா பாதுகாப்புப் பேரவையின் தற்போதைய முனைப்புகள் அனைத்தையும் தனது வீட்டோ அதிகாரம் மூலம் முடக்கி வருகின்றது. சிரியா தொடர்பாக ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் மேற்குலகம் கொண்டு வந்த முன்மொழிவுகளையும் தீர்மானங்களையும் ஏலலே 3 முறை ரஸ்யாவும் சீனாவும தமது வீட்டோ மூலம் செயலிழக்கச் செய்துவிட்டன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சீனாவும் ரஸ்யாவுடன் கைகோர்த்துக் கொள்வது வழக்கம். இத்தகைய சூழல்களில் ஐ.நா பாதுகாப்பு மையமென்பது செயல்வலுவற்ற ஒரு பொறிமுறையாகவே கருதப்படக்கூடியது.

சிரியாவிற்கு பெருந்தொகை ஆயுதங்களை ரஸ்யா வழங்கி வருகி;றது. சிரியாவில் மத்தியதரைக்கடலில் ரஸ்யாவின் கடற்படைத்தளம் ஒன்று உள்ளது. இது மூலோபாய ரீதியில் ரஸ்யாவிற்கு முக்கியமானது. முந்நாள் சோவியத் ஒன்றியப் பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள ரஸ்யாவின் ஒரேயொரு கடற்படைத்தளம் இதுவாகும். பனிப்போர் மனநிலையின் எச்சசொச்சமாக தமக்கான எஞ்சியுள்ள சில ஆதரவு நாடுகளைத் தக்கவைத்தல் அவசியமென்ற கருதுகோளின் அடிப்படையில் சிரியாவிற்கான ரஸ்யாவின் நிபந்தனைகளற்ற உதவிகளைப் பார்க்க வேண்டியுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சிரியாவிற்கு நிபந்தனைகளற்று ஆதரவு வழங்கும் நாடாக ஈரான் விளங்குகின்றது. ஈரான் ஆட்சிபீடமும் சீயா முஸ்லீம் பின்னணியைக் கொண்டுள்ளது என்ற அடிப்படையில் இந்த நெருக்கமான உறவினைப் பார்க்கவேண்டும். அனைத்துலக ரீதியில் ஏலவே தனிமைப்படுத்தப்பட்ட நாடு ஈரான். பிராந்தியத்திலும் இஸ்ரேலுடன் கடுமையான முறுகலையும் முரண்பாட்டினையும் கொண்டுள்ளது. Assad ஆட்சிபீடம் வீழுமானால் ஈரானுக்கான மேலுமொரு ஆதரவு சக்தி இழக்கப்படும்.

Assad ஆட்சிபீடம் உள்நாட்டிலும் வெளியிலும் ஒரு அடக்குமுறை ஆட்சிபீடமாகவே பார்க்கப்படுகின்றது. பெரும்பான்மை சன்னி முஸ்லீம் மக்களாக இருக்கின்றபோதும், மக்கட்தொகையில் 12 விழுக்காடாகவுள்ள சியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த குடும்ப ஆட்சி 44 ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்தச் சமூகத்தவர்களே அரச இயந்திரத்தினதும் அதன் நிர்வாக அலகுகளினதும் உயர்பதவிகளில் பெரும் சலுகைகளைப் பெற்றுவந்துள்ளனர் என்பதும் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் இந்த ஆட்சிபீடத்திற்கெதிரான அதிருப்தி வளர்ந்தமைக்கான காரணிகளில் ஒன்றாக வகைப்படுத்த முடியும்.

சிரியாவின் கிளர்ச்சிப் போராட்டங்களைச் சாத்தியப்படுத்திய வேறு காரணங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் உருவான வெகுசனப்போராட்டங்கள், அவற்றின் ஊடாக சர்வாதிகார ஆட்சிபீடங்களை ஆட்டம் காணவைத்து, ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவுகள் ஏற்படுத்திய நேரடித்தாக்கம் முதலாவது காரணியெனலாம். எடுத்துக்காட்டாக எகிப்த், துனிசியா, மற்றும் லிபியாவைக் கூறலாம். அத்தோடு நாட்டின் பொருளாதார மந்தநிலை, ஆட்சிபிடத்தின் மீதான மக்களின் கடும் அதிருப்தி, விரக்தி, இயலாமை, பெரும்பான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாக அரசியல் தலைமை எனக் காரணங்களைப் பட்டியலிடலாம். மக்கள் போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் பரந்தளவில் பரவச் செய்வதில் இணையத்தின் சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளமையையும் சுட்டிக்காட்ட முடியும்.

2011இல் தொடங்கிய மக்கள் போராட்டத்தினை அரசாங்கத்தரப்பு மிகக்கடுமையாகவும் கொடுமையான படுகொலைகள் மூலமும் நசுக்க முனைந்தது. ஆனாலும் போராட்டங்கள் சிரியாவின் பலநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, பல கிளர்ச்சி ஆயுதக்குழுக்களைத் தோற்றுவித்துள்ளது. Assad அரசு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அடிப்படைவாத இஸ்லாமிய ஜிகாத்துகளை விடுதலைசெய்து அமைதிப்போராட்டங்களை வன்முறையாக மாற்றுவதற்குத் தூபமிட்டதென்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. அமைதிமுறையிலான வெகுசனப்போராட்டங்களை வன்முறைப் போராட்டங்களாக மாற்றுவதனூடு அதனைத் தனது இராணுத்தினை ஏவிவிட்டு அடக்குவதற்கு நியாயம் கற்பிக்கும் மூலோபாயமாகவே இதனைப் பார்க்கமுடியும். சன்னி இஸ்லாமியப் பயங்கரவாதிகள் அரசுக்கெதிரான வன்முறைகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள், அதனை அடக்கும் எதிர்நடவடிக்கைகளில் தனது அரசு ஈடுபட்டுள்ளதாகவே தன்னை நியாயப்படுத்த முனைந்தது.

Assad ஆட்சிபீடத்திற்கெதிரான போராட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் 2012இல் சிரியா தேசிய பேரவை துருக்கியில் உருவாக்கப்பட்டு, அதன் அடுத்த கட்டமாக கிளர்ச்சிக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சிரிய விடுதலைப் படை (Free Syrian Army – FSA) உருவாக்கப்பட்டது. ஆனால் கிளர்ச்சிப்படைகளுக்கிடையிலும் பல்வேறு பிளவுகளும் முரண்பாடுகளும் தலை தூக்கியுள்ளன. இதனை மேலும் சிக்கலாக்கும் வகையில் அல்-கைடாவுடன் தொடர்புடைய அல்லது அதையொத்த அடிப்படைவாதக் கொள்கையுடைய ‘இஸ்லாமிய அரசு’ எனப்படும் IS மற்றும் Al-Nusra ஆகிய பயங்கரவாத அமைப்புகளும் ஆட்சிபீடத்திற்கு எதிராகக் களமிறங்கியுள்ளதோடு, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

பிளவுகள், முரண்பாடுகளைக் கொண்டுள்ள பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள், அரசாங்கத்திற்கும் கிளர்சிக்குழுக்களுக்கும் எதிரான அடிப்படைவாத அமைப்புகள், படைபலம் முழுவதையும் ஏவிவிட்டுள்ள சிரிய ஆட்சிபீடம் ஆகிய முத்தரப்புகளுக்கிடையிலானதொரு சிக்கலானதும் பாரிய மனித அவலங்களைத் தோற்றுவித்துள்ளதுமான போராக சிரியாவின் உள்நாட்டுப்போர் ஆகியிருக்கின்றது. இதில் நான்காவது தரப்பாக அனைத்துலக சமூகத்தையும் (மேற்குலகம்), ஏனைய அரபு நாடுகளையும் (அரபு லீக்) சேர்த்துக் கொள்ளலாம்.

2011 – 2014 வரையான மூன்று ஆண்டுகளில் மட்டும் 200 000 வரையான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 9 மில்லியன் வரையானவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மிக மோசமான முறையில் பொதுமக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்திருந்தன. மக்கள் மீதும் கிளர்ச்சியாளர்கள் மீதும் இரசாயன ஆயுதங்களை அரச படைகள் பிரயோகித்துள்ளதான குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டன. அத்தோடு சிரிய ஆட்சிபீடத்தின் வசமுள்ள அனைத்து இரசாயன ஆயுதங்ளும் அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் வைக்கப்படுவதற்குரிய அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் அது விடயம் தொடர்பான இறுதி உடன்பாடுகள் இதுவரை எட்டப்படவில்லை.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா தலைமையில் ஏனைய மேற்குலக நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவதோடு, அரசியல் ரீதியான ஆதரவினையும் வழங்கி வருகின்றன. சன்னி இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் கிளர்ச்சிக்குழுக்களை ஆதரிக்கின்றன. ஆயுத தளபாடங்களையும் வழங்குகின்றன.

2014 ஜூன் மாதத்திலிருந்து ஈராக்கின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ‘இஸ்லாமிய அரசு – IS’ சிரியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பினையும் கைப்பற்றியுள்ளது. தற்போதைய சூழலில் கிளர்ச்சியாளர்களைவிட IS பயங்கரவாதிகளின் கைகளே ஓங்கியுள்ளன. இதன் பின்னணியில் இந்த ஆண்டு (2014) செப்ரெம்பரிலிருந்து ஈராக் மற்றும் சிரியாவில் IS பயங்கரவாதிகளுக்கெதிரான வான்வழித்தாக்குதல்களை அமெரிக்கா தலைமையில் அதன் ஆதரவு நாடுகள் தொடங்கியிருந்தன.

இக்கிளர்ச்சிக்குழுக்களுக்கிடையில் பெரும் அதிகாரப் போட்டி நிலவுகின்றது.
உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் அமெரிக்கா, ரஸ்யா, ஐ.நா மற்றும் அரபு லீக் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை காத்திரமான வகையில் நகரவில்லை. IS மற்றும் Al-Nusra உட்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் சிரியாவிற்குள் களமிறங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் பலமான நிலையில் நிலப்பரப்புகளைக் கைவசம் வைத்திருக்கின்றமை பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை இறுக மூடியுள்ளதெனலாம். IS பலமான நிலையில் உள்ளமை உள்நாட்டில் Assad அரசு, கிளர்ச்சியாளர்கள் மற்றும் அனைத்துலக சமூகத்திற்கு மிகப்பெரிய சவாலைத் தோற்றுவித்துள்ளது. IS உட்பட்ட அடிப்படைவாத அமைப்புகளைப் பேச்சுவார்த்தைகளில் ஒரு தரப்பாக எவருமே அங்கீகரிக்க முன்வரப்போவதில்லை.

தனது ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளால் தனது அதிகாரம் இழக்கப்பட்டுவிடுமென்ற அச்சம் ஒருபக்கமும், தான் வீழ்த்தப்படடும் பட்சத்தில், ஊழல், உரிமை மீறல்கள், நடந்தேறிய படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நிலைகூட ஏற்படுமென்ற அச்சமும் Assadஇற்கு உண்டு. கிளர்ச்சிகளை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதன் மூலம் மீண்டும் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பினையே ஆட்சிபீடம் கொண்டுள்ளது.

அரபு நாடுகளில் உருவான வெகுசனப் போராட்டங்களின் விளைவாக சில நாடுகளில் அதிகபட்சமாக ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததேயன்றி, அதனைத் தாண்டி போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அவற்றின் உண்மையான அர்த்தத்தில் நடைமுறை மாற்றத்தை எட்டமுடியவில்லை. ஜனநாயகமோ, அரசியல் மறுசீரமைப்போ, திடமான அரசியல் இயல்புநிலையோ, சட்டத்தின் நல்லாட்சியோ நிறுவப்படவில்லை என்பது வெளிப்படையானது. எனவே அந்நாடுகளைவிட ஒப்பீட்டளவில் சிக்கல்கள் நிறைந்த உள்நாட்டுச் சூழலையும், அதீத முரண்பாடுகளைக் கொண்ட பல்வேறு தரப்புகளையும் கொண்ட, போருக்குள் சிக்குண்டுள்ள சிரியாவின் எதிர்காலமென்பது இடியப்பச்சிக்கலையொத்த நிலையிலுள்ளது. இந்தச் சிக்கல்களிலிருந்து வெளிவருவதென்பது குறுகியகால அடிப்படையில் சாத்தியமானதொன்றாக அமையப்போவதில்லை.

பொங்குதமிழ் இணையம் – டிசம்பர் 2014

Leave A Reply