சினம்கொள்! – நம்பிக்கையைப் பேசுகின்றது.

சினம்கொள்! – ஈழச் சினிமா பற்றிய நம்பிக்கையை முன்னகர்த்தும் திரைப்படமாக நோக்கக்கூடியது!

ஜனரஞ்சக சினிமாவுக்கும் யதார்த்த சினிமாவுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தை தேர்ந்து கொண்டிருக்கின்றார் கனடியத் தமிழரான திரைப்பட நெறியாளர் ரஞ்சித் ஜோசப்.
தொழில்நுட்ப நேர்த்தியும் காட்சிக் கோர்வையின் கச்சிதமும் உணர்வு பூர்வமான கதை சொல்லலும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. காட்சிபூர்வ அழகியல், பாத்திரப்படைப்பில் அழுத்தம், தொய்வற்ற விறுவிறுப்பு என பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான ஒரு திரைப்படத்திற்குரிய சட்டகங்களையும் பண்புகளையும் சினம்கொள் கொண்டிருக்கின்றது.

ஒற்றைப் பனைமரம், பனைமரக் காடு போன்ற அண்மைய திரைப்படங்களின் வரிசையில் பின்-முள்ளிவாய்க்கால் சமூக அவலங்களையே இத்திரைப்படமும் கதைக்களமாகக் கொண்டுள்ளது. ‘புனர்வாழ்வு’ பெற்று விடுதலையாகும் போராளிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களும், புறக்கணிப்புகளும் சமூகம் பற்றிய அவர்களின் உள்ளுறையும் கடப்பாடுகளையும் இத்திரைப்படங்கள் பேசின. ஆயினும் உத்தி ரீதியில் இம்மூன்று திரைப்படங்களும் வேறுபடுகின்றன.
2009இலிருந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின் விடுதலையாகி வரும் முன்னாள் போராளி முள்ளிவாய்க்காலில் இரண்டு மாதக் கர்ப்பிணியாக விட்டுச் சென்ற தன் துணையைத் தேடுகின்றான். நீண்ட அலைக்கழிவுகளின் பின் முன்னாள் சக பெண் போராளியின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தோட்டமொன்றில் வேலைக்குச் செல்லும் மனைவியைக் கண்டுபிடிக்கிறான்.

பிரியும் போது 2 மாதக் கர்ப்பிணியாக இருந்த மனைவியை அவன் கண்டடையும் போது மகளுக்கு பத்து வயது. முள்ளிவாய்க்காலில் செல்லடியில் காயமடைந்து தலைக்குள் ஒரு செல்த்துண்டுடன் வளரும் மகளுக்கு அந்தச் செல்த்துண்டினை நீக்க சத்திரசிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது.

போராளிக்கு உதவுகின்ற சக பெண் போராளி இரண்டு பிள்ளைகளின் தாய். புற்று நோயால் இறக்க நேருகிறது. அவளது கணவனும் ஒரு கையை இழந்த முன்னாள் போராளி.
மனைவியைத் தேடும் உணர்வுபூர்வமான போராட்டத்தின் மத்தியில் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டு, இன்னும் விடுவிக்கப்படாத தன் சொந்த வீடு பற்றிய ஏக்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அழுத்தமானவை. முல்லைத்தீவின் கேப்பாபுலவு நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் பின்புலத்தில் அவனது வீடு பற்றிய ஏக்கம் சொல்லப்படுகிறது.

அந்தக் காட்சிகள் தமிழ் மக்களின் நில உரிமைக் கோரல் தொடர்பான தெளிவான அரசியலைப் பேசுகின்றன.
வெளிநாட்டிலிருந்து மகளின் திருமணத்திற்காக தாயகம் செல்கின்றார் புலிகளின் வெளிநாட்டுக் கிளையைச் சேர்ந்த ஒருவர். அவரிடம் பெண் போராளியின் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு இந்தப் போராளி பண உதவி கேட்கிறான். அவர் அவமானப்படுத்துவதோடு, உதவிசெய்யவும் மறுக்கின்றார். அவரது மகளை அங்குள்ள போதைப்பொருள் கடத்தல், இளம் பெண்களைக் கடத்தி பாலியல் அடிமைகளாக விற்கும் கும்பல் கடத்துகின்றது. முன் விரோதம் காரணமாக கடத்தல் பழி, கதையின் நாயகனான முன்னாள் போராளியின் தலையில் விழுகிறது. காவல் துறையினால் அவர் தேடப்படுகிறார்.

இத்தகைய சூழலில் இந்தச் சிக்கல்களுக்கான முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ்கின்றன, முன்னாள் போராளிகளைத் தொடர்புகொண்டு அவர்களினதும் சமூக அக்கறையுள்ள இளைஞர்களினதும் கூட்டு உதவியுடன் கடத்தல்காரர்களிடமிருந்து இளம் பெண்ணை மீட்டெடுப்பதுடன் நிறைவடைகின்றது.

ஈழத் தமிழ் மக்களின் பேச்சு வழக்கு மொழி இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாளப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் தேசங்களில் முழுநீளத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபடுவோரில் சிலர் சினிமாவுக்கான புதிய பேச்சு மொழியை உருவாக்குகின்றோம் என்ற பேரில் தமிழகப் பேச்சு மொழியைத் தத்தெடுத்து வருகின்றனர். அல்லது நாடகப் பாணியிலான இழுவைஉரையாடல்களுடன் திரைப்படங்களை எடுக்கின்றனர். சினம் கொள் திரைப்படத்தின் பெரும்பாலான பாத்திரங்கள் ஈழத்தமிழ் பேச்சு மொழியினை மிக இலாகவமாகவும் உணர்புபூர்வமாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தியுள்ளன.

போருக்குப் பின்னான சமூக வாழ்வியல் இதன் மையக் கரு. அந்த வாழ்வுத் துயரம் கதை நகர்வினூடு குறியீடுளாகவும் வந்து போகின்றன.
யாழ் மாவட்டத்தில் பெரும் சமூக வன்முறையாக உருவெடுத்துள்ள வாள் வெட்டு, போதைப் பொருள், சமூகச் சீரழிவுகள் ஆங்காங்கே நாயகனின் மனைவியைத் தேடும் பயணத்தில் காட்சி பூர்வமாகத் தெறித்துச் செல்கின்றன.
திரைப்படத்தின் நகர்வில் போர் எத்தகைய ஒரு அவலச் சமூகத்தை விட்டுச் சென்றுள்ளது என்பது ஆங்காங்கே காண்பிக்கப்படுகின்றது. அவயங்களை இழந்த மனிதர்கள், சக்கர நாற்காலியில் நடமாடும் மனிதர்கள், செயற்கைக் காலுடன் சைக்கிள் ஓட்டும் மனிதர்கள் என போர் வடுக்களின் சாட்சிகள் குறியீடுகளாகியுள்ளன.

• நிலம் இழந்த வலி மிகு அனுபவங்கள் ஊடாக நில உரிமை தொடர்பான அரசியலைப் பிரதிபலிக்கின்றது.
• போருக்குப்பின்னான வாழ்வியல் அவலங்கள் பேசப்படுவதன் ஊடாக சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு சித்தரிக்கப்படுகின்றது.
• எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை வலுவாகப் பேசுகின்றது.

இத்தனை நேர்மறையான அம்சங்களுக்கு மத்தியில் திரைப்படத்தில் ஆங்காங்கே பிரச்சாரத் தொனியிலான வசனங்கள், காட்சிகள் உறுத்தலாக உள்ளன. உணர்வுபூர்வமாகவும் காட்சிபூர்வமாகவும் அழுத்தமாகப் பதிவு செய்யக்கூடிய வெளியும் சாத்தியமும் (space and possibility) இருக்கின்ற ஒரு கதை நகர்வில் ஸ்ரேற்மென்ற் (Statements) வகையிலான கோசங்கள் படைப்பின் முழுமையில் எதிர்மறையான அனுபவத்தையும் தாக்கத்ததையும் தரக்கூடியன.
ரஞ்சித் ஜோசப் திரைப்பட உருவாக்கம் தொடர்பாக தொழில் முறைக் கல்வியைப் பெற்றவர். தமிழகத்தில் இயக்குனர் சசியிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றவர். அவருடைய கதைசொல்லும் ஆளுமையும் திரைத்தொழில்நுட்பப் புரிதலும் இன்னும் பல காத்திரமான படைப்புகளை அவர் உருவாக்குவார் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கின்றது.

-ரூபன் சிவராஜா
10-11-19

Leave A Reply