சேர்பிய போர்க்குற்றவாளி கைதும் சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரமும்
சிறிலங்காவின் இறுதிப்போர் விவகாரத்தில் மேற்குலக நாடுகளும் சுயாதீனமான விசாரணைகளை கோருகின்றன. ஆனால் காத்திரமான செயற்திட்டங்களை இதுவரை முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கமே அதற்கான பொறிமுறையைக் கண்டறிய வேண்டுமென்ற கருத்துகள் சில மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமது நலன் சார் அரசியலைத் தாண்டி இது விவகாரத்தில் செயலாற்ற இந்த நாடுகள் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்தி நிற்கின்றது
இன அழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் விவகாங்கள், இவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றம் அவற்றுக்கான அனைத்துலக விசாரணைகள் என்பன முக்கியத்துவம் பெறும் காலகட்டமாக இன்றைய சமகாலம் அமைந்துள்ளது.
1994இல் Rwandaவில் நடந்தேறிய இன அழிப்பு, 1992- 1995 காலப்பகுதியில் சேர்பியப் படைகளால் Bosniaவிலும் (1995 – Srebrenica படுகொலைகள்) ஏனைய முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளிலும் நடாத்தப்பட்ட இன அழிப்பு – போர்க்குற்றங்கள், 2003 இலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் சூடானின் மேற்குப் பிராந்தியமான டார்பர் மீதான சூடானியப் படைகளின் இன அழிப்பு – போர்க் குற்றங்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு வன்னியில் நடந்தேறிய இன அழிப்பு – போர்க் குற்றங்கள் சமகாலத்தில் முதன்மையாகப் பேசப்படுகின்ற விவகாரங்களாகும்.
Rwanda மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய இன அழிப்பு-போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் நடவடிக்கைகள் நடைமுறையில் சாத்தியமாகியுள்ளன. இவை தண்டனைகளை நோக்கி நகர்ந்துள்ளன. சூடான் அரசதலைவர் ஓமர் அர்-பசீர் மீதான கைது ஆணை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினால் 2008ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. Rwandaவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புக்குத் தலைமை தாங்கியவர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.
சேர்பியாவின் அரசுத்தலைவராகவிருந்த ஸ்லோவடான் மிலோசவிச் இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்காக 2001ஆம் ஆண்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். அவர் நெதர்லாண்ட் நாட்டின் ஹாக் சிறையில் (அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்) தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில், 2006ஆம் ஆண்டு இறந்தார்.
இவர் ஆட்சியதிகாரத்திலிருந்து விலக்கப்பட்ட பின்னர் குற்றவியல் நீதி மன்றத்தில் முன்நிறுத்தப்பட்டார். அடுத்து போஸ்னியா-ஹசகோவினா உள்நாட்டு யுத்தத்தின் போது நிறுவப்பட்ட சேர்பிய குடியரசின் (Republica Srpska) அரசுத்தலைவராகவிருந்த Radocvan Karadzic 2008ஆம் கைது செய்யப்பட்டு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
போஸ்னியா-ஹசகோவினாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஜெனரல் Radocvan Karadzic மற்றும் ஜெனரல் Ratko Mladic ஆகியோர் தலைமையில் படுகொலை செய்யப்பட்டனர். போஸ்னிய தலைநகர் சறயேவோ மீதான (1992-1995) மூன்று ஆண்டு கால ஆக்கிரமிப்புப் போரில் 10 000 வரையானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1995இல் Srebrenicaவில் 8000 வரையான போஸ்னிய முஸ்லீம் இளைஞர்களும் ஆண்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இவர்களே கட்டளை வழங்கித் தலைமை தாங்கினார்கள். இப்பின்னணியில் 1995ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தால் இவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் 13 ஆண்டுகளாக உருமறைப்பு வாழ்க்கை நடத்தி வந்த Radocvan Karadzic 2008இல் கைது செய்யப்பட்டார்.
27.05.11 அவரின் வலது கையாகச் செயற்பட்ட ஜெனரல் Ratko Mladic செய்யப்பட்டார். 1992 -1995 காலப்பகுதியில் சேர்பியப் படைகளுக்க்கான கட்டளைத் தளபதியாக பதவியிலிருந்தவர். ஐரோப்பாவின் தேடப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இவரைக் கைது செய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்ற அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான அழுத்தம் சேர்பியா மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது 69 வயதாகும் ஆடயனiஉஇ ரோமேனியாவின் எல்லையை அண்டிய சேர்பிய சிற்றூர் ஒன்றில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.
இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கு சுயாதீனமான அனைத்துலக பொறிமுறை ஊடான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற வலுவான கோரிக்கை அனைத்துலக மனித உரிமை அமைப்புகளால் முன்வைக்கப்படுகின்றன.
அனைத்துலக பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கோரிக்கை விடுத்தமை அதற்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது.
மேற்குலக நாடுகளும் சுயாதீனமான விசாரணைகளை கோருகின்றன. ஆனால் காத்திரமான செயற்திட்டங்களை இதுவரை முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கமே அதற்கான பொறிமுறையைக் கண்டறிய வேண்டுமென்ற கருத்துகள் சில மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமது நலன் சார் அரசியலைத் தாண்டி இது விவகாரத்தில் செயலாற்ற இந்த நாடுகள் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்தி நிற்கின்றது. ஆனபோதும் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்கா மீதான அழுத்தத்தை இறுக்கி வருகின்றது என்பது உண்மை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும் – வரலாற்றுப் பட்டறிவின் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான மனித அவலங்கள் நிகழாது தடுப்பதற்கும் பொறுப்புக் கூறப்படுவதும், தண்டனைக்கு உட்படுத்தப்படுவதும் அறம் சார்ந்த அவசியமான நடவடிக்கை என்பது அனைத்துலக மட்டத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வாதமாகும்.
இத்தனை ஆண்டுகளாக Mladic கைதுசெய்யப்படாமமைக்கு, சேர்பிய காவல்துறை, படைத்துறை மற்றும் அரச இயந்திரத்தின் சில சக்திகள் அவரைப் பாதுகாத்து வந்தமை காரணியென்ற சந்தேகமும் வெளிப்படுத்தப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியா இணைவதற்கு விண்ணப்பிப்பதற்குரிய நிபந்தனையாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில், Mladic ஒப்படைக்கப்பட வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக வலியுறுத்தி வந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இன்று Mladic கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கோரி சேர்பியா விண்ணப்பிப்பதற்குரிய முக்கிய தடைக்கல் அகற்றப்பட்டுள்ளது.
ஆனபோதும் தற்போதைய சூழலில் உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியா உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளப்படும் என்று அர்த்தமாகாது. சேர்பியாவின் நீதித்துறை, அரசியல் (நாடாளுமன்ற முறைமை, தேர்தல் விதிமுறை, ஐனநாயக மறுசீரமைப்பு) மற்றும் பொருளாதாரத் துறைகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தரத்தினை ஒத்த காத்திரமான மறுசீரமைப்புகளையும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
எனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சேர்பியா, அதனைச் சரிக்கட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது பொருளாதார நலன் அடிப்படையில் அதற்கு அவசியமானதாகும். அந்த வகையில் தற்போதைய கைது ஐரோப்பிய ஒன்றியத்தினைத் திருப்திப்படுத்தும் வகையிலானது என்ற கருத்தும் சிலமட்டங்களில் முன்வைக்கப்படுகின்றது.
Mladic கைதுடன் பல்கன் (Balkan War) போர் மீறல் நடவடிக்கைகளுக்காகக் குற்றம் சுமத்தப்பட்ட 161 பேரில் 160 பேர் கைதாகியுள்ளனர். குறுவாட்சியா மீதான ஆக்கிரமிப்பு போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய Goran Hadzic எனும் படையதிகாரியே இதுவரை கைது செய்யப்படாத 161வது போர்க் குற்றவாளி. ஆனபோதும் Mladic மற்றும் Karadzic ஆகியோர் அளவிற்கு Goran Hadzic மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.
இப்புறநிலையில் Mladic கைதுடன் பல்கன் போரின் போதான இன அழிப்பு – போர் மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் விவகாரம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது எனலாம். ஐ.நா பாதுகாப்பு அவையினால் Rwanda மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட போர்குற்ற விசாரணைகளுக்கெனவும், குற்றவாளிகளைத் சட்டத்தின் முன் நிறுத்தவும் தனித்தனியான குற்றவியல் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. முன்னாள் யூகோஸ்லாவியாவிற்குரிய அனைத்துலக நீதி மன்றம் (International Criminal Tribunal for the former Yugoslavia) 1993 இல் உருவாக்கப்பட்டது. Rwandaவிற்குரிய நீதிமன்றம் (International Criminal Tribunal for Rwanda) 1994 இல் உருவாக்கப்பட்டது. இவை நிரந்தரமான நீதிமன்றங்கள் அல்ல. பொறுப்புக்கூறும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை இவை இயங்கும்.
ஐ.நா பாதுகாப்பு அவை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை முன்வைத்து சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரம் விவாதிக்கப்படுவது குறுகிய கால அடிப்படையில் தடுக்கப்படலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் அவ்வாறு தவிர்க்கப்படுவதற்கும் தடுக்கப்படுவதற்குமான வாய்ப்புகள் குறைவாகும்.
“இறுதிக்கட்டப் போரின் போது, நலன்சார் அரசியல் காரணிக்கு அப்பால், அனைத்துலக சமூகம் இரண்டு மூலகாரணிகளால் செயல் முனைப்பு இல்லாதிருந்தது. முதலாவது காரணி, ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கின. பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவு, விடுதலைப்புலிகளை வேறொரு அணுகுமுறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை இரண்டாவது காரணியாகும்”
என கடந்த மாதம் (மே 2011 நோர்வே தமிழ் தற்கை மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டிய கருத்தரங்கு) நோர்வேயில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் ஐ.நா பிரதிநிதியுமான Jan Egeland மேற்கண்ட கருத்தினைத் தெரிவித்திருந்தார்.
இப் புறநிலையில் நோக்கும் போது, 2009 மே மாதம் 40 000இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட மனிதப் பேரழிவைத் தடுக்கத் தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஐ.நா உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு இல்லாமல் இல்லை. அதேவேளை தமது நலன்களுக்கு சாதகமான வகையிலும் கொழும்பு அதிகார மையத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் போர்க்குற்ற விவகாரத்தை கையாளுவதே இன்று அனைத்துலக சமூகத்தின் முன்னுள்ள மூலோபாயத் தெரிவாகும்.
பிராந்திய சக்தியென்ற நிலையில் இது விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் செயற்பாடும் முக்கியமானதாகும். இலங்கைத் தீவில் தனது பிடியை இழக்காதிருக்கவும், பொருளாதார நலன்களை உறுதிப்படுத்துவதிலும், சீனாவின் பக்கம் சிறிலங்கா அரசாங்கம் அதிகம் சாய்வதைத் தடுப்பதுமே இந்தியாவின் முதன்மை நோக்கங்களாகும். இவற்றிற்கு அடுத்த நிலையிலேயே ஐ.நா நிபுணர் குழு அறிக்கை சார்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சார்ந்தும் இந்தியாவின் நிலைப்பாடும் செயற்பாடும் அமையும். ஆனால் தமிழகத்தின் அழுத்தங்கள் இது விவாரத்தில் இந்தியாவை நிர்ப்பந்திக்கும் வகையில் எதிர்காலத்தில் அமையவும் வாய்ப்புகள் உள்ளன.
பேரினவாத அரசின் இராணுவ ஆளுகைக்குள் உள்ள தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கையை வலிமையாக முன்னெடுக்க்கூடிய அரசியல் வெளி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரச பொறிமுறையின் ஊடாகத் தமிழின அழிப்பிற்கும், போர் மீறல்களுக்கும் நீதி கிடைக்கப் போவதில்லை. அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. எனவே இது விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் பொறுப்பும் செயல்வலு மிக்க முடிவுகளும் முக்கியமானவை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை நிபுணர் குழு அறிக்கையும் அது தோற்றுவித்துள்ள பரந்துபட்ட கவனக் குவிப்பும் இன்றைய காலச்சூழலில் நிகழ்ந்துள்ள காத்திரமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நிகழ்வாகும்.
Rwandaவில் நடந்தேறிய இன அழிப்பிற்குப் பொறுப்பானவர்கள் மற்றும் போஸ்னியா உட்பட்ட முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளில் நடந்தேறிய இன அழிப்பு – போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் 15 ஆண்டுகள் கடந்த பின்னர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றமை, சிறிலங்கா விவகாரத்திலும், நீண்ட கால அடிப்படையில் சாத்தியப்படக் கூடியதென்ற நம்பிக்கையைத் தரக் கூடியது. இதற்கு அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் அழுத்தத்துடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் தொடர் அழுத்தங்களும், அரசியல் மூலோபாயத் திட்டமிடலுடனான இடைவிடாத செயற்பாடுகளும் அவசியமானதாகும்.
பொங்குதமிழ், ஜூன் 2011