காஸா மீது இஸ்ரேலின் இராணுவ இயந்திரம்

1970களின் நடுவிலிருந்து அமெரிக்க அனுசரணையுடன் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டுக்கான தீர்வு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் 1993 இல் ஒஸ்லோ உடன்படிக்கையே அனைத்துலக மயப்பட்ட சமாதானத்தை நோக்கிய முனைப்பான காலகட்டமாக நோக்கக்கூடியது. 1967-இல் அமைந்திருந்த ஆள்புல எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீனத் தனியரசை அமைப்பதற்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படுவதென்பது ஒஸ்லோ உடன்படிக்கையில் இணங்கப்பட்ட ஒன்றாகும்.

எனவே 60 ஆண்டுகளுக்கு மேலான பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய அரசின் அடக்குமுறைக்கெதிரான நிரந்தரத்தீர்வினை எட்டுவதற்கு அனைத்துலகம் இனியேனும் இதயசுத்தியுடன் செயற்படுமா? அல்லது அவ்வப்போது இஸ்ரேலினால் கட்டவிழ்த்துவிடப்படும் போரினை நிறுத்துவதற்கு ஒரு தீயணைப்புப்படைக்க ஒப்பான செயலில் மட்டும் ஈடுபட்டவாறு இருக்குமா என்பது தொக்கி நிற்கின்ற கேள்வியே.

ஈராக்கில் ISIL தீவிரவாத அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட பதற்றம், சிரியாவின் உள்நாட்டுப் போர், காஸா மீதான இஸ்ரேலின் படையெடுப்பும் படுகொலைகளும் என மத்திய கிழக்கு; போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அத்தோடு உக்ரைன் நெருக்கடியும் அதில் ரஸ்யாவின் இராணுவ முனைப்பும் உலக அரசியல் நிகழ்வுகளில் ஒருசேர முதன்மையான கவனக்குவிப்பினை (2014) பெற்றுள்ளன.

இஸ்ரேலின் இராணுவ இயந்திரம் மீண்டுமொரு முறை பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தின் மீது ஏவிவிடப்பட்டுள்ளது. கடந்த 2006இலிருந்து 4 நான்கு தடவைகள் (2006, 2008-2009, 2012 மற்றும் 2014 இல் தற்போது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போர்) மோசமான போர்களை காஸா மீது இஸ்ரேல் நடாத்தியுள்ளது. போரும், சமாதானப் பேச்சுகளும் என அவ்வப்போது பலஸ்தீன-இஸ்ரேல் சிக்கல் அனைத்துலகின் கவனத்திற்கு வருவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலான நிகழ்வுகளாகியுள்ளன.

17.07.14 தொடங்கிய தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி அறிவித்திருந்தது. கொல்லப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் பொதுமக்கள் என்ற தரவினை ஐ.நா வெளியிட்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் காயங்களுக்கு உட்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கானவர்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளில் 4 தடவைகள் காஸா மீது இஸ்ரேல் படையெடுப்பினையும் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளது. 4 தடவைகளின் அடிப்படைகளும், போர் விரிவாக்கமடைந்த விதமும் ஒரே மாதிரியானவை.

ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையின் அடிப்படையில் காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல நியாயப்படுத்துகின்றது. இதொன்றும் இஸ்ரேலினால் உதிர்க்கப்படும் புதிய காரணமல்ல. இதற்கு முன்னரும் இந்தப் பல்லவியையே இஸ்ரேல் பாடி வந்துள்ளது. அமெரிக்காவும், ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் இந்தத் ‘தற்காப்பு’ தாக்குதலை நியாயப்படுத்தும் அதேவேளை போர் நிறுத்தத்தினையும் ஒருசேர வலியுறுத்துவது ஒவ்வோரு முறையும் நடந்தேறும் பழக்கப்பட்ட நிகழ்வுகளே. மோதல்களுக்கு அடிப்படையான இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டின் வரலாற்று ரீதியான காரணங்களுக்குரிய தீர்வு எட்டாக்கனியாக இருபது ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது.

கடந்த காலங்களில் பலஸ்தீனிய மக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பின்னர், எகிப்த் நாட்டின் அனுசரணையுடன் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இம்முறையும் அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தி;ன் பின்னணியில் எகிப்த்தின் தலையீட்டுடன் போர்நிறுத்தத்தினைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிப்புகள் வெளிவந்தன. ஆனால் எகிப்த் தரப்பு ஹமாஸ் அமைப்புடன் உரிய முறையில் தொடர்புகளை ஏற்படுத்தாது, கலந்துரையாடாது, ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலுடன் பேச்சுக்களை நடாத்திய பின்னணியில் இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தினை ஹமாஸ் ஏற்க மறுத்ததையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தரை மற்றும் வான்படைத் தாக்குதல்களில் முழுமூச்சில் இறங்கியுள்ளது.

உறுதியான இணக்கப்பாடுகள் எட்டப்படாது ஏற்படுத்தப்படும், போர்நிறுத்தம் பயனற்றது என்றும் அது சரணாகதிக்கு ஒப்பானது எனவும் தமது மறுப்பிற்கான காரணத்தை ஹமாஸ் வெளிப்படுத்தியிருந்தது. ஹமாஸ் அமைப்பின் போர் நிறுத்த மறுப்பு, முழுவீச்சில் போரைத் தொடர்வதற்கான ஒருவகையான மறைமுக அங்கீகாரத்தை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது.

காஸா மீதான பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடைகள் நீக்கப்பட வேண்டும், 2011இல் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலை செய்யப்பட்டு, தற்போது மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ள பலஸ்தீன அரசியல் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். எகிப்த்திலிருந்து காஸாவிற்குள் பொருட்கள் கொண்டுசெல்வதற்கு ஏதுவாக எகிப்த்துடனான காஸாவின் தெற்கு எல்லை நகரமான Rafahவின் சுரங்கப்பாதை திறக்கப்பட வேண்டும் ஆகியன ஹமாஸ் அமைப்பின் முதன்மைக் கோரிக்கைகளாகும்.
ஹமாஸ் மூலோபாய ரீதியிலான வெற்றியை நாடுவதான தோற்றம் தெரிகின்றது. முன்னரும் பல தடவைகள் போர்நிறுத்தம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் நடைமுறையில் அரசியல் தீர்வு நோக்கி அவை நகர்த்தப்படவில்லை. இராணுவப்பிரசன்னம் இல்லாவிட்டாலும் வெளியுலகத் தொடர்பு அறுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்தும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட திறந்தவெளிச் சிறைச்சாலையாகவே காஸா பிரதேசம் வைக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான திறவுகோல் எகிப்த்தின் கைகளில் உள்ளது. அரசியல் தீர்வு நோக்கிய அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு போர்நிறுத்தம் அவசியமானதாகும். எனவே ஹமாஸ் யதார்த்தபூர்வமான, நடைமுறைச்சாத்தியமான இராஜதந்திர அரசியலிலிருந்து விலகியிருப்பது பலஸ்தீன மக்களை மேலும் பலிகொடுத்து காஸாவை நிர்மூலமாக்கும் நிலைக்கு இட்டுச்சென்றுவிடும்.
Rafah எல்லைச் சுரங்கப்பாதையைத் தனது இஸ்ரத்திற்கு மூடியும் திறந்தும் விடுவது எகிப்த்தின் வழக்கம். தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டும் வகையில் எகிப்த் இதனைப் பயன்படுத்திவருகிறது. இந்தச் சிக்கலில் போர்நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கான அழுத்தம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுவருகின்றது. அந்த அடிப்படையில் அனைத்துலக ரீதியில் தனது இழந்த செல்வாக்கினைச் சீராக்குவதற்குரிய வாய்ப்பாக போர்நிறுத்தத்தினை ஏற்படுத்துவதில் எகிப்த்தின் அரசதலைவர் Abdel Fattah Al-sisi அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

2012இல் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து எகிப்த் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்தம் நடைமுறை அர்த்தத்தில் பயனளிக்கவில்லை. இம்முறையும் அதனையொத்ததான போர்நிறுத்தமே எகிப்தின் அனுசரணையுடன் இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்டது. இதுவும் ஹமாஸின் மறுப்பிற்கான மற்றுமோர் காரணியாகச் சொல்லப்படுகின்றது.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான தொடர்பு பாரம்பரியமாக எகிப்த்தின் ஊடாகவே நிகழந்து வந்துள்ளது. இதற்கு முன்னர்; 2008-2009, 2012 ஆகிய காலப்பகுதிகளில் இதுவே நிகழ்ந்தது. ஆனால் தற்போதைய எகிப்த் ஆட்சிபீடத்திற்கும் ஹமாஸிற்குமிடையில் நல்லுறவு இல்லை.
மூன்று தசாப்தங்கள் எகிப்தினை ஆண்ட கொஸ்னி முபாராக் 2011இல் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் மூலம் பதவியிறக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பின்னணியைக் கொண்ட கட்சி பதவிக்கு வந்த காலகட்டத்தில் ஹமாஸ் – எகிப்த் இடையில் நல்லுறவு நிலவியது. ஆனால் தற்போதைய Abdel Fattah Al-sisi தலைமையிலான எகிப்த்தின் ஆட்சிபீடத்திற்கும் இடையிலான உறவு அப்படியல்ல. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தியுள்ள புதிய ஆட்சிபீடம், பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தாம் எதிர்கொண்டிருப்பதாகக் கூறி, அவ்வாறான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இரும்புக்கரம் கொண்டு இறுக்கிவருகின்றது.

இப்பின்னணியில் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் கிளையாகத் தோன்றிய ஹமாஸ் அமைப்பையும் அதே பட்டியலில் தான் வைத்துள்ளது. எகிப்த்தின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ஹமாஸ் பார்க்கப்படுகின்றது. ஆனாலும் பிராந்திய சக்தியாகவும், இஸ்ரேலுடன் உறவில் உள்ளதுமான எகிப்த்தினை விட்டால் வேறுவழியில்லை என்பதையும் ஹமாஸ் புரிந்துகொள்ளாமலில்லை.
Rafah எல்லைச் சுரங்கப்பாதை எகிப்த்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. எனவே ஹமாஸின் கோரிக்கைகளில் ஒன்று எகிப்த்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. அதன் திறவுகோல் எகிப்த் வசமுள்ளது. எகிப்த் ஏற்கனவே மக்கள் போராட்டம், அரசாங்கத்தில் இராணுவத் தலையீடு, ஆட்சி மாற்றம் என அரசியல் திடமின்மையால் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் சுரங்கப்பாதை திறக்கப்படுமாயின் காஸாவின் ஊடாக ஆயுதங்களும், ஜிகாத் தீவிரவாதிகளும் எகிப்த்தின் சினாய் குடாவிற்குள் எளிதில் நுளைந்திட வாய்ப்புண்டு என எகிப்த் அஞ்சுகின்றது.

1990களின் ஆரம்பத்தில் முனைப்புப் பெற்ற இஸ்ரேல்-பலஸ்தீன தரப்புகளுக்கிடையிலான (இஸ்ரேலிய தலைமை அமைச்சர் எகுட் பராக் மற்றும் பலஸ்தீனிய விடுதலை அமைப்பின் தலைவர் யாசீர் அரபாத் தலைமைகளின் கீழ்) சமாதானப் பேச்சுவார்த்தைகள், பின்னர் மந்தநிலைக்குள் சென்று 2000ஆம் ஆண்டுடன் முறிவினை எட்டியது எனலாம். நிரந்தரத் தீர்வு எட்டப்படாத நிலையில் ‘2’2000 Camp David Summit’ உச்சிமாநாட்டிற்குப் பின்னர் (அன்றைய அமெரிக்க அரசதலைவர் பில் கிளின்ரன் தலைமையில் இருதரப்பிற்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்) ஆக்கபூர்வமாக நகரவில்லை. மாறாக நிரந்தர இழுபறி நிலைக்குள் சென்றுள்ளது.

பலஸ்தீனம் அரசியல் ரீதியாகவும் (Hamas, Fatah-PLOtpdவின் அரசியல் பிரிவு) நிலவியல் ரீதியாகவும் (காஸா, மேற்குக்கரை) இரண்டாக பிளவுபட்டுள்ளது. காஸா பிரதேசம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, அனைத்துலக மற்றும் இஸ்ரேலினால் தடைசெய்யப்பட்டுள்ள ர்யஅயள கட்டுப்பாட்டிலும், மேற்குக்கரை அனைத்துலக அங்கீகாரம் பெற்ற Fatahவின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. Hamas மற்றும் Fatah அமைப்புகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டுவதற்கென கடந்த காலங்களில் பலமுறை பேச்சுகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஜூன் மாதமும் கூட்டுச்செயற்பாட்டுக்கான இணக்கப்பாடு காணப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

மேற்குக்கரையில் இடைவிடாத திட்டமிட்ட யூதக்குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டுவருகின்றன. அதனை நிறுத்துவதற்குரிய அழுத்தம் மஃமூத் அப்பாஸ் தலைமையிலான Fatahவினாலும் அனைத்துலக சமூகத்தினாலும் கொடுக்கப்பட்டுவந்த போதும் இஸ்ரேல் அவற்றினைச் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை Fatah புறக்கணிப்பதற்கு திட்டமிட்ட குடியேற்றங்களே முதன்மைக் காரணி.

2006இலிருந்து பல தடவைகள் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. அப்போது Gilad Shalit என்ற இஸ்ரேலிய படைச்சிப்பாய் ஹமாஸினால் கடத்தப்பட்ட பின்னணியிலும் தொடர்ச்சியாக ஹமாஸ் ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவிவிடுகின்றதென்ற காரணத்தை முன்னிறுத்தியும் இஸ்ரேல் தாக்குதல்களில் இறங்கியிருந்தது. தற்போதைய போருக்கான மூலமாகச் சொல்லப்படுவது, மேற்குக் கரையில் 3 யூத இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கான இஸ்ரேலின் பழிவாங்கலாகும்.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் இந்த விவகாரத்தில் காத்திரமான அழுத்தத்தினையோ, ஒஸ்லோ உடன்படிக்கைக்கு (1993) அமைய பலஸ்தீனத் தனியரசை அமைப்பதற்குரிய திட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலோ உரிய நகர்வுகளை மேற்கொள்ளவில்லை.
இருதரப்பும் போரில் வெல்ல முடியாது என்பது வரலாற்று ரீதியிலும் நடைமுறை யதார்த்தத்திலும் புரிந்து கொள்ளக்கூடியது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு எட்டப்பட முடியும். சமகால அனைத்துலக ஒழுங்கின் யதார்த்தமும் அவ்வாறுள்ளபோதும், அனைத்துலக, பிராந்திய சக்திகள் தமது நலன் சார்ந்தும், செல்வாக்குச் செலுத்தலுக்காகவும் பிராந்தியங்களில் முரண்பாடுகளையும் போர்ச்சூழலையும் பதட்டத்தையும் பேண நினைப்பதும் நலன்சார் அரசியலின் திட்டமிட்ட செயற்பாடாகவும் உள்ளது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அமெரிக்க அரசதலைவர்கள், பில் கிளின்ரன், ஜோர்ஜ் புஸ், ஒபாமா என அவரவர் பங்கிற்கு இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் பிரக்ஞை கொண்டுள்ளதான விம்பம் காண்பிக்கப்பட்டதேயன்றி, இதயசுத்தியுடனான உண்மையான செயற்திறன் கொண்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதெனக் கூற முடியாது.
இஸ்ரேலின் நேதன்யாஃகு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளைத் தொடர்ச்சியாக மூடிவந்துள்ளதோடு, போர்முனைப்பினையே வெளிப்படுத்தி வந்துள்ளது.

ஹமாஸ் தனது பேரம் பேசல் வலுவினை நிலைநிறுத்தும் ஒரே வழிமுறையாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைக் கையாண்டு வருகின்றது. ஆனால் ஹமாஸின் ஏவுகணைகள் இஸ்ரேலில் வீழ்ந்து வெடிப்பதற்கு முன்னர், அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களால் இஸ்ரேல் அவற்றைச் செயலிழக்கச் செய்யும் படைவலுவினைக் கொண்டுள்ளது. ஹமாஸின் ஏவுகணைகளால் இம்முறை ஒரு இஸ்ரேலியர் மட்டுமே கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனவே உயிரழிவையோ உடமையழிவையோ இஸ்ரேலுக்குப் பெரியளவில் ஏற்படுத்தும் வலு ஹமாஸின் ஏவுகணைகளுக்கு இல்லை. இஸ்ரேல் மக்கள் மத்தியில் ஒரு வகையான பாதுகாப்பற்ற பதட்ட சூழலை உருவாக்குவதன் மூலம் இஸ்ரேல் அரசாங்கத்தை ஒரு மூலோபாய மாற்றத்திற்கு நிர்ப்பந்திப்பதே ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களின் நோக்கமாகக் கருதக்கூடியது.

யூதக்குடியேற்றமென்பது, பலஸ்தீனத்தை முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டம். இதனை 60 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் ஒரு மூலோபாயமாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. இலங்கைத் தீவில் பௌத்த சிங்களப் பெருந்தேசியவாதமும் இதனையொத்த சிங்களக் குடியேற்றங்களை கிழக்கில் செய்தமை-செய்து வருகின்றமை நினைவில் கொள்ளத்தக்கது.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற பலஸ்தீனத் தேர்தலில் ஹமாஸ் வெற்றியீட்டிய போதும் பயங்கரவாதப் பட்டியலில் போடப்பட்டு, வெளித்தொடர்புகள் அற்ற நிலையிலேயே அனைத்துலகம் அதனை வைத்துள்ளது. ஈரான், கட்டார் போன்ற நாடுகளின் தொடர்பும் ஆயுத மற்றும் நிதி உதவியும் ஹமாஸிற்கு உள்ளது. பலஸ்தீனத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் தலைமைத்துவத்தினைக் கொண்டிருக்கும் நோர்வே மட்டும் அதிகாரிகள் மட்டத்திலான தொடர்பினை ஹமாஸ்சுடன் கொண்டுள்ளது.

நீண்டகாலம் பாரம்பரியமாக ஆயுத மறறும் நிதியுதவிகளை ஈரானே ஹமாஸிற்கு வழங்கி வந்துள்ளது. ஆனால் ஈரானின் நட்பு சக்தியான சிரியாவின் சர்வாதிகாரி Bashar al-Assadஇற்கு ஹமாஸ் கொள்கை ரீதியாக ஆதரவளிக்க மறுத்த புறநிலையில் ஈரானுக்கும் ஹமாஸிற்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, உதவிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது கட்டாரின் (Qatar) இன் உதவி மட்டுமே ஹமாஸிற்கு கிடைக்கின்றது.

2007இலிலிருந்து பாரிய பொருளாதாரத் தடையால் காஸாவின் 1.5 மில்லியன் மக்கள் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். போர் மேகங்களாலும், வறுமையாலும், அமைதியின்மையாலும் சூழப்பட்ட நிலப்பரப்பாக இஸ்ரேலின் காஸா ஆக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினை இராணுவ ரீதியில் அழித்தொழிப்பதே இஸ்ரேலின் இலக்கு. ஆனால் நடைமுறையில் இத்தனை காலமாக அது சாத்தியமாகவில்லை. ஹமாஸ் பலவீனப்படுத்தப்படும் ஒவ்வொரு தடவையும் மீளத் தன்னைக் கட்டியெழுப்பி வந்துள்ளது. எனவே மூலோபாய ரீதியில் இஸ்ரேலின் இவ்வணுகுமுறை தோற்றுப் போன ஒன்றாகவே பார்க்கப்படவேண்டும்.

மஃமுட் அப்பாஸ் இஸ்ரேலின் போரினை வன்மையாகக் கண்டித்து வந்துள்ளார். ஆனால் பலஸ்தீன மக்கள் மத்தியில் மஃமுட் அப்பாஸின் மிதவாதத் தலைமையினைவிட ஹமாஸின் போர்க்குணமிக்க தலைமைக்கே கூடுதல் ஆதரவுள்ளது. ஒரு செயற்திறள் மிக்க தலைவராக மஃமுட் அப்பாஸ் பார்க்கப்படவில்லை. காஸா பிரதேச மக்களின் மனிதாபிமான அவலங்களைக் களைவதற்கு Fatah (அப்பாஸ் தலைமையிலான மேற்குக்கரை தன்னாட்சி நிர்வாகம்) சுண்டுவிரலைக்கூட உயர்த்தவில்லை என்ற கருத்து காஸாவில் பரவலாக நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.

1970களிலிருந்து வலதுசாரிக் கட்சிகளே இஸ்ரேல் அரசாங்கத்தில் கோலோச்சி வந்துள்ளன. இந்தப் புறநிலையில் இனப்பிரச்சினைத் தீர்விற்கான உள்ளக அழுத்தம் இஸ்ரேல் அரசியல் தளத்தில் இல்லாமலே போய்விட்டது. மாறாக யூத இனவாதம் வளர்முகப் பாதையில் நகர்ந்துள்ளது.

1970களின் நடுவிலிருந்து அமெரிக்க அனுசரணையுடன் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டுக்கான தீர்வு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் 1993 இல் ஒஸ்லோ உடன்படிக்கையே அனைத்துலக மயப்பட்ட சமாதானத்தை நோக்கிய முனைப்பான காலகட்டமாக நோக்கக்கூடியது. 1967-இல் அமைந்திருந்த ஆள்புல எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு பலஸ்தீனத் தனியரசை அமைப்பதற்கான தீர்வு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படுவதென்பது ஒஸ்லோ உடன்படிக்கையில் இணங்கப்பட்ட ஒன்றாகும்.

எனவே 60 ஆண்டுகளுக்கு மேலான பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய அரசின் அடக்குமுறைக்கெதிரான நிரந்தரத்தீர்வினை எட்டுவதற்கு அனைத்துலகம் இனியேனும் இதயசுத்தியுடன் செயற்படுமா? அல்லது அவ்வப்போது இஸ்ரேலினால் கட்டவிழ்த்துவிடப்படும் போரினை நிறுத்துவதற்கு ஒரு தீயணைப்புப்படைக்க ஒப்பான செயலில் மட்டும் ஈடுபட்டவாறு இருக்குமா என்பது தொக்கி நிற்கின்ற கேள்வியே.

பொங்குதமிழ், ஜூலை 2014

Leave A Reply