சொற்களும் எல்லாமும்

கனிவைச் சிந்தும்
விழிகளுள்
கனவிருள் போர்த்திய
வெளிகள்
ஒளிர்கின்றன
உதடுகளின் விரிதலில்
நட்சத்திரங்கள்
அணைந்திருந்த வானம்
வெளிக்கிறது
காதலின் பெருங்காட்டில்
இலைகள்
நழுவிய மரம்
துளிர்க்கின்றது
புன்னகைத் துளிகளில்
ஸ்தம்பித்த கடல்
கரை புரள்கிறது
காமத்தின் பேராறாய்
மழை இறங்கி
நிலம் செழிக்கிறது
ஏக்கத்தின் உறைதலில்
அரவமற்றிருந்த
காடுகள்
அசைகின்றன
ஒற்றை வார்த்தையின்
விசாரிப்பில்
வெறிச்சோடிய தெருக்களும்
நடமாடுகின்றன
தகித்துக்கொண்டிருக்கின்றன
பெருநெருப்பாய்
நினைவுகளும்
ஈற்றில்
சொற்களும்
எல்லாமும்

26.06.19

Leave A Reply