நவமகனின் போக்காளி: காலஅளவிலும் கதைக்களத்திலும் பெரும்பரப்பினையுடைய நாவல்!
போக்காளி நாவல் 3 களங்களைக் கொண்டுள்ளதாகப் பார்க்கலாம். முதற்பகுதி, புலம்பெயர் நாடொன்றுக்கான ஆபத்து நிறைந்த பயணங்களும், சென்று சேர்ந்த நாட்டில் வாழ்வை நிலைநிறுத்துவதற்கான போராட்டங்களும். இரண்டாவது பகுதி: நிலைநிறுத்திய வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கான பாடுகளும் நெருக்கடிகளும் அடைவுகளும். மூன்றாவது பகுதி, புலம்பெயர் சூழலில் முதற்தலைமுறைக்கும் இரண்டாவது தலைமுறைக்குமிடையிலான முரண்பாடுகள். முரண்பாடுகள் என்பவை மொழியிலிருந்து, அடையாளம், கலாச்சாரம், சிந்தனை வரையான பன்முகப்பட்ட இடைவெளிகளையும் முரண்களையும் குறிக்கின்றன.
நோர்வேத் தமிழ் எழுத்துச்சூழலில் கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துகள் தொகுப்புகளாக, புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆனால் சிறுகதைகள், நாவல் என்பவை ஒப்பீட்டளவில் வெகுகுறைவு. புலம்பெயர் வாழ்வின் பெரும் பரப்பினைப் பேசுகின்ற முதலாவது நாவலாக ‘போக்காளி’ வந்திருக்கின்றது. இரண்டு தேசங்களின் இரண்டு தலைமுறையினரின் வாழ்வியலை அந்நாவல் பேசுகின்றது. நோர்வேத் தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு பற்றிய நாவல் ஏதும் இதற்கு முன் வந்திருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பும் போது இல்லை என்பதே பதில். தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டுள்ள நோர்வே ஊடகவியலாளர் ஜொகான் சண்முகரட்ணம் எழுதி, 2020இல் வெளிவந்த ‘நாம் இன்னமும் சுவாசித்துக்கொண்டிருக்கின்நோம்’ தன்னனுபவப் புத்தகத்தில் அவருடைய தமிழ்ப் பின்னணி பற்றிய பகுதிகளில் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுக்கான பின்னணி குறித்த கதையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அப்புத்தகம் இரு கலாச்சாரச் சூழலின் இனவாதம், இனவாதத்திற்கு எதிரான போக்குகள் குறித்த தன்னனுபவ நிகழ்வுகளின் விபரிப்புகளை உள்ளடக்கியதாகும். நோர்வேக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த சூழலில் எதிர்கொண்ட அனுவபங்களை விபரிப்பதன் ஊடாக நோர்வேயின் பல்லினக்கலாச்சார மற்றும் பெரும்சமூகத்துடனான இணைவாக்க வாழ்வு பற்றி ஜொகான் விபரிக்கின்றார். நோர்வேயும் உலகமும் 80களின் நடுப்பகுதியிலிருந்து இன்றுவரையான காலவோட்டத்தில் இனவாதம், இணைந்தவாழ்வு, பல்லினக் கலாச்சாரசூழல் சார்ந்து எத்தகைய அனுபவங்களையும் மாற்றங்களையும் கண்டிருக்கின்றது என்பதைத் தனது பார்வையில் பதிவுசெய்கின்றார்.
நோர்வேயின் உள்நாடு சார்ந்த சமூக – அரசியல் நிகழ்வுகளின் பின்னணியிலும், உலக அரசியல் மாற்றங்களின் பின்னணியிலும் விபரிக்கப்படுகின்றது. தனது பூர்வீகப் பின்னணி, நோர்வேயில் ஒரு வெளிநாட்டுப் பின்னணியுடைய குடும்பத்தின் குழந்தையாக வளர்கின்ற சூழலின் அனுபவங்களை முதன்மையாகத் தொட்டுச் செல்கின்றார். இவரது தந்தை ஈழத்தமிழ் பின்னணியும் தாயார் ஜப்பான் நாட்டுப் பின்னணியையும் கொண்டவர்கள். தந்தை பேராசிரியர் சண்முகரட்ணம் தமிழ்ச் சூழலிலும் உலகமட்டத்திலும் கல்வியாளர்கள் மத்தியிலும் அறியப்பட்டவர். இந்நூலில் இலங்கையின் அரசியல் பின்னணியும், தமிழர்களுக்கெதிரான சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளும் பேசப்படுகின்றன. அவருடைய தாய் – தந்தையரின் பின்னணி, அவர்களுடைய காதல் – திருமண வாழ்வு குறித்த தகவல்களும் உள்ளன. இந்தப் புத்தகம் இனவாதம் பற்றியது மட்டுமல்ல. வேர், அடையாளம் குறித்த புத்தகமும்கூட. ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுக்கான அரசியல், பொருளாதாரப் பின்னணியையும், நோர்வேயின் பல்லினச் சூழலில் புலம்பெயர் சமூகத்தின் வாழ்வனுபவ விபரிப்பாகவும் ஜொகானின் தன்னனுபவ நாவலை நோக்கலாம். நவமகனின் போக்காளி, நோர்வேயில் தமிழரின் புலம்பெயர் வாழ்வியலை விரிவாகப் பேசுகின்ற நாவலாக அமைந்துள்ளது. வாழ்வியல், சமூக, அரசியல் அனுபவங்கள், நிகழ்வுகளைத் தழுவிய புனைவாகப் படைக்கப்பட்டுள்ளது.
**
எழுத்தாளர் அறிமுகம்
2013இல் நவமகன் (கேதீஸ்) எழுதிய ஒரு சிறுகதை ஒன்றினை வாசித்ததன் ஊடாகத்தான் அவருடைய எழுத்து சார்ந்த பக்கம் எனக்குத் தெரிய வந்தது. ‘மாவீரர் யாரோ என்றால்?’ என்பது அதன் தலைப்பு. தேசத்திற்காக உயிர்கொடுத்தவர்களை நினைவுகூர்வதில் நம் சமூகத்தில் நிலவக்கூடிய இயக்கப் பின்னணிகள் சார்ந்த புறக்கணிப்பு மனநிலைகளையும் அதுசார்ந்த அரசியல் பிறழ்வுகளையும் உணர்வுபூர்வமாகப் பேசியது அந்தச்சிறுகதை. வெவ்வேறு இயக்கங்கிலிருந்து போராடி மடிந்த இரண்டு போராளிகளின் பெற்றோரின் மன வலிகளை இயல்பாகவும் யதார்த்தமாகவும் அது பேசியது. வாசிப்பவர் மனதைக் கேள்விகளாலும் வேதனையாலும் துளைக்கக்கூடிய கதை அது.
அதேபோல் 2016இல் இன்னுமொரு சிறுகதை. ஆச்சியும் அஸ்தரும் என்பது அதன் தலைப்பு. தாயகத்திலிருந்து பிள்ளைகளால் வெளிநாட்டுக்கு அழைக்கப்பட்ட வயதான பெற்றோர்கள் பற்றிய கதை அது. நோய்வாய்ப்பட்ட தமது இறுதிக்காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்படுவதையும், வயோதிபப் பராமரிப்பு மருத்துவ இல்லத்தில் மொழி தெரியாத நிலையில் அவதிப்படுவதையும் முன்வைத்து எழுதப்பட்டிருந்தது. புலம்பெயர் சூழலின் அவலமொன்றை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கின்ற சிறுகதை அது. ஆச்சியும் அஸ்தரும் கதை எழுதப்படுவதற்கு நானும் ஒரு சிறு தூண்டுதலாக இருந்துள்ளேன். முகநூலில் கேதீஸ் எழுதிய ஒரு சிறு குறிப்பு ஒன்றைப் பார்த்துவிட்டு அதனை விரித்து ஒரு சிறுகதையாக எழுதித்தரும் படியும் அதனை முதலில் இணைய இதழில் பிரசுரிப்போம், பின்னர் குறும்படமாக உருவாக்குதற்கு முயற்சிப்போம் என்று கூறியிருந்தேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, கேதீஸின் கதை எழுதும் ஆற்றலுக்கு சான்று பகர்ந்த கதைகள்தான் மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு சிறுகதைகளும். இவற்றைவிட 90களின் ஆரம்பத்திலும் நடுப்பகுதியிலும் நோர்வேயிலிருந்து வெளிவந்த சுவடுகள் மாத இதழ்களிலும் இவரது கவிதைகள் சில வெளிவந்துள்ளன.
இவரிடமிருந்து சிறுகதைத் தொகுப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பே என்னிடம் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் ‘எழுதிக்கொண்டிருக்கும் நாவலிலிருந்து’ என்ற குறிப்போடு முகநூலில் ஒரு சில பதிவுகளைப் பார்க்க முடிந்தது. இப்போது இந்த நெடுங்கதையை எழுதிமுடித்து தனது முதலாவது புத்தகத்தை ‘நாவலாக’ வெளிக்கொணர்ந்திருக்கின்றார். தமிழகத்தின் கருப்புப்பிரதிகள் பதிப்பகம் நூலை வெளியிட்டிருக்கின்றது. போக்காளியின் கதை, பாத்திரங்கள், கதைசொல்லல் முறை, பேசுபொருளின் பரப்பு, உள்ளடக்கப்பட்டுள்ள களங்கள், மொழிநடை, அரசியல், அழகியல், இலக்கியப் பெறுமதி குறித்த என் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
**
காலக்கோட்டில் மூன்று தசாப்தங்களின் கதை
போக்காளி நாவல், கால அளவிலும் பேசுபொருள் சார்ந்தும் பெரும் பரப்பினைக் கையாண்டுள்ளது. கால அளவு என்று எடுத்துக்கொண்டால் 1988 இலிருந்து 2019 (சமகாலம் வரையான என்றும் சொல்லலாம்) மூன்று தசாப்த வாழ்வியலைப் பேசுகின்றது. நாவலின் மொத்தப் பக்கங்கள் 670. இதன் முன் அத்தியாயங்கள் (கிட்டத்தட்ட 150 பக்கங்கள) முகவர்கள் மூலம் 1980களின் இறுதியில் வாழ்வு தேடி வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்ட எம்மவர்களின் (இன்று அப்பாக்கள், அம்மாக்கள், மற்றும்; தாத்தா, பாட்டிகளாகவும் இருக்கக்கூடியவர்கள்) கதைகளை விரிவாகப் பேசுகிறது. பயணமென்பது சட்டபூர்வமான விமானப் பயணம் அல்ல. முகவர்கள் மூலமான சட்டத்துக்கு புறம்பான பயணங்கள். உயிராபத்து மிக்க பயணங்கள். பல நாடுகளின் எல்லைகளைக் களவாகக் கடக்கின்ற சம்பவங்கள், பிடிபடுதல், திருப்பி அனுப்பப்படுதல், காவல்துறை விசாரணைகள், அகதிமுகாம் வாழ்க்கை, அகதி வதிவிட உரிமைக்கான போராட்டங்கள், காத்திருப்புகள், குடும்பத்தைப் பிரிந்த தவிப்புகள், தொழில் வாய்ப்புத் தேடும் பிரயத்தனங்கள் என விரிகிறது
இந்தக் கதையின் முக்கிய பாத்திரம் குணா. இருபது வயதில் வெளிநாடென்றுக்கு வெளிக்கிட்டு, முதலில் ஜேர்மன் நாட்டினைச் சென்றடைகிறான். அங்கு அகதித் தஞ்சம் பெறுவது சாத்தியமில்லாமல் போக, பிரான்ஸ் செல்கிறான். அங்கு பிடிபட்டு, முதலில் அகதித்தஞ்சம் கோரிய ஜேர்மனிக்குத் திருப்பி அனுப்பப்படுகிறான். பின்னர் ஜேர்மனியிலிருந்து நோர்வே வருவதற்கான முயற்சியில் இறங்குகின்றான். நோர்வேக்கு வருவதென்றால் தரைவழியாக ஜேர்மன்-மென்மார்க்-சுவீடன்-நாடுகளின் எல்லைகளைக் களவாகக் கடக்க வேண்டும். ஒவ்வொரு எல்லை கடப்பிற்கும் ஒவ்வொரு திட்டங்கள். எல்லைக் காவல்துறையினரின் கண்ணுக்குள் மண்ணைத்தூவித் தப்புவதற்கான திட்டங்களைக் கையாளவேண்டும். ஜேர்மனியிலிருந்து டென்மார் வந்தடைய தொடரூந்தின் கழிவறைக்கூரைக்கு மேலுள்ள நீர்த்தாங்கிப் பெட்டியுள்ள இருட்டான பகுதிக்குள் பல மணிநேரங்கள் உடலைக் குறுக்கிக் கொண்டு பயணிக்கின்றான் குணா. பல்வேறு ஆபத்துகளைக் கடந்து நோர்வே வந்தடைந்து படும்பாடுகள் குணா பாத்திரத்தினூடாகச் சித்தரிக்கப்படுகின்றன.
புலப்பெயர்வின் பின்னணி – ஆபத்துமிக்க சட்டவிரோதப் பயணங்கள்
போக்காளியின் முதற்பாகத்தின் கதைகளும் அனுபவங்களும் முக்கியமானவை. அக்கதைகள் இதுவரை பரவலான இலக்கியங்களாக ஆக்கப்படாமலிருந்தன. அண்மைக்காலங்களில் அத்தகைய முயற்சிகள் ஆங்காங்கே வெளிப்படுகின்றன. நோர்வேயில் திரைப்பட உருவாக்கத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்ற பிரேம்ராஜ் சிவசாமி பல வருடங்களுக்கு முன்னர் எழுதி, தற்போது திரைப்படமாகிக்கொண்டிருக்கும் ‘அப்பாக்களின் கதை’ பிரதி அத்தகைய ஒரு களத்தினைக் கையாள்கின்றது. 1980களின் இறுதியில் முகவர்கள் மூலம் ஈழத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்ட அன்றைய இளைஞர்கள் சிலரின் கதையைப் பேசுகின்றது. ரஸ்ய எல்லையிலிருந்து (அன்றைய சோவியத்) நோர்வேக்கு வரும் சட்டவிரோதப் பயண வழியில் அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், அச்சுறுத்தல்கள், இன்னல்கள், மரணங்கள், அலைக்கழிவுகள் அக்கதையின் மையம்.
1990களின் நடுப்பகுதியில் உக்ரைன்-பெலருஸ்-லித்வேனியா-போலந்த் எல்லைகளினூடாக ஒரு மாத கால நடைபயணத்தின் மூலம் ஜேர்மன் நாட்டுக்கு வந்தடைந்த ஒரு அனுபவத்தை எழுத்தாள ஒருவர் அண்மையில் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த ஒரு மாதத்திற்குள் எத்தனை அனுபவங்கள், அலைக்கழிவுகள், துயரங்கள் இருந்திருக்கும் என்பதை நினைக்கவே மனம் பதறுகிறது. அந்தக்கதைகளும் இலக்கியமாக்கப்பட வேண்டியவை.
‘ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளைக் களவாகக்கடப்பதென்பது இலகுவான காரியமில்லை. ஆனாலும் எம்மவர்கள் கடந்தார்கள். காடு, கடல், குளம், குட்டையென கடும் குளிரிலும் கடந்தே களைத்தார்கள்’ என்று சொல்கிறார் நவமகன். அதிலும் சாண் ஏற முழம் சறுக்கிற அனுபவங்கள் பற்பல.
ஒவ்வொரு நாடுகளின் முகாம் அனுபவங்கள், நண்பர்களுடனான கூட்டுவாழ்வு என்பன தனித்தனிக் கதைகள். அங்கு தங்கியிருக்கின்ற தமிழர்களுக்கிடையிலான உறவு என்பதும் பல்வகைப்பட்டது. நட்புறவு மட்டுமல்ல. முரண்பாடுகள், முறுகல்கள் என்றான உறவுகள் அவை. புலம்பெயர்ந்த இளைஞர்கள் ஒரு நாட்டில் அகதித் தஞ்சம் கோரி, ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வதற்குள் பட்டபாடுகள், நெருக்கடிகள், அவமானங்கள் எக்கச்சக்கம். அத்தோடு முடிவதில்லை அவர்களின் துயரங்கள். வருவதற்காகப் பட்ட கடனை அடைப்பது, குடும்பத்தின், உறவினர்களின் வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்துவது எனத் தம்மை வருத்தி ஓய்வு, தூக்கமின்றி உழைத்துக் கொண்டேயிருந்தார்கள். புதிய நாடு, புதிய மனிதர்கள், ஒவ்வாத காலநிலை, புதிய மொழி, புதிய கலாச்சாரம், புதிய நடைமுறைகள், புதிய சவால்கள், புதிய நெருக்கடிகள் கொண்ட ஒரு முற்றிலும் புதிய நாட்டுக்குள் தமது வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள எதிர்கொண்ட போராட்டங்களின் பிரதிபலிப்பு அதற்குரிய வாழ்பனுபவங்களினூடு பதிவாகியுள்ளது.
வெவ்வேறு பட்ட குண இயல்புகள், சமூகப் பார்வைகள் கொண்ட மனிதர்களை உலவவிட்டுள்ளார். வெவ்வேறு இயக்கப் பின்னணிகளைக் கொண்ட பாத்திரங்களுக்கிடையிலான அரசியல் உரையாடல்கள் நட்பாகவும், முரண்பாடுகளாகவும், குத்தல்கதைகளாகவும் எனப் பலவாறாக இடம்பெறுகின்றன.
பாத்திரச் சித்தரிப்புகள் – விபரிப்புகள்
பாத்திரங்களை நல்லவர் – கெட்டவர் என்று கறுப்பு வெள்ளையாகச் சித்தரிக்கவில்லை. மனிதர்களுக்குரிய வெவ்வேறு குண இயல்புகளோடு, நிறை குறைகளோடு அந்தத்தச் சூழ்நிலைகளும் உணர்வுகளும் அவர்களை எப்படி நடத்துகிறது, மாற்றுகிறது என்பதைக் கதையாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஒரு மனித வாழ்வின் நீட்சியில் உறவுகளுக்கிடையிலான ஊடாட்டம் என்பது ஒற்றைப்பரிமாணம் கொண்டதல்ல. நட்பாக, காதலாக, கருணையாக, பாசமாக, முரணாக, பகையாக, சிக்கல்கள் கொண்டதாக, புரிதலுடனான எனப் பல நிலைகளைக் கொண்டது. அதுவே இயல்பு. அந்த இயல்பினை இந்நாவலின் மனிதர்களும் அவர்களுக்கிடையிலான உறவும் பிரதிபலிக்கின்றது. பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது பல இடங்களில் இயல்பாக அந்தந்தப் பாத்திரங்களை வாசகர் மனதில் பதிய வைக்கும் வகையில் உள்ளன. அந்தளவிற்கு அவை சித்தரிக்கப்படுகின்றன. சில இடங்களில் வெறுமனே ‘காந்தன் என்பவன் மூலமாக அறிந்துகொண்டான்’. ‘சீலன் என்பவன் சொன்னான்’ என்று சில பாத்திரங்கள் கதைக்குள் கொண்டுவரப்படுகின்றன. அவ்வகைப் பாத்திரங்கள் மனதில் பதியாமல் தூர நிற்கின்றன.
குணா என்ற பாத்திரம் நோர்வேயில் அகதித்தஞ்சம் பெற்று, வாழ்வின் வெவ்வேறு படிநிலைகளைக் கடந்து, தாயகத்திலுள்ள குடும்பத்தினதும் உறவினர்களினதும் பொருளாதாரத்தை நிமிர்த்தி, நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கான பண உதவிகளைச் செய்து, திருமணம் முடித்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அந்தப் பிள்ளைகள் படித்து காதலிக்கும் காலம் வரை கதை நகர்கிறது.
குணா – விஸ்வா இடையிலான உறவு, புரிதலுடனான நட்புறவாகச் சித்தரிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் அகதிமுகாமொன்றில் அவர்கள் சந்தித்த நாளிலிருந்து நோர்வேக்கு ஒன்றாக வருவது, பின்னர் நோர்வேயில் இறுதிவரை சிநேகம் தொடர்கிறது. இருவரும் போராட்டம், அரசியல் செயற்பாடுகள், கருத்துகளில் வெவ்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள். வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களால் உரையாட முடிகிறது, விவாதிக்க முடிகிறது. ‘தியாகி – துரோகி’ என ‘கருப்பு வெள்ளை’யாக ஈழப் போராட்ட இயக்கங்களையும் அரசியல் முரண்பாடுடைய மனிதர்களையும் அணுகுகின்ற பெரும்போக்கு நிலவுகின்ற சூழலில் இத்தகைய படைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தகைய போக்கினை வாழ்வினதும் மனிதத்தினதும் உன்னதமான இயல்புகளுடன் எதிர்கொள்கின்ற, உடைத்துப் போடுகின்ற பாத்திரங்களை தரிசிக்க முடிகிறது. விஸ்வா – இடதுசாரியச் சிந்தனையுள்ளவர். அரசியல், விடுதலைப்போராட்டம், சமூகம் தொடர்பான விமர்சனபூர்வமான பார்வை கொண்ட பாத்திரமாக வருகிறார். அந்தப் பாத்திரத்தினூடாகவே அதிகமதிகம் விமர்சனங்களும் அறிவார்ந்த பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் விஸ்வாவும் குணாவும் ஜேர்மனியில் சந்தித்துக் கொள்வதிலிருந்து – ஒன்றாக நோர்வேக்குப் பயணிக்கின்றனர். அகதிமுகாமில் ஒன்றாகத் தங்கியிருக்கின்றனர். ஜெனிற்றாவும் மாணவ விசாவில் நோர்வேக்குப் படிக்க வந்து அகதித் தஞ்சத்திற்கு விண்ணப்பித்து அதே முகாமுக்குச் செல்கின்றாள். அங்கு விஸ்வாவிற்கும் – ஜெனிற்றாவுக்குமிடையில் காதல் ஏற்படுகிறது. காலப்போக்கில் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களுக்கிடையிலான காதலை அழகியலோடு எழுதுகிறார் கேதீஸ். ஒரு கட்டத்திற்குப் பிறகு விஸ்வா பாத்திரம் அதிகமதிகம் கருத்துகளைச் சொல்வதற்கும், விமர்சனங்களை முன்வைப்பதற்குமான பாத்திரமாக முன்னிறுத்தப்படுகின்றது. அது தாயக அரசியல், புலம்பெயர் அரசியல், சமூகம், பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்துகள், உலக அரசியல், சமூகநீதி என அனைத்தினதும் அறிவார்ந்த பார்வையை வெளிப்படுத்துகின்ற பாத்திரமாக முன்னிறுத்தப்படுகின்றது. அந்த அணுகுமுறை கதையின் ஓட்டத்தோடு நகர்ந்தாலும் பல இடங்களில் குணா அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்திறிவது என்பதான உத்தியே அதிகம் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றமை சற்று ஒட்டவில்லை.
நாடுகளின் புதிய சூழல் பற்றிய விபரிப்புகள் அழகியல்தன்மையோடு எழுதப்பட்டுள்ளன. நாடுகளின் இயற்கை, கட்டட அமைப்புகள், வீதிகள், காலநிலை, நிலத்தோற்றம் என அச்சூழல்களையும் அவை ஏற்படுத்துகின்ற மனஉணர்வுகளையும் அழகியலுடனும் ஆங்காங்கே கவித்துவத்துடனும் எழுதியுள்ளார். நோர்வேயைப் பற்றிக்கூறும் போது, ‘ உலக வரைபடத்தில் ஒரு வீணையை நிமிர்த்தி வைத்தாற்போல் தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற நோர்வே’ என்று விளிக்கின்றார்.
பேசுபொருளின் பன்முகத்தன்மை
வெளிநாட்டு வாழ்வு சொகுசானது, ஆடம்பரமானது என்ற பொதுப்புத்திக் கருத்து தாயகத்தில் நிலவுகின்றது. இங்கு புலம்பெயர்ந்த மூத்த தலைமுறை எப்படித்தன்னை உடல், உள ரீதியாக வருத்திக்கொண்டு முதற்கண் தாயகத்திலுள்ள குடும்பத்திற்காக உழைத்தது என்பதை நாவல் மிகத் துல்லியமாகப் பதிவுசெய்கின்றது. குணா நாட்டுக்குத் திரும்பிச் செல்வதென்ற எண்ணங்களோடும் ஏக்கங்களோடும் சதா நாட்களை நகர்த்துகின்றான். ஆனால் நிரந்தரமாக வேரூன்ற வேண்டிய நிர்ப்பந்தம் அழுத்திக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்தவர்களின் அக மற்றும் புறச்சூழல் சார்ந்த நடைமுறை யதார்த்தம் அதுவே. போக்காளி என்ற சொல் இளமையில் இறந்தவன், இளமையில் வீட்டைவிட்டுத் தூரமேகியவன் என்ற பொருள் தருகிறது. அகதி என்ற அடையாளத்துடன் நிரந்தர இருப்பிடமின்றி, பிடிமானமற்ற வாழ்வினைக் கொண்டிருப்பவன் என்ற குறியீட்டு அர்த்தினையும் இந்தக் கதையிலிருந்து உணரமுடிகிறது.
சிங்கள பெருந்தேசியவாதம், அதன் அரச பயங்கரவாதம், இராணுவ இயந்திரம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்கள். முக்கிய அரசியல் மற்றும் போராட்ட நிகழ்வுகள், பேச்சுவார்த்தைகள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள், இயக்க முரண்பாடுகள், சகோதரப்படுகொலைகள், இயக்கங்களின் உட்படுகொலைகள் என தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் இருளும் ஒளியுமான – பெருமிதமும் இழிவுமான வரவாற்றின் பக்கங்கள் பேசப்படுகின்றன. புலம்பெயர் சூழலில் நிலவிய வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளும், வெவ்வேறு இயக்கப் பின்னணிகள் கொண்டவர்களின் உறவு – மற்றும் முரண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தின் போதான ஆர்ப்பாட்டங்கள் வரையிலான பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் கதையாடல்கள் நிகழ்கின்றன. போருக்கு முகம்கொடுத்த மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் இன்றைய வாழ்வாதார நெருக்கடி வரை பேசப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலுமான பெண்களின் நிலையும் சித்தரிக்கப்படுகின்றது. ஆணாதிக்கத்தினால் கட்டமைக்கப்பட்டுப் பேணப்படும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஆங்காங்கே கதையாடல்களில் வருகின்றன. தமிழ்ச் சூழலில் பேசாப்பொருளாகக் கருதப்படுகின்ற சிலவும் பேசப்படுகின்றன. ஓரினச்சேர்க்கை தொடர்பான சில சம்பவங்கள் இதில் தொடப்பட்டுள்ளன.
நிகழ்வுகளின் பின்னணில் புனைப்பட்ட நாவல் இது. எனவே இவற்றில் உண்மையான நிகழ்வுகள் எவை, புனையப்பட்ட நிகழ்வுகள் எவை என்ற பட்டியலிடல்கள், வாதங்கள் எழலாம். புனைவிலக்கியத்தினை அத்தகைய அணுகுமுறையில் விமர்சிப்பது பொருத்தமா தெரியவில்லை. அதற்கான தேவை உள்ளதா என்பதும் கேள்விக்குரியதே.
விமர்சனங்கள்
கிட்டத்தட்டச் சமகாலத்தில் தொடங்கி – 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பின்னர் இறுதி அத்தியாயங்களில் சமகாலத்திற்கு வருவதான கதை. காலத்திற்கும் பயன்பாட்டிலுள்ள பல சொற்களுக்கும் தொடர்புண்டு. குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது வாத்தைகள் அறிமுகமான காலமென்று ஒன்றிருக்கிறது. அதாவது அச்சொற்கள் புழக்கத்திற்கு வந்த காலம். அப்படிப் பார்க்கையில் நாவலின் பெரும்பகுதியில் காலத்தைப் பிரதிபலிக்கும் சொற்களைக் கையாண்டிருக்கின்றார். ஆரம்பப் பகுதியில் 1988இல் நிகழ்கின்ற சம்பவங்களில் சில சொற்கள் அக்காலத்தில் புழக்கத்திற்கு வராத சில சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை தமிழ்த் திரைப்படங்கள் மூலம் பின்னாட்களில் குறிப்பாக 90களின் இறுதியிலும் 2000இன் ஆரம்பங்களிலும் அறிமுகமான சொல்லாடல்கள். ‘ஓரினச் சேர்க்கையாளர்களைக் கொச்சைப்படுத்தி விளிக்கின்ற ‘அவனா நீ’, வீண் வம்புக்கு இழுப்பதை ‘Game கேட்பது’ எனச் சொல்வது, ‘தீயாய் வேலை செய்து கொண்டிருந்தனர்’, ‘சான்சே இல்லை’, ‘கைப்பிள்ளை’ போன்ற சொல்லாடல்கள்; காலப்பகுதி பற்றிய கவனக்குறைவை வெளிப்படுத்துகின்றன.
தகவல் பரிமாற்றம், தொடர்பாடல் தொடர்பான நடைமுறைகளையும் அது சார்ந்த சொல்லாடல்களையும் கால நகர்வின் தன்மைக்கு ஏற்ப கவனமாகக் கையாண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. கடிதப்பரிமாற்றம், பொதுத் தொலைபேசிப் பயன்பாடு(Public Telephone Booth), வீட்டுத்தொலைபேசி இணைப்பு, கைத்தொலைபேசி, குறுந்தகவல், முகநூல், மெசேஞ்சர், Facetime, Viber என காலவோட்டத்தில் படிப்படியாக நிகழ்ந்த தொடர்பாடல் தொழில்நுட்ப, தகவல் பரிமாற்ற வளர்ச்சியை அந்தத்தக் காலத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றார்.
மூன்றாம் நபரின் பார்வையிலேயே (3rd person perspective) கதை சொல்லப்படுகின்றது. பல இடங்களில் பிற்போக்குத் தனங்களைச் சாடுகின்ற, சமூகநீதியைப் பிரதிபலிக்கின்ற எழுத்தாளர், சில இடங்களில் மரபில் ஊறிப்போன சில விடயங்களை கதைசொல்லி வழியாக வெளிப்படுத்துவது நெருடுகிறது.
விஸ்வா நோர்வேஜியப் பெண்களுடன் பழகுவதையிட்டுப் ஜெனிற்றா பொறாமை கொள்வதான காட்சியில் இவ்வாறு எழுதுகின்றார்:
‘என்னதான் விசாலமான பார்வையுடைய பெண்களாக இருந்தாலுங்கூட, இந்தப்பொறாமை என்கிற கொடிநோயிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அவளுடைய நடத்தை அவனுக்கு உணர்த்தியது’
ஓரினக்காதலில் நாட்டமுள்ள சிவம் அண்ணை, குணாவைப் பாலுறவு நோக்கத்தோடு அணுகும் காட்சியில், ‘அடப்பாவி மனுஷா! அவனா நீ’ மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டான் குணா’ என வருகிறது
மூன்று பெரும் கதைக்களங்கள்
இந்த நாவல் 3 பகுதிகளை அல்லது களங்களைக் கொண்டுள்ளதாகப் பார்க்கலாம்.
முதற்பகுதி: வெளிநாடுகளுக்கான ஆபத்து நிறைந்த பயணங்கள் – சென்று சேர்ந்த நாட்டில் வாழ்வை நிலைநிறுத்துவதற்கான போராட்டங்கள் – எதிர்காலக் கனவுகள் – தாயகத்திலுள்ள குடும்பத்திற்கான உழைப்பு.
இரண்டாவது பகுதி: நிலைநிறுத்திய புலம்பெயர்வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கான பாடுகளும் நெருக்கடிகளும் அடைவுகளும். அதாவது அகதி என்ற அடையாளத்திலிருந்து குடும்பம் என்ற நிறுவனங்களுக்குள்ளும் – சமூகம் என்ற நிறுவனங்களின் அங்கமாகிய வாழ்வியலையும் அது குறிக்கின்றது. இந்த இரண்டாவது பகுதிக்குள் தாயகத்தின் போராட்டமும் அது சார்ந்த புலம்பெயர் செயற்பாடுகளும் அதிகளவில் உள்ளடங்குகின்றன. தாயக விடுதலைப்போராட்டம், அது சார்ந்த செயற்பாடுகள், அணுகுமுறைத்தவறுகள், அறிவுக்குப்புறம்பான போக்குகள், பொய்கள் மீதும் உணர்ச்சிக் கோசங்கள் மீதும், கட்டமைக்கப்பட்ட போக்குகள் மீதான ஆதங்கங்களும் விமர்சனங்களையும் நாவல் முன்வைக்கின்றது.
மூன்றாவது பகுதி: புலம்பெயர் சூழலில் முதற்தலைமுறைக்கும் இரண்டாவது தலைமுறைக்குமிடையிலான இடைவெளி மற்றும் முரண்பாடுகள், நெருக்கடிகளைப் பேசுகிறது. இரண்டாவது தலைமுறை என்பது புலம்பெயர் நாடுகளில் பிறந்துவளர்பவர்களைக் குறிக்கின்றது. இடைவெளி, முரண்பாடுகள் என்பவை மொழியிலிருந்து, அடையாளம், கலாச்சாரம், சிந்தனை வரையான பன்முகப்பட்ட இடைவெளிகளையும் முரண்களையும் குறிக்கின்றது.
இலக்கியத்தில் இந்நாவலின் இடம்
ஒரு நாவலாக இதன் முதற்பகுதிக்குள்ளும் மூன்றவது பகுதிக்குள்ளும் அதிகம் இலக்கியத்திற்கான தன்மைகளும், அழகியலும் உள்ளன. ஏனெனில் அவை மனிதர்களின் ஊடாட்டத்தையும், உணர்வுகளையும், உறவுச்சிக்கல்களையும், முரண்களையும் அதிகம் பிரதிபலிக்கின்ற வெளியைக் கொண்டிருக்கின்றன. இரண்டாவது பகுதி பெருமளவு நிகழ்வுகளின் தொகுப்பாக முன்வைக்கப்படும் போது இலக்கியத்திற்கான தன்மைகளும் அவற்றுக்குரிய அழகியலும் குன்றிவிடுகிறது. ஆயினும் இந்த நாவலின் கட்டமைப்பிற்கு இரண்டாவது பகுதி அவசியமானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது.
புலம்பெயர் நோர்வே தமிழர்களின் வாழ்வியலின் இன்னொரு கூறு நோர்வேப் பெரும்சமூகம். நோர்வே பெரும்சமூகத்தின் முக்கிய சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் – காலவோட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்பினையும் உள்ளடக்கியிருந்தால் இந்நாவலுக்கு இன்னுமொரு பரிமாணம் கிடைத்திருக்கும். 22.ஜூலை 2011இல் நோர்வேயில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் ஒரு கதையாடல் மட்டும் நாவலில் இடம்பெற்றுள்ளது.
புத்தக முகப்பு, வடிவமைப்பு, தோற்றம் நேர்த்தியாக இருக்கிறது. 1988 – 2020 வரை காலக்கோட்டினை மையப்படுத்திய அத்தியாயங்களாகக் கதை நகர்கிறது. இதுவொரு எளிமையான கதை நகர்வு உத்தி. வாசிப்பமைதியைத் தரக்கூடிய வகையில், கண்களைக் களைக்கச் செய்யாத வகையிலான எழுத்துருத் தேர்வும் உட்பக்க வடிவமைப்பும் அமைந்துள்ளது. மிகைப்படுத்தலற்ற இயல்பான விபரிப்புகளினூடு கதை நகர்கிறது. சூழலையும் மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் வாசிப்பவர் மனதில் எளிதாகக் கொண்டு சேர்க்கின்ற சிக்கலில்லாத மொழிநடையைக் கொண்டிருக்கின்றது.
நாவல் முன்வைக்கும் சமூக- அரசியல் விமர்சனங்கள்
அண்மையில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகளின் கேள்விகள் தொடர்பான பேச்சு வந்தது. நண்பர் ஒருவர் அப்போது நகைச்சுவையாக சீரியசான மேற்கோள் ஒன்றைச் சொன்னார். ‘நம்பிக்கைகளிலிருந்து தொடங்குவதா? அல்லது விசாரணைகளிலிருந்து தொடங்குவதா’ என்ற லெனினின் பிரபலமான வாதம்தான் அவர் மேற்கோள் காட்டியது.
நம்பிக்கைகளிலிருந்து தொடங்குவதென்பது புதிய அடைவுகளுக்கு வழிவகுக்காது. உணர்ச்சிமிகு பற்று அங்கு மேலோங்கியிருக்கும். கொள்கையை வட்டத்திற்குள்ளோ சதுரத்திற்குள்ளோ மட்டும் சுருக்கிவிடக்கூடியது. ஆனால் விசாரணையின் அடிப்படையான கூறு கேள்விகள். கேள்விகளை எழுப்புவது, அறிவுசார்ந்த புதிய பார்வைகளுக்கும் சிந்தனைகளுக்கும் அடைவுகளுக்கும் இட்டுச்செல்லும் என்பதே அந்தக்கூற்றின் சாரம். விசாரணைகளிலிருந்து தொடங்குவது கொள்கையின் அறிவார்ந்த அணுகுமுறைக்கும் முக்கியமானது.
நவமகனின் ‘போக்காளி’ நாவல் உள்ளடக்கியிருக்கின்ற சமூக, அரசியல் உரையாடல்கள் அத்தகைய அடிப்படையில் நோக்கக்கூடியவை. டந்த கால அனுபவங்கள், வரலாறுகள் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல. இருளும் ஒளியும், பெருமிதமும் இழிவும், சரிகளும் தவறுகளும் உள்ளடங்கியதே வரலாறும் அனுபவங்களும். பல்வேறு தளங்களிலான உரையாடல்களுக்கு உந்தக்கூடிய பேசுபொருட்களை இந்நாவல்; கொண்டிருக்கின்றது.
விடுதலை என்ற சொல்லோடு தொடங்குகிற நாவல், விடுதலை என்ற சொல்லுடனேயே முடிகின்றது. தொடக்கத்தில் வருகின்ற விடுதலை கதையின் நாயகன் சிறையிலிருந்து விடுதலையாகுகின்ற நிகழ்வு. முடிவில் வருகின்ற விடுதலை அவன் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்று மரணத்தைத் தழுவுகின்ற நிகழ்வினைச் சுட்டுகிறது. இவ்விரண்டையும் விட குறியீடாகவும் இந்த விடுதலை என்ற சொல்லை நோக்கலாம். ஈழத்தமிழரின் அரசியல் விடுதலையின் அவாவுதலையும் இந்த நாவலின் பெரும்பகுதி பேசுகின்றது என்ற அடிப்படையிலும் அச்சொல் முக்கியமானது.
நான் நாடக, திரைப்படத்துறைகளில் ஆர்வமுள்ளவன், அவை தொடர்பான கட்டுரைகளை எழுதிவருபவன். அரங்கச் செயற்பாடுகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருபவன் என்ற வகையிலும் ஒரு விடயத்தைக் கூறலாம். இந்த நாவலுக்குள் ஒன்றல்ல. பல முழுநீளத்திரைப்படங்களுக்கான கதைகள் உள்ளன. மட்டுமல்ல இன்னும் பல குறும்படங்களுக்கான, நாடகங்களுக்கான கதைகளும் மனிதர்களும், கதையாடல்களும் உள்ளன. இந்த நாவல் எடுத்துக்கொண்ட 30 ஆண்டுகால நீட்சி கொண்ட இந்த நெடுங்கதையை ஒரு சடைத்து வளர்ந்த மரம் என எடுத்துக்கொண்டால், அதன் எண்ணற்ற கிளைகளை அந்நெடுங்கதையாடலுக்குள் உள்ள துணைக்கதைகளாகக் கொள்ளலாம். அதன் இலைகளை அக்கதைகளின் மாந்தர்களாகக் கொள்ளலாம்.
புலம்பெயர் இலக்கியப் படைப்பாக – வரலாற்றுப் பின்னணியில் வாழ்வியல் பதிவாக – புலம்பெயர் அனுபவ விபரிப்பாக, நிகழ்வுகளின் தொகுப்பாக ஒரு பல்பரிமாணத்தன்மையுடன் இந்த நாவல் மிகுந்த பெறுமதியுடையதாகுகின்றது.
காக்கைச் சிறகினிலே, ஒக்ரோபர் 2022