‘நோர்வேஜிய இலக்கிய விழா 2022’ இலக்கிய நிகழ்வுகளுக்கான பெருந்தளம்! – சில அனுபவக் குறிப்புகள்

எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், வெளியீட்டாளர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள் ஊடாடுவதற்கும் அனுபவத்தைப் பெறவுமான நோர்வேயின் மிகப்பெரிய இணைவுத்தளமாக இந்த விழா விளங்குகின்றது. பல வடிவங்களில் கலை, இலக்கிய, அரங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நோர்வே இலக்கிய விழா ஒவ்வொரு வருடமும் மே 30ஆம் நாளிலிருந்து ஜூன் 5ஆம் திகதி வரையான ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆகிய இரண்டாண்டுகளும் நடைபெறவில்லை. இணையவழி குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இலக்கியங்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இவ்விழா நோர்வேயின் தென்கிழக்கில், ஒஸ்லோவிலிருந்து 180 கி.மி தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற Lillehammer நகரில் 1995இலிருந்து வருடாந்தம் நடைபெற்றுவருகின்றது. இம்முறை விழாவின் இறுதி நாளுக்கு முதல்நாள் 04.06.22 சென்றிருந்தோம்.

சமாந்தரமாகப் பல நிகழ்வுகள்

தனியாக ஒரு மண்டபத்திற்குள் என்று அல்லாமல், பல்வேறு மண்டபங்கள், அரங்குகள், திறந்தவெளிகளென ஒரே நேரத்தில் இலக்கியம், புத்தகம் சார்ந்த வெவ்வேறு நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன. நூலகம், திரையரங்கு, நாடக அரங்கு, அருங்காட்சியகம், பண்பாட்டு மைய மண்டபங்கள், பூங்காக்களில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்குகள் என நகரின் மையத்திலுள்ள பல்வேறு மண்டபங்களும் நிகழிடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. விருது வழங்கல்கள், எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல்கள், வெவ்வேறு பேசுபொருட்களையுடைய கருத்தமர்வுகள், புத்தக அறிமுக-விமர்சன நிகழ்வுகள், ஆவண-திரைப்பட திரையிடல்கள், நாடகங்கள், கவிதை-சிறுகதை- நாவல் வாசிப்புகள், சிறுவர்கள்-இளையவர்களுக்கான கலை-இசை-இலக்கிய அரங்குகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

**

சர்வதேச இலக்கியங்கள்

இது ஸ்கன்டிநேவியாவிலேயே பெரிய இலக்கிய விழாவாகும். எல்லா வயதுப்பிரிவினரினதும் ஆர்வங்களுக்குரிய வகையிலான வெவ்வேறு வகைப்பட்ட நிகழ்வுகளுடன் இது ஒழுங்குபடுத்தப்பட்டுவருகின்றது. அண்மைய ஆண்டுகளில் சர்வதேச கவனத்தைப் பெற்று வந்திருக்கின்றது. சர்வதேச கவனம் எனும் போது உலக இலக்கியங்கள் நோர்வேஜிய இலக்கிய விழாவில் கவனம்பெற்றுள்ளன என்பதையும் உலக நாடுகளின் இலக்கிய மட்டங்களில் இவ்விழா அறியப்பட்டிருக்கின்றது என்பதையும் குறிக்கின்றது.

நோர்வேஜிய இலக்கியங்களோடு, ஒவ்வோராண்டும் ஒவ்வொரு நாட்டின் இலக்கியங்கள் பிரத்யேகமாகக் கவனப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு பிரித்தானிய இலக்கியம் கவனக்குவிப்பிற்குள்ளாக்கப்பட்டு, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2016, 2017, 2018, 2019 முறையே அமெரிக்க, இந்திய, ஜப்பானிய, பிரெஞ்ச் இலக்கியங்கள் தனியான கவனக்குவிப்பினைப் பெற்றிருந்தன.

பாடசாலை மாணவர்கள், குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகள் என அனைத்துத் தரப்பினரும் நல்லதோர் அனுபவத்தைப் பெறும் வகையிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. குழந்தைகள் இலக்கியத்திலிருந்து, அனைத்து வயதுப்பிரிவு வாசகர்கள், கலை இலக்கிய ஆர்வலர்களுக்குரிய நிகழ்ச்சிகளுடன் இவ்விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.

புனைவு, அபுனைவு கவிதை, நாடகம், திரைப்படம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆவணப்படம் உடபட்ட அனைத்து இலக்கிய வகைமைகளுடன், சமூக விவாதங்களுக்குரிய பேசுபொருட்களுடன் அமர்வுகளும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு நாளுக்குமுரிய அனைத்து நிகழ்வுகளும் மிக நேர்த்தியாக நேரம், உள்ளடக்கம், நிகழிடம், பங்கேற்போர் விபரங்களுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட கையேடு அனைவருக்கும் கிடைக்கின்றது. ஆர்வமுள்ள நிகழ்வினைத் தேர்வு செய்து செல்ல முடியும். பல நிகழ்வுகளுக்கு நுழைவுக்கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டும். இலக்கிய அனுபவத்துடன் மட்டுமல்லாது கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச்செல்லும் வகையிலும் விழாச் சூழலும் சுற்றாடலும் அமையப்பெற்றிருக்கின்றது.

 

விருதுகள்

நாம் சென்ற நாளன்று பூங்காவொன்றின் திறந்தவெளி அரங்கில் மொழிபெயர்ப்பாளருக்குரிய விருது வழங்கும் நிகழ்வினையும், அதன் பின்னர் நான்கு எழுத்தாளர்கள் தமது நாவல்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்த ஒரு அத்தியாயத்தை வாசித்தளிக்கும் நிகழ்வினையும் பார்க்க முடிந்தது. மொழிபெயர்ப்பாளர் விருது Tove Bakkeஇற்கு வழங்கப்பட்டது. பிரெஞ்ச், ஸ்பானிஸ் உட்பட்ட ஏழு மொழிகளிலிருந்து 60 வரையான படைப்புகளை நோர்வேஜிய மொழிக்குக் கொண்டுவந்திருப்பவர் இவர். விருதினைப் பெற அவர் நேரடியாக வரமுடியாத நிலையில், அவர் பற்றிய குறிப்பும், அவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டமைக்கான நடுவர்குழுவின் நியாயப்படுத்தலும் வாசித்தளிக்கப்பட்டது. அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் எழுத்துவடிவமும் அவருடைய மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவும் அரங்கில் மொழியப்பட்டது.

ஜூன் 2ஆம் நாள் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான யோகான் சண்முகரத்தினம் எழுதிய ‘Bruddet’ (உடைவு) புத்தகத்திற்கு நோர்வேயின் புத்தக வணிகக்கூட்டமைப்பின் (Norwegian Bookstore assosiation) 2022ஆம் ஆண்டுக்கான (Non-fiction award) அபுனைவு விருது வழங்கப்பட்டது. யோகான் நோர்வேயின் Class Struggle/Klassekampen நாழிதளில் எழுதிவருபவர். அந்நாளிதழின் சர்வதேச விவகாரங்களுக்கான கட்டுரைப் பிரிவிற்கும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.

‘இன்னும் நாம் சுவாசிக்கிறோம்/Vi puster fortsatt ’இவருடைய முதலாவது புத்தகம். 2020இல் வெளிவந்திருந்தது. அப்புத்தகம் இரு கலாச்சாரச் சூழலின் இனவாதம், இனவாதத்திற்கு எதிரான போக்குகள் குறித்த சுயஅனுபவ நிகழ்வுகளின் விபரிப்புகளை உள்ளடக்கியதாகும். இரண்டாவது புத்தகம்- 2021 இல் வெளிவந்தது. ‘Bruddet’ என்பது அதன் நோர்வேஜியத் தலைப்பு தலைப்பு. ‘உடைவு’ என அதனைத் தமிழ்ப்படுத்தலாம். Brexit என்பது ஐரோப்பிய ஒன்றிய – பிரித்தானிய உறவினை மறுவரையறை செய்துள்ள ஒரு வரலாற்று அரசியல் நிகழ்வு. அதன் அரசியல், பொருளாதார விளைவுகள் பிரித்தானியாவின் உள்நாட்டு மட்டத்திலும், ஐரோப்பா மற்றும் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. ‘Bruddet’ புத்தகம் அதனைப் பற்றியதே. ஆனால் அது தகவல், தரவுகள், நிகழ்வுகள், வரலாறு, அரசியல் விடயங்களை நேரடியாகப் பேசுகின்ற புத்தகம் அல்ல.

Brexit பற்றிய புத்தகம் ‘Bruddet’ (உடைவு)

இரண்டு வெவ்வேறு சமூக, வாழ்வியல் பின்னணிகளைக் கொண்ட மனிதர்களைப் பின்தொடர்ந்ததன் வாயிலாக எழுதப்பட்டுள்ள அபுனைவுக் கதை (Non-fiction). பிரித்தானியாவின் Boston நகரில் வசிக்கும் லித்துவேனியப் பின்னணியைக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான அலெக்சாண்ட்ரா எனும் இளம் பெண், அதே நகரைச் சேர்ந்த மீனவ வயோதிபரான அல்பேட் ஆகிய இருவரும் இப்புத்தகத்தின் கதைமாந்தர்கள். Brexit பின்னணியில் அவர்களுடைய வாழ்க்கை இதில் பேசப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதென்ற முடிவுக்கு அரசியல் அங்கீகாரம், மக்கள் ஆணை பெறப்பட்ட பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட்ட 2016 இலிருந்து அதிகாரபூர்வமாக விலகல் நிகழ்ந்த ஜனவரி 2021 வரையான நான்கு ஆண்டுகள் ஊடகவியலாளர் யோகானும் ஒளிப்பட ஊடகவியலாளர் Line Ørnes Søndergaard உம் இவ்விருவரையும் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து உரையாடி, அவர்களின் வீடுகள், வேலைத்தளங்கள் போன்ற இடங்களில் ஊடாடியும் அன்றாட வாழ்வினை அவதானித்ததன் மூலமும் இப்புத்தகம் உருவாகியுள்ளது.

பொதுவாக்கெடுப்பின் போது 75,6 வீதமான Boston நகர மக்கள் விலகலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரித்தானியா முழுவதிலும் இந்நகரத்திலேயே விலகலுக்கு ஆதரவாக அதிக வீத வாக்குப் பதிவாகியிருந்தது.’உடைவினை விரும்பிய நகரத்தின் கதை’ என்பது புத்தகத்தின் துணைத்தலைப்பு.’எல்லைகள் திறக்கப்படுவதும் மனங்கள் அடைக்கப்படுவது பற்றியதும், அதிகாரம், இயலாமை, நம்பிக்கையீனம், ஒருமைப்பாடு, வெளியேற்றக் காலத்தின் காதல் உறவு பற்றியதுமான கதையைப் பேசுகின்றது இப்புத்தகம்’ என முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறந்தவெளி ஒளிப்படக் கண்காட்சி

இப்புத்தகம் படங்களையும் உள்ளடக்கியது. அதாவது கதை சொல்லல் எனும் எழுத்து வடிவத்திற்குத் துணையாக, கதை மாந்தர்களையும் அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் பதிவாக்கிய ஒளிப்படங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பட ஊடகவியலாளர் Line Ørnes Søndergaard  அவ்வொளிப்படங்களை உருவாக்கியிருந்தார். புத்தகத்தில் இடம்பெற்றிருந்த படங்களில் சில திறந்தவெளியில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இலக்கிய விழாவின் கண்காட்சி சார்ந்த நிகழ்வின் ஒரு அங்கமாக இப்புத்தகத்தின் படங்கள் விழா நடைபெற்ற அனைத்து நாட்களும் அங்கிருந்தன.

எழுத்தாளர் சந்திப்பு, வாசிப்பு, விவாதம்-கலந்துரையாடல், விரிவுரை, விருது வழங்கும் நிகழ்வு, நாடக அரங்ககு, கண்காட்சி, கருத்தரங்கு உட்பட்ட இன்னும் பல வடிவங்களில் கலை, இலக்கிய, அரங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இன்னும் சொல்வதானால் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், வெளியீட்டாளர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள் ஊடாடுவதற்கும் அனுபவத்தைப் பெறவுமான நோர்வேயின் மிகப்பெரிய இணைவுத்தளமாக இந்த விழா விளங்குகின்றது.

**

Sigrid Undset நாட்கள்’

இந்த இலக்கிய விழாவிற்கு ஒரு பின்னணி உள்ளது. நோர்வேயின் முக்கிய பெண் இலக்கிய ஆளுமை Sigrid Undset (1882 – 1949). இவர் இவர் சர்வதேச அளவில் அறியப்பட்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, சுயசரிதை, கவிதைகள் மற்றும் நாடகங்கள் என இலக்கியங்களின் பல்வகைமைகளைக் கையாண்டு படைப்புகளை உருவாக்கியவர். இலக்கியத்திற்கான நோபல் விருதினை 1938ஆம் ஆண்டு பெற்றவர். 1993இல் LilleHammerஇல் நடாத்தப்பட்ட அவர் பற்றிய ஒரு கருத்தரங்குதான், பின்னர் 1995இல் இலக்கிய விழாவாக உருவெடுப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. இன்றுகூட இலக்கிய விழாவிற்கான துணைத்தலைப்பு ‘Sigrid Undset நாட்கள்’ என்பதாகும்

சிறார்கள், இளையவர்களுக்கான தனியான நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அவை சிறார்கள், இளையவர்கள் மத்தியில் வாசிப்பு மீதான விருப்பத்தைத் தூண்டும் நோக்கத்திலானவை. விழா ஏற்பாட்டுக்குழுவில் சில முழுநேர ஊழியர்களும், 300இற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களும் பங்கெடுத்துவருகின்றனர். 6 நாட்களும் மொத்தமாக 25 000 முதல் 30 000 வரையான பார்வையாளர்கள் இலக்கிய விழாவில் பங்கேற்கின்றனர் என்ற தகவலையும் அறிய முடிகிறது. உலகெங்கிலுமிருந்து 400 வரையான எழுத்தாளர்களும் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

.

 

 

 

 

Leave A Reply