நோர்வேயில் ஆரம்பப் பாடசாலைகள் மீளத்திறக்கும் முடிவு: அச்சங்களும் விமர்சனங்களும்!

சமூக மீள்இயக்கத்திற்கான சக்கரங்களைச் சுழலவைப்பதற்கு கின்ரர்கார்டன்களும் ஆரம்பப் பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டியது தவிர்க்கமுடியாத யதார்த்தம். ஆனால் சமூக பொருளாதார நலன்களை முன்னிறுத்தி பாடசாலைகளை அவசரப்பட்டுத் திறக்கும் போது அவை மீண்டும் தொற்றுப்பரம்பலை அதிகரிக்க வழியேற்படுத்திவிடக்கூடாது. அப்படி நிகழுமாயின், அதனைத் தடுப்பதற்குரிய அவசரகாலத்திட்டங்களை மீண்டும் முதலிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டிவரும்.

நோர்வேயில் கொரோனா தொற்றுப்பரம்பல் தடுப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தும் முடிவுகள் சில அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன எனும் தரவுகளினதும் கணிப்பீடுகளினதும் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. தொற்றுப்பரம்பல் பெருக்கம் விகிதாசார அடிப்படையில் இறுதிவாரங்களில் குறைந்துள்ளது. இந்தப் பின்னணியில் இயல்புநிலைக்குத் திரும்புதலின் முதற்படிநிலை அறிவிப்பாக இது கருதப்படுகின்றது. இது அரசாங்கத்தின் மூன்றாம் கட்ட அறிவுப்பு.

முக்கியமாக ‘சிறுவர் பராமரிப்பு முன்பள்ளிகள்’ (கின்ரர் கார்டன்கள்) மற்றும் ஆரம்பப் பாடசாலைகளை (1 முதல் 4ம் வகுப்பு வரை) ஏப்ரல் 27 இலிருந்து மீளத்திறக்கும் முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது. 1 வயதிலிருந்து 6 வயது வரையான குழந்தைகளுக்குரிய கின்ரர் கார்டன்கள் மற்றும் 6 வயதிலிருந்து பத்து வயது வரையான குழந்தைகளுக்குரிய பாடசாலைகளுமே திறக்கப்படவுள்ளன.

இந்த முடிவு வலுவான விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. சமூக ஊடக மட்டங்களில் காத்திரமான விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாகப் பெற்றோரின் இடத்திலிருந்து இதனைப் பார்க்குமிடத்து இந்த முடிவு தொடர்பான அச்சங்களை உணரவும் புரிந்துகொள்ளவும் முடியும்.

குழந்தைகள் ‘Risk Group’ எனப்படும் இலகுவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்துக்குரிய வயதுப்பிரிவிற்குள் இல்லை என்று கூறப்பட்டாலும் அதற்குரிய விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால் இதுவரையான உலகளாவிய அனுபவங்களிலிருந்து மட்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்புசக்தி சார்ந்து குழந்தைகளுக்குச் சாதகமான நிலையிருக்கின்றது எனினும் அவர்கள் நோய்காவிகளாக இருக்க முடியும். குழந்தைகள், சிறுவர்களுக்குரிய தொற்றுச் சாத்தியக்கூறுகள் குறைவெனும்போதும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள், முதியவர்களுக்கு தொற்றைக் கடத்துகின்றவர்களாக இருக்கமுடியும்.

கின்ரர்கார்டனில் மூக்கு வடிந்தபடி அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தையை இரண்டு மீற்றர் இடைவெளியில் நின்றுகொண்டு; எப்படி அரவணைத்துத் தேற்றமுடியும். தவிர இந்த வயதுப் பிரிவையுடைய குழந்தைகளை தொற்றுத்தடுப்பு விழிப்புணர்க்குரிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வைப்பது ஒப்பீட்டளவில் கடினம். வீட்டிற்குள் அது ஓரளவு சாத்தியப்பாடானது. பலர் ஒன்றுகூடியிருக்கின்ற இடங்கள், வகுப்பறைகள், விளையாட்டுத்திடல்கள், பொதுக் கழிப்பறைப் பாவனை போன்ற இடங்களில் முன்தடுப்புச் சுகாதாரம் தொடர்பான விழிப்புடன் அவர்களால் நடந்துகொள்வது சாத்தியமற்றது. அதற்குரிய உணர்திறனையும், மனநிலையினையும் செயற்பாட்டினையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. உரிய அறிவுறுத்தல்களும் கவனிப்பும் பெரியவர்களால் வழங்கப்படினும், தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் கைக்குழந்தைகளை இடைவெளி பேணியபடி பராமரிக்க முடியாது. அவர்களுக்கு உடல் ரீதியான அரவணைப்புத் தேவை. தவிர குழந்தைகள் மத்தியில் ஒருவருக்கொருவர் இடைவெளியைப் பேணவைப்பது முற்றிலும் சாத்தியமற்றது. குழந்தைகளைக் கின்ரர் கார்டன்களில் ஒப்படைக்கும் போதும் அங்கிருந்து அவர்களை வீட்டுக்கு அழைத்துவருவதற்குமாக பெற்றோர்கள் பலர் உள்நுளைவதும் வெளியேறுகின்ற நிலை உள்ளது. இவை ஒரேநேரத்தில் நிகழும். அந்நேரங்களில் அங்கு பலர் நெருக்கமாக நிற்கவேண்டி ஏற்படும். அந்நேரங்களில் தனிநபர் இடைவெளியைப் பேணுவது சுலபமல்ல.

இப்படியிருக்க, அரசாங்கம் ஏன் கீழிருந்து தொடங்குகின்றது என்பது கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. மக்களை, குறிப்பாக குழந்தைகளையுடைய பெற்றோர் பாதுகாப்பாக உணரும் வகையில் போதிய நம்பகமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை. மாறாக பாதுகாப்பின்மைகளையே ஏற்படுத்தியிருக்கின்றது. உண்மையில் மேலிருந்து தொடங்குவதுதான் நடைமுறைச் சாத்தியமும் பயனுமுடையதுமாகும். அதாவது பல்கலைக் கழககங்கள், மேல்நிலைப் பாடசாலைகளைத் திறப்பதே பொருத்தமுடையது.

சிறு பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதாலும் வீட்டுக்கல்வியில் பெற்றோர்கள் நேரம்செலவிட வேண்டியிருப்பதாலும் பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதில் சிக்கல் நிலவுகின்றது. வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் பெற்றோர்களும் வேலையில் முழுமையாக ஈடுபடமுடியாத சூழல் நிலவுகின்றது. எனவே பிள்ளைகளைக் கின்ரர் கார்டனுக்கும் பாடசாலைக்கும் அனுப்பி பெற்றோரை பராமரிப்பு, கற்பித்தல் சுமைகளிலிருந்து விடுவிப்பது முதன்மை நோக்கமாகத் தெரிகின்றது. அத்தகைய விடுவித்தல மூலம் அவர்கள் வேலைக்குச் செல்வதற்கான புறநிலையை ஏற்படுத்துதலாகும். அதன்மூலம் முடக்கப்பட்ட அல்லது மூடப்பட்ட, தனியார் மற்றும் தொழில், சேவை நிறுவனங்களை இயங்கச் செய்தல் மூலோபாயம் இதற்குப் பின்னால் உள்ளமை மறுப்பதற்கில்லை.

இதுதான் தொற்றுத் தடுப்பில் சமூக, பொருளாதார விளைவுகள் முதன்மைப்படுத்தப்படுவதை வெளிப்படுத்துகின்றது.

5ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களை வீட்டில் வைத்திருப்பதை எந்தவகையான நடைமுறை மற்றும் கல்வியியல் மதிப்பீட்டுக் காரணிகள் நியாயப்படுத்துகின்றன என்பதை அரசாங்கம் கூறவில்லை. மாறாக ஒரு ‘முழுமையான மதிப்பீடு’ என்ற சொல்லாடலுக்குள் அரசாங்கம் ஒளிந்துகொள்கின்றது.

தனிநபர் இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் போன்ற அடிப்படைத் தொற்றுத்தடுப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் புரிதலுடைய மாணவர்களுக்குரிய வகுப்புகளை முதலில் தொடங்குவதே பொருத்தமான அணுகுமுறை. அதுவே படிப்படியான சமூகத் திறப்பிற்கு உகந்த படிநிலை. ஆனால் அரசாங்கம் இதில் தலைகீழான முடிவை எடுத்திருக்கின்றது.
பாதுகாப்பு மிக உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் பாடசாலை மீள்திறப்பு அமையுமென்பதில் பெற்றோர், குழந்தைகள், மற்றும்; ஆசிரியர்கள் உறுதியாக நம்பலாம் என்று கல்வி அமைச்சர் Guri Melby தெரிவித்திருக்கின்றார்.

இதில் பெற்றோர் மட்டுமல்ல, பெரும்பான்மையான தனியார் கின்ரர் கார்டன்களை நடத்துடனர்கள் கூட அவசரப்பட்டு மீளத் திறப்பது பாதுகாப்பற்றதெனக் கருதுவதாகக் கணிப்பீடொன்றில் தெரியவந்துள்ளது. 20 இல் ஒரு தனியார் கின்ரர் கார்டன்களே அரசாங்கத்தின் அறிவுறுத்தல் பாதுகாப்பானதென நம்புகின்றன. தனியார் கின்ரர் கார்டன்களின் நாடளாவிய கூட்டுறவுச் சங்கம் தனது உறுப்பினர்களிடம் நடாத்திய கணிப்பிலிருந்து இது தெரியவந்துள்ளது.

மக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையிலான போதிய மருத்துவ அறிவியல் ரீதியான காரணங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை. அப்படியிருக்கையில் வெறுமனே டென்மார்க் பின்பற்றும் நடைமுறைகளுக்குப் பின்னால் செல்கின்றார்களா என்ற கேள்விகளும் சில மட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

5ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வீட்டுக்கல்வியில் பெற்றோர்கள் அதிகம் மெனக்கடத் தேவையில்லை. கொடுக்கப்படும் பாடங்களை அவர்கள் தாமாகவே ஓரளவிற்குச் செய்யக்கூடியவர்கள். சிறிய வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோரும் கூடவே இருந்து பாடங்களைச் செய்வதற்குரிய உதவிகள் மற்றும் கண்காணிப்பினைச் செய்ய வேண்டும். தனிப்பட்ட அனுபவத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது பெற்றோரில் ஒருவர் பிள்ளையுடன் பாடங்களுக்காகச் செலவிடவேண்டும்.

கின்ரர் கார்டன்கள் மற்றும் பாடசாலைகள் மூடியிருப்பதால் சமூகத்தின்; பொருளாதார இழப்பு பில்லியன் கணக்கிலானது. வீட்டு அலுவலகம் (Home Office) மற்றும் வீட்டுக் கல்வி இரண்டிலும் ஒருசேர ஈடுபடுவது செயற்திறன் குன்றிய காரியம். இரண்டையும் தரத்துடன் முன்னெடுக்க முடியாது. ஒன்றையொன்று வெகுவாகப் பாதிக்கும்.

அரசாங்கத்தின் முடிவுகள் நிபுணர் குழுக்களின் மதிப்பீடுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன என்ற போதும், அவை இரண்டு சிக்கல்களைக் கொண்டுள்ளன. மக்களுக்கு பாதுகாப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் இம்முடிவு முன்வைக்கப்படவில்லை என்பது ஒன்று. அறிவியல் ரீதியான காரணங்களை முன்வைக்கவில்லை என்பது இரண்டாவது குறைபாடு.
இன்றைய நிலவரப்படி ஏப்ரல் 27 பாடசாலைகள் தொடங்கப்பட்டாலும் கணிசமான பெற்றோர் தமது பிள்ளைகளைத் தொடர்ந்தும் வீடுகளில் வைத்திருப்பர் என்றே தோன்றுகிறது. முடிவுக்கு அடிப்படையாக அமைந்த மதிப்பீடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மையே மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பாதுகாப்புணர்வையும் ஏற்படுத்தும் என்ற கருத்துகள் ஊடக மட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

எல்லா வீடுகளும் கற்பதற்கு உகந்த சூழல் ஒரே மாதிரியாகவும் சாதகமாகவும் இருப்பதில்லை. வீட்டுச்சூழல் பலமாதிரியானது. வீட்டுக்கு வீடு மாறுபட்டது. வீட்டுக்கல்வியின் பெறுபேறு பெற்றோரின் ஆளுமை, அவர்களால் ஒதுக்கக்கூடிய நேரம், பிள்ளைகளின் ஆர்வம், திறன், வீட்டுச்சூழல் எனப் பல்வேறு அம்சங்களில் தங்கியுள்ளன. எனவே வீட்டுக்கல்வியை நீடிப்பது மாணவர்கள், பெற்றோர், வீட்டுச்சூழல், சமூகம் என அனைத்திற்கும் ஆரோக்கியமானதல்ல.

இருப்பினும் தொற்றுநெருக்கடியின் விளைவுகள், ஆபத்துகள் சார்ந்த மன ரீதியான அச்சங்களை அகற்றுவதும் உரிய பாதுகாப்புப் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாதவை.

சமூக மீள்இயக்கத்திற்கான சக்கரங்களைச் சுழலவைப்பதற்கு கின்ரர்கார்டன்களும் ஆரம்பப் பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டியது தவிர்க்கமுடியாத யதார்த்தம். ஆனால் சமூக பொருளாதார நலன்களை முன்னிறுத்தி பாடசாலைகளை அவசரப்பட்டுத் திறக்கும் போது அவை மீண்டும் தொற்றுப்பரம்பலை அதிகரிக்க வழியேற்படுத்திவிடக்கூடாது. அப்படி நிகழுமாயின், அதனைத் தடுப்பதற்குரிய அவசரகாலத்திட்டங்களை மீண்டும் முதலிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டிவரும்.

18.ஏப்ரல்.2020

Leave A Reply