பறவைக்கு..!
பறவையின் சிறகுகளை
அறிவதில்லை
மனச் சிறைகளுக்குப்
பழக்கப்பட்ட மனிதர்கள்
பறவையின் வெளிகளை
அறிவதில்லை
சட்டகங்களுக்குள்
நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்கள்
பறவையின் அகங்களை
அறிவதில்லை
நரிகளின் தந்திரங்களைத்
தத்தெடுத்துத் தமதாக்கிய மனிதர்கள்
பறவையின் மவுனங்களை
அறிவதில்லை
இரைச்சல்களுக்கு
இசைந்துவிட்ட மனிதர்கள்
பறவையின் மொழிகளை
அறிவதில்லை
கூடிப்பிதற்றுதல்களில்
குளிர்காயும் மனிதர்கள்
பறவையின் தேடலை
அறிவதில்லை
குண்டுச் சட்டிக்குள்
குதிரையென்றாகிய மனிதர்கள்
பறத்தலின் பரவசத்தை
அறிவதில்லை
ஆதிக்கபோதை
ஏறிய மனிதர்கள்
பறவையின் விசாலத்தை
அறிவதில்லை
வட்டங்களுக்குள்ளும்
சதுரங்களுக்குள்ளும்
சிந்திக்கும் மனிதர்கள்
தலைக்கு மேல்
விரிந்திருக்கும் வானம்
எல்லையென்றான பின்
கால்களின் கீழ் பூமி
பொருட்டல்ல!
பறவைக்கு..!
/ரூபன் சிவராஜா
05/09/18