பலஸ்தீனமும் தமிழர் தாயகமும் திட்டமிட்ட குடியேற்றத்தினை எதிர்கொண்ட தேசங்கள் – ஒரு ஒப்பீடு

உலக வரலாற்றில் தேசிய மக்களினங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்டஃமேற்கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமாகவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங்காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலத்தந்திரமாக இருந்தது. எனவே இதன் அடிப்படை சார்ந்து சில விடயங்களை முதலில் ஆராய்வது பொருத்தமானது.

தமிழர் தாயகப் பிரதேசங்களை துண்டாடும் இலக்கோடு பெருமெடுப்பில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்ட சிங்கள இனவாத மேலாண்மையின் சூட்சுமங்களையும் காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்ட பின்னணியில் காசாவின் எதிர்காலம் பற்றியதான விடயங்களையும் நோக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு
உலகிலேயே நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டினை முன்னிறுத்திய வாழ்வினை பின்பற்றுபவர்கள் வரிசையில் முதலில் யூதர்களும், அடுத்ததாக சிங்களவர்களும் விளங்குகின்றனர். தமக்காக இறைவனால் ”வாக்களிக்கப்பட்ட பூமி” (தேர்ந்தெடுக்கப்பட்ட பூமி) என்பதே அவர்களின் அந்தக்கோட்பாட்டு வியாக்கியானமாக இருக்கின்றது. பொளத்தத்தைப் காப்பதற்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டதே இலங்கைத்தீவு என்ற வலுவான நம்பிக்கை மகாவம்சம் என்ற சிங்கள வரலாற்று (சிங்களவர்களின் நலனுக்காக திரிக்கப்பட்ட வரலாறு) நூல் மூலம் பெரும்பான்மை சிங்களவர் மனங்களில் ஆழமாய் பதியலாயிற்று.

ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே அரசு, ஒரே நாடு என்ற கோட்பாடே உண்மையான பௌத்தர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்துவதற்கான அதி உன்னதம் என்ற நம்பிக்கை சாதாரண சிங்கள மக்களின் மனங்களுக்குள்ளும் மூளைக்குள்ளும் புகுத்தப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்கே உரியது என்ற கருத்துருவாக்கம் சிங்கள மக்களின் மூளைகளை ஆக்கிரமித்த நிலையில், சிங்களவர்கள் மத்தியில் தமிழர் விரோதப்போக்கு வளர்த்தெடுக்கப்பட்டது. சிறு பராயத்திலிருந்தே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை பாடநூல்கள் ஊடாகவும் மிக நுணுக்கமாகப் புகட்டப்படுகின்றது. மகாவம்சத்தினூடாக சிங்கள மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்பட்ட இந்த உணர்வே இலங்கையின் இனமுரண்பாட்டின் தோற்றத்திற்கு அடிகோலியது, தமிழ்மக்கள் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கும் வழிகோலியது.

தமிழர் தாயகப்பிரதேசங்களை விழுங்கிய சிங்களக் குடியேற்றங்கள்
தமிழர் தாயகப்பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தமிழர்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பதன் மூலம், இலங்கைத்தீவில் சிங்களவர்களின் பரம்பலை அதிகரிக்கச் செய்து, தமிழ்மக்கள் சிறுபான்மையினர் என்ற கருத்தை வேரூன்றச் செய்யதே பௌத்த- சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தின் நோக்கமாகும். வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து, வடக்கினையும் கிழக்கினையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு குடியேற்றம் கருவியாய் கைகொடுத்தது.

இந்த அடிப்படையில் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையிலுள்ள நிலத்தொடர்பு, திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்குமிடையிலுள்ள நிலத்தொடர்பு ஆகியவற்றை துண்டிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தினை துண்டாடும்; தொலைநோக்குடன் சிங்களம் செயற்பட்டது. அதேபோல் அம்பாறை- மட்டக்களப்பினைப் துண்டாடும் சூழ்ச்சியுடன் பற்பல குடியேற்றத்திட்டங்களை அமைத்தது. போராளிகளுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்புகளை வேரறுப்பதற்கும் குடியேற்றம் துணைநின்றது.

குளங்கள் புனரமைப்புத் திட்டம், நீர்ப்பாசனத்திட்டம், விவசாய அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வைகளில் குடியேற்றத்திட்டங்களே அபிவிருத்தி செய்யப்பட்டன. தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு சிங்கள குடியேற்றவாசிகளுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. இதற்கு நிலமற்ற வறிய சிங்கள மக்கள் கடும்போக்கு சிங்கள மேலாண்மையாளர்களுக்கு பயன்பட்டனர். தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு, அவ்விடங்களில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டதோடு தமிழ்ப்பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, படிப்படியாக சிங்கள மயமாக்கல் விரிவாக்கம் கண்டது. குடியேற்றப் பிரதேசங்களில் புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்கி சிங்களவர்களின் சனத்தொகை பரம்பலை அதிகரிப்பதற்கான திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப்பட்டன.

தமிழ் மக்கள் மீதான படுகொலைகள்
இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் சிங்களம் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் நோக்கவேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலையில் 200 வரையிலான தமிழ் மக்கள் படுகொலை, அம்பாறை மாவட்டத்தில் வீரமுனைப் படுகொலை மற்றும் திருகோணமலை தென்னமரவாடி படுகொலை என தமிழர்கள் மீதான படுகொலைப் பட்டியல் நீண்டு செல்கின்றது. மட்டக்களப்பில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கில் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்குமிடையில் சூழ்ச்சிகள் மூலம் படுகொலைகளைத் தூண்டியும் சிங்களம் வேடிக்கை பார்த்தது.

இன்று சமாதானத்திற்கான காலத்திலும் தொடர்கின்ற புத்தர் சிலை விவகாரங்களையும் நாம் இதன் பின்னணியிலேயே நோக்க வேண்டும். இனக்கலவரத்தை தூண்டுமளவிற்கு இந்த விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது பலரும் அறிந்ததே. திருமலை, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய தமிழர் தாயப்பிரதேசங்களில் புதிது புதிதாய் தோன்றும் புத்தர் சிலைகள், தமிழ்த்தேசிய எழுச்சியின் உச்சத்தை சகிக்க முடியாத சிங்கள இனவாதத்தின் குரூர மனநிலையை கோடிட்டுக் காட்டுகின்றது. இவ்வாறாக தமிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயங்களை வலுவிழக்கச் செய்யவும், இலங்கை முழுவதும் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்ற கற்பனைக் கோட்பாட்டுக்கு வலுச்சேர்க்கவும், தமிழ்மக்களின் தாயகக் கோட்பாட்டினையும் தன்னாட்சியுரிமையையும் நிராகரிப்பதற்கும், பௌத்த சிங்கள மேலாண்மை ஆட்சியாளர்கள் திட்டங்களை வகுத்து செயற்பட்டனர்-செயற்பட்டுவருகின்றனர்.

திட்டமிட்ட குடியேற்றம்- பலஸ்தீனமும் தமிழீழமும்
போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் என்ற அடிப்படையில் பலஸ்தீனர்களினதும் தமிழர்களினதும் போராட்டம் பல ஒத்ததன்மைகளைக் கொண்டது. அதேபோல் போராடும் இனத்திற்கெதிரான அடக்குமுறையைப் பிரயோகித்த முறைகளிலும் பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் இஸ்ரேலின் யூத பேரினவாதத்திற்கும் ஒத்த தன்மைகளுண்டு. அந்த நோக்குநிலையில் காசா வெளியேற்றத்தை ஆராயும்போது பல உண்மைகளைத் தெளிய முடியும். பலஸ்தீனர்களுக்கெதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாற்றில் திட்டமிட்ட குடியேற்ற மையங்களை இஸ்ரேல் அகற்றுவது இதுவே முதற்தடைவ என்பதால் இந்நிகழ்வு அனைத்துலக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்து முப்பது ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் தமது விடுதலைக்கான அனைத்துலக ஆதரவினைப் பெற்று வந்திருக்கின்றனர். உண்மையில் ஆதரவு என்பதை விட அனுதாபம் என்பதே பொருத்தமான சொல்லாடலாகும். அனுதாபத்தினை அள்ளிப் பொழிந்தே அம்மக்களுக்கான தீர்வு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. (இது தனியாக ஆராய வேண்டிய விடயம்). முதலில் இங்கே காசா வெளியேற்றத்தினை ஊடகங்கள் சித்தரித்த விதத்தினைப் பார்ப்போம்.

காசா வெளியேற்றம் – ஊடகங்களின் சித்தரிப்பு
யூதர்கள் ஏதோ தமது சொந்த தாயகத்தை விட்டு வெளியேறுவது போன்ற
தோற்றப்பாட்டினையே ஊடகங்கள் தந்தன. கண்ணீரும் கம்பலையுமான யூத மக்களின் தவிப்புணர்வே ஊடகங்களை ஆக்கிரமித்தன. ஆனால் அந்த எதிர்ப்பும் தவிப்பும் யூத அடிப்படைவாத கடும்போக்காளர்கள் அரங்கேற்றிய நாடகம் என்பதையும் ஊடகங்கள் சில விளக்கத் தவறவில்லை. ஊடகம் என்பது சக்தி வாய்ந்தது. இன்றைய
பல்லூடகச்சூழல் இன்னும் அதி சக்தியுடையது. கருத்துருவாக்கம் சார்ந்து மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சக்தி, சில சமயங்களில் அநியாயத்தை நியாயப்படுத்தவும், நியாயத்தை அநியாயமாக சித்தரிக்கவும் பயன்பட்டுவருவது வேதனைக்குரியது.

ஊடகர்கள் காசா குடியேற்றப்பகுதியில் நின்றிருந்த வேளைகளிலும், ஒளிப்படக்கருவிகள்
இயங்குநிலையில் இருந்த போதுமே யூதர்கள் உருக்கமான முறையில் கண்ணீர் வெள்ளத்தை
மடைதிறந்து விட்டனர் என்றும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. கடும்போக்கு மத அடிப்படைவாதிகள் வெளியேற மறுத்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். சில பலஸ்தீனர்களை படுகொலையும் செய்தனர். இந்நிலையில் வலுக்கட்டயமாகவே இஸ்ரேலியப் படைகள் யூதர்களை வெளியேற்றவும் நேர்ந்தது.

பலஸ்தீன மக்களின் உணர்வு
காசாவிலிருந்து யூதர்கள் வெளியேறியதைத்தொடர்ந்து, பலஸ்தீனர்கள் தமது சொந்த நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட சுதந்திர உணர்வுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததையும் ஊடகங்கள் பதிவுசெய்யத் தவறவில்லை. இளைஞர்கள் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு மகிழ்ச்சி பொங்க ஓடித்திரிந்தனர். நாற்பது ஆண்டு கால ஆக்கிரமிப்பு, சொந்த வாழ்விடங்களை இழந்து நம்பிக்கையீனங்களுடனும் ஏக்கங்களுடனும் ஏமாற்றங்களுடனும் இருந்த மக்களுக்கு இது பெருத்த மகிழ்ச்சியை தந்திருக்கின்றதென்றால் அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வேயாகும். எத்தனை தசாப்தங்கள் சென்றாலும் சொந்த வீடு, சொந்த நிலம், சொந்த தேசம் மீதான பற்றுறுதி இம்மியளவும் தணியாது என்பதற்கு பலஸ்தீன மக்களின் உளவெளிப்பாடு கட்டியம் கூறுகின்றது.

பறிக்கப்பட்ட நிலங்களை மீளப்பெறுவதென்பது அரசியல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் பெறுமதி மிக்க நிகழ்வு எனலாம்.

இது காசா பிரதேசத்தினை சொந்த வாழ்விடமாகக் கொண்டிருந்த மக்களுக்கு மாத்திரம் மகிழ்ச்சி தரும் நிகழ்வல்ல. காசாவில் யூதக்குடியேற்றப் பகுதிகிளில் மட்டுமல்லாமல், அதனை அண்டிய பகுதி மக்களும் எல்லைப்புற மக்களும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தனர். எனவே இனி அந்தத் தொல்லையும் நீங்கியதென்ற மகிழ்ச்சி பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இங்கு கோடிட்டுக் காட்டவேண்டிய விடயம் என்னவெனில், இஸ்ரேல் தேசத்தின் உச்சநிலைத் தொழில்நுட்பத்தையும் படை பலத்தையும் நம்பியே காசா குடியேற்றம் அகற்றப்படுகின்றது (படைகள் உள்ளடங்கலாக) என்று இஸ்ரேல் தலைமையமைச்சர் அரியல் சரோன் ஆரம்பத்தில் கூறினார். எனவே மீண்டும் தேவையேற்படின் இந்த இடங்களைப் பிடிப்போம் என்பதே சரோனின் கூற்றில் புதைந்துள்ள எண்ணக்கருவாகும். மீண்டும் இந்த இடங்களில் பலஸ்தீன மக்கள் குடியமர்த்தப்பட்டால் மாத்திரமே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமது சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு ஏதிலி வாழ்வில் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு இது பூரண வெற்றியாக நிலைக்கும்.

காசா பிரதேசமானது நிலப்பரப்பில் மிகவும் சிறிய பிரதேசமாகும். இது 45 கி.மீ நீளத்தினையும் 5-7 கி.மீ அகலத்தினையும் கொண்ட பரப்பாகும். எனவே இலகுவில் மீளக்கைப்பற்ற முடியும். தவிர எகிப்தின் எல்லையை அண்டிய கரையோரங்கள் மற்றும் காசாவின் துறைமுகங்களும் தொடர்ந்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில், பலஸ்தீனர்களின் மீள்குடியேற்றமும் இயல்புவாழ்வும் தொடர்ந்தும் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. காசாவிற்கும் மேற்குக்கரைக்குமிடையிலானதும், காசாவிற்கும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலானதுமான வாணிப நடவடிக்கைகள், போக்குவரத்துக்கள் பாதிக்கப்படும். இது பலஸ்தீனத்தில் மீளக்குடியேறும் மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு காசாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும்.

காலச்சக்கரத்தினை மூன்று தசாப்தங்கள் பின்னகர்த்தி மீள்பார்வை செய்வதன் மூலம் யூதர்களின் திட்டமிட்ட குடியேற்றம் பற்றிய ஆக்கிரமிப்பு வரலாற்றினை அறியமுடியும்.
1967 களில் பலஸ்தீன மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த காசா பள்ளத்தாக்கு மற்றும் மேற்குக்கரை ஆகிய பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டு அங்கெல்லாம் யூதர்கள் குடியேற்றப்பட்டனர். இஸ்ரேல் படைகள் எகிப்திலிருந்து படையெடுத்து காசா பள்ளத்தாக்கையும் ஜோர்டானிலிருந்து படையெடுத்து மேற்குக்கரையையும் ஆக்கிரமித்தன. காசாவில் 22 யூதக்குடியேற்ற மையங்களும் மேற்குக் கரையில் 120 யூதக்குடியேற்ற மையங்களும் அமைக்கப்பட்டன.

கேள்விக்குள்ளான மேற்குக்கரை வெளியேற்றம்
காசாவில் 22 குடியேற்ற மையங்களில் 9000 யூதர்கள் வரையில் வசித்தனர். மேற்குக்கரையில் 120 குடியேற்ற மையங்களில் 240 000 யூதர்கள் வசிக்கின்றனர். காசாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே என்பதால் வெளியேற்றம் சாத்தியமானது. ஆனால் மேற்குக்கரையில் இரண்டரை லட்சம் பேர் வரையில் இருப்பதால் வெளியேற்றமென்பது கடினமானதாகவே அமையும்.
தொடர்ந்து மேற்குக்கரை உட்பட பலஸ்தீனப்பகுதிகளின் ஏனைய குடியேற்றங்களும் படிப்படியாக அகற்றப்படும் என்ற நம்பிக்கை பலஸ்தீன மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த நம்பிக்கை ஈடேறுவதற்கான சாத்தியக்கூறுகள் கேள்விக்குரியனவே.

இன்று 38 ஆண்டுகள் கடந்த நிலையில் காசாப்பிரதேசத்தின் யூதக்குடியேற்ற மையங்கள் அகற்றப்பட்டு, இஸ்ரேல் படைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளன. இம்மாதம் (செப்.) 13ம் நாள் இஸ்ரேல் படையினர் காசாவிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளன.
ஓகஸ்ட் 15ம் நாளிலிருந்து இஸ்ரேல் படைகளும் காவல் துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக இரு வாரங்கள் வெயியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏதிர்ப்பின்றி இஸ்ரேல் அரசின் முடிவினை ஏற்று வெளியேறியவர்களின் புனர்வாழ்வுக்கான பொருளாதார இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. வெளியேற மறுத்தோருக்கு ஓகஸ்ட் 15 இற்குப் பின்னர் 48 மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டு, காலக்கெடுவின் பின்பும் வெளியேற மறுத்தோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்பது கடந்த வாரங்களில் பல்லூடகங்களை ஆக்கிரமித்த முக்கிய செய்திகளில் ஒன்று.

வரலாறு சொல்லும் பாடம்
வரலாறு எவ்வாறு நகர்கின்றது என்று பாருங்கள். யூதக்குடியேற்றங்களை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டவர் கடும்போக்காளரான அரியல் சரோன். இன்று அவற்றை காலக்கெடு விதித்து அகற்றி குடியேற்றவாசிகளால் துரோகிப் பட்டமும் சூட்டப்பெற்றிருக்கின்றார்;. இது வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனும் முதுமொழிக்கு பொருள் தருகின்றது. யூத மக்களுக்கு இனவெறியையும் மத அடிப்படை வாதத்தினையும் ஊட்டி பெருமைப்பட்டு, அந்த மக்களையும் பெருமைப்பட வைத்த ஒருவர், அந்த மக்களாலேயே துரோகியாக வஞ்சிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தினக்குரல் – செப்ரெம்பர் 2005

Leave A Reply