பலஸ்தீனம் மீது தொடரும் ஒடுக்குமுறையும் நிலப்பறிப்பும் குடியேற்றங்களும்

ஒரு படைவலுச் சமநிலை இல்லாத இருதரப்புகளுக்கிடையிலான முரண்பாடு இது. அரசுக்கும் அரசில்லாத தரப்பிற்கும் இடையிலான மோதல்கள். தரை, வான், கடல், பெரும் நவீன தொழில்நுட்ப படைக்கட்டுமானங்களைக் கொண்ட அரசுக்கும் போராளி அமைப்பிற்கும் இடையிலான பிணக்குகளாக உலகம் இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையை அணுகுவதில்லை. பாரிய ஆக்கிரமிப்பு சக்திக்கும், பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டினை ஒரே தட்டில் வைத்து இருதரப்பு மோதல், வன்முறைகள் என்று அணுகவோ கணிக்கவோ முடியாது.

மே 10ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக பலஸ்தீனத்தின் காஸா மீது தனது இராணுவ இயந்திரத்தினை ஏவித் தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது இஸ்ரேல். பெருமெடுப்பில் வான், தரை வழித்தாக்குதல்களில், மொத்தம் 240 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60 வரையானவர்கள் சிறுவர்கள். காஸாவில் அமைந்திருந்த ஊடகக் கட்டடத்தை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல் நடாத்தி அதனை இஸ்ரேல் படைகள் தரைமட்டமாக்கியுள்ளன. அல்-ஜசீரா, AP உட்பட்ட உலக ஊடகங்களின் அலுவலகங்கள் அக்கட்டிடத்தில்தான் அமைந்திருந்தது. கட்டட உரிமையாளருக்கு முற்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு, ஒரு மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு, 12 மாடிகளைக் கொண்ட அந்த ஊடகமையம் தகர்க்கப்பட்டுள்ளது. சாட்சிகளை முன்கூட்டியே அப்புறப்படுத்துகின்ற திட்டமிட்ட செயல் இது. 11 நாட்களின் பின் எகிப்தின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவின் திரைமறைவுப் பேச்சுகள் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புகளுககிடையில் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது.

உலக ஊடகங்கள் கொடுக்கும் பிம்பம்
இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடு தொடர்பாக பெரும்பான்மையான உலக ஊடகங்கள் கொடுக்கின்ற பிம்பம் பெருமளவில் ஒருதலைப்பட்சமானது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தொடுக்கின்ற ஏவுகணைத் தாக்குதலுக்கான பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இராணுவத்தாக்குதல்களை மேற்கொள்கின்றது என்பதாகவே அதிகமும் செய்திகளில் சித்தரிக்கப்படுகின்றது. மேற்கின் ஊடகச் செய்திகள் இஸ்ரேல்-பலஸ்தீனப் பிரச்சினையை அதன் வரலாற்றுப் பின்னணி, சமகால நிலைமைகள் மற்றும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவது குறைவு. பெரும்பான்மை ஊடகங்களில் ஒரு வகையான இஸ்ரேல் ஆதரவுப் போக்கினை அவதானிக்க முடியும். மட்டுமல்லாது பலஸ்தீனத் தரப்பு, குறிப்பாக ஹமாஸின் தாக்குதல்கள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுவதையும் காணலாம். இடதுசாரி ஊடகங்களிலும், செய்திகளைத் தாண்டிய அரசியல் ஆய்வுக்கட்டுரைகளிலும் பத்திகளிலும் ஓரளவு நியாயமான பார்வையைக் காணமுடியும்.

பலஸ்தீன மக்களின் பிரச்சினை என்பது, வன்முறையாகவோ, கலவரமாகவோ, பயங்கரவாதமாகவோ, பதட்டநிலை என்றோ, இருதரப்பு மோதல் என்றோ சித்தரிக்கக்கூடிய பிரச்சினை அல்ல. அதன் பரிமாணம் வேறானது. வுரலாற்று நீட்சியுடையது. எழுபது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைக்காகப் போராடி வருகின்ற மக்கள் அவர்கள். அவர்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது யூத இனவெறிக்கும், இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டம். நில அபகரிப்பிற்கு எதிரான, அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான அந்த வரலாறு, ஆயுத விடுதலைப் போராட்டத்தாலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளாலுமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளில் மிக மோசமானது நில அபகரிப்பு. இஸ்ரேல் அரசின் திட்டமிட்ட யூதக்குடியேற்றங்கள் மூலமாக பலஸ்தீன மக்களின் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பூர்வீகப் பிரதேசங்கள் விழுங்கப்பட்டுள்ளன.

மீண்டும் மீண்டும் காஸா மீது இஸ்ரேல் இராணுவ இயந்திரம்
கடந்த 2006இலிருந்து சில ஆண்டுகால இடைவெளிகளுக்குள் தொடர்ச்சியாக தற்போதையதைப் போன்ற மோசமான தாக்குதல்களைக் காஸா மீது இஸ்ரேல் நடாத்தியுள்ளது. 2006 இல் லெபனானின் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான பாரிய போர், 2009-2010, 2012, 2014 என காஸா மீதான இதற்கு முன்னையஸ இஸ்ரேலின் படையெடுப்புகள் அமைந்தன.
காஸா மீதான தாக்குதல்களுக்குக் காரணம், இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் தாக்குதல்கள் என்பதாகவே ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரம் வேறானது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்ஷா மசூதி பலஸ்தீன முஸ்லீம் மக்கள் புனிதமாகக் கருதும் ஸ்தலம். அது இஸ்லாமியர்களின் 3வது புனித ஸ்தலம் எனப்படுகின்றது. அதனை ஆக்கிரமித்து அழித்து அதில் யூத ஸ்தலத்தை நிறுவும் முனைப்பு இஸ்ரேலுக்கு உண்டு. கடந்த ஏப்ரல் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்புகால இறுதி நாட்களில் அம்மசூதிக்குள் இஸ்ரேல் காவல்துறையினரும் இராணுவமும் நுழைந்ததில் அங்கு கலவரம் ஏற்பட்டது. பலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். இந்தக் கலவரத்திற்கான தொடக்கப்புள்ளி, யூத கடும்போக்காளர்கள் திட்டமிட்ட ஒரு பேரணியும் இஸ்ரேல் காவல்துறை அல்-அக்ஷா மசூதியை முற்றுகையிட்டுத் தாக்கியுள்ளமையுமாகும். ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயருடன் அந்நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. 1967இல் நடைபெற்ற ‘ஆறுநாள்’ (05.06.1967 – 10.06.1967) போரில் இஸ்ரேல் படைகள் கிழக்கு ஜெருசலேமினைக் பைக்பற்றியதை நினைவுகூர்வது இந்நிகழ்வின் நோக்கம்.

1967 – ஆறுநாள் போர் ஏற்படுத்திய பாரிய மாற்றம்
1967இன் இந்த ஆறுநாள் போர், இஸ்ரேலுக்கும் அரபுநாடுகளுக்கும் (எகிப்த், ஜோர்டான், சிரியா); இடையில் நடைபெற்றது. குறுகிய போரெனினும் இன்றுவரை நீடிக்கின்ற அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கின்றது இப்போர். இதன் போது கைப்பற்றப்பட்ட மேற்குக்கரை, கோலான் குன்றுகளின் பிரதேசங்கள்( Golan Heights) மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியன இன்றுவரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அதிலும் கிழக்கு ஜெருசலேம் பலவந்தமாக இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலவந்த இணைப்பினை ஆங்கிலத்தில் Annexation என்பார்கள். இந்தப்போரின் விளைவுகள் பிராந்தியத்தின் அரசியல் சூழலை பல வழிகளில் மாற்றியமைத்தது. சர்வதேச ரீதியாக இஸ்ரேல் தனது வகிபாகத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டது. அரபு உலகம் பலவீனப்படுத்தப்பட்டது.

தவிர பலஸ்தீன எதிர்ப்பிற்கான இன்னுமோர் சமகாலக் காரணியும் உள்ளது. அது யூதக்குடியேற்றவாசிகளுக்கும் பலஸ்தீனக் குடும்பங்களுக்குமிடையிலான நிலம்/வீடு தொடர்பான வழக்கு ஆகும. கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheik Jarrah எனும் பகுதியில் நான்கு பலஸ்தீனக்குடும்பங்களை அவர்களின் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றும் முனைப்பில் யூதக்குடியேற்றவாசிகள் இறங்கியுள்ளனர். இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு (1947) முன்பிருந்தே அந்த வீடுகள் தமக்குச் சொந்ததாக இருந்ததாக யூதக்குடியேற்றவாசிகள் வழக்குத் தொடுத்து கீழ் நீதிமன்று ஒன்றில் வென்றுமுள்ளனர். ஆனால் இந்த வழக்கு உச்சநீதி மன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. பலஸ்தீனர்களின் எதிர்ப்புகள் காரணமாக உச்சநீதிமன்ற வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிலத்தில் பலஸ்தீனக்குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. ஜோர்டான் ஆட்சிக்காலத்தில் (1948 – 1967) அதனிடமிருந்து காணிகளைப் பலஸ்தீனக் குடும்பங்கள் கொள்வனவு செய்துள்ளன எனப்படுகின்றது.

தமது நிலங்களை ஆக்கிரமித்து திட்டமிட்ட யூதக்குடியேற்றங்களை நிறுவியதை யூதர்கள் கொண்டாடுவதென்பது பலஸ்தீன மக்களை ஆத்திரமூட்டக்கூடியது. பலஸ்தீன எதிர்ப்பிற்கு அடிப்படையானது இஸ்ரேலின் தொடர்ச்சியான நில அபகரிப்பும், யூதக்குடியேற்றங்களும்.

பலஸ்தீனர்களை ஆத்திரமூட்டும் ஒடுக்குமுறைகள்
இந்தப் பின்னணிகளில் கிழக்கு ஜெருசலேம் மக்களுக்கும் அவர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவாகவும், அப்பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தையும் காவல்துறையையும் வெளியேறக் கோரியே ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கினர். 2014 இற்குப் பின்னர் இஸ்ரேல் மீது முதற்தடவையாக ஏவுகணைத் தாக்குதல்களைக் ஹமாஸ் நடாத்தியிருக்கின்றது. இதற்கு முந்தைய கட்டங்களிலும் இதே பற்றர்னிலேயே காஸா மீதான தரை மற்றும் வான்படைத் தாக்குதல்களை நடாத்தி வந்திருக்கின்றது இஸ்ரேல். அதாவது ஹமாஸ் இஸ்ரேல் பகுதிகளுக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்த, அதற்குப் பதிலடியாகத் தம்மைத் ‘தற்பாதுகாக்கும் உரிமையின்’ பெயரில் ‘பயங்கரவாதிகளை’ அழிக்கும் தாக்குதல் என்பதாகத் தனது போரை இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆனால் காஸா மீது பெருமெடுப்பிலான படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஹமாசை எப்படித் தூண்டவேண்டுமென்ற கைங்கரியத்தினை இஸ்ரேல் நன்கு அறிந்துவைத்திருக்கின்றது.

இஸ்ரேலிடம் Irone Dome எனப்படும் வலுவான ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பம் (Anti missile system) உள்ளது. ஹமாஸினால் ஏவப்படும் ஏவுகணைகளை வான்வெளியில் வைத்தே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம் அது. ஆயினும் அதனையும் தாண்டிச் சில இடங்களில் ஹமாஸின் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இம்முறை 12 வரையான இஸ்ரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவை ஈரான் ஹமாஸிற்கு வழங்கிய ஏவுகணைகள் என்று கூறப்படுகின்றது.

இஸ்ரேலுக்கு நிபந்தனையற்று ஆதரவளிக்கும் அமெரிக்கா
சர்வதேச அரசியலை, குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான உலக அரசியலை அதன் கயமைகளைக் கருத்திலெடுக்காமல் மேம்போக்காகப் பேச முடியாது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றங்கள் சர்வதேச நிலைமைகளைப் பொறுத்தவரை மாற்றங்களைக் கொண்டுவந்ததில்லை. ஒபாமா பதவிக்கு வந்த போதும், இந்தியத் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக வந்தபோதும் அதனைக் கொண்டாடுகின்ற ‘தமிழ் உளவியல்’ சில ஊடக மட்டத்திலும் சமூக மட்டத்திலும்; அவதானிக்கப்பட்டிருந்தது. அது அரசியல் புரிதல் அற்ற ஒருவகை உணர்ச்சிவசப்பட்ட வெளிப்பாடு. எவர் ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று உள்ளது. அதுவும் பனிப்போருக்குப் பிற்பட்ட கால வெளியுறவு அரசியல் என்பது நீதியின் அடிப்படையிலான கொள்கைகளின் பாற்பட்டதல்ல. அது முற்றிலும் பொருளாதார (மற்றும் அரசியல், இராணுவ) நலன்களை அடிப்படையாகக் கொண்டது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நிறுத்தக் கோருவது தொடர்பான தீர்மானத்தினை ஐ.நா பாதுகாப்பு அவையில் கொண்டுவருவதற்கு சில நாடுகள் எடுத்த முயற்சியினை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டிருந்தது. இஸ்ரேல் மீது ஒரு இராஜதந்திர அழுத்தத்தினைக் கொண்டுவருவதற்குக்கூட அமெரிக்கா பின்நிற்கின்றது. 1972 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை 43 தடவைகள் இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்பு அவையின் தீர்மானங்களைத் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்துள்ளது. தற்போதும் அதனைச் செய்துள்ளதோடு அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுமுள்ளன. அதாவது ஹமாஸ் அமைப்பின் எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கின்றதென்பது இந்நாடுகளின் நிலைப்பாடு.

ஐ.நா என்பதுகூட அமெரிக்க நலன்களைத் தாண்டி உலக அரசியலில் வினைத்தாக்கத்தினை ஏற்படுத்தியதில்லை என்பது நெடுங்காலமாக பலமுறை மெய்ப்பிக்கப்பட்ட நிதர்சனம். இஸ்ரேலைப் பொறுத்தமட்டிலும் ஐ.நாவினால் எவ்விதத் தாக்கத்தையும் செலுத்த முடியாது. ஐ.நாவின் கண்டனங்கள் வெறும் சடங்குபூர்வமாக நிகழ்வுகளே.

அமெரிக்காவின் இராணுவ பொருளாதார உதவி
அமெரிக்கா பாரிய அளவில் இராணுவ, பொருளாதார உதவிகளை இஸ்ரேலுக்கு பல தசாப்தங்களாக வழங்கி வருகின்றது. இராணுவ பொருளாதார உதவி என்பதற்கு அப்பால் நிபந்தனையற்ற முறையில் அரசியல், இராஜதந்திர ஆதரவினை அது இஸ்ரேலுக்கு வழங்கிவருகிறது. மறுவளமாகச் சொல்லப்போனால் ஆக்கிரமிப்பு சக்தியும் போர்க்குற்றவாளியுமான இஸ்ரேலின் அனைத்துவகையான ஆக்கிரமிப்புப் போர்கள், (பலஸ்தீன) நிலப்பறிப்பு, திட்டமிட்ட பாரிய யூதக்குடியேற்றங்கள் உட்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு வலுவான முண்டுகொடுப்பினைச் செய்துவருவது அமெரிக்கா மட்டுமே. அமெரிக்க – இஸ்ரேல் உறவு நெருக்கமும் தனியாகப் பேசப்படவேண்டியது.

அமெரிக்காவில் பெரும் நிறுவன மயப்படுத்தப்பட்ட யூத ‘லொபி’ இயக்கங்கள் தொழிற்படுகின்றன. அவை மத, அரசியல், பொருளாதாரம் எனப் பல தளங்களில் நீண்டகாலமாக இயங்கி வருவன. அங்குள்ள கிறிஸ்தவ மதபீடங்களுடனும் நெருக்கமான தொடர்புகளை யூத லொபி இயக்கங்கள் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கிவரும் பல பில்லியன் நிதி உட்பட்ட இராணுவ உதவிகள் குறித்த கேள்விகள் அமெரிக்காவில் எழுப்பப்படுவதில்லை. மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கான அமெரிக்க உதவிகளைக் கேள்வியெழுப்பும், விமர்சிக்கும் தாராளவாதிகள், ஜனநாயகவாதிகள்கூட இஸ்ரேலுக்கான உதவிகளைக் கேள்வியெழுப்புவதில்லை.

மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு இஸ்ரேல் உறுதுணை
அமெரிக்கா போன்று உலகில் வேறெந்த நாடும் இஸ்ரேலுக்கு இராஜதந்திர ஆதரவினை வழங்குவதில்லை. இந்த ஆதரவு என்பதற்கான முக்கிய அடிப்படைகளில் ஒன்று மத்தியகிழக்கில் அமெரிக்காவின் நலன்கள் சார்ந்தது. 1967 இன் பின்னர்தான் (ஆறுநாள் போரின் பின்னர்) அமெரிக்கா தீவிரமாக இஸ்ரேலை ஆதரிக்கத் தொடங்கியது. பெருவாரியாக உதவத்தொடங்கியது. அதாவது சுற்றவுள்ள அரபு நாடுகள் அனைத்தினதும் இராணுவ பலத்தினை விட இஸ்ரேல் இராணுவம் வலிமையானது என நிரூபித்த பின்னர். மேலதிக பிரதேசங்களை ஆக்கிரமித்துத் தன்னையொரு மேலாதிக்க சக்தியாக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரே அமெரிக்க உதவி பன்மடங்காக அதிகரித்தது.

இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரானவை. இந்நிலையில் அவற்றுக்கிடையிலான முரண்நிலைளை அமெரிக்கா தனது நலன்களுக்குச் சாதகமாகக் கையாள்வதற்குரிய நாடாக மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் உள்ளது. லெபனான், பலஸ்தீன தேசியவாத எழுச்சியைத் தடுப்பது, சோவியத்தின் நட்புநாடான சிரியாவைக் கையாள்வது, அணுவாயுத நாடான ஈரானைக் கையாள்வது என்ற அமெரிக்க நலன்களும் உள்ளன. தவிர பிராந்தியத்தில் மிகச் சிறந்த வான்படையினை இஸ்ரேல் கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போர்களில் அமெரிக்க ஆயுததளவாடங்களுக்கான பரிசோதனைக்களமாகவும் பார்க்கப்படுகின்றது. அது சோவியத் தயாரிப்பு ஆயுதங்களுக்கு எதிரான பரிசோதனைக்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடு: நீண்ட வரலாறு
இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாட்டுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கின்றது. அது யூதர்கள் ஐரோப்பாவிலிருந்து பலஸ்தீன நிலங்களில் குடியேறி படிப்படியாக அந்நிலங்களைத் தம்வசப்படுத்தி 1947இல் இஸ்ரேல் என்ற தேசத்தை நிறுவியதற்கு முன்பிருந்து தொடங்குகின்றது அந்த வரலாறு. இஸ்ரேல் தேசம் உருவாக்கப்படுவதற்கு முன்னரான மத்தியகிழக்கு மற்றும் யூதர்களின் குடியேற்றமும் அபகரிப்பும் தொடர்பான வரவாற்றினைத் தனிக்கட்டுரையில் பார்ப்பது பொருத்தம்.

1947இல் ஐ.நாவின் தீர்மானத்தின்படி யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதும் ஜெருசலேம் சர்வதேச கண்காணிப்பிற்கு உட்பட்டதாகப் பேணப்படவேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டது. ஆனால் 1948 ஐ.நா தீர்மானத்தை மீறி மேற்கு ஜெருசலேமினை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. கிழக்கு ஜெருசலேமினை ஜோர்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் 1967-ஆறுநாள் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமினைக் கைப்பற்றியது. இன்றுவரை அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு யூதக்குடியேற்றங்களைப் பெருமளவில் நிறுவியதோடு அதனைப் பலவந்தமாக சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டது. அதனைத் தலைநகரமாக்கும் முனைப்புடன் திட்டமிட்ட தீவிர நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஐரோப்பாவில் யூத எதிர்ப்புவாதம்
ஐரோப்பாவில் யூத எதிர்ப்புவாதம் (Anti semitism) வளர்ச்சி கண்ட புறநிலையில் மறுவளமாக அவர்கள் மத்தியில் சியோனிசம் (Zionism) புதிய வடிவங்களில் எழுச்சி பெற்றது.. யூதர்கள் இனரீதியாக எல்லா மட்டங்களிலும் ஒடுக்கப்பட்டமை, அவர்களை இன அழிப்புச் செய்யும் நோக்கில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, புறக்கணிக்கப்பட்டமையைக் குறிக்கிறது Anti semitism எனும் யூத எதிர்ப்புவாதம். சியோனிசம் என்பது தமக்காக ‘இறைவனால் வாக்களிக்கப்பட்ட தொன்ம நாடான’ இஸ்ரேலை அடைவதற்கான விருப்பினையும் நம்பிக்கையினையும் குறிக்கிறது.

இந்நிலையில் பழைய பலஸ்தீனத்தில் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சி நிலவிய காலத்திலேயே பலஸ்தீன, அரபு மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் தொடங்கி விட்டன. 1920 முதல் 1948 வரை பலஸ்தீனம் பிரித்தானியாவின் கீழ் இருந்தது. அதற்கு முன்னர் கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் ஒட்டமான் பேரரசின் (துருக்கியப் பேரரசு) கீழ் ஆளப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்த யூதர்கள் பழைய பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்தும் கொள்வனவு செய்தும் அங்கு குடியேறினர். இன்னொரு வகையில் சொல்வதானால் பிரித்தானிய கொலனித்துவத்திலேயே பலஸ்தீனம் யூதக் கொலனித்துவமாக மாறத் தொடங்கியது. அரபு நில உரிமையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்தவர்களின் நிலங்களும் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டன என்பது வரலாறு. பிரித்தானிய கொலனித்துவம், இஸ்ரேல் தேசம் உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிலைமைகள், அரபு-யூத முரண்படுகள், பிரித்தானிய வகிபாகம், சியோனிச நகர்வுகள் என்பன தனியான கட்டுரையில் நோக்கப்பட வேண்டியவை.

பலஸ்தீனத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கான மூலம்
பலஸ்தீனத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு பிரித்தானிய ஆட்சியாளர்களும் முக்கிய மூல காரணி. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இலங்கைத்தீவில் தமிழர்களின் அரசியல் உரிமை இழப்பிற்கான மூலமாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது இங்கு கவனம்கொள்ளத்தக்கது.

இஸ்ரேலின் ‘தற்காப்பு உரிமை’ பற்றிக் ‘குரல் எழுப்பும்’ அரசுகள், பலஸ்தீனர்களின் வாழ்வுரிமை பற்றிக் குரல் எழுப்புவதில்லை. ஒரு படைவலுச் சமநிலை இல்லாத இருதரப்புகளுக்கிடையிலான முரண்பாடு இது. அரசுக்கும் அரசில்லாத தரப்பிற்கும் இடையிலான மோதல்கள். தரை, வான், கடல், பெரும் நவீன தொழில்நுட்ப படைக்கட்டுமானங்களைக் கொண்ட அரசுக்கும் போராளி அமைப்பிற்கும் இடையிலான பிணக்குகளாக உலகம் இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையை அணுகுவதில்லை. பாரிய ஆக்கிரமிப்பு சக்திக்கும், பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டினை ஒரே தட்டில் வைத்து இருதரப்பு மோதல், வன்முறைகள் என்று அணுகவோ கணிக்கவோ முடியாது.

Leave A Reply