விளிம்புநிலைக் குழந்தைகள் பற்றிய உலகத்திரைப்படங்கள் – யமுனா ராஜேந்திரனின் புத்தகம்!

இக்கட்டுரைகளின் பயன்பாடு பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. விளிம்புநிலைக் குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்களை, அவற்றின் வெவ்வேறுபட்ட பரிமாணங்களை, சினிமா மரபுகள் சார்ந்த வேறுபட்ட பின்னணிகளோடு வாசகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்துவது – அத்தோடு அந்தத் திரைப்படங்களைத் தேடிப் பார்க்கத் தூண்டுவது. சாதாரண சினிமா பார்க்கும் வாசகர்களைத் தாண்டி, தமிழ்ச்சூழலில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பயனுடையது. இதுபோன்ற திரைப்படங்களைத் தமிழ்ச் சூழலில் திரையிடுவதற்கான உந்துதலையும், அவற்றினூடாக குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்களை முன்னெடுப்பதற்குமுரிய பங்களிப்பாகவும்; அமைகின்றது.

குழந்தைகளைப் பற்றி வெளிவந்த முக்கிய உலகத் திரைப்படங்கள் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரைகளின் தொகுப்பு. இருபது கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 1956 இலிருந்து 2019 வரையான காலப்பகுதிகளில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவந்த 25 முக்கிய திரைப்படங்கள் இதில் பேசப்பட்டுள்ளன. நாடுகள் என்று நோக்குமிடத்து ஈரான், ஸ்வீடன், பிரான்ஸ், இந்தியா, பிரித்தானியா, இத்தாலி, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பர்சீனோ பாசா, நெதர்லாந்த், அயர்லாண்ட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த படங்கள் பற்றிய பார்வைகள் இடம்பெற்றுள்ளன.

அந்நாடுகளின் சமூக-பொருளாதார வாழ்வியல் சூழலில் பெரும்பான்மை சமூகத்தினால் ஏதோவொரு வகையில் நிராகரிக்கப்பட்ட விளிம்புநிலைச் சிறுவர்கள் இப்படங்களின் மையப்பாத்திரங்கள். நிராகரிப்பு என்பது அன்பு, கல்வி, பராமரிப்பு, பொருள், சுதந்திரம், வாழ்வுரிமை, பாதுகாப்பு, உறவு எனப் பல்வேறு புறச்சூழல்கள் சார்ந்தது.

திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளின் உள்ளடக்கம், அதன் வடிவம் பற்றிப் பேசுவதற்கு முன்னர், இத்தொகுப்பிற்கு ‘குழந்தைகளின் பிரபஞ்சம்’ எனும் தலைப்பில் யமுனா எழுதியுள்ள முன்னுரை மிக முக்கியமானதாகப்படுகின்றது. குழந்தைகளுக்கான சினிமா எத்தகைய வடிவத்தினைக் கொண்டிருக்க வேண்டும், எத்தகைய உள்ளடக்கத்தினைக் கொண்டிருக்கவேண்டும் என்ற புரிதல் தொடர்பாக முன்னுரையில் வரிவாகப் பேசப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உலக தரிசனம், அவர்களின் உளவியல், பெரியவர்களின் உலக தரிசனத்திற்கும் குழந்தைகளின் தரிசனத்திற்கும் உளவியலுக்குமிடையிலான வேறுபாடுகள் குறித்தும் நோக்கப்படுகின்றது.

‘குழந்தைளின் உலகம் முற்றிலும் பெரியவர்களின் அனுமானங்களில் இருந்து சுதந்திரமானது. வளர்ச்சியடைந்த வேதனை, விஷமான சுற்றுப்புறச் சூழல், நுகர்பொருள் மோகத்தால் கபளீகரம் செய்யப்பட்ட பூஞ்சையான வெற்று ஆன்மா பெரியவர்களுக்கே உரியது’ என்கிறார்.

குழந்தைகளுக்கான சினிமா என்பதைத் தாண்டி குழந்தைகளுக்கான இலக்கியம் எத்தகைய வடிவ, உள்ளடக்கப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற முன்மொழிவுகளுடன் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. குழந்தைகளுக்கான பேசுபொருள் என்ன என்பது குறித்த கவனத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

குழந்தைகள் பற்றிய திரைப்படத்திற்கும் குழந்தைகளுக்கான திரைப்படத்திற்குமிடையிற்கூட மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. குழந்தைகள் பற்றிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் குழந்தைகள் பார்க்கக்கூடிய படங்களாகக் கொள்ள முடியாது.

குழந்தைகள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகள், வன்முறைகள் குழந்தைகளின் பார்வைக்கானதாய் இருக்கக்கூடியவை அல்ல. குழந்தைகள் மீதான வன்முறைகள், அநீதிகள் போன்ற பேசுபொருளைக் கொண்ட படங்கள் பெரியவர்களுக்கானது. அவை குறித்த பெரியர்களின் உணர்வை, பொறுப்பினைக் கோரி நிற்பவை.

படங்களின் உள்ளடக்கத்தைத் தாண்டி அதன் வடிவம் குழந்தைகளுக்குரியதெனில் எத்தகையதாக அமைய வேண்டும்?, குழந்தைகள் படம் என்பதைத் தீர்மானிக்கும் அம்சங்கள் எவை? நினைவுத்தெறிப்புக் காட்சிகள் குழந்தைகளின் தொகுப்பாற்றலுக்குப் பொருத்தமானதா? குளோசப் காட்சிகள், குறியீடுகள், நுணுக்கமான முக உணர்வு வெளிப்பாடுகள் அவசியமா போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்நூலில் குழந்தைகளின் உலகு பற்றிய பெரியவர்களுக்கான திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளும், குழந்தைகளின் உலகைப் பிரதிபலிக்கும் குழந்தைகளுக்கான திரைப்படங்களும் உள்ளன.

குழந்தைகள் திரைப்படங்கள் பிராந்திய ரீதியாக எத்தகைய மரபு வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன என்ற பார்வையும் பதிவாகியுள்ளது.

பெரும்பாலான அமெரிக்கப் படங்கள் குழந்தைகளைச் சந்தோசப்படுத்தவும், உலகக் குழந்தைகளிடமிருந்து அவர்களை மேன்மைப்படுத்தி எடுக்கப்படும் போக்கு அதிகம் உள்ளது.

விளிம்புநிலைக் குழந்தைகள் அவர்களின் படங்களில் இல்லை. அமெரிக்க குழந்தைகள் திரைப்பட மரபுக்கு மாறான ஒரு மரபினை ஐரோப்பிய குழந்தைகள் சினிமா கொண்டிருக்கின்றது.

சுவிஸ், நோர்வே, அவுஸ்ரேலியப் படங்களில் நேரடியான இன, வர்க்க ஒதுக்குதலைக் காண முடியாது. தெருக்குழந்தைகள், வறுமையில் வாடும் குழந்தைகள், போர்களினால் துன்புற்ற குழந்தைகள், விளிம்புநிலைக் குழந்தைகளின் உலகம் பற்றி ஐரோப்பியப் படங்கள் பேசுகின்றன. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் திரைப்படங்கள் ஐரோப்பியத் திரைப்படங்களை ஒத்த தன்மைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை முன்னுரையில் பதிவுசெய்கின்றார்.

தனித்தனியாகப் பேசப்படும் திரைப்படங்கள் பற்றிய தனிக்கட்டுரைகளும், வெவ்வேறு திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் கட்டுரைகளும் உள்ளன.

ஒடுக்கப்படும் குழந்தைகள் இருக்கும் வரை உலகின் ஒரு அடி நிலமோ வானமோ விடுதலை பெற முடியாது என்பதைச் சொல்கின்ற திரைப்படங்கள்,

பெரியவர்களின் உலகம் பிளவுண்டு கிடக்க, தம் உலகில் எல்லோரையும் நேசிக்கும் குழந்தைகள், தமக்கான சுதந்திர வெளியைத் தாமே உருவாக்கிக் கொள்ளும் குழந்தைகள், பெற்றோரால், உறவுகளால், சமூகத்தால் என அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள்,

வாழ்வின் துயரங்களை எதிர்த்து நிற்கவும் கற்றுக்கொள்ளவும், தன்னை அழிக்க நினைக்கும் சூழலை எதிர்த்து நிமிரும் குழந்தை, கற்கவேண்டும் என்ற பேரவா கொண்ட குழந்தைகள், குடும்ப உறவுச் சிக்கல்களில் குழந்தைகளின் அனுபவங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் பேசப்படுகின்றன.

வளர்ந்தவர்களுக்கு மாறாக பறவைகள், மிருகங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் சிறுவர்கள். இயற்கை மீதும் நேசிப்பினைக் கொண்டவர்கள். அத்தகைய குழந்தைகளையும் இதில் பேசப்படும் கட்டுரைகளில் தரிசிக்கக் கிடைக்கிறது.

இவை மேல்தட்டு வர்க்கக் குடும்பங்களின் குழந்தைகள் பற்றிய திரைப்படங்கள் அல்ல. விளிம்புநிலைக் குழந்தைகள் பற்றியது.

குழந்தைகள் மனித உறவுகளை எப்படி அணுகுகிறார்கள், கணிக்கின்றார்கள், எதிர்கொள்கின்றார்கள், குடும்பத்தைத் தாண்டிய பிற மனிதர்களையும் அவர்கள் பாரபட்சமின்றி அன்புசெலுத்தத் தயாராக உள்ளனர் என்பதைப் பேசும் திரைப்படங்கள், திறந்தமனமும் அகந்தையற்ற, வன்முறையற்ற சிந்தனையுமே குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்ள உதவும் என்பதைப் பேசும் திரைப்படங்களை இந்நூலின் கட்டுரைகளில் அறியக் கிடைக்கிறது.

பெரியவர்களின் உளவியல் என்பது நட்பு-பகை, அரவணைப்பு-புறக்கணிப்பு, நல்லவர்கள்-கெட்டவர்கள் என்ற இருமுனைப் பாகுபாடுடைய உளவியலால் கட்டமைக்கப்படுகின்றது. ஆனால் குழந்தைகளின் உளவியல் அதற்கு நேர்மாறானது. மனிதர்களுக்குள் பிரச்சினைகள், முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் அன்பு செலுத்துவதில் தவறில்லை என்ற நேச உணர்வுகொண்டவர்கள் குழந்தைகள். அதுவே குழந்தமையின் தன்மை.

பேசப்படும் திரைப்படங்களின் கதைகளில் குழந்தைகளின் உலகம்; எதைச் சுற்றியதாக அமைந்திருக்கின்றது, அந்தக் கதைகளில் குழந்தைகளின் உளவியல் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் சுதந்திரத்தை, வெளியை எத்தகைய வாழ்வியல் புறச்சூழல்கள், அநீதிகள் கலைத்துப்போடுகின்றன என நுட்பமான சித்திரங்களை யமுனாவின் கட்டுரைகள் வரைகின்றன.

‘புயலின் மையம்’ என்ற அமெரிக்கத்திரைப்படம் பற்றிய முதலாவது கட்டுரை, பிரெட்டி என்ற புத்தகங்களை நேசிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவனுக்கும், அலிஸா என்ற மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நகராட்சிப் பிரிவின் பொதுநூலகத்தின் நூலகராகப் பணியாற்றும் பெண்ணுக்குமிடையிலான உணர்வுபூர்வமான உறவைச் சித்தரிக்கின்றது. அதுவொரு அரசியல் திரைப்படமும்கூட.

பறவைக்கும் சிறுவனுக்குமிடையிலான ஆத்மார்த்தமான உறவைப் பேசுகின்ற திரைப்படம் இங்கிலாந்துத் திரைப்படம் ‘கெஸ்’.

‘சினிமா பரடைஸோ’ 1988 இல் வெளிவந்த இத்தாலியத் திரைப்படம். அந்தப் படத்தின் பாத்திரங்கள் அறுபது வயதான சினிமா கொட்டகை ஒன்றின் பிலிம் ஓப்பரேட்டர், தந்தையை இரண்டாம் உலகப்போரில் இழந்து தாய் மற்றும் தங்கையுடன் வசித்துவரும் நான்கு வயதுச் சிறுவனுக்குமிடையிலான அன்பினையும் தோழமையையும் பேசும் திரைப்படம். இன்னொரு வகையில் சொல்வதானால் அது சினிமா பற்றிய ஒரு சினிமா என்ற சித்திரத்தைப் பெறமுடிகின்றது.

‘சினிமா மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி, நினைவுகொள்ள விரும்பும் வாழ்வின் சகல உணர்ச்சிகளின் சாராம்சங்களைக் கொண்ட படமாக யமுனா அந்தத் திரைப்படம் பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்கிறார். இதன் கதை சொல்லல் உத்தி வித்தியாசமானது. வாழ்வுக்கும் சினிமாவுக்கும் இடையிலான உறவு பற்றிய பிம்பத்தைப் பிரதிபலிக்கும் அத்தத் திரைப்படம், சினிமா மக்களின் வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதையும் பேசுகின்றது.

சினிமா ஒப்பரேட்டரிடம் கற்றுக்கொண்ட சிறுவன் இத்தாலியின் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஆகுகின்றான். புகழ்பெற்ற அந்தக் கலைஞனுக்குள் உறைந்திருக்கும் தனிமை, பிரிவுத்துயரமும் பேசப்படுகிறது.

தாயை இழந்த சிறுமியின் துயரத்தை அருகில் சென்று பார்த்த திரைப்படமாக ‘பொன்னெற் (Ponnet)’ எனும் பிரான்ஸ் திரைப்படம் பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. தாயின் இல்லாமையைக் குழந்தை எவ்வாறு உணர்கிறது, எதிர்கொள்கிறது, குழந்தையின் தவிப்பு, ஏக்கம் பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. திறந்த மனமும்

‘பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்’ என்ற இந்நூலின் தலைப்பு குர்தீஸ் சிறுவன் பற்றிய 1996 இல் வெளிவந்த நெதர்லாந்த் படத்தின் தலைப்பு. துருக்கிய இராணுவ ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் துருக்கியின் குர்தீஸ் பகுதியிலிருந்து இடம்பெயர நேரும் குடும்பம் பற்றிய கதை. கிராமத்தை விட்டு வெளியேற விரும்பாத சிறுவன், தேசத்தைப் பிரியநேர்ந்ததிலிருந்து பேசுவதை நிறுத்திக்கொள்கின்றான்.

குழந்ததைகளுக்கு என்று ஒரு மனப்பிரபஞ்சம் உண்டு. அவர்களின் நினைவுகளுக்கென்று தனியே சரித்திரம் உண்டு. அவர்கள் பிடிவாதமாகப் பேச மறுக்கிறபோது, அவர்களுடன் பெரியவர்கள் நிதானமாகப் பேச வேண்டும். அவர்களைச் சரியாக அணுகாதவிடத்து அவர்களின் உலகம் சிதறுண்டு போகிறது’

‘சைலென்ஸ்’, 1998 இல் வெளிவந்த ஈரானியத் திரைப்படம். குழந்தைத் தொழிலாளியாக நேர்ந்த குழந்தை பற்றிய கதை. பிறவியிலேயே வாய்பேசமுடியாமல் பிறந்த பத்துவயதுச் சிறுவனைச் சுற்றிய கதை. செவிப்புலனை மட்டும் வைத்துப் புற உலகுடன் அச்சிறுவன் எவ்வாறு உறவாடுகின்றான் என்பதைச் சொல்கிறது.

குழந்தைகள் சினிமா வகைமைக்குள் அடக்கப்படும் இந்தியத் திரைப்படங்களின் குறைகள் விமர்சனபூர்வமாக அணுகப்பட்டுள்ளன.

‘சில்ரன் ஒப் ஹெவன்’ என்பது 1997இல் வெளிவந்த ஈரானியத் திரைப்படம். குழந்தைகளுக்கிடையிலான நேசத்தையும் புரிதலையும் அவர்களுக்கிடையிலான இரகசிய ஒப்புதல்களைக் காப்பாற்றும் மனநிலையையும் பேசும் இந்தத் திரைப்படம் இன்னொரு தளத்தில் குழந்தைகளுக்குச் சுபிட்சமான வாழ்வை அமைத்துக்கொடுக்கச் சிரமப்படும் பெற்றோர்களின் துயரையும் சொல்வதாகப் பதியப்படுகிறது.

குழந்தைகள் பற்றிய ஈரானியத் திரைப்படங்களின் சிறப்பம்சம் அவை அரசியலால் தீண்டப்படாத குழந்தைகளின் அன்றாட வாழ்வைச் சித்தரிக்கும் பாங்கு எனச் சொல்கிறார் யமுனா. அத்தோடு சில்ரன் ஒப் ஹெவன் குழந்தைகள், பெற்றோர்கள் என இரு தரப்பினரும் ஒருநேர அமர்ந்து பார்க்கக்கூடிய படமாக முன்வைக்கிறார். குழந்தைகள் பார்ப்பதற்கான படம், மற்றும் குழந்தைகள் குறித்த பெற்றோருக்கான அறிவுறுத்தல்களைக் கொண்ட படம் என இரு பரிமாணங்களை ஒருசேரக் கொண்ட படமாக அது முன்னிறுத்தப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தினை அதிகாரபூர்வமாகத் தழுவியதாகக் குறிப்பிட்டு பிரியதர்சனால் உருவாக்கப்பட்ட இந்திப்படம் ‘பம் போலே’. இதன் ஈரானிய மூலத்திரைப்படம் அரசியல் மயப்படுத்தப்படாது, குழந்தைகளின் வாழ்வியலைச் சித்தரித்த உணர்வுபூர்வமான படம். ஆனால் பிரியதர்சன் அதனை வன்முறை, பாலியல் பலாத்காரம், வெடிகுண்டு, மனித உடல்களின் சிதறல், இராணுவம், பயங்கரவாத எதிர்ப்பு என தீவிர அரசியல் நுழைப்புச் செய்யப்பட்ட படமாக மீளுருவாக்கியமை குறித்த விமர்சனப் பார்வை இடம்பெற்றுள்ளது.

‘ இந்திய இயக்குனர்களால் காதல் படங்களை அவற்றுக்குரிய அகவுலக தரிசனங்களோடு உருவாக்க முடியாது, அரசியல் படங்களை அவற்றுக்குரிய தீவிரத்தோடு எடுக்க முடியாது. குழந்தைகள் உலகினுள்ளும் அதற்குரிய பரிசுத்தத்துடன் இவர்களால் நுழைய முடியாது’ என்கிறார்.

‘ஐ ஆம் சாம்’ திரைப்படத்தினைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட தெய்வத்திருமகள் திரைப்படத்தின் அரைவேக்காட்டுத்தனமும் பேசப்படுகிறது.

குழந்தைகளுக்கும் பிராணிகளுக்குமிடையிலான உறவைக் கொண்ட கதைக்களங்கள் அற்புதமான அனுபவங்களைத் தரக்கூடியவை. காஸ்மீர் நிலப்பரப்பினை மையமாகக் கொண்டு சந்தோஸ் சிவன் உருவாக்கிய தஹான் திரைப்படம் ஊமைத் தாயின் குழந்தைக்கும் கோவேறு கழுதைக்குமிடையிலான உறவைச் சித்தரிக்கின்றது. ஆனால் குழந்தைகள் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் கல்நெஞ்சத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாக அதனை சந்தோஸ் சிவன் முடித்திருப்பார். புpரியதர்சனும் சந்தோஸ் சிவனும் பலவந்தமாகக் குழந்தைகளை அரசியல் சூழலுக்குள் இழுத்துச் சென்று அவர்களின் கள்ளம்கபடமற்ற மனங்களைக் காயப்படுத்தியிருக்கின்றார்கள் என்கிறார்.

‘ஏர்த்’ 1999இல் தீபா மேத்தா இயக்கி வெளிவந்த திரைப்படம். இந்திய – பாகிஸ்தான் பிரிவை (1947) மையப்படுத்திய கதை. லெனி பேபி எனும் போலியோ நோயினால் கால் ஊனமுற்ற உட்டு வயதுப் பெண் குழந்தையின் அனுபவத்தின் ஊடாகத் தொடர்ந்து அக்குழந்தை பெரியவளாக வளரும் காலம் வரையான கதை. அன்பு, துரோகம், வன்முறை, பாதுகாப்பின்மை போன்றவற்றைக் கற்றுக் கொண்ட பெண்குழந்தையின் நினைவுகளின் பதிவுதான் ஏர்த் என்று பதிவுசெய்கிறார்.

ஏர்த் திரைப்படம் பற்றிய கட்டுரை மிக விரிவானது. கதையின் களம், பாத்திரங்கள், அரசியல், சமூக, வரலாற்றுப் பின்னணி, அதன் மானிடப் பெறுமதி பற்றிய விரிவாகப் பேசுகின்றது கட்டுரை.

கட்டுரைகள் ஒவ்வொன்றும் திரைப்படத்தினை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. கதையின் களம், மையப்பாத்திரங்கள், பாத்திரங்களுக்கிடையிலான உறவு, எந்தப் பிரச்சினையை மையம் கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது, நகர்த்தப்பட்டுள்ளது, குழந்தைகளின் குடும்பச் சூழல், சமூக உறவுகள், குடும்பமும் உறவுகளும் சமூகமும் அவர்களை எப்படி நடத்துகின்றன என்பவை பற்றி விபரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையில் சொல்வதானால் குழந்தைகள் பற்றிய இத்திரைப்படங்கள் எதைப் பேசுகின்றன என்ற நேர்த்தியான விபரணை வடிவத்தில் ஏறக்குறைய எல்லாக் கட்டுரைகளும் அமைந்துள்ளன.

ஒரு சிறுகதை எழுத்துக்குரிய மொழியை யமுனா கையாண்டிருக்கின்றார். அது பிரக்ஞைபூர்வமான அணுகுமுறை என்று கருதுகிறேன். ஏனெனில் பரந்துபட் வாசகர்களுக்கு ஏற்கனவே பரிட்சயமில்லாத உலகத் திரைப்படங்களை அறிமுகப்படுத்த இத்தகைய மொழியும் வடிவமும் அவசியமாகுகின்றது. கதைக்களத்தினையும் பாத்திரங்களையும் வாசக மனதிற்குக் கடத்துவதற்கு அத்தகைய விபரிப்பு பயனுடையது.

திரைப்படங்கள் கதைகளால் ஆனவை. காட்சிபூர்வ அசைவுகளால் ஆனவை. அதற்கேற்றாற்போல் கட்டுரைகளின் மொழி கதை சொல்லல் முறையில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்கும் போது திரைப்படம் பற்றிய கட்டுரை என்பதைத் தாண்டி, ஒரு கதையோடு பயணிப்பதுபோன்ற உணர்வைத் தருகின்றது. வாசகர்களை இலகுவில் திரைப்படம் பற்றிய புரிதலுக்குள் உள்ளிளுக்கின்றது.

இக்கட்டுரைகளின் பயன்பாடு பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்களை அறிமுகப்படுத்துதல், பரிட்சயப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்கிறது. விளிம்புநிலைக் குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்களை, அவற்றின் வெவ்வேறுபட்ட பரிமாணங்களை, சினிமா மரபுகள் சார்ந்த வேறுபட்ட பின்னணிகளோடு வாசகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்துவது – அத்தோடு அந்தத் திரைப்படங்களைத் தேடிப் பார்க்கத் தூண்டுவது

சாதாரண சினிமா பார்க்கும் வாசகர்களைத் தாண்டி, தமிழ்ச்சூழலில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் பயனுடையது. இதுபோன்ற திரைப்படங்களைத் தமிழ்ச் சூழலில் திரையிடுவதற்கான உந்துதலையும், அவற்றினூடாக குழந்தைகள் பற்றிய உலகத் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்களை முன்னெடுப்பதற்குமுரிய பங்களிப்பாகவும்; அமைகின்றது.

April 2020

Leave A Reply