மியான்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு: அதிகார முரண்பாடுகளும் வரலாற்றுப் பின்னணியும்

70 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு முரண்பாடுகள், இராணுவ ஆட்சி வரலாற்றையும் கொண்டுள்ளது. இது மூன்றாவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு. 1962இலிருந்து 2011 வரையான 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குள் இருந்தது. 2011இலிருந்து உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த தெரிவுகள் ‘ஜனநாயகப் பாதை’யில் நகர்வதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது.

2021 பெப்ரவரி முதலாம் நாள் மியான்மார் இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்புச் செய்து நாட்டின் ஆட்சியதிகாரத்தைத் தம்வசப்படுத்திய செய்தி உலக அரசியலின் பேசுபொருளாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Aung San Suu Kyi உட்பட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்க் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ரங்கூன் உட்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிரான கண்டன ஒன்றுகூடல்களில் குறிப்பிட்ட தொகை மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

மியான்மாரில் இராணுவ ஆட்சி, ஆட்சிக்கவிழ்ப்பு என்பன புதியதோ அன்றி அதிர்ச்சிக்குரிய நிகழ்வோ அல்ல. தெற்காசிய வரலாற்றில் பல தசாப்தங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருக்கப்பட்ட நாடு அது. 1948இல் பிரித்தானிய கொலனித்துவ ஆளுகையிலிருந்து விடுதலைபெற்ற பின்னரான இற்றைவரையான 70 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு முரண்பாடுகள், இராணுவ ஆட்சி வரலாற்றையும் கொண்டுள்ளது. இது மூன்றாவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு. 1962இலிருந்து 2011 வரையான 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குள் இருந்தது. 2011இலிருந்து உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த தெரிவுகள் ‘ஜனநாயகப் பாதை’யில் நகர்வதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது.

தற்போதைய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினை மேற்கு கண்டித்திருக்கின்றது. ஐ.நா வில் அவசர கூட்டம் கூட்டப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் விடுவிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் ஓராண்டுகால அவசகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடை தொடர்பான அச்சுறுத்தலை விடுத்துள்ளன. ஐ.நாவில் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரமுள்ள சீனாவும், ரஸ்யாவும் சர்வதேச கூட்டு நடவடிக்கைகளிலிருந்து மியான்மாரைக் காப்பாற்றிவிடுகின்றன. 2017இல் ரொகிங்ய மக்களுக்கெதிரான இன அழிப்பிற்கெதிராக தீர்மானங்களிலும் இவ்விரு நாடுகளும் அவ்வாறே நடந்துகொண்டன. இம்முறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்துள்ளன.

மியான்மாரின் இராணுவ ஆட்சிபீடத்தின் முதன்மை ஆதரவு சக்தியாகச் சீனா தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. அதேவேளை சீனாவைத் தமது இருப்பிற்கான அச்சுறுத்தலாகவும் மியான்மாரின் இராணுவம் பார்த்துவந்துள்ளது. இராணுவ ஆட்சிபீடம் சீனாவில் முழுமையாகத் தங்கியிருக்கும் நிலையில் இருந்த அதேவேளை, சீனாவின் நலன்கள் மற்றும் தலையீடு சார்ந்த அச்சமும் இராணுவ ஆட்சிபீடத்திற்கு இருந்து வந்துள்ளது என்கிறார் நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியரும் மியான்மார் மற்றும் இலங்கைத் தீவின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான ஆய்வு அறிதலும் அனுபவமுமுள்ள கிறிஸ்தியான் ஸ்தொக்க.

மியான்மார் நாட்டின் மொத்த சனத்தொகை 52 மில்லியன் (2014 கணக்கெடுப்பின்படி). பல்வேறு இனத்துவக் குழுக்களைக் கொண்டுள்ளது. எட்டு வரையான அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இனத்துவத் தேசிய இனங்கள் மியான்மாரில் உள்ளன. ரொகிங்யா போன்ற இன்னும் பல அங்கீகரிக்கப்படாத, குடியுரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களும் உள்ளன. இதில் 68 வீதமான பெரும்பான்மையினர் பர்மியர்கள். அவர்களே அரசியல் மேலாதிக்கம் செலுத்திவருபவர்களுமாவர். ஏனைய சிறுபான்மை இனக்குழுமங்களின் சுயாட்சி உரிமைகள் தொடர்பான முரண்பாடுகள் ஆயுத மோதல்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் இட்டுச்சென்றன. 85 வீதமானவர்கள் பொளத்தர்கள், 4 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களும் 4 வீதமானவர்கள் முஸ்லீம்களுமாவர்.

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு இராணுவபீடம் சொல்லும் காரணம், கடந்த ஆண்டு (2020) நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளன என்பதாகும். தேர்தல் ஆணையத்திற்கு பல முறைப்பாடுகள் கொண்டுசெல்லப்பட்டபோதும், அவை தேசிய ஜனநாயக கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டுள்ளன என்பதுமாகும். நாட்டின் தேசிய பாதுகாப்புக் கருதித் தாம் ஆட்சிப்பொறுப்பேற்றதாக இராணுவபீடம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தினைத் தாம் மறுசீரமைத்து, ஓராண்டுக்குள் புதிய தேர்தலை நடாத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்திடம் ஆட்சிப் பொறுப்புக் கையளிக்கப்படுமென இராணுவத் தளபதி Min Aung Hlaing கூறியிருக்கின்றார்.

ஆனால் உண்மை நிலவரம் வேறானது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலோ, இறைமை அச்சுறுத்தல் சார்ந்த பிரச்சினைகளோ அங்கு இல்லை. இது முற்றிலும் அதிகாரம் சார்ந்த முரண்பாடுகளின் விளைவு என்பது மியான்மார் நிலைமைகளை அறிந்த ஆய்வாளர்களின் பார்வையாகும்.

மியான்மாரின் பழைய பெயர் பர்மா. வடகிழக்கில் சீனாவையும், தென் கிழக்கில் தாய்லாந்தினையும், கிழக்கில் லாவோசினையும், மேற்கில் இந்தியா மற்றும் வங்கதேசத்தினையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 1948 வரை பிரித்தானியக் கொலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த மியான்மாரில் அவர்களின் வெளியேற்றத்திற்குப் பிற்பட்ட காலங்களில் முற்றிலுமாக அமைதியற்ற பல்வேறு முரண்பாடுகளால் சூழப்பட்ட வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. இம்முரண்பாடுகள் இராணுவ ஆட்சியதிகாரத்தை கைக்கொண்டிருந்த அதிகார மையங்களுக்கும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் வலியுறுத்தி வந்த சக்திகளுக்குமிடையிலுமான முரண்பாடுகளாக இருந்துள்ளன.

1962இல்; இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு முதன்முதலில் நிகழ்த்தப்பட்டு ஜெனரல் Ne Win தலைமையில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது . அந்தக் காலப்பகுதியிலிருந்து அதாவது 1962 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையான அரைநூற்றாண்டு காலங்கள் மியான்மாரில் இராணுவ ஆட்சியே நிலவி வந்திருக்கின்றது. தென்கிழக்கு ஆசியாவில் செல்வச் செழிப்பான் நாடுகளில் ஒன்றாக விளங்கி வந்த அந்நாடு இராணுவ ஆட்சிக்குட்பட்ட காலங்களில் உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றென்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனபோதும் சீனாவுடன் தொடர்ச்சியான வணிக மற்றும் படைத்துறை உறவும் ஏனைய சில ஆசிய நாடுகளுடன் வணிக உறவும் இருந்துவந்துள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் முன்னரும் பலதடவைகள் நடந்துள்ளன. 1988 இல் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் முதன்முதலில் எழுந்தது. ஜனநாயகத்தை நிலைநிறுத்தக்கூடிய வகையில் மறுசீரமைப்புகள் கொண்டுவரப்படவேண்டும். சுதந்திரமான முறையில் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மக்கள் போராட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன. எதிர்ப்புப் போராட்டங்கள் பௌத்த துறவிகள் மற்றும் மாணவர் சமூகம் தொழிற்சமூகங்களால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.

அன்றைய நாட்களில் அதாவது 1988இல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கி அழிக்கப்பட்டனர். பெரும் ரத்தக்களறியில் 3000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். பலநூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து 1990ம் ஆண்டு (இராணுவ ஆட்சி நடாத்தப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர்) ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அத்தேர்தலில் National league for democracy – ஜனநாயகத்திற்கான தேசியக் கூட்டமைப்பு மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றது. 1930-1940 வரையான காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக நாட்டின்; விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுத்த ஜெனரல் Aung San இன் மகள்தான் Aung San Suu Kyi – அவரே ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்.

ஜனநாயகத்திற்கானதும் மக்கள் உரிமைகளுக்கானதுமான அமைதி வழிப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்த Suu Kyi 1990ம் ஆண்டு, இராணுவ ஆட்சி மையத்தினால் விட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இராணுவ ஆட்சிக்கெதிரான மக்கள் புரட்சிகளுக்கு தலைமை தாங்கினார் என்ற குற்றசாட்டின் பேரிலேயே அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

1990ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேர்தலில், ஏறத்தாழ 90 வரையான அரசியல் கட்சிகள் போட்டியிட்டன என்று தகவல் தெரிவிக்கின்றன. இதில் Aung San Suu Kyi தலைமையிலான தேசிய ஜனநாயகம் கட்சி பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வெற்றியீட்டியது.! ஆனபோதும் ஜனநாயகத் தேர்தலை புறக்கணித்த இராணுவ ஆட்சிப்பீடம் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளையும் தடைசெய்ததோடு, தேர்தலில் வென்ற கட்சியிடம் ஆட்சியதிகாரத்தைத் கையளிக்கவும் மறுத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இடங்களைப் பறித்து, அவற்றில் இராணுவத்தை சேர்ந்த வேட்பாளர்களை உறுப்பினர்களாக நியமித்தது.1990ம் ஆண்டிலிருந்து Aung San Suu Kyi பல்வேறுதடவைகள் விட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வன்முறையற்ற அமைதி வழிமுறைகள் மூலம் ஜனநாயகதிற்காகவும் மனித உரிமைகளுக்கான அவரது போராட்டங்களுக்காக 1991 ம் ஆண்டு நோர்வேயினால் அவருக்கு சமாதானத்திற்கான நோபல்விருது வழங்கப்பட்டது. அவர் நோபல் விருதினை நோர்வேக்கு பயணம் சென்று பெற்றுக்கொள்ளாத வகையில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். சமாதானத்திற்கான நோபல் விருது அவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து பர்மாவின் இராணுவ ஆட்சி அதிகார மையத்திற்கெதிரான அனைத்துலக அழுத்தம் அதிகரித்தது எனலாம்! ஆனபோதும் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் மியான்மாரின் அரசியல் மாற்றத்திற்கு வழியேற்படுத்தவில்லை.

2007இலும் தலைநகர் உட்பட்ட நகரங்களில் பெருபெடுப்பிலான அமைதிப் பேரணிகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொத்த துறுவிகள் பல்லாயிரக்கணக்கில் எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொண்டிருந்தனர். ஒரு லட்சம் வரையிலான பௌத்த துறவிகளும் மக்களுமாக இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயகம், மனித உரிமையை வலியுறுத்தியும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மியான்மாரின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக பௌத்த துறவிகள் கிளம்பிய செய்திகள் அன்றைய காலகட்டத்தில் உலக ஊடகங்களில் முக்கிய செய்தியாகியிருந்தன.

2008இல் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி இடரில், 138,000க்கும் அதிகமானோர் பலியாகினர். உயிர்களை இழந்தனர், 2007 புத்த பிக்குகளை மோசமாகக் கையாண்ட விதம் என்பனவும் அரசியல் ஆட்சி முறைமை சார்ந்த மறுசீரமைப்புகளைக் கோரிநின்றது. ஜனநாயகத்திற்குத் திரும்பும் பாதையில் 2008இல் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 2008 இல் தமது அதிகார நலன்களை நிலைநிறுத்தும் இலக்கோடு அரசியலமைப்பு மாற்றத்தினைக் கொண்டுவந்தனர். அதற்கiமைய 2010இல் தேர்தல் நடாத்தப்பட்டு, 2011இல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பும், தேர்தல் நடாத்தப்பட்ட முறையும் ஜனநாயகத்திற்கான அமைப்பு மற்றும் சிறுபான்மை இனங்களின் விமர்சனங்களுக்கு உட்பட்டன.

அரசியலமைப்பின் மூன்று முக்கிய கூறுகள் இராணுவத்தின் தொடர்ச்சியான பிடியினை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டன. நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள் இராணுக் கட்சியின் (Union solidarity and development party) பிரதிநிதிகளுக்குரியது என்பதோடு மூன்று முக்கிய அமைச்சகங்களும் அவர்களுக்குரியது. பாதுகாப்பு அமைச்சு, உட்துறை விவகாரங்கள் மற்றும் எல்லைக் பாதுகாப்பு ஆகியன அவையாகும். நாடாளுமன்றம் மேலவை (தேசிய அவை), கீழவை (உறுப்பினர் அவை) என இரண்டு அவைகளைக் கொண்டது. இரண்டிலும் படைப்பிரிவைச் சேர்ந்த 25 வீதமானவர்கள் பிரதிநிதித்துவம் அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு அரசியலமைப்பு திருத்தங்கள், மாற்றங்களுக்குக் குறைந்தது 75 சதவீத உட்கார்ந்த உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதும் அரசியலமைப்பின் முக்கிய மூன்று இராணுவபீடத்திற்குச் சாதகமாக அவர்களாலேயே கொண்டுவரப்பட்ட அம்சங்கள்.

வெளிநாட்டுப் பின்னணியையுடைய வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளைகளையுடைய எவரும் ஜனாதிபதியாக முடியாது. இந்த விதிமுறை Suu Kyiஐ மனதிற்கொண்டு உள்ளடக்கப்பட்டதாகும். அவருடைய மறைந்த கணவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என்பதோடு இரண்டு மகன்களும்பிரித்தானியக் குடியுரிமையை வைத்திருப்பவர்கள். என்பது அவர் ஜனாதிபதியாவதைத் தடுக்கின்றது. கடந்த தேர்தலின் (2015) பின்னர் NLD கட்சியைச் சேர்ந்த தனக்கு நெருக்கமான Htin Kyawஎன்பவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து தனது கட்டளைகளை அவர் நடைமுறைப்படுத்துவார் என்பதையும் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தினூடாக அரச ஆலோசகர் என்ற புதியதொரு பதவியை கட்சி உருவாக்கியது. நடைமுறையில் அந்தப் பதவி அவரை அரசாங்கத்தின் அதிகாரம்மிக்க தலைவராக்கியது.

2015 இல் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்கியதோடு, மியான்மாருக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரும் ஒபாவுக்கு உண்டு. அமெரிக்காவைத் தொடர்ந்து மேற்கின் பல்வேறு நாடுகளும் வணிக, நிதி நிறுவனங்களும் தடைகளை நீக்கின. 2012ம் ஆண்டின் ஆரம்பத்தில் உலக வங்கி மியான்மருடன் மீண்டும் உறவைப் புதிப்பித்தது. அரச நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது. அத்தோடு கடன் முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுச் சட்டம் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியது. மிகப் பெரிய அளவிற்கு வெளிநாட்டு மூதலீடுகள் நாட்டிற்குள் செல்லத்தொடங்கியது.

கட்டுரையின் இன்னுமொரு பகுதி:

மியான்மார்: உள்ளகச் சிக்கல்களும் வெளித்தரப்புகளின் நலன்களும்

February 2021

Leave A Reply