மேற்குலக மற்றும் ரஸ்ய நலன்சார் அரசியலுக்குள் சிக்குண்டுள்ள உக்ரைன்

கொம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் போலந்த் நாடு எவ்வாறானதொரு பொருளாதார வளர்ச்சியையும், அதனூடு சமூக மேம்பாட்டினையும் எட்டியதென்பதை முன்னுதாரணமாகக் கொண்டு, அவ்வாறானதொரு வளர்ச்சியைத் தாமும் அடைவதில் உக்ரைனின் தற்போதைய மேற்குலக ஆதரவு அரசாங்கம் முனைப்புக் கொண்டுள்ளது.ரஸ்யா ஒரு பிளவுபட்ட உக்ரைனை விரும்புகின்றது. அதாவது முற்றுமுழுதாக மேற்கின் செல்வாக்கிற்கு உட்பட்டுவிடாத, அதேவேளை தமது கையை மீறாத வகையிலும் இருக்க வேண்டுமெனபதே ரஸ்யாவின் பெருவிருப்பு.

உக்கிரைன் நாட்டில் நெருக்கடி நிலை தொடர்கின்றது. உள்நாட்டுப் போர் என்ற நிலைக்குள் அந்நாடு இட்டுச்செல்லப்பட்டுள்ளது. ரஸ்யாவை எல்லையாகக் கொண்டுள்ள உன்ரைன் நாட்டின் தெற்குப் பிராந்தியமான கிருமியா குடாவினைக் 2014 மார்ச் மாதம் ரஸ்யா பலவந்தமாகத் தன்னோடு இணைத்துக் கொண்டது. இதனை அடுத்து ரஸ்ய மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் வாழும் உன்ரைனின் கிழக்குப் பிராந்திய நகரங்களில், உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சி வெடித்துள்ளது. ரஸ்யாவின் தூண்டுதலிலும் முண்டுகொடுப்பிலும் உக்ரைனின் தற்போதைய ஆட்சிபிடத்திற்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சி வெடித்தது.

2014 மார்ச் மாதத்திலிருந்து உக்ரைன் அரச படைகளுக்கும் கிழக்குப் பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் கடுமையான போர் இடம்பெற்று வந்துள்ளது. ரஸ்ய ஆதரவு ஜனாதிபதி Viktor Janukovitsj ஆட்சிக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் அவரைப் பதவி நிலக நிர்ப்பந்தித்தது. அதனைத் தொடர்ந்து ரஸ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கிருமியா சுயாட்சிப் பிரதேசத்தை ரஸ்ய அரச படைகளின் நேரடித் தலையீட்டுடன் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மார்ச் மாத இறுதியில் கிருமியாவைத் தன்னோடு ரஸ்யா இணைத்துக் கொண்டது.

கிருமியா விவகாரத்தைத் தொடர்ந்து எதிர்வு கூறப்பட்டது போலவே ரஸ்ய ஆதரவு ஆயுதக்குழு கிழக்கு உக்ரைனின் பிரதேசங்களைக் கைப்பற்றியது. ரஸ்யாவின் தூண்டுதல், முண்டு கொடுப்பு என்பதற்கு அப்பால், நேரடியான இராணுவப் பிரசன்னமும் போர் நடவடிக்கைகளில் பங்கேற்பும் இருந்து வந்துள்ளதாக அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியன தெரிவித்துள்ளன. இராணுவ ஆளணிகள் மற்றும் கனரக ஆயுத தளவாடங்கள் உட்பட்ட போர்த் தொழில்நுட்பக் கருவிகளுடன் உக்ரைன் மண்ணில் ரஸ்யா இறங்கியுள்ளதற்கான செய்மதிப் படங்கள் ஆதாரமாகத் தம்மிடமுள்ளதாக மேற்படித் தரப்புகள் கூறியுள்ளன.

தனது இராணுவப் பிரசன்னம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ரஸ்யா தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளது. ஆனால் முன்னாள் ரஸ்யப் படையினர் மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த இந்நாள் படையினர் என 3000 முதல் 4000 வரையானவர்கள் தன்னார்வ அடிப்படையில் தம்மோடு இணைந்து போரிடுவதாக கிளர்ச்சிப்படைத் தலைவர் தெரிவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

2014 ஜூலை மாதம் மலேசிய பயணிகள் விமானம் கிழக்கு உக்ரைனின் இந்த ஆயுதக் குழுவினரினால்தான் சுட்டுவீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இதில் 300 பயணிகள் பலியாகியிருந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், உக்ரைன் படைகள் கிளர்ச்சிக் குழு மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தன. உக்ரைன் அரச படைகள் கிளர்ச்சிக்குழுவினை கடுமையாக எதிர்கொள்ளுமென ஆரம்பத்தில் ரஸ்ய அரசதலைவர் விளாதிமிர் பூதின் எதிர்பார்க்கவில்லை.

உக்ரைன் படைகள் அமெரிக்காவிடம் பயிற்சி பெற்றவை என்பதோடு அமெரிக்க மற்றும் நேட்டோ உட்பட்ட ஐரோப்பிய நாடுகளின் படைத்துறை உதவியும் பெற்றுள்ளன.
இந்நிலையில் உக்ரைன் படைகளை எதிர்கொள்வதற்குரிய வகையில் தமது படைகளை நேரடியாக உக்ரைனுக்குள் அனுப்பியுள்ளது ரஸ்யா. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கடுமையான தாக்குதல்களை உக்ரைன் படைகள் நடாத்தின. ஆனால் ரஸ்யா நேரடியாக களமிறங்கிய பின்னர் நிiமை தலைகீழ் மாற்றமடைந்துள்ளது. அண்மைக் காலங்களில்; கிளர்ச்சிக்குழு பல பிரதேசங்களைக் கைப்பற்றியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஸ்ய மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்பது கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையாகும். இக்கோரிக்கைக்கு ரஸ்யாவின் முழுமையான ஆதரவு உண்டு. குறிப்பாக Lugansk மற்றும் Donetsk பிரதேசங்களுக்குச் சுயாட்சி அந்தஸ்து பெறுவதில் ரஸ்யா முனைப்புக் காட்டுகின்றது. போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த அதேவேளை உக்ரைன் மற்றும் ரஸ்யாவிற்கிடையில் Belarus தலைநகரில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்துள்ளன. ஆனபோதும் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் கடந்த வாரம் (september 2014) போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணு ரீதியில் கிளர்ச்சியாளர்களை முறியடிக்கும் வலுவினை உக்ரைன் அரச படைகள் கொண்டிருந்தன. ஆனால் ஆயிரக்கணக்கில் தனது படைகளையும், ஆயுத தளபாடங்களையும் இறக்கியதன் விளவாக உக்ரைன் படைகளின் இராணுவ வெற்றியை ரஸ்யா தடுத்துள்ளது. தொடர்ச்சியாக கிழக்கு உக்ரைனின் பிரதேசங்களின் ‘எதிர்கால அரசியல் அந்தஸ்து” தொடர்பாக பேசுமாறும் ரஸ்யா வலியுறுத்தியுள்ளது. எனவே கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் பேரம்பேசும் பலத்தினை ரஸ்யாவின் தலையீடு அதிகரிக்கச் செய்துள்ளது எனலாம்.

2004இல் ஏற்பட்ட செம்மஞ்சள் புரட்சிடன் உக்ரைனில் மேற்கு ஆதரவு வலுப்பெற்றது. மேற்கின் தூண்டுதலால் தான் செம்மஞ்சள் புரட்சி நிகழ்ந்தது என்பது பரவலான கருத்து. 2004இற்குப் பின்னர் மேற்கு ஆதரவு, ரஸ்ய ஆதரவு அரசாங்கங்கள் என மாறி மாறி ஆட்சியமைத்திருந்தன. அரசியல் பதட்ட நிலையும் தொடர்ந்து வந்துள்ளது.

கொம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் போலந்த் நாடு எவ்வாறானதொரு பொருளாதார வளர்ச்சியையும், அதனூடு சமூக மேம்பாட்டினையும் எட்டியதென்பதை முன்னுதாரணமாகக் கொண்டு, அவ்வாறானதொரு வளர்ச்சியைத் தாமும் அடைவதில் உக்ரைனின் தற்போதைய மேற்குலக ஆதரவு அரசாங்கம் முனைப்புக் கொண்டுள்ளது.ரஸ்யா ஒரு பிளவுபட்ட உக்ரைனை விரும்புகின்றது. அதாவது முற்றுமுழுதாக மேற்கின் செல்வாக்கிற்கு உட்பட்டுவிடாத, அதேவேளை தமது கையை மீறாத வகையிலும் இருக்க வேண்டுமெனபதே ரஸ்யாவின் பெருவிருப்பு.

ரஸ்யாவின் போர் முனைப்பினால் அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் விசனமடைந்துள்ளன. இந்தப் பின்னணியில் ரஸ்யாவிற்கும் மேற்குக்குமிடையிலான முறுகலும் முன்னரைவிட கூர்மையடைந்துள்ளது. வெளியுறவு அரசியல் அணுகுமுறைக்கான கருவியாக இராணுவ வழிமுறைகளை மிக மூர்க்கமாக ரஸ்யா கையாள்கின்றது என்றும் மேற்கு குற்றம் சாட்டுகின்றது. ரஸ்யாவை வழிக்கு கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் முனைப்பில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இறங்கியுள்ளன.

அத்தோடு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் நேட்டோ படைக்கட்டமைப்பினை விரிவாக்கம் செய்தும் வருகின்றது. இந்தப் பறநிலையில் கிழக்கு ஐரோப்பாவிலும் நேட்டோ அகலக் கால்பரப்பி வருகின்றது. இந்தப் பின்னணியில் கிழக்கைரோப்பாவில் தன்னைச் சூழ வலுவான பாதுபாப்பு வலையங்களை உருவாக்குது ரஸ்யாவிற்கு அவசியானது. அதனடிப்படையில் தனது அயல்நாடுகளில் தனக்குச் சாதகமான அரசியல் மாற்றங்களையும் ஆட்சி மாற்றங்களையும் ஏற்படுத்துவது அவசியமென ரஸ்யா கருதுகின்றது.

நேட்டோ படைவிரிவாக்கத்தின் ஒரு அங்கமாக Joint Expeditionary Force (JEF) என்ற கூட்டுப் படைப்பிரிவொன்று பிரித்தானியா தலைமையில் ஆறு ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்புடன் உருவாக்கம் பெற்றுள்ளது. இது ரஸ்யாவிற்குப் பதிலடியாக அமையுமென பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் வெளிப்படையாகவே சூளுரைத்துள்ளார். உடனடி அர்த்தத்தில் இதுவொரு குறியீட்டு வடிவிலான அழுத்தத்தை மட்டுமே பிரயோகிக்கக்கூடியது. ரஸ்யாவிற்கு எதிராக நேரடியான இராணுவ நடவடிக்கைகளில் இறங்கும் வாய்ப்பு அறவே இல்லை எனலாம்.

நட்பு நாடுகள் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேர்கையில் உடனடியாகக் களமிறங்கி தாக்கும் வலுவுள்ள வகையில் நேட்டோ படைப்பிரிவில் பல்தேசியத் தன்மையும் படைவலுவும் அவசியமெனவும் கமரூன் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு கிழக்கைரோப்பாவில் நேட்டோ படைகளின் பிரசன்னம் அதிகரிக்கப்படுவதன் மூலமே ரஸ்யாவின் இராணுவ மூர்க்கத்தை எதிர்கொள்ள முடியுமென அண்மையில் நேட்டோ பொதுச் செயலாளர் Anders Fogh Rasmussen தெரிவித்திருந்தமையும் மேற்குலகின் நோக்கத்தையும் அணுகுமுறையையும் தெளிவுபடுத்துகின்றன.

ரஸ்யா மீதான பொருளாதாரத் தடையின் விளைவு என்று நோக்குமிடத்து அது நீண்ட கால அடிப்படையில் ரஸ்யாவிற்குப் பாதகமாக அமையக்கூடியது. ரஸ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்திக்கான தொழில்நுட்ப வளங்களை மேற்குலகிடமிருந்து பெறுவதில் தடங்கல்கள் ஏற்படலாம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கடன் பெறுவதும் தடைப்பட வாய்ப்புண்டு.

அரசியல் இராணுவ மற்றம் பொருளாதார ரீதியில் ரஸ்யா தொடர்ந்தும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்குச் சவாலாக உள்ளது. எனவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ போன்ற தமது பொருளாதார மற்றும் இராணுவக் கட்டமைப்புகளுக்குள் உள்வாங்குவதும் தமக்குச் சாதகமான அரசியல் மாற்றங்களை ரஸ்யாவின் அயல்நாடுகளில் ஏற்படுத்துவதும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் நீண்டகாலமாகக் கைக்கொண்டுவரும் மூலோபாயம். மேற்குலகின் இத்தகைய அணுகுமுறைகளின் விளைவே ரஸ்யாவின் இத்தகு இராணு மூர்க்கத்திற்கான மூலகாரணம் எனவும் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்கினை எதிர்கொள்ளும் வகையில், மொஸ்கோவை மையப்படுத்தி-கிழக்கைரோப்பிய நாடுகளை உள்ளடக்கியதொரு “அரசியல்-பொருளாதார ஒன்றியத்தினை” கட்டியெழுப்பும் முனைப்பு ரஸ்யாவிற்கு உண்டெனக் கூறப்படுகின்றது. ரஸ்யாவின் பிடியிலுள்ள Belarus, Kasakhstan ஆகிய நாடுகள் இயல்பாகவே இதற்கு இணங்கிக் கொள்ளும். இவற்றோடு Armenia, Tadsjikistan, Kirgistan ஆகியனவும் இணையும் வாய்ப்புண்டு. அப்படியாயின் உக்ரைனையும் தனது செல்வாக்கு வலையத்திற்குள் இணைப்பது ரஸ்யாவிற்கு அவசியமானது.

எனவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப்பலத்தினை எதிர்கொள்ளும் வகையில் தனது செல்வாக்கு வலையத்தை விரிவாக்கும் ரஸ்யாவின் முனைப்பின் ஒரு கூறாகவும் அதன் அண்மைய இராணுவ முனைப்பும் உக்ரைன் மீதான நேரடி இராணுவப் பிரசன்னமும் பார்க்கக்கூடியது.

ரஸ்யாவின் அணுகுமுறை அனைத்துலக ரீதியில் அதனைத் தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடுவதானதும், அதீத அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதானதுமான தோற்றம் மேற்குலக ஊடகங்கள் வாயிலாகக் காட்டப்படுகின்றன. பொருளாதார ரீதியில் பாதிப்புகள் ஏற்படுமென கூறப்படுகின்றது. ஆனால் அனைத்துலக சமூகமென்றால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மட்டுமல்ல என்ற நிலை இன்றைய நாட்களில் உருவாகியுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. ரஸ்யா மீதான மேற்குலகின் பொருளாதார நெருக்குதல்கள், வணிக உடன்பாட்டு முறிவு சார்ந்த தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காத பல பொருளாதார வலுமிக்க நாடுகளும் உள்ளன. சீனா, பிரேசில் மற்றம் இந்தியா ஆகியன உலகின் முக்கிய பொருளாதார வல்லரசுகள் என்று சொல்லக்கூடிய நிலைக்கு வளர்ந்துள்ளன. ரஸ்யா தற்போது சீனாவுடன் தனது பொருளாதார உறவுகளை கணிசமாக அதிகரித்தும் வலுப்படுத்தியும் உள்ளது.

ரஸ்யாவின் அணுகுமுறை உக்ரைனின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினைக் குழப்பும் அத்துமீறல் நடவடிக்கை என்று பார்க்கப்படுகின்றது. எனவே ரஸ்யாவின் நகர்வுகள் மேற்குலக நலன்களுக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மேற்கினால் பார்க்கப்படுகின்றது.

2008 ஆம் அண்டின் இறுதியில் தென்-ஒஸ்ஸதியா மீதான ஜோர்ஜியாவின் படை நகர்வும் அதற்கு எதிராக ஜோர்ஜியா மீதான ரஸ்யாவின் படையெடுப்பும், அதன் தொடர்ச்சியாக தென் ஒஸ்ஸதியா, அப்காஸியா ஆகிய பிரதேசங்களை தனி நாடுகளாக ரஸ்யா அங்கீகரித்தமையும் இங்கு மீள் நினைவுகொள்வது பொருத்தமானதாகும். அத்தோடு இந்த ஆணடின் ஆரம்பத்தில் கிருமியாவைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது ரஸ்யா. தற்பொழுது கிழக்கு உக்ரைரைத் தனிநாடாக்குவதற்கு அல்லது தன்னோடு இணைத்துக் கொள்வதென்பது ரஸ்யாவின் வெளிப்படையான திட்டமெனலாம். ரஸ்யாவின் தொடர்ச்சியான இவ்வகை அணுகுமுறைகள் மேற்குலகை அச்சமுறச் செய்துள்ளது.

உக்ரைன் தொடர்ச்சியானதொரு அரசியல் திடமின்மையால் சூழப்பட்ட நாடாக இருந்து வந்திருக்கின்றது. கிழக்கு உக்ரைனுக்குச் சுயாட்சி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு உக்ரைன் அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட கால அடிப்படையில் கிழக்கு உக்ரைன் தனிநாடாகவோ அன்றி ரஸ்யாவுடன் இணைக்கப்படும் நிலையோ தோன்றாதென்று சொல்வதற்கில்லை.

தனக்குச் சாதகமாக தொடர்ச்சியானதொரு அரசியல் அழுத்தத்திற்குள் உக்ரைனை வைத்திருப்பது ரஸ்யாவின் உள்நோக்கம். உக்ரைன் நாடானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டே போன்ற மேற்குலக அரசியல் பொருளாதார, படைத்துறைக் கட்டமைப்புகளின் ஆளுகைக்குள் உள்வாங்கப்படுவது தனது பாதுகாப்பிற்கும் நலனிற்கும் குந்தகமானதென ரஸ்யா கருதுகின்றது.

நடுநிலை வகிபாகம் என்று வெளியில் சொல்லக்கூடிய அதேவேளை நடைமுறையிலும் தார்மீக அடிப்படையிலும் ரஸ்யாவின் பக்கம் நிக்கக்கூடிய அயல்நாடாக உக்ரைனை விளங்குவதையே ரஸ்யா விரும்புகின்றது. எனவே தனது செல்வாக்கிற்கு உட்பட்ட உக்ரைனை உருவாக்கும் ரஸ்யாவின் முயற்சியின் அங்கமே இன்றைய நெருக்கடி.

மற்றொரு வகையில் சொல்வதானால், சோவியத் உடைவிற்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக மேற்குலக ஆதரவு நாடுகளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இறங்கியமையும் அதில் கணிசமான வெற்றியடைந்திருப்பதும் வெள்ளிடை மலை. உக்ரைன் விவகாரம் கூட ஒருவகையில் மேற்கிற்கும் ரஸ்யாவிற்குமிடையிலான நலன் சார் அரசியல் போட்டியின் ஒரு வடிவமே. இருதரப்பு நலன்களுக்கிடையில் ஒரு கருவியாக, பகடைக்காயாகவும் உக்ரைன் கையாளப்படுகின்றது என்பதே உண்மையாகும்.

பொங்குதமிழ், செப்ரெம்பர் 2014

Leave A Reply