மொழி, பண்பாடு:புரிதலின் சவால்களும் போதாமைகளும்

மண்ணை விளைச்சலுக்கு உகந்ததாக்குதல்- செப்பனிடுதல் – வளப்படுத்துதல் என்பதாகத் தான் பண்படுத்துதல் தமிழிலும் வழங்கப்படுகின்றது. மாற்றத்திற்கு அனுமதிக்கப்படாத ஒன்றைச் செப்பனிட முடியாது, வளப்படுத்த முடியாது. அதன்படி பண்பாடு என்பதும் வளப்படுத்தலுக்கும், செப்பனிடலுக்கும், தெரிவுகளுக்கும் உட்பட்டதே. அது மாறுதலுக்கு உட்படக்கூடியதே

பண்பாடு என்பதை மேலோட்டமாகச் சொல்லப்போனால் அது வாழ்வுமுறையுடன் தொடர்புடையது. பண்படுத்தலைக் குறிப்பது. அது மாறாத்தன்மை கொண்ட நிரந்தரமான கூறுகளை உள்ளடக்கியதென்ற பார்வை பொதுப்புத்தியில் உள்ளது. உண்மையில் பண்பாடெனப்படுவது மாறக்கூடியது. தொடர்ச்சியான இடையறாத செயற்பாடுகளின் மூலம் அதன் பெறுமதியான, முற்போக்கான கூறுகள் பேணப்படுவதோடு, அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படுவது. கால, வரலாற்று, சமூக வாழ்வியல் புறநிலைகளுக்கும் அவற்றின் தேவைக்கும் ஏற்ப மாற்றங்கள் நிகழும். ஒவ்வாத அம்சங்களை விலக்குவதும் பெறுமதிமிக்க புதியனவற்றை உள்வாங்குவதும் தேர்ந்து கொள்வதும் பண்பாடு சார்ந்த இயங்கியலின் இயல்பு. பண்பாட்டின் விலக்குதல்களையும் தொடர்ச்சியையும் புதிய தெரிவுகளையும் தீர்மானிக்கின்ற அல்லது அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகின்ற அம்சங்களாக வரலாற்று, வாழ்வியல், மானிடவியல், சமூகவியல், அரசியல் பார்வைகள் உள்ளன.

சமூக மானிடவியற் துறையில் பல தசாப்தங்களுக்கு முன்னரே பண்பாடு தொடர்பான நூற்றுக்கணக்கான வெவ்வேறு வரைவிலக்கணங்கள் இருந்துள்ளன. இதற்கான அடிச்சொல் ‘Cultura’ என்ற இலத்தின் மொழியிலிருந்து வந்தது. அதன் பொருள் நிலத்தைப் பண்படுத்தல்-பயிரிடுதல். தமிழிலும் அதே பொருளில் தான் ‘பண்’ எனும் அடியிலிருந்துதான் பண்படுத்தல், பண்பாடு என்பன வருகின்றன.

பண்பாடு: மனித மனதின் கூட்டு நிரலாக்கம்

பண்பாடு என்பது மனிதனின் பிறப்பிலிருந்து வருவதல்ல, கற்றுக்கொள்வது, கற்றுக்கொடுக்கப்படுவது, பெற்றுக்கொள்வது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். அதாவது வாழுகின்ற சூழலின் அனுபவத்திலிருந்து கற்றும் பெற்றும் கொள்வது. ‘அறிவு, நம்பிக்கைகள், கலை, விதிமுறைகள், ஒழுக்கநெறிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஒரு சமூகத்தின் அங்கத்தவர்களாக இருப்பதனூடு கற்றுக்கொண்ட அனைத்துத் திறன்களும் இயல்புகளும் அடங்கிய சிக்கலான முழுமை பண்பாடாகும்’ என 1800 களின் இறுதிக் காலத்தைச் சேர்ந்த பிரித்தானியப் பண்பாட்டு ஆய்வாளர் Edward B.Taylor வரையறை செய்துள்ளார். பண்பாடு என்பது மரபுகள், விழுமியங்கள், விதிமுறைகளோடு பொதுவானதொரு வரலாற்றினையும் உள்ளடக்கியுள்ளது. மட்டுமல்லாமல் வரலாறு பற்றியதொரு பொதுவான கூட்டுப்புரிதலையும் உள்ளடக்கியதாகும். அதற்கு அடுத்தபடியாக பொதுவான மொழி, குறியீட்டுச் சின்னங்கள், உடை, உணவு, கலை வடிவங்கள், இலக்கியங்கள் போன்றவற்றால் பண்பாடு வளப்படுத்தப்படுகின்றது, வலுப்படுத்தப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒரு அடையாளம் மற்றும் பிணைப்பு சார்ந்த ஒரு கூட்டு உணர்வினைக் கொடுக்கக்கூடியது. அதனைத்தான் ‘பண்பாடு என்பது மனித மனதின் கூட்டு நிரலாக்கம்’ என்கிறார் சமூக மானிடவியலாளர் Geert Hofstede.

வளப்படுத்தல், செப்பனிடல், தெரிவுசெய்தல்

மண்ணை விளைச்சலுக்கு உகந்ததாக்குதல்- செப்பனிடுதல் – வளப்படுத்துதல் என்பதாகத் தான் பண்படுத்துதல் தமிழிலும் வழங்கப்படுகின்றது. மாற்றத்திற்கு அனுமதிக்கப்படாத ஒன்றைச் செப்பனிட முடியாது, வளப்படுத்த முடியாது. அதன்படி பண்பாடு என்பதும் வளப்படுத்தலுக்கும், செப்பனிடலுக்கும், தெரிவுகளுக்கும் உட்பட்டதே. அது மாறுதலுக்கு உட்படக்கூடியதே. அதுதவிர பண்பாடு என்பது, வரலாற்றுத் தெளிவுடனும், அனுபவ அறிதலுடனும் தெரிவுக்கு உட்படுத்தப்பட வேண்டியது. தெரிவெனும்போது தொடர்ந்து பேணக்கூடியவை எவை, கைவிடவேண்டியவை எவை என்பதைக் குறிக்கின்றது. அத்தகைய தெரிவுக்கு வரலாற்று, மானிடவியல், சமூகவியல், அரசியல், உலகப் பார்வைகள் அவசியமாகுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவது அறிவுடமை அல்ல. பண்பாடு என்ற பெயரில் சமூக அநீதிகள், பிற்போக்குத்தனங்கள், பாகுபாடுகள், சமத்துவமின்மைகளை முன்னெடுத்துச் செல்லமுடியாது. பண்பாடு என்பது இன்னொருவகையில் உரிமைகோரல். சமத்துவம், சமூகநீதி, மானிடநாகரீகம் உட்பட்ட வாழ்வை மேம்படுத்துகின்ற கூறுகளை உள்ளடக்கியே பண்பாடு பற்றிப்பேசமுடியும்.

மொழியிலிருந்து நிலத்திற்கான அடையாளம்

பொதுவாக மக்கள்குழுமங்களின் வேர், வரலாறு, அடையாளம் என்று நோக்கும் போது, அவை குறிப்பான ஒரு தேச எல்லைகளையோ, நாட்டினையோ, மதத்தினையோ அல்லது புவியியல் எல்லைகளையோ மையப்படுத்தி வரையறுக்கப்பட்டிருக்கும். பொதுவாக நிலத்திலிருந்து மொழி அடையாளப்படுவது உலகிலுள்ள பெரும்போக்கு. தமிழைப் பொறுத்தமட்டில் மொழியிலிருந்து நிலத்திற்கான அடையாளம் பெறுகின்றது. தமிழ் மக்களின் அடையாளமும் வாழ்வியலும் இவற்றிலிருந்து சற்று மாறுபட்டது. மொழி என்ற பொதுவான அம்சமே, தமிழ் மக்களை அடையாளப்படத்துகின்ற மையப்புள்ளியாக இருந்து வந்திருக்கின்றது. தமிழின் தொன்மை என்பது இயற்கைப் பாதுகாப்பு உட்பட்ட வாழ்வுமுறை, முற்போக்கான சிந்தனை, விழுமியங்களைக் கொண்டிருந்திருக்கின்றோம் என்பதற்கான எடுத்துக்காட்டாக பல்வேறு இலக்கியங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் மேற்கோள் காட்ட முடியும்.

நிலம் கடந்த – நாடு கடந்த வாழ்வின் அடையாளம்

புலப்பெயர் வாழ்வு என்பது கடந்த 30 – 40 வருடங்களுக்குள் அதிகரித்து தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனாற் தமிழர்கள் மத்தியில் தேச-புவியியல் எல்லையைக் கடந்த புலப்பெயர்வு என்பது தொன்மை மரபினைக் கொண்டுள்ளது. தமிழர்களுடைய புலப்பெயர்வு உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றது. அது கடல் மரபிலிருந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு, அகதிகளாக, கூலித்தொழிலாளர்களாக என வரலாற்றிற் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அக-புறச் சூழல்களின் பின்னணியில் நாடு கடந்த புலப்பெயர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. அது தொன்மையிலும் கொலனித்துவ காலத்திலும் பின்-கொலனித்துவ காலத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாறான புலப்பெயர்வுகள் மூலம் தமிழர்கள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களாகப் பங்களித்துள்ளனர். உடல் உழைப்பானது நகர அபிவிருத்தி, தொழிற்சாலை உற்பத்தி, தொழில்வளம் சார்ந்து பங்களித்திருக்கின்றது. இது நிலம் கடந்த வாழ்வு – நாடு கடந்த வாழ்வின் அடையாளம். இன்றைய சமகாலத்திலும் புலம்பெயர் நாடுகளின் பல்வேறு துறைகளிற் பங்களித்துவருகின்றனர்.

அனைத்து மதங்களுக்குமான ஊடாட்ட மொழி

‘பண்பாடு என்பது மனித மனதின் கூட்டு நிரலாக்கம்’ என்கிறார் சமூக மானிடவியலாளர் Geert Hofstede.

உலகின் பெரிய மதங்கள் ஏதோ ஒரு மொழியுடனோ பல மொழிகளுடனோ நெருங்கிய பிணைப்பினைக் கொண்டிருந்திருக்கின்றன. ஊதாரணமாக கிறிஸ்தவ மதம் இலத்தீன் மொழியுடன் நெருங்கிய பிணைப்பினைக் கொண்டிருந்திருக்கிறது. இஸ்லாம், அரபு மொழியோடு, பௌத்தம், பாளி மொழியோடு என மதங்களுக்கும் மொழிக்குமான பிணைப்பினைச் சுட்ட முடியும். ஆனால் அனைத்து மதங்களுக்குமான ஊடாட்ட மொழியாக தமிழ் இருந்து வந்துள்ளது, அம்மதங்கள் சார்ந்த கலை இலக்கிய வடிவங்கள் தமிழை ஊடகமாகக் கொண்டு வளர்ந்திருக்கின்றன. ஆனால் தமிழ் மொழி எந்த மதத்திற்குள்ளும் தஞ்சமடைந்து கொள்ளவில்லை. இதுவொரு முக்கியமான தனித்துவம். ஆனால் நடைமுறையிற் தமிழர்கள் இதனை எந்தளவுதூரம் விளங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது கேள்விக்குரியது. தமிழர்கள், பெரும்பாலும் பொங்கல் நிகழ்வினை, சைவ மதத்தோடு அடையாள ரீதியாகப் பிணைத்துக்கொள்கின்ற போக்கு நிலவுகின்றது. இயற்கையுடனும், மானுட வாழ்வியலின் பொதுப் பண்பாட்டுடனும் தொடர்புபட்ட பொங்கலை அடையாளப்படுத்தும் போது பொங்கற் பானையில் திருநீற்றுக் குறிகளை இடுவதும், பொங்கல் நிகழ்வுகளுக்குரிய அறிவித்தல் வடிவமைப்புகளில் கோயில் கோபுரங்களைப் பொறிப்பதுமான நடைமுறை அடையாளம் தொடர்பான அறியாமையை வெளிப்படுத்துகின்றன.

இடையறதாத தொடர்ச்சியும் வளமும் மிக்க இலக்கியங்கள்
தமிழ், தொன்மையான மொழி. தொன்மைமிக்க இலக்கியங்களைக் கொண்டுள்ளது. இடையறதாத தொடர்ச்சியும் வளமும்மிக்க மொழியாக விளங்குகின்றது. தமிழின் பல ஆயிரம் ஆண்டு நீட்சியுடைய செழுமை மிக்க இலக்கியங்களிற் தமிழினதும் தமிழ் வாழ்வினதும் வரலாறு வாழ்வியற் தத்துவங்கள், அறிவார்ந்த சிந்தனைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மதங்களைக் கடந்த மானிட அறத்தினை, பண்பாட்டு வாழ்வை கொண்டிருந்ததோடு மானிட விழுமியங்களின் அடிப்படையில் அனைவரையும் அரவணைக்கின்ற பண்பாட்டுப் போக்கினைக் கொண்டிருந்த மக்கள் என்பதை தமிழின் தொன்ம வேர்களிலிருந்தும் அறம் சார்ந்த இலக்கியங்களிலிருந்தும் அறிய முடியும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது உன்னதமான மானிடப் பண்பாடு சார்ந்த தத்துவம்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ என்பது மானிட சமத்துவத்தை, சாதியப்படிமுறையை உடைக்கின்ற கூற்று. தமிழர் வாழ்வியலில் சாதியப் படிமுறை இருக்கவில்லை என்பதை உணர்த்துகின்றது.‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்பது பொதுவுடமைத் தத்துவத்தினையும் வாழ்வியல் அறத்தினையும் மிக நுட்பமாகவும் எடுத்தியம்புகின்றது.
இன்றைய உலக நாகரீகம் கொண்டாடுகின்ற இந்த விழுமியங்களைத் தமிழ் மரபு தன் இலக்கியங்கள் வாயிலாக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தந்திருக்கின்றது.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டோமெனில்:
தமிழை அதன் புறத்தோற்றம் சார்ந்த புரிதலோடு மட்டும் அணுகாது, உள்ளார்ந்து நோக்குதற்கு தொல்காப்பியம் வழிகாட்டக் கூடியது. தொல்காப்பியத்தினுடைய சொல்முறையும் அந்தச் சொல்முறைக்கூடாக அது வெளிப்படுத்துகின்ற சிந்தனை முறையும் முக்கியமானது. மேற்கத்தைய சிந்தனை முறைக்கு மாறான தமிழ்ச் சிந்தனை முறை அல்லது மரபினை உணர முடியும். தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டும் என்ற பொதுப் பார்வை உள்ளது. அப்படி அல்ல. அது வாழ்வியலின் பன்முக அம்சங்களைப் பேசுகின்றது.

அதன் கட்டமைப்பும், சொல்முறையும் ஒரு விடயத்தை எப்படிப் பார்ப்பது, நோக்குவது எப்படி பகுத்தாய்வது என்பதைப் புலப்படுத்துகின்றது. மனம், அறிவு, உணர்வு வெளிப்பாடு (மெய்ப்பாடு), அண்-பெண் உறவு, உறவுசார் நிறுவனங்கள், வாழ்வியலை கட்டமைப்பு ரீதியாக (Structural ) பகுத்தாய்வு செய்வதற்குரிய நுட்பமான அறிவை உந்துகிறது.
இது இப்படித்தான் என்று எதையும் சட்டகம் போட்டு வரையறுக்கும் சொல்முறை அதற்குள் இல்லை. ஆனால் குறித்த விடயம் எப்படி உருவாகிறதுஇ வடிவம் பெறுகிறதுஇ அதன் இலக்கணம் மற்றும் கருத்தியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலான சொல்முறை கைக்கொள்ளப்படுகின்றது. இந்தச் சொல்முறையும்இ சிந்தனை மரபும் மாற்றுக் கருத்துகளுக்கும் – மாற்றங்களை உள்வாங்குகின்ற சூழலுக்குமுரிய வெளியைக் (Space) கொண்டிருக்கின்றன.

புலம்பெயர் தமிழ்க்கல்வி: போதாமைகளும் சவால்களும்
புலம்பெயர் நாடுகளிற் பண்பாடு, மொழி, கலை சார்ந்த செயல்முன்னெடுப்புகள் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், கலைகளைக் கற்பிக்கும் செயற்பாடுகள் (இசை, நடனம், சங்கீதம்), கலை- பண்பாட்டு நிகழ்வுகள் ஊடாக எனப் பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்குள் போதாமைகள் நிறையவே உள்ளன. புதிய சிந்தனைகள், வடிவங்கள், காலம் கோருகின்ற மாற்றங்கள் சார்ந்த பல்வேறு போதாமைகள் உள்ளன.

கண்மூடித்தனமாக பண்பாடு என்ற பெயரில் சமூகநீதிக்கு மாறான, பிற்போக்குத்தனமான, பாகுபாடும் சமத்துவமின்மையும் கொண்ட நடைமுறைகளைப் பின்பற்ற முடியாது. சமத்துவம், சமூகநீதி, மானிட நாகரீகம், வாழ்வியலை மேம்படுத்தும் கூறுகளை உள்ளடக்கியே பண்பாடு பற்றிப் பேசமுடியும். பண்பாடு என்ற சொல்லின் உள்ளார்ந்த பொருள், கருத்தியல் சார்ந்து அது கொண்டிருக்கும் வரையறைகள் குறித்த தேடல் அவசியமான ஒன்று. தமிழ்ச் சூழலில் இச்சொல்லாடல் மட்டுமல்ல அதிகம் பேசப்படும் தேசியம் என்பதுகூட பொருத்தமான கோட்பாட்டு அறிதலும் நடைமுறைப் புரிதலும் குன்றியதாகவே இருந்துவருகின்றது.

நோர்வே உட்பட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பாவனையிலுள்ள தமிழ்ப் பாடப்புத்தகம் ஒன்றில் பண்பாடு என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமும் தமிழர் பண்பாட்டின் உள்ளடக்கக்கூறுகளுக்கு கொடுக்கப்பட்ட முதன்மையான பட்டியல்களும் அறிவார்ந்த சமூக மானிடவியல் பார்வையுடன் நோக்குபவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடியவை. பண்பாடு பற்றிய அந்தப் பாடத்தில் இடம்பெற்றுள்ள அறிவுக்குப் புறம்பான விடயம் ‘பண்பாடு என்றும் மாறாத் தன்மை உடையது… தமிழர் பண்பாட்டில் தலைசிறந்தது மானம்….தமிழர் மானமிழந்து உயிர்வாழ விரும்பமாட்டார்…’ எனவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு சொல்லப்படும் ‘மானம்’ என்பதைச் சுயமரியாதை (self respect) எனவாக எடுத்துக்கொண்டாற்கூடஇ அது மனிதர்கள் எல்லாருக்கும் உரிய சுயம் சார்ந்த உணர்வு. அதனைத் தமிழர்களுக்கே உரித்தான தனித்துவ உணர்வாகச் சொல்வதும் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதும் பொருத்தமற்றது. அதிலும் ‘மானம் இழந்து உயிர் வாழ விரும்பமாட்டார்’ என்பது இன்னுமொரு படி மேலே சென்று அபத்தமானதும் ஆபத்தானதுமான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியது.

தலைமுறை இடைவெளி
பண்பாடு, அடையாளம், மொழி சார்ந்த முன்னெடுப்புகள் தலைமுறை இடைவெளியை கருத்திற் கொண்டவையாக அமைதல் வேண்டும். பண்பாடு பற்றிய புரிதல், சிந்தனை இடைவெளி என்பவற்றைக் கருத்திலெடுக்க வேண்டும். தலைமுறை இடைவெளி என்பது, முதற் தலைமுறைக்கும் இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளுக்கிடையிலான மொழி, பண்பாட்டு, சிந்தனை இடைவெளிகளைக் குறிக்கின்றது.

புலம்பெயர்ந்தவர்களின் அடுத்தடுத்த் தலைமுறைகளின் அடையாளம் என்பது தனித்த தமிழ் அடையாளமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வாழும் நாட்டு மொழி, அடையாளம், பண்பாடு சார்ந்த கூறுகளையும், தமிழ் மொழி பண்பாடு, அடையாளம் சார்ந்த கூறுகளுடனும் அவர்கள் ஊடாடுகின்றனர எனினும் அவர்களின் முதல் மொழி தமிழ் அல்ல. அவர்களின் நாளாந்தங்களின் பெரும்பகுதி அந்தந்த நாட்டின் பெருஞ்சமூக மற்றும் பல்லினச்சூழலிலேயே அமைகின்றது. அவர்களின் சிந்தனை மொழியும், ஒரு நாளின் பெரும்பகுதியில்; அவர்கள் பேசுகின்ற மொழியும் அந்;தந்த நாட்டின் மொழி. தமிழ் அவர்களுக்கு இரண்டாவது மொழி.; இரண்டு சூழல்களினதும் வேறுபாடுகளை அறிந்து தேவையானவற்றைத் தமக்கான அடையாளமாக எடுத்துக்கொள்கின்ற, இரட்டை அடையாளத்தைக் கொண்டவர்களாகவே அவர்கள் இருப்பார்கள். அதுவே யதார்த்தமானதும் சரியானதும் பொருத்தமானதும் கூட.

புலம்பெயர்ந்தவர்களின் அடுத்தடுத்த் தலைமுறைகளின் அடையாளம் என்பது தனித்த தமிழ் அடையாளமாக இருக்க வாய்ப்பில்லை. இரட்டை அடையாளத்தைக் கொண்டவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்.

புறத்தோற்றங்களும் வெற்றுக் கோசங்களும்
இத்தகைய புறச்சூழலிற், தமிழ் மொழி கற்பித்தல் என்பது, உள்ளடக்கத்திலும் கற்பித்தல் முறையிலும் அவை பிரதிபலிக்க வேண்டும். தமிழின் தொன்மை, பண்பாடு, அடையாளம், மொழி, இலக்கியங்கள் பற்றிய பெருமிதங்களை புறத்தோற்றங்களாகவும் வெறும் கோசங்களாக முன்வைக்கப்படுகின்ற சூழல், போக்குத்தான் அதிகம் காணக்கிடைக்கின்றது. அதைத் தவிர்த்து அவற்றின் உள்ளடக்கம் என்ன, அவை ஏன் பெறுமதி மிக்கவை, அவற்றின் தனித்துவம் என்ன என்பவை குறித்த உள்ளார்ந்த புரிதல்கள் தமிழ் கற்பித்தலிலோ அன்றிக் கலைகள் கற்பித்தலிலோ வழங்கப்படுவதில்லை.

பெருமிதம் கொள்ளக்கூடியதாக எவற்றைத் தமிழும் தமிழின் தொன்மையும் கொண்டிருக்கின்றன – உலக சமூகத்திற்குத் தமிழ் வழங்கியுள்ள பங்களிப்புகள் என்ன என்பவற்றை ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டும். வெளிப்படுத்த வேண்டும். அதற்கு அடிப்படையாகத் தமிழின் தொன்மை மிக்க நல்ல இலக்கியங்களைக் கற்று அறிவது முக்கியமானது. கற்பதென்பது வெறுமனே வாசித்தலைக் குறிக்கின்ற கற்றல் அல்ல. உள்ளார்ந்த, நுணுக்கமான பார்வையுடன் ஆழமாகக் கற்க வேண்டும். தகவல்களை அறிதல் என்பதைத் தாண்டி வரலாற்றுணர்வோடும், மானிட- வாழ்வியற் பார்வையுடனும் சமூக- உலகப் பார்வையுடனும் கற்க வேண்டும். குறிப்பாக கற்பித்தற்பணிகளிற் தம்மை ஈடுபடுத்துபவர்கள் கற்க வேண்டும். புதிய தலைமுறை ஒன்றிற்கு மொழியையும் அம்மொழி சார்ந்த கூறுகளையும் சொல்லிக் கொடுப்பவர்கள் சொல்லிக்கொடுக்கின்ற விடயத்தையும் அதன் பன்முகத்தன்மையையும் பற்றிய தெளிவைக் கொண்டிருத்தல் அவசியம்.

அறிவுசார்ந்த தளத்தில், சிந்தனை சார்ந்த தளத்தில், வாழ்வியல் சார்ந்த தளத்தில், சமூக மானிடவியல் தளத்தில்,பண்பாடு, கலை இலக்கியம் சார்ந்த தளங்களில் தமிழின் பங்களிப்பினை, முற்போக்கு அம்சங்களை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு இணைத்து ஆழமாகக் கற்றவேண்டும். அதன் மூலம் அறிவுத்தளம், கருத்ததில்தளம் பலப்படுத்தப்படவேண்டும். அதன் மூலம் தான் ஒரு தனித்துவமான மொழியாகத் தமிழையும், பாண்பாட்டு அடையாளங்களையும் பேணமுடியும். அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த முடியும். பேணுவதற்கும் கடத்துவதற்குமான அடிப்படைகளாக இவை பற்றிய அறிதல் மிக அவசியமானவை. கோசமாகவும் பெருமை பேசுவதாகவும் மட்டும் மொழியையும் அதன் கூறுகளையும் முன்வைப்பது பயனற்றது.

Leave A Reply