வானம் முடிகிற தொலைவில்

புகை விழுங்கிக் கிடக்கிறது நகரம்
பிரமாண்ட வெளிச்சங்கள் பாய்ச்சியும்
இருள் கவிந்து கடக்கிறது
பேரிரைச்சல்களின் வாழ்வு
நகரவாடை அற்ற
மனிதவாடை குறைந்த
தேடல்களின் பயணங்கள்
அவ்வப்போது
தேவையென்றாகிறது
பெருங்காடுகளின் பச்சை
பேரலைகளின் வெண்மை
நீர்நிலைகளின் குளுமை
தழுவிவரும் காற்றுக்கு தனிவாசம்
மனம் விரும்பும் இசை
அங்கு கசிந்துகொண்டே இருக்கிறது
அழகின் அதிசயங்களைத்
தரிசிக்கக் கிடைக்கின்றது
உயிர்ப்பின் தத்துவம்
இடைவிடாது
ஊறிக்கொண்டே இருக்கிறது
வசீகரங்களின் வாழ்வு அங்கு
காத்துக்கிடக்கிறது
கருமுகில்கள் திரண்டு
வானம் முடிகிற தொலைவில்
தொடங்குகிறது
இரவின் ஏகாந்தம்
எழுதாத கவிதையின் சொற்கள்
காற்றின் திசைகளில்
முதுமரக் கொப்புகளில்
நீரோடை நிழலில்
மலை இடுக்குகளில்
நடைபாதைக் குறுணிக்கற்களில்
மழையில் ஊறிய சுள்ளிகளில்
புதர் மறைவுகளில்
என
எங்கெங்கோ படிந்துள்ளன
அத்தனையும்
வாழ்வின் பாடறிந்த
மனிதனின் சொற்கள்

11-08-1919

Leave A Reply