தகவற்போரும் ஆளும் வர்க்கங்களின் சட்டவிரோத மூடிமறைப்புகளும்

வீக்கிலீக்சின் அம்பலப்படுத்தல்கள் – உலகின் ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளின் உண்மை முகத்தினை வெளிப்படுத்தி வந்தமை அவர்களுக்குக் கசப்பானதே. முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், சர்வதேச பெரு வணிகமையங்கள் தமது இருண்டதும் சட்டவிரோதமானதுமான பக்கங்களை மூடிமறைக்கவே விரும்புகின்றன. தீவிர புலனாய்வு ஊடகத்துறையினால் தமது மீறல்கள் அம்பலப்படுத்தப்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதுமில்லை. அதுவே Assangeஐ பழிவாங்குவதற்கான அமெரிக்காவின் முனைப்பிற்குரிய காரணி என்பதை விளங்கிக்கொள்வதும் கடினமுமல்ல.

அமெரிக்காவிடம் வீக்கிலீக்ஸ் நிறுவனர் Julian Assangeஐ அமெரிக்காவிடம் கையளிக்க முடியாது என்ற பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்பினை, சர்வதேச மன்னிப்புச் சபை போன்றன வரவேற்றுள்ளன. ஆயினும் அமெரிக்க உத்தரவின் பேரில் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு செயல்முறைக்கு பிரித்தானிய அதிகாரிகள் துணைபோயிருக்கின்றனர், இதன் மூலம் ஊடக-கருத்துச் சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன. ஒப்படைப்பதென்பது, அதிகார சக்திகள் தமது மீறல்களை மூடிமறைப்பதை ஆதரிப்பதாகவும், ஜனநாயக- ஊடக-கருத்துச் சுதந்திரங்களை மறுப்பதாகவும் – மக்களின் அறிவதற்கான தகவல் உரிமையை மறுப்பதாகவும் அமையும் என்ற கருத்து பல மட்டங்களில் மேலோங்கி உள்ளமை கவனம்கொள்ளத்தக்கது.
அமெரிக்கா மேன்முறையீடு செய்திருக்கின்ற நிலையில், இவ்வழக்கு பிரித்தானிய உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும். அப்படி நிகழும் போது இன்னும் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஊடக நடைமுறை
பொதுவான ஊடக நடைமுறையானது தகவலை உரியமுறையில் தொகுத்தல என்பதில் தங்கியுள்ளது. அதன் பொருள் வெளியிட முன்னர் தகவல்களைச் சரிபார்த்தல் – உறுதிப்படுத்தல், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல், தகவல் மூலம் மற்றும் தொடர்புபட்ட தரப்புகளிடம் கருத்துகள், எதிர்வினைகளைக் கேட்டுப்பெறுதல், செய்திக்குரிய சந்தர்ப்ப சூழலினைப் (Context) பிரதிபலித்தல் என்பவையாகும். அத்தோடு தகவல் மூலங்களுக்குரிய நபர்களின் பாதுகாப்பினைக் கருத்திலெடுத்தலும் முக்கியமானது. இவைதான் பொதுவான ஊடக அறம் சார்ந்த செயல்முறையும் அணுகுமுறையும். ஆனால் வீக்கிலீக்சின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. மூல ஆவணங்களை அப்படியே வாசகர்களுக்குச் கிடைக்கச் செய்வது அதன் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது.

வீக்கிலீக்ஸ் தகவலைப் பெறுவதற்குக் கையாண்ட-கையாளும் வழிமுறை வழமையான ஊடக அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுகின்றது. தகவல்களும் ஆவணங்களும் Hacking மூலம் பெறப்பட்டவை. எனவே ஊடக, கருத்துரிமையின் எல்லை எதுவரை என்பதை வரையறை செய்வது இந்த விவகாரத்தில் கடினமானதாகும். ஆனால் வெளிப்படுத்திய தகவல்கள் அரசுகளின் மோசமான மீறல்களை அம்பலப்படுத்தின என்ற ரீதியில் அவை மனித உரிமை சார்ந்தும் கருத்துரிமை சார்ந்தும் பங்களித்துள்ளன.

Assange மீதான அமெரிக்கா வேட்டை
2006இலிருந்தே Assange மீதான தேடுதல் வேட்டையை அமெரிக்கா தொடங்கியிருந்தது.
ஆனால் வீக்கிலீக்ஸ் அல்லாத முற்றிலும் வேறொரு விவகாரத்தின் மூலம் அவர் சட்ட நடவடிக்கைக்குள் இழுக்கப்பட்டார். 2010இல் சுவீடனில் பாலியல் வன்புணர்வுக் குற்றம் சுமத்தப்பட்டது. சட்டத்தின் வலையில் அவரைச் சிக்கவைப்பதற்கான அமெரிக்காவின் கைங்கரியம் இதுவென்ற பார்வையும் உள்ளது. நேரடியாக வீக்கிலீக்ஸ் தகவல் கசிவு சார்ந்து சட்டவலைக்குள் கொண்டுவரும்போது, அதற்கு ஊடக-கருத்துச் சுதந்திரத்தின் பேரில் உலகளாவிய எதிர்வினைகள் கிளம்பும். அதுவே பாலியல் குற்றம் சுமத்தப்பட்டதற்கான பின்புலம் எனவும் ஊகிக்கப்படுகின்றது. அதே ஆண்டு பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

2012 நடுப்பகுதியில் சுவீடனிடம் அவர் ஒப்படைக்கப்படவேண்டுமென்ற தீர்ப்பு, பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அப்படி நிகழ்ந்தால் சுவீடன் தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமென்று கருதிய யுளளயபெந, லண்டனிலுள்ள எக்குவாடோர் தூதரகத்தில் தஞ்சம் கோரினார். அகதி தஞ்சம் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பல் மாதம் வரையான 7 ஆண்டுகள் அவர் தூதரகத்திற்குள்ளேளே காலத்தைக் கழிக்க நேர்ந்தது. எக்குவாடோரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, புதிய அரசாங்கம் அவருடைய அகதி அந்தஸ்தினைப் புதுப்பிக்க மறுத்ததோடு, பிரித்தானியக் காவல்துறையினரை அனுப்பிவைத்து கைதுசெய்யவும் வைத்தது.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கு சுவீடன் நீதித்துறையில் 2019 நவம்பர் வரை நிலுவையில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காலஇழுபறியும் சாட்சிகளின் பலவீனமும் தள்ளுபடிக்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. மே மாதம் 2019 அமெரிக்க உளவுத்துறைச் சட்டத்தை மீறியதாக Assange மீது குற்றம் சாட்டப்பட்ட 18 வழக்குகள் குறித்து விரிவான குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.

Chelsea Manning என்ற அமெரிக்க இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவரின் மூலமாக இரகசிய ஆவணங்கள் வீக்கிலீக்சிற்குக் கிடைக்கப்பெற்றன. அவர் 2010இல், கைதுசெய்யப்பட்டு, 35 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2013இல் ஒபாமாவிடம் பொதுமன்னிப்புக் கோரி விண்ணப்பித்ததன் விளைவாக 2017 இல் 7 ஆண்டுகாலச் சிறைத்தண்டனைக்குப் பின் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்கத் தேர்தல் – கிலறிக்கு எதிரான ஆவணங்கள் கசிவு
2016 இல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போதான வீக்கிலீக்ஸ் கசிவுகள் ரஸ்ய, சீன நலன்களுக்கு சேவகம் செய்யும் வகையிலும், அமெரிக்காவிற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. 2016 ஆம் ஆண்டின் தேர்தல் பரப்புரைக் காலத்தில் கில்லறி கிளின்ரனை தோற்கடிக்கச் செய்து, டொனால்ட் டிரம்ப் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் வீக்கிலீக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ரஸ்யப் புலனாய்வுத் துறை செயற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உள்ளக மின்னஞ்சல்கள் Hack செய்யப்பட்டு, வீக்கிலீக்சில் வெளியிடப்பட்டன. ரஸ்ய பிரச்சார இயந்திரத்திற்கு Assange துணைபோயிருக்கின்றார் என்பது இது விடயத்தில் அவர் மீதான விமர்சனமும் குற்றச்சாட்டுமாகும்.

டிரம்ப்-ஆதரவுப் பிரச்சாரங்கள் – ரஸ்யப் புலனாய்வும் வீக்கிலீக்சும்
டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்கா எதிர்கொள்ளும் நெருக்கடிகள், டிரம்பினை ஜனாதிபதியாக வெற்றியடையச் செய்வதில் அமெரிக்காவிற்குச் சவாலாக எதிரணியிலுள்ள உலக சக்திகளின் நோக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. FBI (Federal Bureau of Investigation) முந்நாள் தலைவர் Robert Mueller தலைமையிலான விசாரணைக் குழு, ‘டிரம்ப்-ஆதரவுத் தேர்தல் பிரச்சாரங்கள்’ தொடர்பாக மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கை வெளிவந்திருந்தது. வீக்கிலீக்சினதும் ரஸ்யாவினதும் வகிபாகம் தொடர்பாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகள் Mueller தலைமையிலான குழு விசாரணைகளை நடாத்தியது.

இது விவகாரம் தொடர்பாக மற்றுமொரு விசாரணை அறிக்கையும் வெளிவந்தது. அமெரிக்க செனற் சபையின் விசாரணைக் குழு அறிக்கை அதுவாகும். டிரம்பிற்குச் சாதகமாக தேர்தல் முடிவுகளை வரச்செய்வதற்காக ரஸ்யா திட்டமிட்ட வகையிலான தீவிர செயற்பாட்டினை முடுக்கி விட்டிருந்ததாக அந்த அறிக்கை கூறுகின்றது. டிரம்ப் இன் தேர்தல் பரப்புரை சார்ந்தவர்கள் தேர்தல் பிரச்சார காலத்தில் ரஸ்யாவுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதனூடாக சாதகமான பலனை அடைவதில் ஆர்வமாக இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு மூன்றரை ஆண்டுகளாக இந்த விசாரணைகளை முன்னெடுத்து ஆய்வு சமர்ப்பித்திருந்தது. வெள்ளை மாளிகையின் குறிப்பிடத்தக்க தலையீடுகள் தமது விசாரணைகளுக்கு தடையாக அமைந்தமையும் அறிக்கை உள்ளடக்கியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. குழுவின் விசாரணைகளில் தகவல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சாட்சிகளுக்கு டிரம்ப்-நிர்வாகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. டிரம்பின் தேர்தல் பரப்புரைத் தலைவர் Paul Manafortஇற்கும் ரஸ்ய புலனாய்வுத்துறை அதிகாரியான Konstantin Kilimnikஇற்குமிடையிலான தொழில்முறை உறவு பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் அறிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளடக்கியுள்ளது எனப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினரின் உள்ளக மின்னஞ்சல்கள் கசிவிற்கும் ரஸ்யாவிற்கும் தொடர்பில்லை என யுளளயபெந பகிரங்கமாக அறிக்கை விடும் பட்சத்தில் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக உள்ளதாக 2017இல் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்ததற்குரிய ஆதாரம் இருப்பதாக Assangeஇன் வழக்கறிஞர் Edward Fitzgerald கூறியதாக The Guardian தெரிவித்துள்ளது. ஜனநாயகத் தேர்தலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் வெளிச்சக்திகளின் நலன்களுக்குச் சாதகமான கருவியாக Assange பயன்படுத்தப்பட்டார் என்ற விமர்சனங்கள் உள்ளன.

Assange ஆதரவுச் செயற்பாடுகள்
அமெரிக்காவினால் சட்டரீதியான பழிவாங்கல் படலத்திற்குள் அகப்பட்டிருக்கும் Assange தொடர்பான அவருடைய சொந்த நாடான அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு தொடர்பாக சில விடயங்களைப் பார்த்துச் செல்வது பொருத்தமானது. அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் வழக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் Assange தாயகம் திரும்புவதில் சிக்கல்களில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்தநாள் அவுஸ்திரேலியப் பிரதமரிடமிருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

20 அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ‘Bring Julian Assange Home Parliamentary Group’ (Julian Assange ஐ தாயகத்திற்கு அழை) என்ற நாடாளுமன்றக் குழு, Assange மீதான வழக்கினைக் கைவிடுமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமெனத் தமது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர் அவுஸ்ரேலியாவுக்குத் திரும்பும்போது, தனது சொந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார் என்பதற்கு அவுஸ்ரேலிய அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளது அக்குழு. மட்டுமல்லாமல் அவுஸ்ரேலிய எதிர்க்கட்சியும் இதனையொத்த கோரிக்கையை விடுத்துள்ளது. அஸ்திரேலியாவிற்கு அவர் பாதுகாப்பாகக் திரும்புவதை விரைவுபடுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் ‘அமெரிக்காவுடனான தனது நல்ல உறவை’ பயன்படுத்த வேண்டும் என அவுஸ்ரேலிய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் (Australia’s Media Entertainment & Arts Alliance, the journalists’ union) கேட்டுக்கொண்டுள்ளது.

Assangeஇற்கு அரசியல் தஞ்சம் அளிக்கத் தயாராக இருப்பதாக மெற்சிகோ நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘அவர் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் ஒரு வாய்ப்புக்குத் தகுதியுடையவர். அவருக்குப் மன்னிப்பு வழங்கி, பாதுகாப்பளிக்க நாம் தயாராக இருக்கின்றோம்.’ என அவர் கூறியுள்ளார்.

தீர்ப்புத் தொடர்பாகத் Chomsky தெரிவித்த கருத்து

அமெரிக்க மொழியியல் அறிஞரும் விமர்சகருமான Noam Chomsky இந்தத் தீர்ப்புத் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. அல்ஜசீரா ஊடகத்திற்கு அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்:

அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான சிறைவாச முறைமைக்குள் யுளளயபெந அனுப்பப்படப் போவதில்லை என்ற நிகழ்வு கொண்டாடத்தக்கது. ஆனால் மீதியனைத்தும் ஒரு பேரழிவு. இந்தத் தீர்ப்பு Biden நிர்வாகத்திற்கு ஒரு பரிசாக அமைந்திருக்கிறது. சர்வதேச வழக்கு ஒன்றின் பொறுப்பைச் சுமப்பதிலிருந்து அவர்கள் தப்பிக் கொள்கின்றனர்’
ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக Assange முத்திரை குத்தப்பட்டுள்ளார். இது எத்தகைய வேடிக்கையானது என்பதோடு, அவரது தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களால் நிராகரிக்கப்பட்டபோதும், இத்தீர்ப்பு அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு சட்டரீதியான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. அந்த அங்கீகாரத்தின் விளைவு, எதிர்காலத்தில் அதிகார மையங்கள் மூடிமறைக்க விரும்பும் அரசுகளின் குற்றவியல் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த முனையும் ஒருவரை ஒதுங்கவைப்பதற்கான அங்கீகாரத்தையும் வழங்குகின்றது’

ஆளும் வர்க்கங்கள் சட்டவிரோதங்களை மூடிமறைப்பதில் முனைப்பு
வீக்கிலீக்சின் அம்பலப்படுத்தல்கள் – உலகின் ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளின் உண்மை முகத்தினை வெளிப்படுத்தி வந்தமை அவர்களுக்குக் கசப்பானதே. முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், சர்வதேச பெரு வணிகமையங்கள் தமது இருண்டதும் சட்டவிரோதமானதுமான பக்கங்களை மூடிமறைக்கவே விரும்புகின்றன. தீவிர புலனாய்வு ஊடகத்துறையினால் தமது மீறல்கள் அம்பலப்படுத்தப்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதுமில்லை. அதுவே Assangeஐ பழிவாங்குவதற்கான அமெரிக்காவின் முனைப்பிற்குரிய காரணி என்பதை விளங்கிக்கொள்வதும் கடினமுமல்ல.

February 08, 2021

Leave A Reply