ஸ்கொட்லாண்ட் பொதுவாக்கெடுப்பு: சுயநிர்ணய உரிமைக்கும் ஜனநாயக வெளிக்குமான முன்னுதாரணம் – பகுதி 1

ஸ்கொட்லாண்ட் தனிநாடாக இறைமையுள்ள ஆட்சியதிகாரத்தோடு இருந்த தேசம். பிரித்தானியாவுடன் 300 ஆண்டுகளுக்கு மேலான பிணைப்பினைக் கொண்டுள்ள தேசமும்கூட. ஸ்கொட்லாண்ட் மக்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றினைகக் கொண்டவர்கள். 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகள் வரை ஸ்கொட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து ஆகியன தனித்தனி அரசுகளாக மன்னராட்சி முறைமையைக் கொண்டு விளங்கின. அதற்கு முற்பட்ட பல்வேறு காலகட்டங்களில் இரண்டு தேசங்களுக்கிடையில் போர்களும் மூண்டுள்ளன. பெரும்பாலும் எல்லைப் பிரச்சினைகளே அவற்றிற்கிடையிலான போரை மூளச்செய்த காரணியாகவும் இருந்துள்ளன.

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்வுகூறல்களுக்கும் மத்தியில் ஸ்கொட்லாந் சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பு 18.09.2014 நடைபெற்றது. பிரித்தானியாவிலிருந்து தனிநாடாகப் பிரிவதில்லை என்ற முடிவிற்கு பெரும்பான்மை கிட்டியுள்ளது. எனவே ஸ்கொட்லாந்த் தொடர்ந்தும் பிரித்தானிய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக நீடிக்கும் என்பதே பொதுவாக்கெடுப்பின் முடிவு. சுதந்திர நாடாகப் பிரிந்து செல்வதென்ற தீர்மானத்திற்கு 45 வீதம் வாக்குகளும், பிரித்தானியாவின் கீழ் நீடிப்பதென்ற தீர்மானத்திற்கு 55 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களில் ஏறது;தாழ 85 வீதத்தினர் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

‘ஆம் – இல்லை’ ஆகிய தீர்மானங்களுக்கிடையிலான இந்த வாக்கு வீதத்திற்கிடையில் பெரிய வித்தியாசமென்று சொல்ல முடியாது. மக்கட்தொகை அடிப்படையில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் சுதந்திரத் தனிநாட்டுக்கு எதிராகவும் 1,6 மில்லியன் மக்கள் சுதந்திரத் தனிநாட்டிற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர் என்ற தரவுகள் வெளியாகியுள்ளன.

தரவுகள் இவ்வாறிருக்க, இந்த நிகழ்வு ஸ்கொட்லாண்ட் மக்களுக்கு மட்டுமல்ல, பிரித்தானியா மற்றும் அனைத்துலக அரசியல் மட்டத்திலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல. ஸ்கொட்லாண்ட் மக்களின் சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த உரிமையினை அதிக பட்சமாகவும் சுதந்திரமாகவும் பிரயோகிப்பதற்கான ஜனநாயகவெளி அவர்களுக்க வழங்கப்பட்டது என்பது இந்நிகழ்வினை வரலாற்று முக்கியத்துவமும் பெறுமதியும் மிக்கதாக ஆக்கியுள்ளது.

1707-காலப்பகுதியிலிருந்து 300 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவுடன் பிணைப்பில் வைக்கப்பட்டு ஸ்கொட்லாண்ட் நிர்வகிக்கப்பட்டுவந்துள்ளது. பிரித்தானியாவின் நான்கு சுயாட்சிப் பிராந்தியங்களில் ஒன்றாக, (இங்கிலாந்து, வேல்ஸ், வட-அயர்லாந்த் ஏனையவை) வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு உள்ளக அதிகார விரிவாக்கங்களைப் பெற்று வந்துள்ளது ஸ்கொட்லாண்ட். 1999ஆம் அண்டிலிருந்து மக்களால் தெரிவுசெய்யப்படும் தனியான நாடாளுமன்ற முறைமையும் நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்தைத் தவிர ஏனைய அனைத்துச் சுயாட்சிப் பிராந்தியங்களுக்கும் தனித்தனியான நாடாளுமன்றங்கள் உள்ளன.

ஸ்கொட்லாந்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்ச்சியாகப் பிரித்தானியாவினால் கையாளப்பட்டு வந்துள்ளது. பொருளாதார ரீதியிலும் பிரித்தாளியாவுடன் நெருக்கமாகப் பிணைந்திருந்திருக்கின்றது.

ஸ்கொட்லாந் மக்கள் தொகை பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 9 வீதமாகும். (பிரித்தானியாவின் மக்கட்தொகை 64 மில்லியன்கள் -ஸ்கொட்லாந் மக்கட் தொகை 5,2 மில்லியன்கள்) ஆனால் நிலப்பரப்பில் பெரியது. முழு பிரித்தானியாவின் மூன்றில் ஒரு (1ஃ3) பகுதி நிலத்தினைக் ஸ்கொட்லாண்ட் தன்னகத்தே கொண்டுள்ளது.

சுதந்திரத் தனிநாட்டுக்கு ஆதரவான பெரும்பான்மை எட்டப்படும் பட்சத்தில் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தீர்வு காண்பதோடு, 24.மார்ச்.2016இல் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்வதென்ற கால அட்டவணையை ஸ்கொட்லாந்தின் முதலமைச்சரும் (இவர் தற்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்) தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்த ஸ்கொட்லாந்த் தேசியவாதக் கட்சியின் தலைவருமான Alex Salmond கொண்டிருந்தார். ஸ்கொட்லாந் தேசியவாதக் கட்சியே சுதந்திரக் கோரிக்கைக்குத் தலைமை தாங்கி பரப்புரைகளை முன்னெடுத்தது.

சுதந்திரத்திற்கு ஆதரவான பெரும்பான்மை எட்டப்பட்டிருப்பின் புதிய தேசத்தின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு, நாணயப் பாவனை, ஸ்கொட்லாந்தின் வடகடலிலுள்ள எண்ணெய் வள வருமானப் பங்கீடு, வரி அறவீடு, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை மற்றும் அனைத்துலக உறவு (ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ உறுப்புரிமை) ஆகிய விவகாரங்கள் பேச்சுவார்த்தை மூலம் இணக்கம் காணப்பட்டிருக்க வேண்டியவையாகப் பட்டியலிட முடியும்.

சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதையோ அல்லது தனிநாட்டை அமைப்பதோயோ மட்டும் நேரடியாகச் சுட்டுவதாகக் கருத முடியாது. ஒரு மக்கள் இனம் தமக்கான உச்சமான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு தெரிவினை மேற்கொள்வதற்குரிய ஜனநாயக உரிமையை, அதற்கான வெளியை வழங்குவது சுயநிர்ணய உரிமையின் முதன்மையான அடிப்படை எனலாம். அந்த சுதந்திரமான ஜனநாயக வாய்ப்பு மூலம் ஒரு தேசிய இனம் அல்லது மக்கள்கூட்டம் தமது அரசியல், பொருளாதார சமூக எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கின்ற உரிமையைச் சுட்டுகின்றது சுயநிர்ணய உரிமை.

அப்படிப் பார்க்கையில் ஸ்கொட்லாண்ட் மக்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த உரிமையைச் சுதந்திரமான சூழலுக்கு மத்தியில்; பிரயோகித்துள்ளார்கள். இந்த நிகழ்வு விடுதலைக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடும் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ஸ்கொட்லாண்ட் தனிநாடாக இறைமையுள்ள ஆட்சியதிகாரத்தோடு இருந்த தேசம். பிரித்தானியாவுடன் 300 ஆண்டுகளுக்கு மேலான பிணைப்பினைக் கொண்டுள்ள தேசமும்கூட. ஸ்கொட்லாண்ட் மக்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்றினைகக் கொண்டவர்கள். 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகள் வரை ஸ்கொட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து ஆகியன தனித்தனி அரசுகளாக மன்னராட்சி முறைமையைக் கொண்டு விளங்கின. அதற்கு முற்பட்ட பல்வேறு காலகட்டங்களில் இரண்டு தேசங்களுக்கிடையில் போர்களும் மூண்டுள்ளன. பெரும்பாலும் எல்லைப் பிரச்சினைகளே அவற்றிற்கிடையிலான போரை மூளச்செய்த காரணியாகவும் இருந்துள்ளன.

1296இல் தன்னோடு இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்கொட்லாண்டினை இங்கிலாநது ஆக்கிரமித்தது. இதுவே ஸ்கொட்லாண்டின் முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்கான மூலமாகவும் அமைந்தது. 1328இல் முதன்முறையாக ஸ்கொட்லாண்டினைச் சுதந்திர நாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. 1332 – 1357 காலப்பகுதியில் 2வது கட்டமாக மீண்டும் ஸ்கொட்லாண்ட் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டது.

பின்னர் 1642 -1651 காலப்பகுதியில் நடந்தேறிய இங்கிலாந்தின் உள்நாட்டுப் போருக்குள்ளும் (The English Civil War) ஸ்கொட்லாண்ட், வேல்ஸ், வட அயர்லாந் ஆகியன உள்ளிழுக்கப்பட்டன. இப்போர்களின் முடிவில் மீண்டும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இங்கிலாந்துக் குடியரசுடன் ஸ்கொட்லாண்ட் இணைக்கப்பட்டது.

1660களில் மன்னராட்சி மீள்உருவாக்கம் பெற்றபோது ஸ்கொட்லாண்டிலும் அது நிகழ்ந்தது. அதாவது மீண்டும் மன்னராட்சி நிறுவப்பட்டது. இவ்வாறு மாறி மாறி ஆக்கிரமிப்பிற்கும் போர்களுக்கும், மீள் எழுகைக்கும் உட்பட்ட ஸ்கொட்லாண்ட் 1707இல் மீண்டும் ‘பெரிய பிரித்தானியா’ பேரரசின் கீழ் இணைக்கப்பட்டது என்பதை சுருக்கமான வரலாற்றுத் தகவலாக இங்கே நினைவூட்டிக்கொள்ளலாம்.

300 ஆண்டுகளுக்கு மேலாக பிணைப்பில் இருந்துவந்த போதும், தமது அரசியல் பொருளாதாரத் தலைவிதியினைத் தாமே தீர்மானிக்கும் உரிமையைப் பிரயோகிகக்கும் அரசியல் விழிப்புணர்வு நீர்த்துப்போகவிடாது பேணப்பட்டுள்ளது என்பது முக்கிய விடயமாகும்.

90 வீதமான எண்ணெய் உற்பத்தி ஸ்கொட்லாண்டின் வடகடல் பிரதேசத்திலேயே நிகழ்கின்றது. ஸ்கொட்லாந்தின் மதுபான உற்பத்தியும் பிரித்தானியா மற்றும் அனைத்துலக மட்டத்திலும் பரந்த சந்தை வாய்ப்பினைக் கொண்டுள்ளது. தவிர அங்குள்ள பலமான வங்கி அமைப்பு, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியன தனிநாடாக திடமானதொரு பொருளாதார அபிவிருத்திக்கு அடிகோலக் கூடியது என்ற நம்பிக்கை பிரிவினைக் கோரிக்கையாளர்கள் மத்தியில் இருந்துவந்துள்ளது.

தனிநாட்டுக்கு எதிரான அணிக்குத் தலைமை வகித்தவர்கள் இன்னும் கூடுதல் அதிகாரத்தைப் பெற்றுத் தருவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி, பிரிவினைக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தினர்.

டேவிட் கமரூன் தலைமையிலான பிரித்தானிய அரசாங்கம் ஸ்கொட்லாந் பிரிந்து செல்வதைத் தடுப்பதற்கு கடும் பிரயத்தனத்துடன் பரப்புரைகளில் ஈடுபட்டது. பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்தைத் தாரைவார்த்துக் கொடுத்த பிரதமர் என்ற பழிச்சொல் வரலாற்றில் தன்மீது படிந்துவிடக்கூடாது என்பதில் கமரூன் பிரயத்தனம் கொண்டிருந்தமை புரிந்துகொள்ளக்கூடியதே.

அடுத்தபடியாக பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள தொழிற்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஸ்கொட்லாண்ட் பிரியாதிருப்பது நன்மை பயக்கக்கூடியது. தற்போதைய சூழலில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஸ்கொட்லாண்ட் பிரதிநிதித்துவத்திற்கு உள்ள 59 பிரதிநிதிகளில் 41 பிரதிநிதிகள் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்களாவர். நாடாளுமன்றத்திலுள்ள ஸ்கொட்லாண்டின் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் தொழிற்கட்சியின் வெற்றிவாய்ப்பு அல்லது அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது என்ற முனைப்பினைப் பலவீனப்படுத்திவிடும் என்ற அச்சம் தொழிற்கட்சி மட்டத்தில் நிலவியதாக கூறப்படுகின்றது.

வேல்ஸ், வட-அயர்லாந்த் ஆகிய மற்றைய சுயாட்சி பிராந்தியங்கள் மத்தியிலும் பிரித்தானிய மைய நிர்வாகம் மீதான அதிருப்திகள் நிலவுகின்றன. குறிப்பாக வட அயர்லாந், அயர்லாந்துடன் இணைவதை விரும்புகின்றது. ஸ்கொட்லாண்டினைத் தொடர்ந்து இவற்றின் மத்தியிலிருந்தும் அதிகாரப்பகிர்வு தொடர்பான கோரிக்கை வலுப்பெறும் என்ற அச்சம் பிரித்தானியாவிற்கு உண்டு. ஸ்கொட்லாண்ட் பிரிந்து சென்றிருப்பின் அனைத்துலக ரீதியில் பிரித்தானியாவின் செல்வாக்கு மங்கியிருக்கும்; என்ற கணிப்புகளும் வெளிவந்திருந்தன. முன்னைநாள் ஏகாதிபத்திய நாடென்ற செல்வாக்கின் எச்சசொச்ச நலன்களை அனுபவித்துவரும் பிரித்தானியாவிற்கு, ஸ்கொட்லாண்ட் பிரிவினை நிகழ்ந்திருப்பின் அதன் செல்வாக்கில் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று சில தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

பிரிவினைக்கு ஆதரவான பெரும்பான்மை எட்டப்படாது தடுப்பதற்கு மேவிட் கமரூன் தலைமையிலான ஆளும் கென்சர்வேற்றிவ் கட்சி மட்டுமல்ல, எட் மில்லிபான்ட் தலைமையிலான தொழிற்கட்சி மற்றும் நிக் கிளெக் தலைமையிலான தாராளவாத ஜனநாயகக் கட்சி (Liberal Democratic Party) ஆகியனவும் பொதுவாக்கெடுப்பிற்கு 2 நாட்களுக்கு முன்னர் கூட்டுத்தீர்மானம் ஒன்றினை வெளியிட்டன.

அதாவது ஸ்கொட்லாண்ட் பிராந்திய நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும், மைய அரச நிதிவளத்திலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும், ஸ்கொட்லாண்ட் மக்களின் அரசியல்-பொருளாதார மாற்றங்களுக்கான குரல் பிரித்தானியாவினால் உரிய முறையில் செவிமடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தனர். இந்த இறுதிநேரக் கூட்டுத்தீர்மானம்கூட பிரிவினை தடுக்கப்படுவதற்கு துணைநின்ற காரணிகளில் ஒன்றெனக்; கருத இடமுண்டு. இப்போது பிரிவினைத்தரப்பினையும் – பிரிவினைக்கு எதிரான தரப்பினையும் ஒருசேரத் திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

பொங்குதமிழ், செப்ரெம்பர். 2014

Leave A Reply